Monday, December 23, 2024
Home > தயா-திவ்யா > அவள் பார்த்த பார்வையில்…

அவள் பார்த்த பார்வையில்…

என் ஆரூயிர் நண்பன் ரியாஸ், புதிய நாட்டுக்கோழிப் பண்ணை துவக்கினான். சேலம் சோனா காலேஜில் எம்.பி.ஏ படிக்கும் பொழுதே நாட்டுக்கோழி பண்ணை வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பான். பண்ணை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்திருந்தான்.  மேய்ச்சல் கோழிகளாய் வளர்க்க வேண்டி, கோழிப்பண்ணையை அதற்கு ஏற்றார் போல தயார் செய்து இருந்தனர். கோழிப்பண்ணை சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் இருந்தது.

விருந்தெல்லாம் முடித்துவிட்டு, கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தேன். எனது முந்நாள் இந்நாள் எந்நாள் காதலி அனுவை மனதில் நினைத்து கலங்கியிருந்தேன். அவள் என்னைத்துறந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது. அவளுடன் சென்னைக்கு வந்துவிட என்னிடம் கேட்டாள். குடும்பத் தொழில் இருந்ததால் அது என்னால் முடியாமல் போய்விட்டது. கோபம் கொண்ட அவள், கனத்த மனதுடன், என்னை பட்டிக்காட்டுலயே இரு என திட்டிவிட்டு, பிரிந்துவிட்டாள். எப்போதாவது இதனையெல்லாம் நினைக்கும் போது எப்போதும் எனக்கு சிறிதாக கண்கலங்கும். மனம் வருந்தும்.

மனம் கனமாக இருந்ததால் அப்படியே கண் அயர்ந்துவிட்டேன். விருந்திற்கு வந்திருந்த எல்லோரையும் கவனித்து வழியனுப்பி வைத்துவிட்டு என்னை வந்து எழுப்பினான்.

“தயா. அடேய் தயா. எந்திரிடா. மணி நாலு ஆச்சி. வீட்டிற்கு கிளம்பலாம் டா. பானு வேற போன் அடிச்சிக்கிட்டே இருக்கா”

************************

பானு, முழுப்பெயர் பானுப்பிரியா. என் பக்கத்துவிட்டுப் அய்யராத்துப் பெண். என்னுடன் பள்ளி, கல்லூரியில் ஒன்றாக படித்தவள். சிறு வயது முதல் என்னுயிர் தோழி.

நானும் ரியாஸும் சோனா காலேஜில் எம்.பி.ஏ படிக்கும் போது, ரியாஸ் அடிக்கடி என் வீட்டிற்கு வருவான். பக்கத்துவீடு  என்பதனால் இவளும் என் வீட்டிற்கு அடிக்கடி வருவாள். அவ்வப்போது, அவன் வரும்போது, அவள் என் வீட்டில் இருந்ததுண்டு. அவளுக்கு இவன் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு, என் போனிலிருந்து எனக்குத் தெரியாமல் அவன் போன் நம்பரை எடுத்து அவனுக்கு போன் செய்து பேசிப் பழகியிருக்கிறாள். ரியாஸும் அவள் மேல் காதல் கொண்டுவிட்டான். ரியாஸ் தன்  காதலை முதலில் சொல்லியிருக்கிறான். அவள் இதொல்லாம் சரி வராது என்று சில காலம் போலியாக மறுத்திருக்கிறாள். ஆனால், உள்ளுக்குள் காதல் இருந்ததால், அந்த மறுப்பு நெடுநாள் நீடிக்கவில்லை. அவளும் சம்மதித்துவிட்டாள். எனக்கு தெரியாமல் இதொல்லாம் நடந்திருந்தது.

எம்.பி.ஏ முடித்து ஒரே வருடத்தில் பிரச்சனை பெரிதாகிவிட்டது. பானு அய்யர்வீட்டுப் பெண், ரியாஸோ முஸ்ஸீம். பானுவின் அப்பா எங்களது வீட்டிற்கு வந்து என்னை தடித்த வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டு போகும் வரை எனக்கு அவர்களது காதல் கதையே தெரியாது. நல்ல வேளையாக அப்பா அம்மா என் தங்கையின் புகுந்தவீட்டிற்கு சென்றிருந்தனர். நான் மட்டும் வீட்டில் இருந்தேன்.

