என்னை வைத்து ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார் எனது மேனேஜர். எப்போதும் ரிவியூ மிட்டிங்கில் நான் எப்படியாவது தப்பிவிடுவேன். இந்த முறை கோபி பைய என்னை வசமாக சிக்க வைத்துவிட்டு ஓடிவிட்டான். நானும் அவனும் டீம் லீட்ஸ். நாங்கள் ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு. இருந்தாலும் இந்த நிறுவனத்தில், நான் அவனுக்கு சீனியர். ஆனால், அவன் சம்பள விசியத்தில் எனக்கு சீனியர். வேலையில் படு கில்லி. இந்த முறை ஏதோ வசமாக சொதப்பிவிட்டான். இருவரையும் அழைத்திருந்தார்கள். அவனை திட்டி அனுப்பிவிட்டார்கள். ஆனால் என்னை இருக்க சொல்லிவிட்டார்கள்.
வகைத் தொகையில்லாமல் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டேன். செய்கூலி சேதாரம் மிக மிக அதிகம்.
“அவன் எதுக்கு திட்டுனான்னு, அவனுக்கே மறந்திருக்கும். பாவி வச்சு செஞ்சிட்டானே ”
“அடேய் கோபி. என்னைய சிக்க வைச்சிட்டு போயிட்டல… இருடா… ரூமுக்கு வந்து வச்சிக்கிறேன் உன்ன…” என என் மேனேஜர் மீதும், கோபி மீதும் செம காண்டுல ஆபீஸிலிருந்து கிளம்பினேன்.
போரூரில் இருந்து வளசரவக்கம் வருவதற்குள் கடுமையான மழை. நான் முழுவதுமாக நினைந்திருந்தேன். எனது அறைக்கு வந்து சேரும் போது மணி இரவு 9.45ஐ கடந்திருந்தது.
“டேய். வந்துட்டய… வச்சு செய்வாங்க லேட்டா வருவனு நினைச்சேன். ஆமா கார்ட்ல காசு இருக்குதுல… அந்த போன கொண்டா… ஓடிபி இதுக்கு தானே வரும் ” என வந்தவுடனே பர்ஸையும் போனையும் வாங்கிக்கொண்டான்.
“அடேய் கோபி. காசு கம்மியா இருக்கு டா… நீபாட்டுக்கு காலி பண்ணிபுடாத டா ” என்று சொல்லிவிட்டு நான் குளிக்கச் சென்றுவிட்டேன்.
“நைட்டு சாப்பாடுக்கு சுவிக்கில ஏதும் ஆடர் போட போறான்னு நானும் நினைச்சேன் ”
பாவிப் பையன்.
நான் குளித்துவிட்டு வருவதற்குள். ஐநாக்ஸ் தியேட்டரில் டிக்கெட் பூக் பண்ணியிருந்தான்.
சரி நல்ல படத்துக்கு தான் டிக்கெட் பூக் பண்ணியிருக்கான். வாங்குன திட்டுலாம் மறந்து இரண்டு மணி நேரம் நிம்மதியா இருக்கலாம் என நினைத்தேன்.
சனியன் புடிச்ச மெனேஜர் வீட்டிற்கு வந்த பிறகும் என்னை விடவில்லை. உடனே சில மெயில்கள் அனுப்ப சொல்லி போன் செய்துவிட்டார்.
இவனோ இன்னும் 10 நிமிசத்துல படம் போட்ருவாங்க டா என என்னை நச்சரிச்சான்.
எப்படியே அவசர அவசரமாக மெயில் அனுப்பினேன்.
வீட்டை பூட்டிவிட்டு கீழே வருவதற்கும் மேனேஜர் திரும்பவும் அழைத்து ஒரு கரெக்சன் செய்து மெயிலை திரும்ப அனுப்பும் படி வேண்டினார்.
கோபி கடுப்பாகிவிட்டான்.
