என் நண்பன் தன் வருங்கால மனைவியிற்கு, காதலர் தினத்தன்று புத்தாடை பரிசு வழங்க எண்ணினான். ஆதலால், நானும் என் நண்பனும் பிராண்ட் பேக்ட்ரி கடைக்குச் சென்றோம். அங்கே நடந்த ஒரு சம்பவமே இக்கதையின் கரு.
மிக பிரமண்டமான கடை. பெயருக்கு ஏற்றதைப்போல நிறைய நிறைய பிராண்ட்ஸ். வழக்கம் போல குழம்பிப்போய் நேடுநேரமாக தேடியும் என் நண்பன் ரியாஸ் எதனையும் தேர்வு செய்யவில்லை. எனக்கு நேரம் போக போக கடுப்பாகிவிட்டது.
என் நண்பன் என்னிடம் வந்து “கோபி…எத எடுக்கறதுனு தெரியல டா… எதாவது செய்டா” என்று கேட்டான்.
“போட நீயும் உன் காதலர் தினமும். ரெண்டு மணி நேரமா எல்லா துணியும் எடுத்துப்பொட்டுட்டு எதும் பிடிக்கலனு சொன்ன என்னடா. நான் கிளம்பறேன்…போ” என்று சொல்லிட்டு, லிஃப்டை நோக்கிச் சென்றேன்.
“நில்லுடா கோபி...”
“அட நில்லுடா கோபி” என்னுடனே வந்தான்.
நான் லிஃப்டின் அருகில் சென்றவுடன், அதன் கதவு திறந்தது. ஒரு அழகான பெண் அதிலிருந்து தவழ்ந்து வெளியே வந்தாள், என்னை கடந்துச் சென்றாள். அவளின் ஸ்பரிசம் என்னை கவர்ந்து இழுத்தது. எங்கேயோ பார்த்த முகம், ஒரு வாக்கில், என் முன்னாள் காதலியின் முகவெட்டு. (அட விடுங்க…. இப்ப எதுக்கு அவளை நினைச்சுகிட்டு…)
அவள் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டே அந்த ஆடை இந்தக் கடையில் இருக்கிறதா என்று தேட கிளம்பிவிட்டாள்.
அவள் எங்கே செல்கிறாள் என்று பார்ப்பதற்குள் என் நண்பன் ரியாஸ், “என்னடா கோபி. இதுக்குப் போயி கோவிச்சுக்கிற… வா டா” என்று கையை பிடித்து இழுத்துச் சென்றான்.
நானும் அவனுடன் சென்றேன், அவளைத்தேடி. ஆம் அவளைத்தேடி.
இக்கட்டுரையை படிக்கும் போது தான், அங்கே நடந்த கதையெல்லாம் என் நண்பனுக்குத் தெரியப்போகிறது. நான் அவனுக்காக வரவில்லை, அவளைத் தேடியே வந்தேன் என் தெரிந்தவுடன் எதனைக் கொண்டு அடிக்கப்போகிறானோ.? சரி நாம அந்தப் பொண்ண தேடுவோம்.
நான் அவளைத் தேட. என் நண்பன் ஆடையைத் தேட. நாங்கள் இருவரும் தேடியதை அடையமுடியவில்லை. சரி அவ கிளம்பியிருப்பாள் என்று நம்பிக்கையை இழந்துவிட்டு, என் நண்பனுக்கு உதவ முன்வந்தேன்.
“என்னாடா… இன்னுமா எடுக்குற… இந்தா… இந்த இரண்டும் அவளுக்கு செட் ஆகும்… பாரு…” என இரண்டு ஆடைகளை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.
“மச்சி இத அவளுக்கு போட்டோ பிடிச்சி அனுப்பலாம் டா. அவளுக்கு எத பிடிக்குதோ அத பில் போடலாம்” .
“கோபி…இந்த இத ரெண்டையும் பிடிச்சிட்டு அங்க போயி நில்லு…” என்றான்.
“ரெண்டுமே நல்ல இருக்கும் டா அவளுக்கு… எடுத்துக்கோ” என்றேன் ரியாஸிடம்.
“அதலாம் வேணாம். நான் அவள்கிட்டயே கேட்டு எடுத்துக்கிறேன். நீ முதல்ல அந்த டிரையல் ரூம் முன்னால போயி நில்லுடா”
நான் நேராக சென்று, டிரையல் ரூம் முன்னால் சென்று நின்றேன்.
“உன்னைய என்ன பண்றேனு பாரு” என்று உரும்பிக்கொண்டிருந்தேன்.
“சும்மா ஆம்பள சிங்கம் மாதிரி உரும்பாத டா… நீ ஷொகேஸ் பொம்மை தாண்டா” என்று கேலி செய்து என்னை வெறுபேற்றினான்.
“ஊரான் ஊட்டு லவ்வுக்கு உதவி பண்ணிணா, என் லவ்வுக்கு யாராவது உதவி பண்ணுவாங்கனு இங்க வந்தது தப்பா போச்சே.”
“இப்ப நமக்கு ஆளே இல்ல, யாரு வந்து உதவுனா என்ன?” என்று டிரையல் ரூம் கண்ணாடியைப் பார்த்து எனக்குள் பேசிக் கொண்டிருந்தேன்.
