கடும் கோபத்துடன் இருந்த தயாவை ரியாஸும், பானுவும் சமாதனப் படுத்திக்கொண்டிருந்தனர். எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென ஏன் இவர்கள் இருவரும் இப்படி போராடுகிறார்கள் என எனக்கு புரியவில்லை. என்னைப் பார்க்க வருவதை தயாவிடன் சொல்லாமல், அவனை அழைத்து வந்தது தான் பிரச்சனை என்று புரிந்தது. ஆனால், அதற்கு என் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று எனக்கு தெரியவில்லை. அப்போது தான் முதன் முதலில் அவன் கண்ணைப் பார்த்தேன். அதிலே ஒரு ஏமாற்றம் தெரிந்தது.
(ஒன்றும் புரியாதவர்கள் தயா-திவ்யா காதல் கதையின் முதல் அத்தியாயத்தை படித்துவிட்டு தொடரவும்)
ஸுகூட்டரில் வரும் போது எங்களின் பின்னால் வருவது தயாவும் ரியாஸும் தான் என்பது எனக்கு நன்றாக தெரியும். எங்கள் இருவரையும் ஹஸ்தம்பட்டி ஆனந்தாஸ் ஓட்டலில் முதன் முதலாக நேரில் சந்திக்க வைக்கப் போகிறோம் என்று நேற்று பானு என் வீட்டிற்கு வந்திருந்த போது சொன்னாள். நான் முடியவே முடியாது என்றேன். ஆனால், என் பெற்றோரும் ஒரு முறை பார்த்துப் பேச சொல்லி ஒரு விதமான நெருக்குதல் தந்ததால் வேறு வழியின்றி தயாவைப் பார்க்க ஒப்புக்கொண்டேன்.
********************
தயா.
எனக்கு முன்பே தயாவை நன்றாகத் தெரியும், என் சீனியர் வக்கீல் முத்துவும், தயாவின் அப்பாவும் தோழர்கள். பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஒன்றாக படித்தவர்கள். பிஏ முடித்தவுடன் அவர் குடும்பத் தொழில் பார்க்கப் போக, என் சீனியர் வக்கீலுக்கு படித்தார். அப்போது, அவர் தனக்கு நிறைய உதவிகள் செய்திருப்பதாக எனது சீனியர் என்னிடம் சொல்லியிருக்கிறார். தனக்கு சேலத்திலிருக்கும் ஒரே உண்மையான நண்பன் தயாவின் அப்பா தான் என்று அவ்வப்போது சொல்லியதுண்டு. அவரும் அடிக்கடி எங்கள் அலுவலகத்திற்கு வருவார். அவர் வந்தாலே எப்போது கிளம்புவார் என்று தான் எனக்கு தோன்றும். அவர் இருந்தால், எனது சீனியர் அவரிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருப்பார். எனது சீனியர் ரூமில் இடைவிடாமல் சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். எனது சீனியர் சாலைவிபத்தில் மறைந்ததிலிருந்து தயாவின் அப்பா எங்கள் அலுவலகம் வருவது குறைந்திருந்தது. வந்தாலும், பெரும்பாலும் எனது மற்றொரு சீனியர் வக்கில் குமாருடன் பேசிவிட்டு சென்றுவிடுவார். எனது சீனியர் ஊரில் இல்லாத நாட்களில் வரும் தயாவின் தொழில் சம்பந்தப்பட்ட வழக்குகளில், அவனுக்காக நான் வாதாடியிருக்கிறேன்.
தயாவை நான் முதன்முதலில் சந்தித்தது, எனது சீனியர் முத்து அவர்களின் துக்கவீட்டு வாசலில் தான். போலிஸ், ஆஸ்பிட்டல் போன்ற எல்லா வேலைகளையும் தயா தான் முடித்து, எனது சீனியரின் உடலை பெற்று வந்தான். அவரின் உடலருகே தயாவின் அப்பா கடும் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் அமர்ந்திருந்தார். அவரை தயா தேற்றிக்கொண்டே இருந்தான்.
