Monday, December 23, 2024
Home > சிறுகதை > பேசியே கொன்னுடுவ…

பேசியே கொன்னுடுவ…

அன்று திங்கள் கிழமை, காலை 10 மணி இருக்கும். இந்த வாரம் என்ன வேலை செய்ய வேண்டும் என்று என் ஆபிஸில் இருக்கும் வேலையாட்களிடம் அலுவல் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது தான், நெடுநாட்களுக்குப் பிறகு அவளிடமிருந்து அழைப்பு வந்தது. ஆம் அவள் தான்.

எடுக்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுப்பதற்குள் அழைப்பு துண்டித்துப்போனது.

(ஜியோவும், ஏட்டெல்லும் 15 நொடிகளுக்கு மட்டுமே ரிங்கிங் டைம் வைத்து சண்டையிட்டுக் கொண்டிருந்த காலமது)

மீண்டும் மீட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும், மீண்டும் அழைத்தாள்.

இப்போது எனது ஐபோன் எனது கையிலேயே இருந்தது. பதினைந்து நொடிகளுக்குள் என்னால் இந்த அழைப்பை எடுத்து இருக்க முடியும். ஆனால் எடுக்கவில்லை.

ஏனோ எனக்கு அந்த அழைப்பை எடுக்க மனமில்லை.

மனம் பதறியது. பல வருடங்களுக்குப் பிறகு ஏன் இவள் இப்போது அழைக்கிறாள்? என்று.

என்னால் மீட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை.

என் வேலையாட்கள் எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு புரிந்தது. ஏசி ரூமாக இருந்த போதும் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. மீட்டிங்கை அத்துடன் முடித்துக்கொண்டேன். என் ஆட்கள் எல்லோரும் கலைந்தனர்.

மீண்டும் அழைப்பு வந்தது.

இம்முறை முதல் ரிங்கிலேயே எடுத்தேன்.

“ஹலோ கோவிந்த். நான் கோமதி பேசுறேன். உன் கிளாஸ் மேட்” என்றாள்.

“இம். தெரியுது. இன்னும் உன் நம்பர் என் மொபைலில் இருக்குது”

“நல்லா இருக்கியா?”

“ஏதோ இருக்கேன். என்னய இன்னும் நியாபகம் வச்சி இருக்கியே. தேங்க்ஸ்” என்றேன் கொஞ்சம் வெறுப்புடன்.

“இப்ப நீ பிஸியா இருக்கியா நான் உன் கிட்ட கொஞ்சம் பேசனும்”

கொஞ்சம் அவரச வேலையிருந்தது, இருந்தாலும் “சும்மா தான் இருக்கேன் என்னானு சொல்லு” என்றேன்.

“உன்னய பாக்கனும். நீ சண்டே சென்னைக்கு வர முடியுமா?” என்றாள்.

***********************

இன்னும் சில நாட்களில் இவளுக்குத் திருமணமாகப் போகிறது. இப்போது எதற்கு சென்னைக்கு வரச் சொல்கிறாள் என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

எங்கள் வாட்ஸ் ஆப் கிளாஸ்மேட்ஸ் குரூபில் கோகிலா தான் முதன் முதலில் இந்த தகவலை சொல்லியிருந்தாள். அவள் எப்போதும் முந்திரிக்கொட்டை. அவசரக்குடுக்கைக்காரி. அவளிடம் எந்த இரகசியமும் தங்காது.

அவள் தகவல் சொன்ன பின், கோமதியும், தன் கல்யாண பத்திரிக்கையை குரூபில் அனுப்பி இருந்தாள். என்னைத் தவிர எல்லோரும் கோமதிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களை சொல்லியிருந்தனர். ஏனோ என்னால் மட்டும் வாழ்த்துச் சொல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் குரூப்பை விட்டு வெளியேறி விடலாம் என்று கூட எனக்குத் தோன்றியது. அந்தப் பத்திரிக்கையையும் நான் டவுன்லோட் செய்யவில்லை. அவளுக்கு வாழ்த்தும் சொல்லவில்லை.

