Monday, December 23, 2024
Home > பெண் > நான் மறைத்த #MeToo

நான் மறைத்த #MeToo

#MeToo என்ற பெயரில் பாலியல் அத்துமீறல்கள் பற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது சமூக வலைதளங்களில் புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதில் பலர் நாம் வாழும் சமுதாயத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்கள். அரசியல், விளையாட்டு, கல்விக்கூடங்கள், சினிமா, கார்பரேட் நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும், எல்லா மட்டங்களிலும் இப்படியான குற்றச்சாட்டுகள் பல வெளிவந்திருக்கின்றன. இன்னும் மறைக்கப்பட்ட சம்பவங்கள் கவலைப்படும் அளவிற்கு மிகமிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.

அப்படி, நான் மறைத்த ஒரு பாலியல் அத்துமீறல் சம்பவம் பற்றிய பதிவே இக்கட்டுரை. பாதிக்கப்பட்ட தோழியின் பெயரையும், அத்துமீறியவனின் பெயரையும் நாகரீகம் கருதி மாற்றம் செய்திருக்கிறேன். 

இந்த துக்கம் சம்பவம் நடந்தது, 2012ல். அப்போது திருச்சியிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி நான் இறுதியாண்டு படித்துவந்தேன். என் வடுதித் தோழனின் பெயர் முருகன். பக்கத்து அறை. என் நெருங்கிய நண்பர்களினுள் அவனும் ஒருவன்.

பாதிக்கப்பட்ட பெண், என்னுடைய ஜூனியர். பெயர் அவந்திகா (மாற்றப்பட்டுள்ளது). அவள் என்னுடன் கல்லூரி சார்பாக பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொள்வாள். நான் மூன்றாமாண்டு மத்தியில் தான் அவளுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தேன். பெரும்பாலும் விளையாட்டு தான் எங்கள் நட்பின் அடிநாதம். எங்களின் விவாதப்பொருள். மூன்றாமாண்டு முடிவதற்குள், நாங்கள் சகோரத்துவமான நெருக்கத்தை உணர ஆரம்பித்தோம். அன்று முதல் அவள் எனக்கு உடன்பிறவா சகோதரி, நான் அவளுக்கு உடன் பிறவா சகோதரன். 

கல்லூரியில் விடுதி தான் கடைசி கட்டிடம், அதற்கு முன் பேட்மிட்டன் விளையாட்டு அரங்கம் இருக்கும், எதிரில் எம்பிஏ-எம்சிஏ பிரிவுகளின் கட்டிடம் இருக்கும். எப்போதும் மாலை வேளையில் தான் நாங்கள் பேட்மிட்டன் பயிற்சிக்குச் செல்வோம். அவ்வப்போது, நான் விளையாடிவிட்டு வரும் வரை, என் நண்பன் முருகன் எனக்காக எம்பிஏ கட்டிடத்தில் காத்திருப்பான். விளையாடி முடித்துவிட்டு எம்பிஏ கட்டிடத்தின் படிக்கட்டுகளில் உட்கார்ந்து மணிகணக்கில் அரட்டை அடிப்பது தான் எங்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று. அப்போது தான் முருகனுக்கு, அவந்திகாவை அறிமுகம் செய்து வைத்தேன். அதன் பிறகு, அவர்களின் நட்பின் மேல் அவ்வளவாக நான் கவனம் கொள்ளவில்லை. ஆனால், இருவரும் கல்லூரியிற்குள் எங்கே சந்தித்தாலும் பேசிக்கொள்வார்கள் என்பது மட்டும் தெரியும்.

இன்போசிஸ் கலந்தாய்வில் நான் தேர்ச்சி பெற்றுவிட்டதால் அதற்கான பயிற்சிப்பட்டறைகள் மற்றும் இறுதியாண்டு ப்ராஜெக்ட், தேர்வுகள் என பல தரப்பட்ட வேலைகளால் என்னால் தொடர்ந்து அவந்திகாவுடன் விளையாடவும் சந்திக்கவும் முடியாமல் போய்விட்டது. அப்போது அறிமுகமான முகநூலில் தான் பெரும்பாலும் பேசிக்கொள்வோம். இப்படியாக போய்க்கொண்டிருந்த நிலையில்,

என் பொறியியல் கல்லூரியின் வாழ்வில் கடைசி வாரம் அது. 