“மணி இங்கயே 10.15 ஆயிடுச்சி. நாம படத்துக்கு போன மாதிரிதான்” என கடுப்பாக பேச ஆரம்பித்துவிட்டான். சரி சின்ன வேலை தான் தியேட்டருக்கு போய் பாத்துக்கலாம்னு வண்டிய எடுத்தேன்.
வண்டி பச்சர்.
கோபி என்னை முறைத்தான். ( கடவுளே காப்பாத்துப்பா என்று வேண்டிக்கொண்டேன், கடவுள் என்ன நினைத்தாறோ, அவர் வேறு ஒரு திரைக்கதையை எழுதிவைத்திருந்தார்.)
“மச்சி. நீ வண்டிய ஓட்டு. எதுவா இருந்தாலும் தியேட்டர்ல போய் பேசிக்கலாம்” என்று அவனை சமாதனம் செய்து, வண்டியில் ஏறி கிளம்பினோம்.
வண்டியில் செல்லும் போதே மேனேஜர் சொன்ன அந்த வேலையை முடித்து மெயில் அனுப்பியிருந்தேன். எப்போதும் சாதுவாக வண்டி ஓட்டுவான். அன்றைக்கு என்று படுக்க போட்டுலாம் ஓட்டினான்.
ஒருவழியாக 10.25ந்திற்கு தியேட்டர் வந்து சேர்ந்தோம்.
பார்க்கிங்க் செய்ய காசு எடுக்கிறேன் பேர்வழி என என் பேன்ட்டில் கையைவிட்டு காசு எடுக்கும் வேகத்தில் காசுடன் சேர்த்தும் இஎம்ஐயில் வாங்கிய என் புது ஐபோனையும் எடுத்துவிட்டான்.
லூசுப்பய… சட்டை என நினைத்து என் டீசர்டில் போனை வைக்க முயல…
போன் தவறி கீழே விழ…
அதனை அவன் கேட்ச் பிடிக்கிறேன் என்று தட்டிவிட…
நானும் அதனை புடிக்க முயல…
கடைசியில் கை நழுவி போன் கீழே விழ…
அதன் மேல் ஒரு பெண்ணு வந்து வண்டியை நிறுத்த…
என்னமா இப்படி வண்டிய ஏத்திட்ட… என அந்த் வண்டியைத் தள்ள…
“போச்சு. வாங்கி ஒரு வாரம் கூட ஆகல… அதுக்குள்ள டிஸ்பிளே போச்ச… ஐபோன் வேற… டிஸ்பிளே மாத்த போன அவன் சொத்தையே கேட்பானே” என போனை எடுத்துப் பார்த்தேன்.
அதுக்குள்ள கடவுள் நமக்கு அருள் கொடுத்துவிட்டார் என நினைத்துக்கொண்டேன். (அவசரப்பட்டுவிட்டேன்…)
நல்ல வேளையாக, பிளிப்கவரும், டெம்பர் கிளாசும் மட்டுமே உடைந்திருந்தது.
“அண்ணா. ஒன்னும் ஆகலல…” என எனக்கு பழக்கமான ஒரு குரல் கேட்டது.
வண்டியில் வந்த அந்த பெண்ணின் குரல்.
நிமிர்ந்து வண்டியைப் பார்த்தேன்.
தீபிகா. கோபியின் ஆளு.
“இருங்கணா வண்டிய நிறுத்திட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு பார்க்கிங் நோக்கி கிளம்பினாள்.
“மச்சி. இருடா நானும் நிறுத்திட்டு வரேன்” என கோபியும் அவள் பின்னாலே சென்றான்.
நான் உடைந்துப்போன பிளிப்கவரை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு தியேட்டர் வாசலில் நின்றுக்கொண்டிருந்தேன்.
இருவரும் வந்தார்கள்.
“இவ கூட படத்துக்கு வர்றதுக்கு எதுக்குடா என்னையும் கூட்டிக்கிட்டு வந்த…” என கோபிக்கு மட்டும் கேட்குமாறு கேட்டேன்.