நண்பர்கள் என்னை அழைத்து, அவளின் திருமணத்திற்கு வருகிறேனா? என்று விசாரித்தார்கள். நான் அலுவல் சம்பந்தமாக மலேசியாவிற்கு செல்ல அந்தத் தேதியில் டிக்கெட் போட்டு இருக்கிறேன் என்று திருமணத்திற்கு செல்லாமல் இருக்க ஒரு பொய்யை சொல்லி வைத்தேன். இது நடந்து சில வாரங்கள் இருக்கும்.

இவள் என்னை அழைக்கும் வரை இந்த விசயத்தை நான் மறந்தே போயிருந்தேன். அந்த வாட்ஸ் ஆப் குரூப் பக்கம் போவதையே குறைத்துக்கொண்டேன். என் நண்பன் தயா வேறு, ஏதாவது அந்த குரூப்பில் போட்டு என்னை வம்புக்கு இழுப்பான். அதனாலேயே நான் அந்த குரூப்பையே முயூட்டில் போட்டுவிட்டேன்.

இந்த தயாவிற்கு வேலை வெட்டியே கிடையாதா? எப்ப பாரு, எதையாவது எழுதி, குரூப்பில் போட்டு படிக்கச் சொல்லி எல்லோரையும் கடுப்போற்றுவதே வேலையா போச்சி என்று சில நேரங்களில் நானே அவனைப் பற்றி அலுத்துக்கொண்டிருக்கிறேன். என்ன செய்வது.

தயா தன் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறான். எப்போது பார்த்தாலும் எங்காயாவது போய் கொண்டே இருப்பான். பயணம் என்றால் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். நண்பர்கள் எல்லோரையும் பார்க்க வருடத்தில் அவன் பைக்கை எடுத்துக்கொண்டு ஒரு முறையாவது வந்துவிடுவான்.

அவன் இல்லையென்றால் குரூப்பும், அமைதியாகவும், வெறுமையாகவும் இருக்கும் என்பதால் அவனை என் குரூப் அட்மினாக இருக்கும் பெண்கள் எல்லோரும், குரூப்பை விட்டு நீக்காமல் இருந்தனர்.

***********************

கோமதி, தயா மற்றும் நான்.

நாங்கள் மூவரும் திருச்சியில் இஞ்சினியரிங் படிக்கும் பொழுது நெருங்கிய நண்பர்கள். நானும் தயாவும் பாய்ஸ் ஹாஸ்டலில் ரூம் மேட்ஸாகவும் இருந்தோம். எப்போது நாங்கள் இருவரும் சேர்ந்தாலே லூட்டி தான்.

வகுப்பு அகர வரிசைப்படி எனக்கு முன்னால், கோமதி. அவளுக்கு இரண்டு பேருக்கு முன்னால், தயா. நான்கு வருடங்கள் போனதே எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் நல்ல நட்புக்கூட்டமாக இருந்தோம். எப்போதும் கல கல என்று இருக்கும் எங்கள் குழாம்.

கோமதி, திருச்சிக்காரப் பெண். தினமும் கல்லூரி பஸ்ஸில் வந்துச் செல்வாள்.

எனக்கும் தயாவிற்கும் ஏதாவது வாங்கி வருவதும் அவள் தான். சில சமயங்களில் எங்கள் இருவருக்கும் அவளே மதிய உணவும் எடுத்துக்கொண்டு வந்துவிடுவாள். கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவள் அவள். ஆனால் படிப்பில் கெட்டிக்காரி. எப்போதும் முதல் மூன்று இடங்களில் வந்துவிடுவாள். முதல் வருடம் முடியும் வரை அவள் எங்களுடன் அவ்வளவாக பேசியதே கிடையாது. இரண்டாம் வருடம் முதல் லேப்பிற்கு அதிகம் செல்ல வேண்டி வந்தது. அவளுக்கு நானும் அருகருகே தான் அமர்ந்திருப்போம் கடைசி வருடம் வரை.