“நீங்க ஆம்பளையா… இல்ல ஷொகேஸ் பொம்மையா?” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
“எவடி அவ” என்று திரும்பிப் பார்த்தேன்.
அவளே தான்… அவளே தான்…
இதயத்துடிப்பு அதிகரித்தது. உள்ளுக்குள் என்னவோ போல இருந்தது. ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டது.
கையில் இருந்த இரண்டு ஆடைகளையும் அவளருகே இருந்த மேசையின் வைத்துவிட்டு அங்கே இருந்து நகர்ந்து என் நண்பன் அருகே சென்றுவிட்டேன்.
“அய்யய்யோ… அவ உள்ளே தான் இருந்திருக்கிற… இது தெரியாம… என்ன என்னவோ பேசிட்டோமே” என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
என் நண்பனுடன் இருந்துக் கொண்டே அவள் என்ன செய்கிறாள் என்று நோட்டம் விட்டேன்.
நான் மேசையின் மேல் வைத்துவிட்டு வந்த அந்த இரண்டு ஆடைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் டிரையல் ரூமிற்குள் சென்றுவிட்டாள். அவள் அந்த அறையில் இருந்து வருவதற்குள் நானும் என் நண்பனும் அங்கே இருந்து நகர்ந்து சற்றே தொலைவிற்கு வந்துவிட்டோம்.
அவள் நான் எடுத்த ஆடையில் ஒன்றை உடுத்திக் கொண்டு, டிரையல் ரூமில் இருந்து வெளியே வந்தாள். நான் இருந்த இடம் அவள் பார்வையில் மறைந்திருந்தது. அருகில் இருந்த கண்ணாடியில் அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். வெளியே வந்தவள், யாரையோ தேடியதைப் போல இருந்தது.
யாரை தேடுகிறாள் என்ற ஆர்வமிகுதியில் எட்டி அவளைப் பார்த்தேன்.
நானும் அவளைப் பார்க்க, அவளும் என்னைப் பார்க்க ஒரு நொடி ஆடித்தான் போய்விட்டாள் அவள். (நானும் தான்)
என்னைத்தான் தேடி இருக்கிறாள் போல.
அந்த ஆடை தனக்கு நன்றாக இருக்கிறதா? என்று சைகையில் கேட்டாள்.
அதற்கு நான், அவளிடம், அற்புதம் உனக்கு, என்று சைகையிலே பதிலளித்தேன்.
வெட்கத்துடன் அவள் மீண்டும் டிரையல் ரூமிற்கே சென்றுவிட்டாள்.
“கோபி… ஒரு வழியா எடுத்து முடிச்சிட்டேன் டா” என்று ரியாஸும் வந்து சேர்ந்தான். மீண்டும் ரியாஸுடன் பேசிக்கொண்டே அவளை தவறவிட்டிருந்தேன்.
நம்ம ராசி அப்படி, என்று ரியாஸுடன் பில் கவுண்டருக்குச் சென்றேன்.
ஆச்சரியம். எங்களுக்கு முன்னால், அவள்.
அவள் என்னைப் பார்க்க….
நான் அவளைப் பார்க்க…
அவளுக்குள் அவள் சிரிக்க…
எனக்குள் நான் சிரிக்க…
அவளுடம் பேசுவதைப் போல…
ரியாஸுடன் சம்பந்தமில்லாமல் நான் பேச…
அதனை அவள் புரிந்துக்கொண்டு தலையாட்ட…
ரியாஸ் குழம்ப…
அதனைக் கண்டு அவள் வெட்கத்துடன் சிரிக்க…
நான் அதனை ரசிக்க….
கவிதை… கவிதை…
“மச்சி நேரமாச்சி நீ போயி வண்டி எடுத்துட்டு வா… நான் பில் வாங்கிட்டு வரேன்…” என்று ரியாஸை கழற்றிவிட்டு அவளுடன் பேச தயாரானேன்.
அவளே முதலில் பேசினாள். பில் கவுண்டர் வரிசையில் நின்றுக்கொண்டிருக்கும் போதே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அவளுக்கு பில் போட்ட பின்னும், நான் பிக் போடும் வரை என்னுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
சரி கிளம்பலாம் என்று நினைத்திருந்த பொழுது, “உங்க போன் நம்பர் கொடுங்க” என்று அவளே கேட்டாள். (அட ஆமாங்க… சத்தியமா அவதாங்க கேட்டா)
என் நம்பரைக் கொடுத்தேன். அவள் மிஸ்டுகால் கொடுத்து, இது தான் என் நம்பர், சேவ் பண்ணிக்கோங்க என்றாள்.
சஹானா என்று அவள் நம்பரை சேவ் செய்தேன்.
“ஆமா உங்க நம்பர எந்த பேர்ல சேவ் பண்றது” என்று கேட்டாள்.
அம்பள-னு சேவ் பண்ணிக்கோங்க என்றேன்.
வெட்கத்துடன் சிரித்தவள்.
என் நம்பரை சேமித்தாள், கோபி அம்பள என்று.
நானும் என் போனை எடுத்து சஹானா பொம்பள என்று அவள் நம்பரை மாற்றி சேமித்தேன்.
மெல்லிய சிரிப்புடன் அவளிடமிருந்து விடைப்பெற்றேன்.
– ஆம்பள… பொம்பள…
Very nice