பானுவின் அப்பா வந்துவிட்டு சென்ற சில நிமிடங்களில் ரியாஸ் எனக்கு போனில் அழைத்தான். இருடா உன்னை நேரில் வந்து வைத்துக்கொள்கிறேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு போனை எடுத்தேன்.

“தம்பி. நான் ரியாஸோட அப்பா பேசறேன்” என்று போனின் மறுமுனையில் குரல் கனீரென ஒலித்தது.

சற்றே பயந்த குரலில் “சொல்லுங்கப்பா” என்றேன்.

“உடனே வீட்டிற்கு வா. உங்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று சொல்லிவிட்டு போனை வைத்திவிட்டார்.

பானு, அழுதுக்கொண்டே என் வீட்டிற்கு வந்தாள். அழுது அழுது அவளது முகம் செவந்திருந்தது. அவளது இரு கன்னத்திலும் கைவிரலின் அச்சு இருந்தது. அவளை அடித்திருக்கிறார்கள் என ஊகிக்க முடிந்தது. எனக்கு அவள் மேல் கோபமாகவும் இருந்தது. என்னிடம் சொல்லாமல் எவ்வளவு நடந்திருக்கிறது. அவளுடன் சண்டைப்போடலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அவளைப்பார்க்க பாவமாகவும் இருந்தது. அமைதியாக இருந்துவிட்டேன்.

நான் அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

வந்தவள், “அண்ணா, நீங்க தான் என்னை ரியாஸ் அத்தானோட சேத்து வைக்கனும்” என என் காலில் விழுந்துவிட்டாள்.

“எழுந்திரிமா. என்ன என் கால் எல்லா விழுந்துக்கிட்டு” என்றேன்.

எழுந்தவள், என்னைக் கட்டி அனைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் அழுததில் நான் போட்டிருந்த சட்டை முழுவதுமாக நினைந்திருந்தது. எப்படியோ அவளை சமாதானப்படுத்தி, நாற்காலியில் அமர வைத்துவிட்டு, என் கைக்குட்டையை எடுத்துக்கொடுத்தேன். எழுந்துப்போய் முகத்தை கழுவி, நான் கொடுத்த கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் அவளுக்கு பிடித்த காபி போட்டு எடுத்துவந்து அவளிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் வாங்கி குடித்துக்கொண்டிருந்தாள்.

“எவ்வளவு நாளா நடக்குது” என்று அவளிடம் கேள்விக் கேட்டேன்.

“நாலு வருசமா” என்றாள்.

நான் கணக்குப்போட்டுப் பார்த்தேன்.

“அடப்பாவிகளா. செகண்ட் செமஸ்டர்ல இருந்தா” என்றேன்.

“ம்” என்றாள்.

அவர்களுடைய முழு காதல் கதையையும் சொல்ல ஆரம்பித்தாள். நான் கதையை கேட்டு வாயடைத்து நின்றேன். ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

அதற்குள் எனது அப்பாவும் அம்மாவும் வந்திருந்தனர். நடந்ததை அவர்களிடம் சென்னேன். எனது அம்மா பானுவை கட்டி அனைத்துக்கொண்டார். எல்லாம் ரியாஸ் தான் செய்திருப்பான் என்பது அம்மாவின் நம்பிக்கை. என் அப்பா அவசரமாக பானுவின் வீட்டிற்குச் சென்றார்.

எனக்கு ஒருபக்கம் கோபமாக இருந்தது. மறுபக்கம், என் காதல் தோல்வியின் வலி போல் இவர்களுக்கும் வரக்கூடாது என நினைத்தேன். இருவரும் என் இரு கண்கள். எந்தக்கண் பாதித்தாலும் அது என்னையும் சேர்த்தே பாதிக்கும் என எனக்குப் புரிந்தது.ஆனால், என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை.

பானுவின் வீட்டில் எல்லோரையும் சமாதனம் செய்துவிட்டு, இந்தப் பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவை சொல்வதாக பானுவின் அப்பாவிடம் வாக்கு கொடுத்துவிட்டு வந்திருந்தார் என் அப்பா. என்னை அழைத்தார்.

