Monday, December 23, 2024
Home > கேள்விபதில் > கேள்விபதில்-2

கேள்விபதில்-2

கேள்வி:இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?

இன்றைய குடும்பங்களில் தமிழ் வாழ்கிறதா? சாகிறதா? என்று பல பட்டிமன்றங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். பட்டிமன்றங்களின் முடிவுகள் பெரும்பாலும் தமிழ் மொழி, குடும்பங்களில் மெல்ல சாகிறது என்றோ, ஒரு சில விவாதங்களில் தமிழ் மொழி வளர்கிறது என்றோ தான் இருக்கும். இக்கட்டுரையின் நோக்கமும் தமிழ் மொழிக்கு குடும்பங்களில் வாழ்வா சாவா என்பது பற்றியது தான்.

முதலில் கட்டுரையின் முடிவை சொல்லிவிடுகிறேன். முடிவு யாதெனில், கடந்த சில நூற்றாண்டு காலமாக வேகமாக வளர்ந்த மொழி இப்பொழுது சற்று இளப்பாறுகிறது. இது தான் இக்கட்டுரையின் முடிவு. தமிழ் மொழியின் வளர்ச்சி இனியும் வேகமெடுக்குமா? இல்லையா?, தமிழ் மொழிக்கு இனி எதிர்காலம் இருக்கிறதா? ஏன் தமிழ் மொழியில் வாசிக்க வேண்டும்? தமிழ் மொழியின் நுகர்வை எப்படி அதிகரிக்கப் போகிறோம்? இப்படியான கேள்விகளுக்கான பதில் தான் இந்தக் கட்டுரையின் சாரமாக இருக்கப் போகிறது.

இது குறித்த ஆழமான விவாதத்திற்கு, மூன்று தளங்களில் பயணிக்க வேண்டி இருக்கிறது, முதலில் தமிழ் மொழிக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை ஆராய வேண்டும், அடுத்து, கடந்த காலத்து தரவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கப்போவதை கணிக்க வேண்டும். கடைசியாக இன்று எடுக்க வேண்டிய அவசிய, அவசர நடவடிக்கைகள் யாதென்பவை விவாதிக்கப்பட வேண்டும்.

1.குடும்பங்களில் தமிழ்

முதலில் குடும்பங்களில் தமிழுக்கு கொடுக்கும் மரியாதையும், முக்கியத்துவமும் என்ன என்பதை அலச வேண்டியிருக்கிறது. அதற்கு இன்றைய குடும்பங்களில் இருக்கும் பேச்சு வழக்கிகை முதலில் ஆராய வேண்டும். “Fridge-ல Ice Water இருக்கா” என்று குழந்தைகள் கேட்பதும்,”இந்த Fan-ஐ போடு பா” என்று தாத்தா பாட்டிகள் கேட்பதும், வர்க்க வேறுபாடுகள் தாண்டி நமது வீடுகளில் அடிக்கடி கேட்கக் கூடியதாகிவிட்டது.

ஏன் இப்படி நமது மொழி வீடுகளில் மாறிவிட்டது? மனித தேவைகள் மாறுவதால் தான் நம் மொழிக்கு இந்த நிலை ஏற்பட்டது. மனிதனுக்கு தேவையில்லாத போது, எந்த மொழியாயினும் அது அழிவை சந்திக்கும். மனித தேவைக்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம்? என்பதை அறிய முதலில் மனித தேவைகள் என்ன என்ன என்பதை பார்த்துவிடுவோம்.

மாஸ்லோ என்னும் தத்துவ ஞானி, மனித தேவைகள் 5 நிலைகளாக இருப்பதாக கூறுகிறார். சில சமயம் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக கூட இருக்கும். அவை,

முதல் நிலை:வாழ்வதற்கான அடிப்படை தேவைகள். எடுத்துக்காட்டாக (எ.கா) உண்ண உணவு, உடுத்த உடை, தங்க இடம்.

2ஆம் நிலை:பாதுகாப்பு, பொருளாதாரம் சம்பந்தம்பட்ட தேவைகள். எ.கா. விவசாய நிலம், பொருளீட்ட வேலை.

3ஆம் நிலை:உளவியல் தேவைகள். எ.கா. நண்பர்கள், கணவன்-மனைவி, காதல்.

4ஆம் நிலை:சுயமரியாதை தேவைகள். எ.கா. பிடித்த மொபைல் வாங்குவது, பிடித்த படிப்புப் படிப்பது.

5ஆம் நிலை:உணர்வுத் தேவைகள். எ.கா. உள்ளூர இருக்கும் ஆற்றலை உணர்ந்து அதற்கு எற்றார்போல செயல்படுதல்.