“மச்சி செகண்ட் சோ… நீயும் கூட இருந்தா… நைட்டு வீட்டுக்கு வர்ற அப்ப நாய் துரத்தாதுல்ல… அதனால தாண்டா…” என சமாளித்தான்.
“அண்ணா மணி 10.30 ஆச்சி வாங்க சீக்கிரம் போகலாம்” என தீபிகா எங்களின் பேச்சை திசைத்திருப்பினாள்.
தியேட்டரின் உள்ளே நுழைந்தோம். எழுத்து ஓடிக்கொண்டிருந்தது.
மொபைல் டார்ச் லைட்டுடன் சீட்டை கண்டுபிடித்தோம்.
அடக்கடவுளே என நொந்துக்கொண்டேன்.
கடைசி ரோவில், கார்னர் சீட்.
சுவர் அருகில் தீபிகா. அவளுக்குப் பக்கத்தில் கோபி. கோபிக்குப் பக்கத்தில் நான்.
“டேய். உங்களுக்கு தனியா டிக்கட் போட வேண்டிதானே… நான் ஒரு நல்ல படம் பாக்க தியேட்டருக்கு வந்திருக்கேன். உன் படத்த பாக்க இல்ல டா ” என அவனிடம் கத்தினேன்.
“வேற டிக்கட் இல்ல டா… நீ மூடிக்கிட்டு படத்த பாரு டா மயிறு” என அவன் திருப்பிக் கத்தினான்.
“நல்ல படமா போச்சு. இல்லனா நான் பாட்டுக்கு கிளம்பிப் போயிருப்பேன் பாத்துக்கோ” என அவனிடம் சொல்லிவிட்டு படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
நல்ல வேலை. கோபியும் தீபிகாவும் பேசுவதுடன் நிறுத்துக்கொண்டார்கள். (அட நம்புங்கப்பா…)
சில விசியங்களில் கோபி எப்போதும் டீசண்ட் தான். தீபிகாவைத் தவிர அவன் வேறு எந்தப் பெண்ணிடமும் அவ்வளவாக வைத்துக்கொண்டதில்லை.
இண்டர்வல் வந்தது.
ஆனால் அவர்கள் பேசிக்கொண்டே இருந்ததால், படத்தை ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை.
தீபிகா வேறு அவ்வப்போது, “அண்ணா. அண்ணா. அண்ணா” என ஏதேனும் கதை கேட்டுக் கொண்டிருந்தாள். இல்லையேல் சொல்லிக்கொண்டிருந்தாள்.
இவர்களுடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த போதே இண்டர்வல் வந்ததுவிட்டது.
எனக்கு செம கடுப்பு.
மூவரும் வெளியில் வந்தோம்.
நான் பாப்கானும் கோக்கும் வாங்கச் சென்றுவிட்டேன்.
வருவதற்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை.
செக்கியூரிட்டியுடன் சண்டைப்போட்டுக் கொண்டிருந்தாள். தீபீகா. ஏன் என்று கேட்டாள்.
“அழுதுக்கொண்டே நான் வீட்டுக்குப்போறேன் அண்ணா… விட சொல்லுங்க அண்ணா” என்றாள்.
கோபியும் “பாதியில் விட்டுவிட்டு போகாத தீபிகா…” என தீபிகாவுடன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“மச்சி நீ சீட்டுக்குப் போ நான் அவள சமாதனப்படுத்தி கூட்டிக்கிட்டு வரேன்” என்று சொல்லி என்னை தியேட்டருக்குள் அனுப்ப முயன்றான்.
“அண்ணா… நான் வீட்டுக்குப் போறேன். எதுவா இருந்தாலும் நாளைக்குப் பேசறேன்னு அவர்கிட்ட சொல்லிடுங்க” என என்னிடம் சொல்லிவிட்டு செக்கியூரிட்டியிடம் மல்லுக்கட்டி கிளம்பிச் சென்றுவிட்டாள்.