“என்ன செய்யலாம்” என்றார்.

“ரியாஸோட அப்பா வீட்டிற்கு வர சொல்லியிருக்காரு” என்றேன்.

“சரி. போய் பேசிட்டுவா” என்றார்.

“நீங்களும் வந்தா நல்லா இருக்கும்”

“வேணாம் பா” என்றார்.

“ஏன் பா” என்றேன்.

“முதல்ல அங்க என்ன சொல்றாங்கனு கேட்டுட்டு வா” என்றார்.

“இரண்டு, மூணு நாளைக்கு பானு நம்ம வீட்டுல தான் இருக்கப்போறா. நம்ம பொண்ணு ரூம்ல பானுவ இருக்க சொல்லு, நீ பானுவ பத்தரமா பாத்துக்கோ. பானுவும் நம்ம பொண்ணு தான்” என்று என் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் ரியாஸைப் அப்பாவைப் பார்க்க அவன் வீட்டிற்கு கிளம்பினேன் இளம்பிள்ளையிலிருந்து.

ரியாஸ் வீடு போர்களமாக இருந்தது. நான் தான் ரியாஸை கெடுத்துவிட்டேன் என அவன் சொந்த பந்தம் எல்லாம் என் மீது கடும் வார்த்தைகளைக் கக்கினார்கள். அவர்கள் கூட்டுக்குடும்பமானதால் யார் யாரோ வந்து என்னையும் அவனையும் திட்டிக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் கடைசி வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ரியாஸின் தாத்தா எழுந்தார். வீடே அமைதியானது. அவர் என்ன சொல்லப்போகிறாரோ என எனக்கு கவலையாக இருந்தது.

“உனக்கு அந்தப் பொண்ணோட நிக்காஹ நடக்கும்” என்று ரியாஸிடம் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டார். யாரும் எதுவும் பேசவில்லை. எல்லோரும் முனுமுனுப்புடன் அப்படியே கலைந்தனர்.

எனக்கு நிம்மதியாக இருந்தது. இனி பானு வீட்டில் எப்படியாவது சம்மதம் வாங்கினால் போதும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் ரியாஸின் முகத்தில் ஆனந்தத்தைக் காணவில்லை.

“என்னடா. உனக்கு சந்தோஷமா இல்லையா” என்றேன்.

“சந்தோஷமா தா இருக்கு. ஆனா இன்னொரு பிரச்சனை”

“அத்தான், வீட்டுல சம்மதமே வாங்கியாச்சுல”

“நிக்காஹ செய்யனும்னு சொல்றாங்க. அப்படினா அவள மதம் மாற சொல்றாங்க. இது சரி வராது. பிரச்சனை பெருசாகும்.” என்றான்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. இது தெரிந்தால் தீவிர கடவும் பக்தரான பானுவின் அப்பா ஆடுஆடு என்று ஆடிவிடுவார் என்று எனக்கு தெரியும். என்ன செய்வது என்று எனக்குள் ஒரே குழப்பம்.

“நானும் பானுவும், ஏற்கனவே இப்படியெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்தோம். யாரும் மதம் மாற வேண்டாம்னு ஏற்கனவே முடிவு எடுத்துட்டோம். பிரச்சனை ஆனாலும் பரவாயில்லைனு அதான், ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம். நீதான் தயா, முன்ன நின்னு எல்லாம் செய்யனும்” என்றான்.

பல பிரச்சனைகளுக்கு நடுவே, எனது அப்பாவின் தலைமையில் பானுவிற்கும் அவனுக்கும் திருமணம் நடந்தது. எல்லா பிரச்சனைகளையும் என் அப்பாவே தீர்த்து வைத்தார். தீர்க்க முடியாமலிருந்த பிரச்சனைகளை தள்ளிவைத்தார். ரியாஸிற்கும்-பானுவிற்கு தனி வீடு பார்த்துக்கொடுத்தார். இப்போதும் இரு குடும்பத்தாரும் ஒற்றுமையாகிவிட்டனர். இது தான், ரியாஸ்-பானுவின் காதல் கதைச்சுருக்கம்.

***************************

சோம்பல் முறித்து எழுந்தேன், “ஒரு மாதிரி இருந்தது அத்தான் நல்லா தூங்கிட்டேன் டா” என்றேன்.