எம்பிஏ கட்டிடத்தில் இருந்து அவந்திகா கண்ணீர் மல்க நடந்துவந்தாள். அன்று அவள் விளையாடக்கூடச் செல்லவில்லை. அன்புத்தங்கையே ஏன் உன் கண்களில் கண்ணீர் என்றுக் கேட்டேன். பதிலேதும் சொல்லாமல் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

பலமுறை அலைப்பேசியில் முயற்சி செய்தும் அவளைத் தொடர்புக்கொள்ள முடியவில்லை. அடுத்தநாள் காலையில் என் வகுப்பிற்கு வந்தாள்.  “தனியாக பேசவேண்டும். அண்ணா” என்றாள். கல்லூரியின் கேட்டீனுக்குச் சென்றோம்.

ஏதோ சொல்லவந்தவள், நெடுநேரம் அமைதியாக இருந்தாள். நான் ஏதோ பிரச்சனை, அவளே சொல்லட்டும் என்று நினைத்தேன்.

“நேற்று, முருகன், என்னருகில் வந்து, என்னை இறுக்கமாக கட்டிப்பிடிக்க முயற்சி செய்தான், அவன் கைகளை என் மார்புகளின் மேல் படரவிட்டான், மார்புகளை கசக்கினான், என் உதட்டில் முத்தம் கொடுக்க முயற்சி செய்தான். அவனை உதறிவிட்டு ஓடி வரும் பொழுதுதான் நான் உங்களை எம்பிஏ கட்டிடத்தின் முன் பார்த்தேன். அவமானம் தாங்காமல், அழுதுக்கொண்டே வீட்டிற்குச் சென்றுவிட்டேன். யாரிடமும் சொல்ல மனமில்லை. அதனால் தான் உங்களிடம் சொல்கிறேன். நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றாள்.

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. 

இதுவரை நாம் யாரை உற்றாத நண்பன், என நினைத்தோமோ, அவன் என் உடன்பிறவா தங்கையிடம் நடந்துக் கொண்டதை நினைத்து நான் தலைக்குனிந்தேன். அவனுக்காக அவந்திக்காவிடம் நான் மன்னிப்புக் கோரினேன். 

நான் யாரிடமும் புகார் செய்யவிரும்பவில்லை. நீங்களும் இதனைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டாள் அவந்திகா. வழியனுப்பு  விழாவிற்குக்கூட அவள் வரவில்லை.

அதன் பிறகு, அவந்திகாவிற்கு, அந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திலிருந்து மீண்டு வர, முழுதாக இரண்டு வருடங்கள் ஆனது. அந்த இரண்டு வருடங்களும் அவள் என்னைத் தவிர்த்தாள். தற்போது எல்லாம் மறந்து, திருமணமாகி, ஒரு குட்டி அவந்திகாவிற்கு தாயாக இருக்கின்றாள். முன்புப்போல் இப்போது, அண்ணா அண்ணா என்று பாசத்தைப் பொழிகிறாள்.

ஆனால், என் நண்பன். இன்னும் மாறாமல், அதே மாதிரி தவறுகளைச் செய்துக்கொண்டிருக்கிறான். அந்தச் சம்பவத்திற்குப் எப்போதாவது பேசுவதாக எங்கள் நட்பு சுருங்கிவிட்டது. சில மாதங்களுக்கும் முன் கூட வேலைச்செய்யும் சக பெண்ணை ஓடும் பேருந்தில் பாலியல் ரீதியாக சீண்டியதாக சொல்லி வேலையைவிட்டு அனுப்பிவிட்டார்கள். இருந்தபோதும், தற்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பெரும் பதவியில் இருக்கிறான். மாதம் லட்சத்தை தாண்டுகிறது அவனின் சம்பளம். (என் நண்பனின் நண்பன், சிவராமன் சொன்னது)

திறமை இருக்கிறது, ஆனால், குணமில்லையே.