இவற்றில் முதல் இரண்டும் கண்களுக்கு புலப்படிக் கூடிய புறத் தேவைகள். மற்ற மூன்றும் கண்களுக்குத் தெரியாத அகத் தேவைகள். புறத்தேவைகள் என்பதை ஒருவகையில் சுதந்திரமாக கூட கருதலாம். அப்படிப் பார்த்தால் நமது குடும்பங்களுக்கு வாழ்வதற்கான அடிப்படை சுதந்திரம், இந்த நவீன யுகத்தில், 1950களுக்கு பிறகே கிடைத்தது. மேலும், பொருளாதாரத் சுதந்திரம் 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு தான் அனைத்துக் குடும்பங்களுக்கும் சாத்தியானது(விவாதத்திற்குரியது என்றாலும்). இந்த இரு புறத் தேவைகளும் தமிழக குடும்பங்களுக்கு சாத்தியமான பிறகு, நுகர்வு என்னும் பெரும் பசி நம்மை ஆட்கொண்டது. (இதனால் பல குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே போனது தனியொரு சோகக்கதை)

நாம், தமிழ் மொழி வாயிலாக கல்வி கற்றதனால் தான் நம்மாலும் பொருளாதார ரீதியாக வளர முடியாமல் போய்விட்டது. ஆகவே நமது வருங்கால சந்ததியருக்காகவாவது ஆங்கில வழிக்கல்வியைக் கொடுத்துவிட வேண்டும். (அதனால் தான் அரசாங்கமும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை ஊக்கப் படுத்துகிறதோ என்னவோ). இதில் உண்மையில்லாமல் இல்லை, ஆனால் ஆங்கிலம் மட்டும் போது என்று கற்றால் சம்பளத்திற்கு வேலை செய்யும் அடிமையாகிவிடுவர், நமது மக்களுக்கு புரிவதில்லை. எப்போதும் ஒரு மொழியை மட்டும் கற்றவர்களை விட இரு மொழியை எழுத படிக்கக் கற்றவர்களே திறமையானவர்களாக திகழ்கிறார்கள். அதனால் தான் நமது மக்கள் பல பன்னாட்டு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

மேலும், இன்றைய எதார்த்தம் யாதெனில், விவசாய நிலங்கள் வைத்திருக்கும் விவசாயி தன் அடுத்த தலைமுறையை விவசாயத்தில் ஈடுபட விடுவதில்லை. இதே போன்றுதொரு மனநிலையிலே பிற தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். கிராமத்தில் இருக்கிறவர்கள் ஆங்கிலம் படித்தால் நகரத்துக்குப் போகலாம் என்று திட்டமிடுகிறார். நகரத்தில் இருப்பவர்கள் பெரு நகரத்திற்கு போக ஆங்கில மூலதனத்தை மட்டும் தேடுகிறார்கள். வெளி நாட்டிற்கு போகவும் ஆங்கிலம் தான் பிரதானமாக தேவையாக பலருக்கு இருக்கிறது. பணம் ஈட்ட ஆங்கிலம் தேவை. உலகை சுற்ற, கற்றுக்கொள்ள ஆங்கிலம் தேவை. தொழில்நுட்பங்கள் பயன்படுத்த ஆங்கிலம் தேவை. இவை தான் இப்போது மக்களின் மனோநிலை. இன்று ஆங்கிலம் தெரிந்தவன், முதல்தர குடிமகன், மற்றவர்கள் இரண்டாம் தரம்.

2.கடந்தகால தரவுகளும் எதிர்காலத்தில் நடக்கப்போவதும்

இன்றைய குடும்பங்களில் தமிழ் மேம்பட்டிருக்கிறதா என்னும் கேள்விக்கு பல விதமான பதில்கள் இருக்கலாம். ஆனால், இன்று போல் என்றும் தமிழ் மொழி அதிகமாக புலக்கத்தில் இருந்ததில்லை. நாம் எப்படி இந்த உண்மையை மறந்து விடுகிறோம், என்பது தான் விந்தையாக இருக்கிறது. உண்மையிலேயே என்றும் இல்லாத அளவிற்கு இன்று தமிழ் நுகர்வுப் பொருளாக மாறி இருக்கிறது.

பேச்சு வழக்கத்தை பற்றியோ, படைப்புகள் பற்றியோ இக்கட்டுரை பேசவில்லை. படைப்புகளின் தரத்தைப் பற்றியும் விவாதிக்கவில்லை. தமிழ் நுகர்வைப்பற்றி மட்டும் இக்கட்டுரை பேசுகிறது. இந்த வாதத்தைக் கொஞ்சம் விரிவாக எடுத்துக்கொண்டு அலசுவோம்.