“இந்தா இந்த டீய குடி. எப்பவும் அவள நினைச்சு புலம்பிக்கிட்டே இரு” என்று அவன் கையில் இருந்த டம்ளரை என்னிடம் கொடுத்தான். அவன் தோட்டத்து சமையல்காரர், சூடாக வெங்காய போண்டாவை ஒரு தட்டில் கொண்டுவந்து வைத்தார். டீயும், போண்டாவும் பிரமாதமாக இருந்தது.

அவன் தோட்டத்தில் இருந்து கிளம்பினோம். ரியாஸ், நான் வண்டி ஓட்டுகிறேன் என்று கார் சாவியை வாங்கிக் கொண்டான்.  கார் மேட்டுப்பட்டி டோல் கேட்டை அடைந்ததிருக்கும்.

“தயா… உன்கிட்ட ஒன்னு சொல்ட்ட” என்றான்.

“என்ன டா சொல்லு”

“என் பிரண்ட் திவ்யா பத்தி நான் ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்கேன். நீ எதுவுமே சொல்ல மாட்டேங்கிற” என மீண்டும் திவ்யா பற்றி பேச ஆரம்பித்தான்.

***************************

திவ்யா அவனது நெருங்கியத் தோழி. நெடுங்காலமாக அவர்கள் இருவரது குடும்பத்தினரும் நட்பாக பழகிவருகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இருக்கும் ரியாஸ் வீட்டிற்கு அருகிலேயே அவள் வீடும் இருக்கிறது. சட்டம் படித்திருக்கிறாள். இப்போது சேலம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருக்கிறாள்.

சில வருடங்களாக எங்களது குடும்ப வக்கீல்கள் முத்து மற்றும் குமார் ஆகியோரிடம் ஜூனியராக இருந்தாள். அவ்வப்போது நான் சில சந்தோகங்களுக்காக வக்கீல் அலுவகத்திற்கு செல்வதுண்டு, ஆனால், திவ்யா பெரும்பாலும் நீதிமன்றத்திலேயே இருப்பதால், நான் அவளை அவளது அலுவலகத்தில் ஒரு முறைக்கூடப் பார்த்தது கிடையாது. சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் மூத்த வக்கீல் முத்து இறந்துவிட்டார். அவரது கிளையண்ட்ஸை திவ்யா தான் இப்போது பார்த்து வருகிறாள். அதன் பிறகு வக்கீல் ஆபீஸ் வேலைகளை என் தம்பி கவனித்துக் கொள்வதால், திவ்யாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, திவ்யாவிற்கும் ஒரு டாக்டருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு பின் திருமணம் நின்றுவிட்டது. அந்த டாக்டர் தன்னுடன் பணியாற்றும் நர்ஸுடன் பழகியதில் அவள் கருவுற்றிருந்தாள். அந்த நர்ஸ் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு திவ்யாவிடம் வந்து ஆதரத்துடன் நடந்த எல்லாவற்றையும் சொல்ல, திருமணத்தை திவ்யா நிறுத்திவிட்டாள். அவள் வக்கீலாக இருந்ததால், போலிஸில் புகாரளிக்க, அவளுக்கு தாலி காட்ட வேண்டியவனின் கையில் அவள் விலங்கு மாட்டினாள். அன்றிலிருந்து திருமணமே வேண்டாம் என பிடிவாதமாக அவள் இருப்பதாக ரியாஸ் என்னிடம் சொல்லியிருந்தான்.

அவளைப்பற்றி பிறர் சொல்லிக் கேட்டதில் எனக்கு திவ்யா மீது ஒரு நல்ல எண்ணமுண்டு.  ஆனால், ரியாஸ், சில மாதங்களாக, அவளுடன் என்னை சேர்த்துவைக்க வேண்டி சில காரியங்களை செய்துக்கொண்டிருக்கிறான். இருவீட்டிலும் பேசி சம்மதம் வாங்கிவிட்டான். என் பழைய காதலின் வலிகளிலிருந்து நான் இன்னும் மீளாததால், எனக்கும் திருமணம் மீது நாட்டமில்லை. ஜாதகமும் சரியாக இருந்ததால், இருவீட்டிலும் திருமணத்திற்கு தயாராக இருக்கின்றனர். ஆனால், திவ்யாவிற்கும் இத்திருமணத்தில் விருப்பமில்லை என்பதால் இருவீட்டாரும் எங்களது சம்மதத்திற்காக காத்திருக்கின்றனர்.