நானும் தயாவும் படிப்பதைத் தவிர மற்ற எல்லாம் வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வோம். எப்படியாவது ஒப்போற்றி தேர்வுகளில் நான் பாடரில் பாசாகிவிடுவேன். ஆனால், இந்த பிராக்டிக்கல்ஸ் தான் என்னை வெச்சு செய்யும். கோமதியிடம் உதவி கேட்டால், அப்போதெல்லாம் பதிலே வராது. இரண்டாம் வருடம் பிராக்டிக்கலில் எங்கள் வகுப்பில் அரியர் வைத்த ஒரே நபர் நான் தான். தயா ரொம்பவும் வருத்தப்பட்டான், எனக்கு உதவ முடியவில்லை என்று.

அது கோமதிக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக இருந்திருக்கும் போல. நான்காவது செமஸ்டரில் ஆரம்பிக்கும் போது ஒரு நாள் என் நம்பரைக் கேட்டால். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. பேசினாலே அளந்து பேசுபவள், இப்போது நம்பர் கேட்கிறாளே என்று.

என் நம்பரை அவளிடம் கொடுத்தேன்.

அன்று ஆரம்பித்தது எங்களின் நெருக்கம். அந்த செமஸ்டர் முடியும் வரை அவ்வப்போது எஸ்.எம்.எஸ் மூலமாக பேசிக்கொள்வோம். நான் அவளுடன் பேசுவது எங்கள் வகுப்பில் உள்ள யாருக்கும் தெரியாது. முக்கியமாக என் கூடவே சுற்றும் தயாவிற்குக் கூட தெரியாமல் பார்த்துக்கொண்டேன்.

நானும், கோமதியும் அருகிலேயே உட்கார்ந்து இருப்போம் கம்புயூட்டர் லேப்பிலே. ஆனால் அங்கு கூட, பேசிக்கொள்வது என்னவோ எஸ்.எம்.எஸ் மூலமாகத்தான்.

அந்த ஃபீல் இருக்கே. அது ஒரு கவிதை மாதிரி. அதனை அனுபவித்து இருந்தால் தான் அதன் வீரியம் இதனை படிக்கும் உங்களுக்கு புரியும்.

அவளின் புண்ணியத்தால், எல்லா அரியர்ஸும் கிளியர் ஆகிவிட்டது. எனக்கு ரொம்பவும் சந்தோசம். ரிசல்ட் வந்த அன்று அவளுக்கு தேங்கஸ் என்று செய்தி அனுப்பினேன். அவள் பதில் அனுப்பவில்லை.

முதன் முறையாக அன்று தான் அவள் எனக்கு போன் செய்தாள்.

போனில் அழைத்தவள், என்னை கன்னாபின்னா வென்று திட்டினாள். எதற்குத் என்றால் நான் தேங்க்ஸ் என்று சொன்னதற்காம்.

அன்றிலிந்து தினமும் போனில் பேசிக்கொள்வோம். அதுவும் மணிக்கணக்கில். இது வகுப்பில் யாருக்கும் தெரியவோ தெரியாது. தயாவிற்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டேன். உளறிவிடுவான் என்ற பயம்.

அவளுடன் பேச பேச, அவளை ரொம்பவும் பிடிக்க ஆரம்பித்திருந்தது. நான் அவளிடம் பழகும் விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வந்தது.அவள் மேல் நான் கொஞ்சம் கூடுதலாக உரிமை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

அவளுக்கும் என் மேல் ஆதிக்க மனோபாவம் வந்தது. நான், என் வகுப்பில் வேறு பெண்ணுடன் பேசிவிட்டால் போதும், அவளுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்துவிடும். நேரடியாக கோபத்தைக் காட்ட மாட்டாள். வேறு ஏதாவது ஒரு சிறிய விசயத்தை பெரிதாக்கி, அதில் இந்தப் பிரச்சனையை கொண்டுவருவாள்.

நூறு முறையேனும் மன்னிப்புக் கேட்டாகவேண்டும். இல்லாவிட்டால் சமாதானம் ஆகமாட்டாள். அப்போது மதிய சாப்பாடும் கட்டாகிவிடும். தயாவிற்கும் கடுமையான திட்டு விழும். அவன் என்னைப் பார்ப்பான். எனக்கு ஒன்றும் தெரியாது. நீ தான் அவளை கோபப் படுத்தியிருக்க வேண்டும் என்று பந்தை தயாவின் பக்கம் திருப்பிவிட்டு விடுவேன். அவனும் மன்னிப்பு கேட்பான். கெஞ்சுவான் கோமதியிடம், நான் செய்த தவறிக்காக.