“மச்சி நீ உள்ள போ நா வரேன்”
சரி ஏதோ சண்டைப் போட்டுகிட்டாங்க. அடிக்கடி இப்படி நடக்குறது தான. நாளைக்கு சரியாகிடுவாங்க. நம போயி படத்தப் பாப்போம் என பெரிய சைஸ் பாப்கார்ன் டப் மற்றும் கோக்குடன் உள்ளே சென்றுவிட்டேன்.
“ஐய்யோ. செகண்ட் ஹாஃப் வேற லெவல்னு மதியம் சாப்பிடும் போது கண்ணயும் தலையையும் அழக ஆட்டி ஆட்டி கதை சொல்லிட்டு இருந்தாளே… தேவிகா…” (அவ எங்க கூட வேல செய்யுற பொண்ணுங்க… எப்பவும் தப்பாவே நினைக்காதீங்க… நான் சிங்கிளுங்க… நம்புங்க… சரி.. கதைக்கு வருவோம்…)
படம் போட்டு ஐந்து நிமிடம் கழித்து கோபி மட்டும் தனியாக வந்தான்.
“எங்க டா அவ”
“போயிட்ட… நீ படத்தப்பாரு…” என பாப்கார்ன் டப்பை பிடிங்கிக்கொண்டான்.
“லூசு மாதிரி பேசற”
“நான் போன் பண்ணி பாக்குறேன்” என தீபிகாவிற்கு போன் செய்தேன்.
சுவிட்ச் ஆப் என்று வந்தது.
மீண்டும் முயற்சி செய்தேன்.
அதற்குள், கோபி பாப்கார்ன் டப்பை தூக்கி அவள் உட்கார்ந்திருந்த சீட்டின் மீது எறிந்தான்.
“ஆடேய். 192 ரூவா டா அது…”
“என்ன காசு பாக்குறய… இரு இப்பவே கூகுள் டெஸ்ல அனுப்பறேன்” என அவன் மொபைலை நோண்டிக்கொண்டே சீட்டைவிட்டு எழுந்தான்.
என்ன நினைத்தானே. என் கையில் இருந்த, நான் பாதி குடித்துவிட்டு வைத்திருந்த கோக்கைப் பிடுங்கி என் முகத்தின் மேல் ஊற்றிவிட்டு, அதற்கும் சேர்த்து பணத்தை அனுப்பறேன் என எழுந்து தியேட்டரைவிட்டு கிளப்பிவிட்டான்.
நல்ல வேலை. பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு சாவினை என்னிடம் கொடுத்திருந்தான்.
பார்க்கிங் சென்றுவிட்டு போனடித்தான், சாவிய கொண்டுவா என்று.
“முடியாது டா பக்கி, படத்த முழுசா பார்த்துட்டு தான் வருவேன். நீ அங்கயே உட்காருனு சொல்லிவிட்டு” போனை வைத்தேன்.
சில நிமிடங்கள் கூட ஆகியிருக்காது, எழில் போன் பண்ணினான்.
நல்ல சீன் போய் கொண்டிருந்தது. கடுப்புடன் எடுத்துப்பேசினேன்.
“என்னடா, கோபி ஃபேஸ்புக் ஸ்டேடஸை சிங்கிள்னு மாத்திட்டான்”
“என்னடா சொல்ற”
“நீ முதல்ல கோபி ஃபேஸ்புக் ஸ்டேடஸை பாரு. அவன் கூட தானே இருக்க… ”
“இருடா நானே திருப்பி கால் பண்ணறேன்.”
கோபி ஃபேஸ்புக் ஸ்டேடஸை பார்த்தேன். கடுப்பாகிவிட்டேன்.
“சிங்கிளாக சாகப்போறேன்” என்று இருந்தது.