அதன் பிறகு பல முறை வழக்குகள் சம்பந்தமாக எங்களது அலுவலகத்திற்கு தயா வந்ததுண்டு. நான் பெரும்பாலும் நீதிமன்றத்தில் இருந்து அலுவலகம் வருவதற்கு தாமதமாகும் என்பதால் எப்போதாவது தயாவை என் சீனியர் குமாரின் அலுவலகத்தில் பார்த்ததுண்டு. ஆனால் தயா என்னைப் பார்த்தில்லை என்று தான் நினைக்கிறேன்.
தயாவைப் பற்றி ஏற்கனவே விசாரித்துவிட்டு தான், அவனை பார்க்கவே வந்தேன். யாரும் அவனைப்பற்றி தவறாக சொல்லவில்லை. மாறாக, அவன் அப்படி, அவன் இப்படி என்று தான் பலர் சொன்னார்கள். இன்ஸ்டா, ஃபேஸ்பூக் போன்ற சமூக வலைதளங்களில் அவன் கணக்கு வைத்திருக்கவில்லை. அவன் நல்லா எழுதுவான் என்றும் சிலர் சொன்னார்கள். உண்மைக்காதலன் என்ற பெயரில் வலைப்பக்கம் ஒன்றை வைத்திருக்கிறான் என்றும் சொன்னார்கள்.
பார்க்க அழகாக இருக்கிறான், நன்றாக படித்திருக்கிறான். குடும்பத்தொழிலை செய்கிறான். தனியாக விவசாயமும் செய்கிறான். எந்தக் கெட்ட பழக்கமுமில்லை. பெற்றோருடன் வசித்து வருகிறான். அவன் தம்பி கனடாவில் இருக்கிறான். அங்கே இவர்கள் புதிதாக கடைத்திறக்கப் போகிறார்கள் என்று எனது சீனியர் சொல்லியிருந்தார். அதன் வேலைக்காக அவன் அப்பாவையும், தம்பியையும் கோவையிலிந்து கனடாவிற்கு துபாய் வழியாகப் போகும் விமானத்தில் ஏற்றிவிட்ட பிறகு தான் ரியாஸின் கோழிப்பண்ணை திறப்புவிழாவிற்கே வந்தான் என்று எனக்கு முன்பே தெரியும்.
பானுவும் ரியாஸும் தயாவைப் பற்றி நிறைவே சொல்லியிருக்கிறார்கள். பானு தயாவை அண்ணா அண்ணா என்று போனில் கொஞ்சுவதைப் பார்த்திருக்கிறேன். பானுவிற்கும் ரியாஸிற்கு திருமணம் நடந்ததே தயாவின் உதவியால் தான் என்று எனக்கு முன்பே தெரியும். ரியாஸ் வீட்டார், பானு வீட்டார் யாருமில்லாமல், தயாவின் அப்பா தலைமையில் இரு சமூக வழக்கப்படியும் திருமணம் நடந்தது. தயாவின் அப்பா வரவேற்பிற்கு எங்களை அழைத்திருந்தார். ரியாஸ் வீட்டார் கோபம் கொள்வார்கள் என்பதனால் எங்கள் வீட்டிலிருந்து யாரும் ரியாஸ்-பானு கல்யாண வரவேற்பிற்கு செல்லவில்லை. ஆனால் இப்போது இரு குடும்பத்தாரும் இவர்களை ஏற்றுக்கொண்டார்கள் என்பது தனிக்கதை.
எங்கள் நிறுவனத்தின் கிளையண்ட் என்பதனால் தயாவைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே தெரிந்திருந்தது. அவன் மேலே நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் எனக்கு என் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் நின்றதிலிருந்தே திருமணத்தின் மீதே நாட்டமில்லாமல் இருந்தது. அதனால், பெரிதாக எதுவும் எதிர்பார்த்து நான் இங்கே வரவில்லை. எதுவானாலும் சமாளித்து நாசுக்காக எனக்கு இந்த சம்பந்தத்தில் விருப்பமில்லை என்று சொல்லிவிட முடிவெடுத்திருந்தேன்.
****************
தயா, ரியாஸ், பானு என அவர்கள் மூவறுமே சண்டைப்போட்டுக் கொண்டிருந்ததால், நான் எதற்கு வந்திருந்தேன் என்பதனையே மறந்துவிட்டேன். தயா ரியாஸின் ஒரு கையால் கழுத்தைப் பிடித்துக்கொண்டு இன்னோரு கையால் வயிற்றில் குத்துக்கொண்டிருந்தான். நானும், பானுவும் அவர்களை விலக்கிவிடவே போராட வேண்டியிருந்தது.