எப்படி சமாதனம் ஆவோம் என்று தெரியாது. ஆனால் சமாதானமாகி மீண்டும் பேச ஆரம்பித்துவிடுவோம்.

எப்போதெல்லாம் எங்களுக்குள் இந்த மாதிரி சண்டை வந்து மீண்டும் சேர்கிறோமா, அப்போதெல்லாம் எங்களுக்குள் இருக்கும் நெருக்கும் இன்னும் அதிகரிக்கும். அது காதல் தான் என நான் உளமாற நம்பினேன். ஆனால் அவளிடம் அதனை சொல்வதற்கும் எனக்கு தைரியமில்லை.

காலம் ஓடியது.

கல்லூரி நாட்களின் கடைசி நாளும் வந்தது. ஜீனியர்ஸ், எங்கள் வகுப்பிற்கு, பிரிவு உபசரிப்பு விழா நடத்தினர்.

அன்று என் மூளை பயங்கரமாக வேலை செய்ததது. விழா அன்று எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்து, சாப்பிட்டுவிட்ட பிறகு ஜீனியர்ஸ், சினியர்ஸ் என எல்லோருமாக நடனமாடிக்கொண்டு இருந்தோம். அப்போது டிஜேவிடம் சென்று மைக்கை வாங்கி நான் பேசினேன். என்ன பேசினேன் தெரியுமா?

“ஹாய். பிரண்ட்ஸ். நான் தான் உங்க கோவிந்த்.”

எல்லோரும் ஆடுவதை நிறுத்திவிட்டு என்னையே பார்த்தார்கள். கோமதியும் என்னையே பார்த்தாள்.

நானும் கோமதியைப் பார்த்தேன்.

அவளைப் பார்த்துக் கொண்டே மைக்கில் சொன்னேன்.

“ஐ லவ் யூ கோமதி” என்று.

எல்லோரும் ஆரவாரமாக கைத்தட்டினார்கள். நான் கோமதியைப் பார்த்தேன்.

அவள் கண்களில் கண்ணீருடன் அவள் பையை எடுத்துக்கொண்டு கிளப்பிவிட்டாள், அந்த விழாவில் இருந்து பாதியியே.

எல்லோரும் அமைதியாகிவிட்டனர்.

கோமதியும் ஒத்துக் கொள்வாள் என்று தான் எல்லோரும் நம்பினார்கள், நான் உட்பட. ஆனால், அவள் இப்படி அழுதுக்கொண்டு போவாள் என்று நான் கனவிலும் நினைக்கவேயில்லை. அந்த விழாவே களையிழந்தது. எல்லோரும் முனுமுனுத்துக் கொண்டே கிளம்பினார்கள். கோவிந்த் செய்தது ரொம்பத் தப்பு என்று என் காது படவே என் வகுப்புப் பெண்கள் பேசிக்கொண்டனர்.

நான் என்ன செய்வது என்று தெரியாமல், உறைந்துப் போய் நின்றிருந்தேன், இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டு, எனக்கு உதவுவதற்காக என்னருகில் தயா ஓடி வந்தான்.

நானும் அவனும் கோமதியைத் தேடி ஓடினோம்.

அவள், அதற்குள் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

அதன் பிறகு எவ்வளவோ முயன்றும் அவன் என்னுடனோ, தயாவுடனோ பேசவேயில்லை.

எத்தனை முறை அழைத்தாலும், அழைப்பையே அவள் எடுக்கவில்லை.

நான் அனுப்பிய எஸ்.எம்.எஸ் எதற்கும் அவள் பதிலளிக்கவேயில்லை.

“சரி. விடு மச்சான். பாத்துக்கலாம்.” என்று தயா என்னை ஆறுதல் படுத்தினான். சில வருடங்களுக்கு. ஆம் சில வருடங்களுக்கு.