******************************

“நான் இல்லாத அப்ப, நீ வீட்டுல வந்து அவளப்பத்தி பேசிட்டு போயிருக்கனு எனக்கு தெரியும்” என்றேன்.

சிறிது அமைதிக்குப் பின், “இப்ப எனக்கு கல்யாணம் வேணாம்” என்றேன்.

“துரைக்கு இப்பதான் வயது 23 ஆகுது பாரு, இந்த டிசம்பர் வந்தா உனக்கு வயசு 30 ஆகப்போவுது டா. எனக்கும் உன் வயசு தான், இப்ப எனக்கு ஒரு புள்ளையே இருக்கு. இன்னும் எத்தன நாளைக்கு அனுவையே நினைச்சிட்டு இருக்கப்போற”

“யதார்தத்த… புரிஞ்சிக்கோடா…தயா…” என்று கோபமாக சொன்னான்.

“இப்ப நான் கல்யாணம் செஞ்சிக்கிற மனநிலையில இல்ல.” என்றேன்.

“உன்னை அவள கல்யாணமா பன்னிக்க சொல்றேன். என் கூட வந்து அவள ஒரு தடவ பாருனு தானே சொல்றேன். இது வரைக்கும் அவள நீ பாத்தது கூட இல்ல. அவ போட்டோ ஆவது நீ பாத்திருக்கியா?. இல்ல, அவளோட பேசி பழகி தான் இருக்கியா?”

“கல்யாணம் வேணாம்னு செல்றேன். அவள எதுக்கு நான் பாக்கனும் சொல்லு.” என்று எதிர் கேள்வி கேட்டேன்.

சற்றே கடுமையான குரலில் பேசிக்கொண்ட அம்மாபேட்டை பிரிவிற்கு வந்து சேர்ந்தோம். அங்கே ஒரு டிக்கடையில் வண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் ஒரு டீ குடித்துக்கொண்டே பேசி கொண்டிருந்தோம். எப்படியோ அவனிடம் பேசி திவ்யாவைப் பற்றி இனி பேசக் கூடாது என்று சொல்லி அவனை சம்மதிக்க வைத்திருந்தேன். இனி அவளைப் பற்றி என்னிடம் பேச மாட்டேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

வண்டியில் ஏறியவுடன் அவனுக்குள்ளாக சிரித்தான்.

“என்ன டா”

“ஒன்னுமில்லை” என்றான்.

டீக்கடையில் இருந்து வண்டி எடுத்தோம். கொஞ்ச தூரம் கூட வந்திருக்க மாட்டோம், ஹோண்டா ஆக்டிவா வண்டியில் இரண்டு பெண்கள் எங்களை முந்திக்கொண்டு சென்றார்கள். முன்னால், இருந்த பெண் ஹெலிமெட் அணிந்திருந்தாள். பின்னால் இருந்த பெண், சுடிதாரில் முகத்தை மூடியிருந்தாள்.

“அந்தப் பொண்ணு நல்லா இருக்கால” என்று பின்னால், அமர்ந்திருந்த பெண்ணை பார்த்துச் சொன்னான்.

“அடேய் உனக்கு கல்யாணமாகி, நீ இப்ப அப்பா ஆகிட்ட. இன்னு ஒரு வருசத்துல உன் புள்ளைய பள்ளிகூடத்துல சேக்க போற” என்றேன்.

“இரு. பானுவுக்கு போன் போடறேன்.”

“நீயும் அனுபவிக்க மாட்ட. என்னையும் அனுபவிக்க விட மாட்ட” எனறு அலுத்துக்கொண்டான்.

இவனும் அந்த வண்டியை விடாமல் பின் தொடர்ந்தான். அடிக்கடி ஹாரன் அடித்தான். பின்னால் இருந்த பெண் என்னை முறைக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம், நான் என் முகத்தை மூடிக்கொள்வேன். சேலம் அரசுக் கல்லூரி சிக்னலில் அந்த வண்டிக்கு அருகில் காரை நிறுத்தினான். நான் சன்சீல்டை எடுத்து என் முகத்தை மறைத்துக்கொண்டேன்.