கோபிக்கு போனடித்தேன்.
சுவிட்ச் ஆப்.
பாப்கானும் போச்சு, கோக்கும் போச்சு, டிக்கட் காசும் போச்சு… இந்த கோபி நாயால இன்னைக்கு என் நிம்மதியே போச்சு.
நொந்துக் கொண்டு, தலையில் கை வைத்து அமர்ந்திருந்தேன்.
“காதலே காதலே தனிப்பெரும் துணையே…” என என் ஐபோன் ஒலித்தது.
தீபிகா அழைத்திருந்தாள்.
“இப்ப தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.அவரு ஏன்னா இப்படி பண்ணுறாரு.”
“போனு வேற சுவிட்ச் ஆப்.”
“சிங்கிளாக சாகப்போறேனு போட்டு இருக்காரு ஃபேஸ்புக்ல”
“பயமா இருக்கு அண்ணா”
“உங்க கூட தானே இருக்காரு”
“இல்லமா. அவனும் அப்பவே போயிட்டான்” என்று தீபிகாவிடம் சென்னேன்.
“கொஞ்சம் என்னானு பாத்துட்டு உடனே போன் பண்ணுங்க அண்ணா” என்றாள்.
இதுக்கு மேல இந்தப்படத்த பாத்த என்ன… பார்க்கலைனா என்ன…
தியேட்டரைவிட்டு வெளியே வந்தேன்.
மேலிருந்து கீழே வருவதற்குள்
டில்லியில் இருந்து, குமார் 2 முறை அழைத்திருந்தான்.
அமெரிக்காவில் இருந்து, வர்சா 2 முறை அழைத்திருந்தாள்.
கனடாவில் இருந்து, வருண் 1 முறை.
இன்னும் 2 பேர் அழைத்திருந்தார்கள்.
மற்றும் பலர் மெசெஞ் செய்திருந்தார்கள். எல்லாம் கோபியின் நிலையைக் கேட்டு.
நினைத்துக்கொண்டேன். அடப்பாவிகளா. காலையில இருந்து அவன்கிட்ட மாட்டிக்கிட்டு நான் சாவறேன் என்ன பத்தி எவனாவது கேட்டிங்களாடா… பாவிகளா…
(இதுல என் முன்னாள் காதலி வேறு, இஸ் கோபி ஃபுரே ஆல்ரெட்னு மேசேஜ், அடிப் பாவி 3 வருசம் ஆச்சிடி பிரேக் கப் ஆகி)
வண்டி எடுக்க பார்க்கிங்கிற்கு சென்றேன்.
ஒன்றும் தெரியாதவன் போல வண்டி சீட்டின் மேல் அமர்ந்து, கால் மேல் கால் போட்டு போனை நோண்டிக்கொண்டிருந்தான். போன வேகத்தில் அவன் போனைப் பிடுங்கி ஃபேஸ்புக் ஸ்டேடஸை, கமிட்டட் வித் தீபிகா என்று மாற்றினேன். மை போன் வாஸ் ஹாக்குடி என்று மற்றும் ஒரு ஸ்டேடஸை போட்டு வைத்தேன்.
எனக்கு கோபம் அடங்கவில்லை.
இரண்டு அறைவிட்டேன்.
சில நிமிடங்கள் இருவரும் அமைதியாக இருந்தோம்.
அவனே ஆரம்பித்தான், “மச்சி சரக்கு வேணும்”
“சாவடிக்காத டா… மணி 12.30. பார்ல கூட கிடைக்காது. வா வீட்டிற்குப் போலாம்”
“இல்ல கண்டிப்பா வேணும். எங்க கிடைக்கும்னு எனக்குத் தெரியும், நான் கூட்டிக்கிட்டு போறேன்னு” வண்டியை எடுத்தான்.
“போய் தொலை” என்று வண்டியில் ஏறி, “ஹி ஸ் செப். வித் மீ ஒன்லி” என்று தீபிகாவிற்கு மெசேஞ் அனுப்பினேன்.