அவள் கேம்பஸ் இண்டர்வீயூவில் செலக்ட் ஆகி இன்போசிஸ் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டாள். அதன் பிறகு அவளைப் பற்றிய தகவலே எனக்கு வராமல் தயா பார்த்துக்கொண்டான். நான் அந்த கேம்பஸ் இண்டர்வீயூவில் செலக்ட் ஆகாததால், குடும்பத் தொழிலுக்கே வந்துவிட்டேன், அவளின் நியாபகங்களை நெஞ்சிலே சுமந்துக்கொண்டு.

வந்து ஐந்தாறு வருடங்கள் கடந்துவிட்டது. அவளை மறக்க முடியாமல் துயரப்பட்டாலும், அது என் மனதை பக்குவம் அடையவைத்தது.

**********************

என்ன சொல்வது என்று தெரியவில்லை. சில நொடிகள் அமைதியாய் இருந்தேன்.

“லைனுல இருக்கியா கோவிந்த்” என்றாள்.

“ம்” என்றேன்.

“பிளீஸ் வாயேன்” என்றாள்.

“சரி வருகிறேன்” என்று போனை வைத்துவிட்டேன்.

இன்னும் ஆறு நாட்கள் இருந்தது. அந்த ஆறு நாட்களும் எனக்கு கடந்த ஆறு வருடங்களை நினைவுப் படுத்தியது.

**********************

கோமதியைக் பார்க்க, கோவையிலிருந்து சென்னைக்குச் சென்றேன். என்னை அழைத்துச் செல்வதற்காக சென்னை ஏர்போட்டுக்கு அவளே வண்டி ஓட்டிக்கொண்டு வந்திருந்தாள்.

என்னை வரவேற்றாள் புன்னகையுடன்.

வண்டியில் ஏறிக்கொண்ட பின் நான் எதுவும் பேசவில்லை.

அன்று நான் கருப்பு சட்டையும், கிரே ஜீன்ஸும் அணிந்திருந்தேன். சட்டையை இன் செய்திருந்தேன். கருப்பு பார்மல் சூ போட்டு இருந்தேன். அறு வருடங்களுக்குப் பிறகு அவளை பார்க்க எந்த உடை உடுத்திக்கொண்டு வர வேண்டும் எனத் தெரியவில்லை.

அவளுக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் வேறு என்பதால் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தேன்.

எனக்கு 96 படம் தான் நினைவிற்கு வந்தது. என்ன ஒரு வித்தியாசம், அதில் விஜய சேதுபதியை பார்க்க திரிஷா வருவாள், அவன் அவளுக்கு வண்டி ஓட்டுவான். இதில் அப்படியே உல்டா. அவள் என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தாள். அவளே வண்டியும் ஓட்டினாள். அவள் இவ்வளவு நன்றாக வண்டி ஓட்டுவாள் என்று எனக்கு அப்போது தான் தெரியும்.

(குறிப்பு: உண்மையா நாம எதுவும் கத எழுதினாலும் அதனை அந்தப் படத்துக் காப்பி, இந்தப் படத்துக் காப்பி என்று சொல்லும் என் அருமை வாசகர்களுக்காக இந்த டிஸ்களைமர்)

“கல்யாணத்துக் கொஞ்சம் பொருள் வாங்க வேண்டும்” என்றாள்.

அவள் கூடவே எல்லா இடத்திற்கும் சென்றோன்.

புத்தாடை முதல் உள்ளாடை வரை டிரஸ்களும், பின் நிறைய நிறைய பொருட்களும் வாங்கினாள். பில் லட்சத்தை தாண்டியது. நான் அவள் கூடவே இருந்தேனே தவிர, அவளிடம் நானாக எதுவும் பேசவில்லை. அவள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னேன்.

சில முறை இந்த டிரஸ் நல்லா இருக்கா இல்ல, இது நல்லா இருக்கா என்று கேட்பாள். அவள் எதில் அழகாய் தெரிவாள் என்று ஒரு முறை நினைத்துப் பார்த்து அதனை அவளுக்கு தேர்வு செய்து கொடுப்பேன்.