சிக்னல் விழுந்தவுடன் இரு ஆட்டோகாரர்களுக்கு இடையிலே நடந்த சண்டையில் அந்த வண்டியை  நாங்கள் தவறவிட்டிருந்தோம்.

“கலெக்டர் ஆபிஸ் வழியா? இல்ல ஹஸ்தம்பட்டி வழியா? எதுல போயிருப்பாங்க” என்று ரியாஸ் என்னிடம் கேட்டான்.

“எதுல போன என்னடா? எனக்கு ஏர்டெல் ஆபிஸ்ல வேல இருக்கு நீ ஹஸ்தம்பட்டி வழியா வண்டிய விடு” என்றேன்.

அங்கே இருந்த ஆனந்தாஸ் ஓட்டலில் ஜூஸ் குடித்துவிட்டு செல்வோம் என்றான். வண்டியை பார்க்கிங் பகுதியில் விட முயன்ற போது, அதே கருப்பு ஹோண்டா ஆக்டிவா வண்டியில் அதே இரண்டு பெண்கள் வந்து வழி மறித்து நின்றார்கள்.

எனக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது, இறங்கி அவர்களின் வண்டியை எடுக்கச் சொன்னேன். அவர்கள் நகரவேயில்ல. எனக்கு கடுப்பாகிவிட்டது. நேராக வண்டியின் அருகே சென்று சாவியை எடுக்க முயன்றேன். சுதாரித்துக்கொண்டார்கள்.

பின்னால் சுடிதாரில் முகத்தை மூடியிருந்த பெண் என்னை முறைத்தாள். அவளின் கண்கள் என்னிடம் ஏதோ பேசியது. அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஆனால், அவள் பார்த்த பார்வையில் எனக்குள் ஏதோ செய்தது. அது பயமா என தெரியவில்லை, ஆனால், அவளின் முகத்தை பார்க்க எனக்குள் ஆசை முளைத்தது.

அப்போது, முன்னால், இருந்த பெண் ஹெல்மெட்டை கழற்றினாள்.

“அண்ணா. நான் தான் பானு” என்றான். சிரித்துக்கொண்டே வண்டியில் இருந்து ரியாஸ் இறங்கினான். பானுவும் சிரிக்கிறாள். பின்னால் இருந்த பெண்ணும் சிரிக்கிறாள்.

அடப்பாவிகளா. எல்லாம் செட்டப் பா… அடப்போங்க டா வெண்ணைங்களா என்று முகத்தை திருப்பிக்கொண்டேன். ரியாஸ் கழுத்தை எனது வலது கையால் நெருக்கி, ரெண்டு குத்துவிட்டேன் அவனை.

“அடியே குரங்கு. அடங்க மாட்டியா நீ” என்று பானுவிடம் சண்டைக்குப் போய்விட்டேன்.

நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்ததில் முகத்தை மூடியிருந்த பெண்ணை மறந்துவிட்டேன். அவள் வண்டியை தள்ளி நிறுத்தவிட்டு, என்னருகில் வந்திருந்தாள்.

என்னைப் பார்த்துக்கொண்டே, முகத்தை மூடியிருந்த சுடிதாரை விலக்கினாள். அவளின் அழகிய கண்களால் என்னைப் பார்த்த பார்வையிருக்கிறதே. அது என்னை என்னவோ செய்துவிட்டது.

ரியாஸும்-பானும் சேர்ந்து சென்னார்கள், “சர்பிரைஸ்… இது திவ்யா…”

இதனை சற்றும் எதிர்பார்க்காத நான், திவ்யாவைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள்.

– அவள் பார்த்த பார்வையில்… 

(தயா-திவ்யா காதல் கதை – அத்தியாயம் – 1)

மீண்டும் சந்திப்போம் அடுத்த அத்தியாயத்தில்…

3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gopi
Gopi
5 years ago

Words usage and nareation is good

Manju
Manju
5 years ago

The way you added Banu-Riyas story was nice, good start. Way to go!

Ganesh
Ganesh
5 years ago

Kadavul spelling mistake…