எனக்கு களைப்பாகி, காரில் சாய்ந்தப்படி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது தயாவின் கண்ணைப் பார்த்தேன். அவன் கண்ணில் கோபமில்லை. அதில் ஒரு வலி இருந்தது. அதனை என்னால் உணர முடிந்தது. அவனும் என்னருகில் வந்து வண்டியில் சாய்ந்தபடி நின்றான். அப்போதும் நான் அவன் கண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கண்களில் கண்ணீர் கசிந்திருந்தது.
சில நிமிடங்களுக்கு யாரும் ஏதுவும் பேசவில்லை. ரியாஸும், பானுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“நான் தான் பிரச்சனை ஆகிரும்-னு சொன்னேன்-ல” என்றாள் பானு ரியாஸிடம்.
நான் அவர்கள் அருகில் சென்றேன்.
“பரவாயில்லை விடுங்க”
“என்ன தான் பாக்குறதுக்கு வர்ரிங்கனு தயாகிட்ட நீங்க சொல்லியிருந்த நல்லா இருந்திருக்கும்” என்றேன்.
“சொல்லி இருந்த வந்திருக்கவே மாட்டான். இன்னு எவ்வளவு நாள் தான் பழச நினைச்சி எல்லாரையும் சாவடிப்பான்-னு தெரியல” என்றான் ரியாஸ் கோபமாக.
முன்பே தயாவின் காதல் கதையை ரியாஸ் என்னிடம் சொல்லிப் புலம்பியதுண்டு. ஆனால் முழுமையாக என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அவன் சொல்லியதிருந்து தயாவின் காதலி அனுவின் மீது தான் தவறு இருந்தது மாதிரி தெரிந்தது. இவ்வளவு நாளில் நான் மீண்டு வந்திருப்பான் என்று தான் நினைத்திருந்தேன். அவன் இன்னும் மீளவில்லை என்று இப்போது தான் புரிந்தது.
“என்ன கொஞ்ச நாள் தனியா விடுங்க டா. பிளிஸ். நீங்களும் என்னை கொல்லாதீங்க. யூ ஆர் ஆல் வாட் ஐ ஹவ்” என்றான் தயா, ரியாஸ்-பானுவிடம்.
தயா என்னருகில் வந்தான்.
“திவ்யா, இங்க பாருங்க. என்னோட வக்கீலோட ஜூனியர் நீங்க. இருந்தாலும் இதுக்கு முன்னாடி உங்கள நான் முன்னாடி பார்த்ததில்லை. ஆனா நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ரியாஸும் உங்கள பத்தி நல்லவிதமா நிறைய சொல்லியிருக்கான். ஐயம் பிரவுட் ஆப் யூ” என்றான்.
“எனக்கு இவங்க பண்றது சுத்தமா பிடிக்கல” என்றான் அவர்களைப் பார்த்தபடி.
“உங்களை பிடிக்கவுமில்லை, பிடிக்கவும் பிடிக்காது. உங்கள மட்டுமில்லை, வேற யாரையும் பிடிக்காது. நான் உங்களுக்கு சரியானவன் இல்லை. நீங்க வேற நல்ல மாப்பிள்ளையா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க. சாரி திவ்யா.”
அப்போது அவன் கண்ணையே பார்த்தேன். அதில் குற்ற உணர்ச்சியைக் கண்டேன். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நான் தானே கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல வந்தேன். ஆனால், இவன் சொல்கிறானே என்று எனக்கு குழப்பமாக இருந்தது.
காரில் வந்த தயா ரியாஸ் மேல் இருந்த கோவத்தில் ஆட்டோ ஏறி சென்றுவிட்டான். அந்த ஆட்டோவை காரில் துரத்திக்கொண்டு போனான் ரியாஸ்.
“வாங்க திவ்யா. வீட்டிற்கு போவோம்” என்றாள் பானு.