மாலை வரை இப்படியே போனது. அவளின் வண்டியில் இதற்கு மேல் பொருட்கள் வைக்க இடமில்லை. அவ்வளவு வாங்கியாகிவிட்டது. ஏதோ பேச வேண்டும் என்று வரச் சொல்லிவிட்டு பையை சுமக்க வைக்கிறாளே என்று எனக்கு வெறுப்பாக இருந்தது.

“வண்டியில இடமில்ல. இன்னும் ஏதும் வாங்கனுமா?” என்றேன்.

“துரைக்கு பேச சாய்தரம் வர ஆகியிருக்கு” என்று சிரித்தாள்.

வண்டியை பாஸ்கின்ஸ்-ராபின்ஸ் ஐஸ் கிரீம் கடைக்கு விட்டாள்.

எனக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும் என்றாலும், எதையும் நான் ஆடர் செல்லவில்லை. டேபிளில் என் முன்னே அமர்ந்திருந்த அவளைப் பார்த்தேன்.

இன்னும் அழகாய் தெரிந்தாள். (நான் ஆசைப் பட்ட பெண் ஆச்சே அவள்)

எனக்கு இந்தக் கடையின் பிரவேரியன் சாக்லேட் ஐஸ்கிரீம் என்றால் உயிர் என்று அவளுக்கு நன்றாக தெரியும். எனக்கும், அவளுக்கும் அதையே ஆடர் செய்தாள்.

“இன்னும் அழகாயிட்ட” என்றேன்.

சிரித்தாள்.

“எல்லாம் கல்யாண கலையா?” என்றேன்.

முறைத்தாள்.

நான் அமைதியானேன்.

பிறகு நண்பர்கள் பற்றிய பேச்சு வந்தது. தயாவைப் பற்றிக் கேட்டாள்.

“தயாவுக்கு இப்பவாச்சு ஆள் கிடைச்சுதா?” என்றாள்.

“எங்க இன்னுமில்ல” என்றேன்.

“நம்ம கிளாஸில் கவிதா பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தானே.”

“ஐயோ, அத ஏன் கேட்குற. அது பெரிய காமெடி. ”

“என்னடா என் கிட்டயும் சொல்லு”

(ஆறு வருடத்திற்குப் பிறகு டா போட்டுக் கூப்பிட்டாள். எனக்கு ஒரு மாதிரி இருந்தது)

கவிதாவிற்கும், தயாவிற்கும் நடந்த அந்த விவாதத்தை அவளிடம் சொன்னேன்.

“நம்ம கிளஸ் பசங்கள்ல யார் மாதிரி உனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று அவளிடம் விளையாட்டாக கேட்டு இருக்கிறான் டேட்டிங் சென்ற ஒரு நல்ல நாளில். அவள் இவன் பெயரை செல்வாள் என்ற எதிர்பார்புடன்.”

“முதலில் அவள் சொல்லவில்லை. அவள் வாயில் இருந்து, வார்த்தையை பிடுங்க இவனே விடாமல் ஒவ்வொரு பெயராக கேட்டான்”

“கோபி மாதிரி வேணுமா?”

“அவன் கலர் எனக்கு செட் ஆகாது”

“தாஸ் மாதிரி வேணுமா?

“அவன் ரொம்ப கலர். கொஞ்சம் உயரம் கம்மி வேற”

“அப்ப, குமார் மாதிரி”

“அவன் ரொம்ப ஒல்லி, எனக்கு தம்பி மாதிரி தெரியரான்”

கோமதியுடன் பேசிக்கொண்டே மீண்டும் வண்டி ஏறினேன். அவள் என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று தான் வரச் சென்னாள். ஆனால், அதனை சொல்லாமலே என்னிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறாளே என எனக்குள் வினா எழுந்தது. அதனை அவளிடன் வெளிகாட்டிக் கொள்ளவே இல்லை.

எனக்கு ரிட்டன் பிளைட்டிற்கு நேரம் ஆனதால், மீண்டும் ஏர்போர்டிற்கு வண்டியை விட்டாள்.