காலங்காலமாக, தமிழ் மொழி அனேக மக்களால் பேசிப்பட்டாலும், வெகு சிலருக்கு மட்டுமே தமிழ் மொழியில் எழுத்தறிவு இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக சமுதாய பாகுபாடு இருந்தது என்பதனை மறுப்பதற்கில்லை. மேலும், எழுதுவதற்கும், எழுதியதை பராமரிப்பு செய்வதற்கும், பரப்புவதற்கும் நகல் எடுக்கவும் நிறைய சிக்கல்கள் இருந்தன என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நிறைய உழைப்பும் பொருளும் தேவைப்படும் பணியாக அது இருந்தது. அதே சமயம், நாட்டார் வழக்கவும், பழமொழியாகவும், நாட்டுப்புற பாடல்களாகவும், மேடைநாடகங்களாகவும், கூத்து போன்ற பல வழிகளிலும் தமிழ் மொழியானது ஆடல், பாடலாகவும், பேச்சு வழக்காகவும்இருந்தது.

இதனால் தான் தமிழ் மொழி ஆதிகாலம் தொட்டு புலக்கத்தில் இருந்தாலும் தமிழில் வாசிப்பவர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்களோ என்னவோ. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை போலும்.

பல நூற்றாண்டுகளுக்கு தமிழ் மொழியானது பேச்சு மொழியாக மட்டுமே கொலோச்சியது என்பதே நிதர்சனம். தமிழில் எழுத்துத்தறிவு என்பது மிகமிக அரிதாகவே இருந்திருக்கிறது என்பது வரலாற்று உண்மை. தமிழ் மொழி என்றில்லை உலகில் உள்ள பொரும்பாலான மொழிகள் 16ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் எழுத்தின் வாயிலாக பரவ ஆரம்பித்தது. அதற்கும் வெகு காலம் பின் தான் தமிழ் மொழியும் நான்குகால் பாய்ச்சலில் பரவ அரம்பித்தது. அப்போதும் கூட அது ஒருசில சமுதாய மக்களுக்கு மட்டுமே கைக்கு எட்டும் தூரத்தில் தமிழ் மொழி எழுத்து வழியாக இருந்தது. எப்போது அந்த அதிகார வர்க்கத்திற்கும், பிரிவினை வாதிகளுக்கும், ஆங்கிலம் என்று ஒரு மொழி சோறு போட ஆரம்பித்ததோ அப்போது தான் அவர்களுக்கு தமிழ் மொழி மீதான முதலாளித்துவ உரிமை தேவையில்லாமல் போனது.

பண்டைய காலங்களில் பல தமிழ் மன்னர்கள், இன்றைய தமிழக பகுதியை ஆண்டார்கள். சேர, சோழ், பாண்டிய, பல்லவ மன்னர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தமிழ் மொழியை வளர்த்தெடுத்தார்கள். இவர்கள் தவிர்த்து, பல நூறு குறு நில மன்னர்களும் பரம்பரை பரம்பரையாக தமிழ் மொழி வளர பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். ஆகவே, சிறந்த படைப்பை படைக்க போட்டி எற்பட்டது. போட்டிகளின் காரணமாக தமிழ் மொழியில் தரமான இலக்கியங்கள் கிடைத்தது. அவை தமிழ் மொழிக்கு வசந்தகாலம். அன்று தென்னிந்திய பகுதி முழுவதும் தமிழ் மொழி பரவி இருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கல்வெட்டுக்களும், கோயில்களும், உணவு, உடை என பல வரலாற்று எச்சங்களும் இன்றும் பல்வேறு மத, இன படையெடுப்புகளுக்கு பிறகும். மீதம் இருக்கின்றன. அப்போதும் அது பாமரனுக்குரிய எழுத்து மொழியாக இருந்ததில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், காலங்காலமாக தமிழ் மொழியின் வளர்ச்சியிலும், இலக்கிய பங்களிப்புகளிலும் பெண்களுக்கு பெயரளவிற்கு கூட பெரிதாக பங்கில்லை என்ற கசப்பான உண்மையும் மறைந்திருக்கிறது.

பழங்கதைப் பேசியது போதும், இன்றைய எதார்த்தத்திற்கு வருவோம்.