தற்போது அவனுக்கு அவன் அம்மா பெண் தேடுகிறார், அதுவும், இளசாக, அழகாக, கைப்படாத, களங்காத பெண்ணாகத் தேடுகிறார், தன் மகனின் வண்டவாளம், தண்டவாளம் தெரியாமலே.

#MeToo என்று புகார் சொல்லும் பெண்களைப் பார்த்து சிலர் கேட்கிறார்கள், இவ்வளவு நாள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? ஏன் உயர் பதவியில் இருப்பவர்களின் மீது மட்டும் இத்தகைய புகார்களை தெரிவிக்கிப்படுகிறது? உங்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் என்ன? என பஞ்சமில்லாமல் பல கேள்விகள்.

ஆனால், இத்தனை நூற்றாண்டுகளாய், இது போன்ற அத்துமீறல்களை சுமந்துக்கொண்டு வாழ்ந்துவந்தார்களே, இப்போது அவர்களுக்கு அவர்கள் மீதான வன்முறை குறித்தும், அத்துமீறல்கள் குறித்தும், பாலியல் சீண்டல்கள் குறித்தும் பேச, புகாரளிக்க, விவாதிக்க ஒரு பொதுத்தளம் கிடைத்திருக்கிறதே என ஆசுவாசிக்கிறேன். 

ஆனால், இது வெறும் தொடக்கம் தான், இன்னும் சொல்ல வேண்டியது நெடுந்தூரம்.

#MeToo என பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அநீதிகளை வெளிக்கொண்டு வரும்போதும், கருப்பு ஆடுகளை தோளுரிக்கும் போதும் நான் கலங்கிநிற்கிறேன், குற்றவாளியாக. ஏன் தெரியுமா?

முதலாவதாக, அவந்திகா, முருகனைப்பற்றி சொன்னப்பொழுது முஸ்டி புடைக்க, முகம் சிவக்க, நாதழுதழுக்க கோபம் வந்தது உண்மைதான். அவந்திகாவிற்கு நீதி கிடைக்கவேண்டியது உண்மைதான். ஆனால், அடுத்த சில நிமிடங்களில், முருகனுடைய வேலைக்கு இந்த அத்துமீறல் சம்பவம் தடையாக வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். அப்போதே நான் என் தங்கை அவந்திகாவைக் கொன்றுவிட்டேன். அவளுக்கான நீதிக் கிடைக்க போராடியிருக்க வேண்டும். தவறிவிட்டேன், தோழனாய், அண்ணனாய், ஆண்மகனாய்.

இரண்டாவதாக, முருகனிடம் மீண்டும் நட்புப் பாராட்டுவது, பாராட்டியது மிக மிக தவறு. காவல்துறையிடம் சென்றிருக்க வேண்டாம், குறைந்தபட்சம், கல்லூரி முதலவர் அல்லது ஹெச்.ஓ.டியிடமாவது சொல்லி அவனுக்கு ஏதாவது தண்டனைக் கிடைக்கச் செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தாள், அன்று அவந்திகா பாதிக்கப்பட்டதைப் போல, இன்று இன்னொரு பெண் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாள்.

தலைகுனிகிறேன். 

இதுவரை உலகில் வாழ்ந்த பெண்களிடமும், இப்போது வாழ்ந்துக்கொண்டிருக்கும் பெண்களிடமும், இனி வாழப்போகும் பெண்களிடமும் என்னை மன்னித்திவிடும்படி வேண்டுகிறேன்.

மன்னிப்பீர்களா?

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sowtham
Sowtham
6 years ago

The life lessons teach us to upgrade the civilization. almost all think women are weaker sex. But the fact isn’t it. Humans started their civilization with women as their leader of groups of people.As the way the elephants still following the thread.women are physically strong as they come through more pain n blood than men. She will bring up her kid in the way to react @ the situation to protect herself and shame those uncivilized Urban’s in he right way. To everyone; There’s a need to speak up with our fraternity and kids. When the girls n kids smells… Read more »