**************************
என்னை வீட்டில் விட்ட பிறகு, ரியாஸ் வீட்டிற்கு போய்விட்டு வருவதாக சொன்னாள். அவளை வழி அனுப்பிவைத்துவிட்டு வந்து என்னறையில் படுத்தேன். ரொம்பவும் களைப்பாக இருந்தது. அடிவயறும் வலித்தது. பிரியட்ஸ் ஆக இருக்குமோ என்று பார்த்தேன், ஆனால் அதற்கு இன்னும் நாட்கள் இருந்தது. இன்று நடந்த எல்லாவற்றையும் அசைப்போட்டுப் பார்த்ததில் எனக்கு தலைவலியே வந்துவிட்டது.
தயாவின் மேல் எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது. ஆனால், இன்று நடந்த களபேரத்தால், எனக்குள் அவனைப்பற்றிய ஒரு குழப்பமே வந்துவிட்டது.
எனக்கு நினைவு தெரிந்த வரையில், என் பின்னால் தான் பலர் அலைந்திருக்கின்றனர். யாரும் என்னை வேண்டாம் என்று சொன்னதில்லை. அதுவும் என் கல்லூரி காலங்களில், பைக்கில் தன்னுடம் வரவேண்டும், காரில் தன்னுடம் வரவேண்டும் என்று பலர் என்னிடம் கேட்டிருக்கின்றனர். நான் எப்போதும் பஸ்ஸிலேயே கல்லூரி சென்று வந்திருக்கிறேன்.
பெண்கள் எப்போதும் அடுத்தவர்களின் கவனத்தை, அதுவும் எதிர்பாலினமான ஆண்களின் கவனத்தை, ஈற்க வேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கெடுவார்கள். நிறைய அலங்காரம் செய்துக்கொள்வார்கள். என் தோழிகளில் பலர் இப்படிதான். அப்படி ஈற்கப்பட்டே ஆண்களில் பலர் காதலில் விழுகின்றனர். எப்போதும் பெண்கள் முதலில் காதலில் விழுவது அரிதிலும் அரிது. பெண் ஈற்பாள், ஆண் ஈற்கப்படுவான்.
ஆனால், நான் எப்போதும் யாரையும் ஈற்க நினைத்ததுமில்லை, அதற்காக எந்த விதமான அலங்காரங்களையும் செய்ததுமில்லை. ஆனாலும், என்பின்னால், பசங்க அணிவகுத்துக் கொண்டே இருந்தனர். அதனால், அவ்வப்போது எனக்கும் என் தோழிகளுக்கும் சண்டையே வந்துள்ளது. நானும் கல்லூரி காலம் முடியும் வரையும் காதலில் விழவில்லை. வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் முடிக்கும் தருணத்தில் அவனைப் பற்றி வந்த செய்தியால், அந்தத் திருமணத்தை நானே நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
அன்று ரியாஸ் மட்டும் இல்லாதிருந்தால் எனக்கும் இந்நேரம் அந்த டாக்டருக்கும் திருமணம் நடந்திருக்கும். ஏன் திருமணம் நின்றது என்பதைப் பற்றிய உண்மை ரியாஸ் மற்றும் மறைந்த என் சீனியர் முத்துவுக்கு மட்டுமே தெரியும். கல்யாணம் நின்று போன பிறகு சில மாதங்களுக்கு நான் என் வீட்டை விட்டே வெளியில் வரவில்லை. யாரோடும் நான் பேச விரும்பவில்லை. நான் தனித்தீவாக இருந்தேன். அப்படியே நான் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் வாழ்ந்த்தேன். பானுவும் ரியாஸும் தான் என்னை மீட்டுக் கொண்டுவந்தார்கள். ஒரு வகையில் தயா இருக்கும் மனநிலை எனக்கு புரிந்தது. ஆனால், உதவ முடியாத நிலையில் நான் இருந்தேன்.
மீண்டும் என் மனம் கவலைகளுக்குள் புகுந்தது. மனதால் மீள முடியாத வலி எனக்குள் இருக்கின்றது. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது என்று நினைத்து நினைத்து எனக்கு அழுகையாக வந்தது. எவ்வளவு நேரம் அழுதேன் என்றே தெரியவில்லை. களைப்பிலும் துக்கதிலும் அப்படியே தூங்கிவிட்டேன்.