“அப்புறம் என்ன ஆச்சி” என்று தயா-கவிதா கதையை கேட்டாள்.

“வெங்கி”

“ஐயா அவன் ரொம்ப உயரம்”

“பாலா, பார்கவ்”

“வாய்ப்பேயில்ல”

“தயாவிற்கு ஆர்வமாக இருந்தது. அவனைத் தான் சொல்லப்போகிறாள் என்று. இன்னும் வருணும், அவனும் மட்டும் தானே லிஸ்டில் இருந்தார்கள்”

வருண் பெயரைக் கேட்பதற்கு முன் தன் பெயரைக் கேட்டால் என்ன என்று அவனுக்கு யோசனை வர, அதனை அவளிடம் கேட்டான்.

“அப்ப என்னைய மாதிரி மாப்பிள்ளை வேண்டுமா” என்று கேட்டான் கவிதாவிடன்.

“எதுக்கு பேசியே கொல்றதுக்கா? நீ புத்திசாலி தயா. உன்கிட்ட பேசி பேசியே நான் டயார்ட் ஆகமுடியாது பா. இது சரி, அது சரினு டாமினேட் பண்ணுவ. என்ன என் போக்குல விட்டாதா எனக்கு பிடிக்கும். உன்ன மாதிரி ஒரு பிரெண்ட் எல்லா பெண்ணுக்கும் வேணும். ஆனா உன்ன மாதிரி பசங்க கூடலாம் பெண்ணுகளால வாழ முடியாது தயா”  என்று சட்டென்று செல்லிவிட்டாள் கவிதா.

அதை மட்டுமா சொன்னா, “எனக்கு வருண் மாதிரி தான் மாப்பிள்ளை வேணும்”

“அவனும் புத்திசாலி, அமைதி, அழகு.” என்று அவனைப் பற்றி வர்ணிக்க வர்ணிக்க தயாவிற்கு கோபம் அதிகமாகி எழுந்துப் போயிவிட்டான்.

“செம காமெடி” என்று கோமதி சிரித்தாள்.

நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன்.

“இன்னு முடியல. கேளு” என்றேன்.

“அத போயி தயா, வருண் கிட்ட சொல்ல, அவன் நேரா போயி, கவிதாகிட்ட பிரபோஸ் பண்ணி, இப்ப அவங்களுக்கு சீக்கரமே கல்யாணம் ஆகப்போவுது. இது இன்னும் யாருக்கும் தெரியாது” என்றேன்.

“அடிப்பாவி கவிதா. இரு நான் அவள் கிட்ட பேசிக்கிறேன்” என்றாள்.

அதற்குள் ஏர்போர்ட் வந்து சேர்ந்தோம்.

பிளைடிற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது.

அவள் வண்டியை பார்கிங்கில் நிறுத்திவிட்டு வருவதாக சென்றாள்.

அவள் வருவதற்குள் நான், எங்கள் இருவருக்கும் காபி வாங்கி வந்தேன்.

வண்டியை நிறுத்திவிட்டு, நான் அமர்ந்திருந்த டேபிளில் வந்து அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் அமைதிக்குப்பின் அவளே பேச ஆரம்பித்தாள்.

“எனக்கு வர்ற புதன்கிழமை கல்யாணம்” என்றாள்.

“ம். தெரியும்”

“குரூப்-ல நீ எதுவும் சொல்லல”

“ஆமா சொல்லல”

“ஏன்”

“சொல்ல விருப்பமில்ல”

“அப்ப நான் நல்ல இருக்கறது உனக்கு சந்தோஷம் இல்லையா?”

“நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா தான் இருப்ப”

“சினிமா டையலாக் எல்லாம் வேணாம்”

“எனக்கு சந்தோஷம் தான்” என்றேன் மனதை திடப்படுத்திக் கொண்டு.

“ம்” என்றாள் வெறுமையாக.

“கல்யாணம் ஆனா ஒரே வாரத்துல கனடாவுக்குப் போறோம். அங்கயே செட்டில் ஆகப் போறோம். அவருக்கு அங்கையே வேல. இனி எப்பாவாவது தான் இந்தியாவுக்கு வருவோம்.”

