திமுக-காங்கிரஸ் கூட்டணியில் திமுக நிற்கப்போகும் தொகுதிகளில் 15 தொகுதிகள் எளிதாக வெற்றிப்பெறக் கூடிய தொகுதிகள் எனவும், காங்கிரஸுக்கு, அக்கட்சி பலவீனமாக உள்ள 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அரசியல் விமர்சகர்களும், எதிர்கட்சியினரும் கடுமையாக சாடுகின்றனர். இது பற்றி விவாதங்கள் பரவலாக எழுந்துள்ளன. 2016ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டசபைத் தேர்தலின் திமுக-காங்கிரஸின் ஓட்டு விகிதங்களை அடிப்படையாக வைத்தே இந்த விவாதங்கள் எழுகிறது. மேலும் குறிப்பாக வடமாவட்டங்களிலுள்ள 14 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 10ல் போட்டி போடுவதால் இங்கே பலரது கண்களை உறுத்துகின்றது. உண்மையில், திமுக அக்னிப் பரீட்சையில் இறங்கியிருக்கிறது, அது எப்படி என்பதைப் பற்றியே இக்கட்டுரை.
கலைஞர் கருணாநிதி-செல்வி ஜெயலலிதா இல்லாத இந்த அரசியல் களத்தில், கடந்த தேர்தல்களின் முடிவுகளை விடவும் இந்த தேர்தலின் முடிவுகள் வித்தியாசமாக, ஆச்சரியமானதாகவும் இருக்கபோகிறது. இந்தத் தேர்தலின் முடிவுகள் பல தேர்தல்களுக்கு அடிப்படை அளவீடாக இருக்கப்போகிறது. அடுத்தத் தலைமுறை தலைவர்களை மக்கள் அடையாளம் தயாராகிவீட்டார்கள்.
திமுக-காங்கிரஸ் வட மாவட்டங்களில் 2016ஆம் ஆண்டு பெற்ற வெற்றிக்கு பாமக தனியாக நின்றது ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்க வேண்டும். அந்தத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வெற்றி விகிதத்தைவிடவும், பாமக பெற்ற வாக்குகள் அதிகம்.
இப்படியான சுழ்நிலையில் பாமக-தேமுதிக-பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தப் பிறகு கடந்த கால தேர்தல் கணக்கு விவரங்கள் அதிமுக-பாமக-பாஜக-தேமுதிக கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது. ஆகவே தான், வடமாவட்ட அரசியல் களம், அதிமுக கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதைப் போல ஊடகங்களால் கருத்துருவாக்கப் பட்டிருக்கிறது . ஆக, வட மாவட்டங்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற பலமான போட்டியை எதிர்க்கொள்ள வேண்டியதாகிறது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக, கொங்கு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, முஸ்ஸீம் லீக், இரு கம்யூனிஸ்டுகட்சிகள் போன்ற கட்சிகளுக்கு வட மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளிலுள்ள கிராமங்களில், கிராமக் கிளைகள் கூட கிடையாது. இப்படியான சுழ்நிலையில் எஞ்சி இருப்பது விடுதலைசிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி மட்டுமே. அதிலும் விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளுமே வட மாவட்டங்களில் வருகிறது. காங்கிரஸும் வடமாவட்டங்களில் பெரிதாக செல்வாக்குப் பெற்ற கட்சியில்லை. இதனடிப்படையிலே தான், திமுகவே போட்டியிடுகிறது.
வடமாவட்ட அரசியலில் அதிமுக, திமுக, பாமக ஆகிய முன்று கட்சிகளும் மிக முக்கிய சக்திகளாக விளங்குகிறது. 2006 சட்டமன்ற தேர்தல் வரை, பாமக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணியே வடமாவட்டங்களில் வெற்றிப் பெற்றது. 2006ல் தேமுதிகவின் வருகைக்குப்பிறகு காட்சிகள் மாறின. பாமகவின் வாக்கு வங்கி, தேமுதிகவின் வரவால் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.
பாமக 2009ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏழுத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட, பாமக போட்டியிட்ட 30 தொகுதிகளில் மூன்றில் மட்டுமே வெற்றிப்பெற்றது, ஆனால் தேமுதிக 29 இடங்களில் வெற்றிப்பெற்று எதிர்கட்சியானது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாமக-தேமுதிகவிற்கு பெரும் இழப்புகளையே கொடுத்தது. இது தேமுதிக, பாமக என இரண்டு கட்சிகளின் செல்வாக்குகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2016ல் பாமக தனித்து நின்று அது தன்னுடைய செல்வாக்கை ஓரளவிற்கு நிரூபித்தால், மாம்பழம் சற்றே ஏழு சீட்டுகளாய் கனிந்திருக்கிறது. தேமுதிகவின் முரசு நான்கு சீட்டுகளாய் தேய்ந்திருக்கிறது. தற்போதும் வடமாவட்டங்களில், திமுக, அதிமுக போன்று எல்லா கிராமங்களிலும் பாமக, தேமுதிகவிற்கு கிளைகள் இருக்கிறது. பாஜகவும் வடமாவட்டங்களை வென்றால் தான் தமிழகத்தில் காலூன்ற முடியும் என கணக்குப்போட்டு வேலை செய்து வருகின்றது.
இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டால், பாமக-தேமுதிக-அதிமுக-பாஜக ஆகிய கட்சிகளின் இந்தக் கூட்டணி நிச்சயமாக ஒரு பலமான கூட்டணி. பாமகவின் ராமதாஸ், “இப்படை தோற்கின், எப்படை வெல்லும்” என்று முழங்குகிறார். கடந்தகாலத் தேர்தல் தரவுகளின் அடிப்படையில், இந்தக் கூட்டணி திமுகவின் கூட்டணியைவிட பலமான கூட்டணியாகவும் பெரும்பாலான ஊடகங்களும் உருவகப்படுத்துகின்றன.
கள யதார்த்தம் யாதெனில், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெறப்போகும் வாக்கே வெற்றித் தோல்வியை தீர்மானிக்கப்போகிறது. அது, அதிமுக நிற்காத தொகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் ஓட்டைப்பிரிப்பார்களே தவிர, வெற்றிபெறும் அளவிற்கு அமைப்பு பலமில்லாத கட்சிகள். இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் கருத்தில் கொண்டு தான், திமுக தனியாக வடமாவட்டங்களிலுள்ள 10 தொகுதிகளில் நின்று, அதிமுக கூட்டணிக்கு கடும் போட்டியைத் தரக் காத்திருக்கிறது.
இது திமுகவிற்கு வடமாவட்டங்களில் வாழ்வா சாவா போராட்டம், என்னளவில் வெற்றிக்கோட்டை திமுக அணி தொட்டுவிடும் என்றே கணிக்கிறேன். அதற்கு மிக முக்கியக் காரணமாக, மத்திய-மாநில அரசுகளில் மீது இருக்கும் எதிர்ப்பு. ஆகவே கருணாநிதி இல்லாத திமுகவிற்கு இந்தத் தேர்தல் அக்னிப்பரீட்சையே.
– திமுக தேறுமா இந்த அக்னிப் பரீட்சையில்…? மக்கள் தீர்ப்பே இறுதியானது… தீர்ப்பு… மே23ல்…
(அடுத்தடுத்தக் கட்டுரைகளில், ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி நேருக்குநேர் – சேலத்துச் செய்தி, கொங்கு மண்டல அரசியல், அதிமுகவிற்கு ஏன் இது சாதகமான தேர்தல் மற்றும் பல தலைப்புகளில்…)
Let see the resuts