******************
நேடுநேரமாக போன் அடித்துக்கொண்டே இருந்தது. மணி இரவு 8.30ஐ தாண்டியிருந்தது. போனை எடுத்துப் பார்த்தேன்.
ரியாஸ் தான் 6 முறை அழைத்திருக்கிறான். ஏதோ அவசரம் என்பது மட்டும் எனக்கு புரிந்தது. என்னவோ என்று நினைத்து மனம் பதறியது. சட்டென்று எழுந்து முகம் கழுவிக்கொண்டு ரியாஸிற்கு போனைப் போட்டேன்.
போனை எடுத்தவன், “தயா வண்டி ஆக்சிடண்ட் ஆகிடுச்சு உடனே உத்தமசோழபுரம் பாலத்துகிட்ட வா.”
“பானுவுக்கு ஏதுவும் சொல்லாத” என்றான்
“தயாவுக்கு என்ன ஆச்சு…” என்று நான் கேட்பதற்குள் அவன் போனை வைத்துவிட்டான்.
அவனுக்கு எதும் ஆகிடிச்சா என்று கேட்க மீண்டும் போன் அடித்தேன். அவன் போனை எடுக்கவேயில்லை. நான் சட்டென்று உத்தமசோழபுரம் பாலத்திற்கு கிளம்புவதற்காக சென்று கார் சாவியை எடுத்தேன். அம்மா என்னைப் பார்த்தார். அம்மாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று தோன்றியது.
“ஆபீஸ் வேலையாக கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன். பானு வந்தா இருக்க சொல்லுங்க நான் வந்துடறேன்.” என்று அம்மாவிடம் நான் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.
வேகமாக நான் காரை ஓட்டிக்கொண்டு உத்தமசோழபுரத்தை நோக்கி விரைந்தேன். அவ்வளது பதற்றத்திலும் இன்று தயாவை வைத்து ரியாஸ் நடத்திய நாடகம் என் நினைவிற்கு வந்து போனது. அதுப்போல, இதுவும் நாடகமாக இருக்குமோ என் மனம் சந்தேகப்பட்டது. ஆனால் ரியாஸ் குரலில் இருந்த பதற்றம் என்னை குழப்பியது. அப்போது எனது சீனியர் குமாரிடமிருந்து போன் வந்தது.
எடுத்தேன்.
“தயா வண்டி ஆக்ஸிடண்ட் ஆகிடிச்சாம்மா. நான் ஈரோடு கோர்ட் முடிச்சிட்டு வந்துட்டு இருக்கேன். நீ ஸ்பாட் அட்டண்ட் பண்ணிடு மா.” என்றார்.
அப்படியானால், ரியாஸ் சொன்னது உண்மை தான். அந்த நோடியில் என் மனம் பதறியது. தயாவிற்கு ஏதும் ஆகியிருக்குமோ என்று என் மனம் அடித்துக்கொண்டது. இந்தப் பதற்றம் எனக்கு புதியதாக இருந்தது. அந்த இடத்தை அருகே செல்லச் செல்ல எனக்கும் பதற்றம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.
உத்தமசோழபுரம் வந்து சேர்ந்தேன்.
ஒரு போலிஸ் வண்டியும் தயாவின் வண்டியும் நேருக்கு நேர் மோதியிருந்தது. தயாவின் வண்டியில் டிரைவர் சைட் அடி பெரியதாக இல்லை. ஆனால், கோ-டிரைவர் சைட் பலத்த அடிவாங்கியிருந்தது. ஏர்போக் ஓபனாகியிருந்தது. மூன்று ஆம்புலன்ஸ் நின்றுக்கொண்டிருந்தது. போலீஸ் வண்டிக்கு பெரிதாக அடியில்லாத மாதரி தான் இருந்தது, ஆனால், உள்ளே எட்டிப் பார்த்தப்போது எல்லா சீட்டிலும் இரத்தம் வழிந்திருந்தது. இரண்டு போலீஸ்காரர்கள் சீரியஸாக இருப்பதாக பேசிக்கொண்டார்கள். மீதமிருப்பவர்களுக்கு லேசான சீராய்பு தான் என்பதால் ஆம்புலன்ஸிலேயே முதலிதவி செய்துக் கொண்டிருந்தார்கள்.