“ம்” என்றேன்.

“அவரு பெரு தெரியுமா?”

“தெரியாது”

“பத்திரிக்கைய பாத்தியா”

“இல்ல”

“ஏன் பாக்கல”

“மனசுக்கு பாரமா இருந்தது. அதான் பாக்கல”

“ம்” என்றாள்

“அத பத்தி பேச வேணாமே”

“அத பத்தி தான் பேசனும்” என்றாள்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தோம். மீண்டும் அவளே பேச ஆரம்பித்தாள்.

“என் கல்யாணத்துக்கு வர மாட்டியா?”

“இன்னு முடிவு பண்ணல”

“மலேசியா பேறனு சொன்னாங்க”

இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை தலையை கீழே குணிந்துக்கொண்டேன்.

அவளுக்கு தெரியும், நான் பொய் தான் சொன்னேன் என்று.

எனக்கு விமானத்தை பிடிக்க நேரமாகிக் கொண்டே இருந்தது.

“கிளம்பலாமா? நேரம் ஆச்சு” என்று எழுந்தேன்.

“உட்காறு. இன்னும் பேசனும்” என்றாள்.

மறுப்பு ஏதும் பேசாமல், நான் அமைதியாக உட்கார்ந்துக் கொண்டேன்.

அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என்று தெரிந்தது. ஆனால், என்ன சொல்ல வருகிறாள் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை.

நேரம் ஆக ஆக பிளைட்டை விடப் போகிறோம் என்ற எண்ணமே என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு தெரிந்தது. நானும் அவளையே பார்த்தேன்.

அவள் கண்களில் கண்ணீர்.

எதற்கு இப்போது அழுகிறாள் என்று எனக்கு குழப்பமாக இருந்தது. கேட்கவும் பயமாக இருந்தது.

இந்த நிலையில் அவளை விட்டுச் செல்லவும் மனமில்லை. பிளைட்டிற்குக் நேரம் ஆனது. என் வாட்சைப் பார்த்தேன்.

“வா. போகலாம்.” என்று உள்நாட்டு புறப்பாடு பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றாள்.

அப்போது அவள் என் கையைப் பற்றிக் கொண்டாள்.

நான் விடுவித்துக்கொள்ள முயன்றேன்.

அவள் இன்னும் இறுக்கமாக என் கையைப் பற்றிக்கொண்டாள்.

(இங்கே 96 திரைப்படக் காட்சி நினைவிற்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல)

நான் என் கையை வலுவாக விடுவித்துக்கொண்டு, அவளிடம் “பை” சொல்லிவிட்டு முன் நகர்ந்தேன்.

அப்போது.

“கோவிந்த்” என்று அழைத்தாள்.

நான் கடுப்புடன் திரும்பி கோபமாக, “என்ன கோமதி” என்றேன்.

அவள் முகம் கண்ணீரில் நினைந்திருந்தது.

“ஐ லவ்டு யூ” என்று சொல்லிவிட்டு முட்டிப்போட்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

நான் இருந்த இடத்தில் இருந்து நகரவேயில்லை. இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட அந்த நொடியில் எனக்குத் தெரியவில்லை. இன்னும் சில நாட்களில் இவளுக்கு கல்யாணம், இப்போது இப்படி சொல்கிறாளே என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவளே எழுந்தாள்.

“இத சொல்லனும்னு தான் உன்ன வர சொன்னேன்.”

“என்ன மன்னிச்சுடு. அன்னைக்கே இத சொல்ல எனக்கு தெரியமில்ல. எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டங்கனு தான் சொல்லல”

“ஸாரி டா மை டியர் கோவந்த்”

“ஐ லவ்டு யூ. வில் லவ் யூ ஆல் மை லைப்” என்று சொல்லிவிட்டு, அவளது கண்ணீரை மறைக்க கறுப்பு கூலிங் கிளாசை எடுத்து போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டாள், அவள் வண்டியை நோக்கி, என்னை திரும்பிக் கூடப் பார்க்காமல்.

– முற்றுமா?