“தேங்ஸ்” என்று பதில் வந்தது.
எல்லோருக்கும் தகவல் சொல்லி முடிப்பதற்குள், கடை வந்தது.
இரண்டு ஃபுல் வாங்கி வந்தான்.
ஒன்றை சீட் கவரில் வைத்துவிட்டு, இன்னொன்றைக் ராவாக குடிக்க ஆரம்பித்தான்.
நான் வண்டியை ஓட்டினேன், அவன் பின் சீட்டில் உட்கார்ந்து குடித்துக் கொண்டே வந்தான்.
என் நேரம். போலிஸ் பிடித்தது.
அதுவும் அவன் கையில் பாட்டிலுடன்.
அவன் சுருதியேறி பினாத்திக்கொண்டிருந்தான்.
“அடேய். போலிஸ்ல மாட்டிக்கிட்டோம் அமைதியாய் இருடா” என்றேன்.
போலிஸார் என்னை ஊதச்சொன்னார்கள். ஒன்னும் இல்லை என தெரிந்தவுடன் கிளம்பச்சொன்னார்கள்.
நாற வாயன். ஏதோ உலற.
என் கண்ணத்தில் இரண்டு அறை விழுந்தது.
“சார். அவன் சொன்னதுக்கு எதுக்கு சார் என்னை அடிக்கிறீங்க?” என்று கேட்டதும் இன்னும் சிலபல அடிகள் விழுந்தது. பிறகு 500 ரூபாய் தண்டம் கட்டியப் பிறகும் டின்னு கட்டி அனுப்பினார்கள்.
கோபி ஒன்றும் தெரியாததைப்போல அமர்ந்திருந்தான். எனக்கு விழுந்ததில் அவனுக்கு தெளிந்துவிட்டது போல.
“மச்சி. நான் வண்டி ஓட்றேன்” என்று வண்டியை எடுத்துக்கொண்டான்.
கிளம்பினோம்.
வீடு வரைக்கும் ஏதோ தடுமாறி வந்துவிட்டான். மழைத்தூற ஆரம்பித்திருந்தது.
வீட்டிற்கு மிக அருகில் வந்துவிட்டோம்.
கருப்பு நாய் ஒன்று குரைத்துக்கொண்டே குறுக்கில் வர…
தலைக்கெறிய போதையில் இருந்த என் நண்பன் கோபி, வண்டியியை அருகில் இருந்த மரத்தின் மீது மோதினான்.
அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை…
எனக்குத்தான் கை, காலில் சீராய்ப்பு எல்லாம்.
வண்டி என் மீது இருந்தது. வண்டி மீது அவன் இருந்தான். பிறகு சுதாரித்தவன், எழுந்து, வண்டியை விலக்கி, என்னை தூக்கிவிட்டான்.
அப்போது, செம போதையிலிருந்தவன், என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு,
“கருப்பி… என் கருப்பி… நக தடமே என் பாத..” என தீபிகாவை நினைத்து அழ ஆரம்பித்துவிட்டான்.
அதுவரை பொறுமையாக இருந்தநான். அவனை எட்டி கீழே உதைத்தேன்.
எல்லாம் ஓகே டா, பொறுத்துக்கிட்டேன்.
“ஆனா, உன் ஆள கூட்டிக்கிட்டு வர்றலா, அப்புறம் என்ன மயீத்துக்குடா பரியேரும் பெருமாள் படத்துக்கு டிக்கட் போட்ட, 96க்கு போட வேண்டியது தானே… இத மட்டும் மன்னிக்கவே மாட்டேன் டா” என்று அவனை மீண்டும் மீண்டும் மிதித்தேன்.
அவன் கீழே கிடந்துப் பாடிக்கிக் கொண்டிருந்தான்.
– கருப்பி… என் கருப்பி… நக தடமே என் பாத…