தயாவின் வண்டியை நோக்கி நகர்ந்தேன். வண்டியின் அருகே ரியாஸ் தலையிலும் இடது கையிலும் கட்டுடன் யாரிடமோ தகவல் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன.
“உனக்கு என்ன ஆச்சு? தயாவுக்கு என்ன ஆச்சு?” என்றேன்.
“திவ்யா. எனக்கு சின்ன அடி தான், அவன் ஆம்புலன்ஸ்-ல இருக்கான், பாரு” என்றான்.
தயாவின் வண்டியை தாண்டும் போது அவன் அணிந்திருந்த சட்டையை வண்டியில் பார்த்தேன். சட்டை முழுவதும் இரத்தமாக இருந்தது. சட்டை கிழிந்திருந்தது.
என் மனதுக்குள் திக்கென்று இருந்தது. இதற்கு முன் பல ஆக்சிடண்ட் ஸ்பாட்டை பார்த்திருக்கிறேன். அன்றில்லாத பதட்டம் ஏனோ இன்று எனக்குள் இருந்தது.
எனக்குள் அழுகை பற்றிக் கொண்டு வந்தது. என் கண்களில் தண்ணீர் வழிந்தது. நம்மள பார்க்க வந்த அன்றைக்கா இப்படி நடக்க வேண்டும். என் மனதை திடப்படுத்திக் கொண்டு ஆம்புலன்ஸை நோக்கி மெல்ல நகர்ந்தேன்.
ஆம்புலன்ஸில் தயாவை படுக்க வைத்திருந்தார்கள். அவன் முகம் எனக்கு தெரியவில்லை. ஆனால், அவன் வெற்றுடம்பு முழுவதும் இரத்தமாக இருந்தது. மெல்ல ஆம்புலன்ஸ் கதவை மேலும் திறந்தேன். அவன் முகத்தைப் பார்த்தேன்.
உடல் அசைவில்லாமல் இருந்தது. அவன் கண் விரிந்திருந்தது. தயா நம்மைவிட்டு போய்விட்டானே என்று என் கண்களில் அழுகை பெருக்கெடுத்து வந்தது. வண்டியில் ஒருவர் மட்டும் அவன் தலையில் ஏதோ செய்துக்கொண்டிருந்தார். மீண்டும் அவன் கண்ணைப் பார்த்தேன். அவன் கண்களின் என் முகம் பிரதிபலித்தது. அந்தக் கண்கள் ஏதோ எனக்கு சொன்னது ஆனால் எனக்கு அது புரியவில்லை. அதற்குமேல் பார்க்க முடியாமல் வண்டியின் கதவை சாத்திவிட்டேன்.
ரியாஸிடம் வந்தேன்.
“என்னடா ஆச்சி. எப்படிடா இப்படி வந்து அடிச்சிருக்கிங்க.”
“நீதானே ஓட்டின?” என் கண்களில் கண்ணீர் நிற்கவேயில்லை.
“திவ்யா, அழாம நான் சொல்றத கேளு”
நான் தயாவை இழந்த துக்கம் தாளாமல் ரியாஸின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்துவிட்டேன்.
மாலையிலிருந்து அவன் கண்களில் நான், ஏமாற்றத்தையும், வலியையும், கண்ணீரையும், குற்ற உணர்ச்சியை மட்டுமே பார்த்தேன். ஆனால், நான் கேள்விப்பட்ட தயாவிற்கு நேர்மாறாக இருந்தது இன்று அவன் நடந்துக்கொண்டது. கடைசியாக அவன் கண்களில் நான் இருந்தேனே என்று நினைத்து நினைத்து அழுதுக்கொண்டிருந்தேன். அவனை இழந்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.
“திவ்யா…”
“திவ்யா…”
“என்ன நடந்ததுனு, நான் சொல்றத கொஞ்சம் கேளு திவ்யா…” என்றான் ரியாஸ் சீரியஸாக.
கண்ணை துடைத்துக்கொண்டு, துக்கத்தை அடக்கிக்கொண்டு, “சொல்லு” என்றேன்.
அப்போது…
– அவன் கண்களில் நான்…
(தயா-திவ்யா காதல் கதை – அத்தியாயம் – 2)
மீண்டும் சந்திப்போம்… அடுத்த அத்தியாத்தில்…