இன்று இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிரதான மொழியாகவும், கனடா, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருக்கும் இலங்கை தமிழர்கள் வழியாக பரந்த பரப்பாக விரிந்து இருக்கிறது தமிழ் மொழி நுகர்வுக்கான சந்தை. வேறு எந்த இந்திய மொழிக்கும் இல்லாத சிறப்பிது. உலகில் தோராயமாக 8 முதல் 10 கோடி மக்கள் வரை தமிழை தாய்மொழியாக கொண்ட அல்லது தமிழ் பேசும் மக்களாக இருக்கிறார்கள். அவர்களில் பாதி மக்களுக்கு மட்டுமே தமிழ் மொழி எழுத, படிக்கத் தெரியும் என்று வைத்துக் கொண்டாலும் தமிழ் மொழிக்கு வாசகர்கள் 4 கோடி பேர் என்பது தோராய கணக்கு. இவர்களில் சுமார் 3 கோடிப்பேர் மட்டும் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் அது கேரள மக்கள் தொகைக்கு சமமான எண்ணிக்கை. இது தோராயமாக சுமார் 1.50 கோடி குடும்பங்களை உள்ளடக்கிய கணக்கு இது.

ஆக தமிழ் மொழிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் பெருவாரியாக இருக்கிறார்கள் என்பது உண்மை. இப்போது எழும் சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இதோ

  1. எழுத்தாளர்கள் கூறுவது போல், தமிழ் மொழிக்கு வாசகர்கள் இல்லையா? ஒரு செய்தி. 40 இலட்சம் தமிழ் பத்திரிக்கைகள் விற்கின்றன தமிழ் நாட்டில் தினமும்!!!. வாசகர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் படைப்புகள் பலரை சென்று சேர்வதில்லை. ஏன், ஒன்று நல்ல படைப்புகளை அவர்கள் தேடவில்லை இல்லாவிடில் சமூகத்தில் எதோ பிரச்சனை. இவற்றை சரி செய்ய வேண்டும்.
  2. ஒரு வேளை இல்லாத தமிழ் வாசகர்களுக்காகவா வருடம் தோறும் 20 பெரிய புத்தக கண்காட்சிகள்? புத்தக கண்காட்சிகள் நிச்சயம் பல புதிய வாசகர்களை ஈர்க்கிறது. பல இளைஞர்கள் கையில் புத்தகங்கள் தவிழ்வதை இப்போது பார்க்க முடிகிறது. புத்தகக்காட்சிகள் புத்தகங்கள் இருப்பதை விளம்பரப்படுத்துகின்றன. நிச்சயம் அவை தமிழ் மொழி நுகர்வை அதிகப்படுத்தும். ஒவ்வொரு இல்லத்திலும் 100 புத்தகங்கள் கொண்ட நூலகங்கள் அமைகிறதோ இல்லையோ, ஆனால் நிச்சயம் இணையம் மூலமாக தமிழ் பல இல்லங்களை ஆட்கொள்ள போகிற காலம் வெகு தொலைவிலில்லை.
  3. தினமும் 40 இலட்சம் பிரதிகள் விற்பனையாகும் தமிழ் தினசரிகள் யாருக்காக? இத்துனை ஒலி, ஒளி நிறுவனங்களும் யாருக்காக? இன்றய நிலையில் எந்தப் பத்திரிக்கையும், செய்தி நிறுவனங்களும் பணத்தை இழக்க இங்கு தொழில் நடத்தவில்லை. எங்கு நுகர்வு அதிகரித்து வியாபார வாய்ப்பு இருக்கிறதோ அங்கே தான் தொழில் இருக்கும். ஆக இன்று மக்கள் அதிகமாக நுகர்வதால் இங்கு இத்தனை பத்திரிக்கை, செய்தி நிறுவனங்கள் இருக்கின்றன.

மேலும், இந்த கேள்விகளுக்கு உணர்ச்சிப்பூர்வமாக இல்லாமல் அறிவியல் பூர்வமான வழியில், பொருளாதார பார்வையில் விடைகள் தேடினால் நிச்சயம் விடைகளும் கிடைக்கும், புதிய கோணங்களும், விசாலமான பார்வையும் கிடைக்கும், சமுதாய மாற்றமும் நிகழும்.

  1. ஏற்பட வேண்டிய மாற்றங்கள்

நுகர்வு என்னும் கலாச்சாரம் வந்துவிட்ட பிறகு தமிழில் தான் எல்லாம் இருக்க வேண்டும் என்பது விதண்டாவாதம். நுகர்வு என்பது அடையாளம், உரிமை, விளம்பரம், ஆடம்பரம், சில சமயங்களில் அத்தியாவசியம் மற்றும் இது போன்ற பல வியாபார ஜாலங்கள் சம்பந்தப்பட்டது. இத்தருனத்தில் எல்லாவற்றயும் தமிழ்ப்படுத்த வேண்டும் என்பது முடியாத காரியம். அது தவறும் கூட. மாற்றம் என்பது முதலில் மேலிருந்து மட்டும் துவங்க வேண்டும் என்பதில்லை.

இப்போதைய தேவை, அனைத்து மட்டங்களில் இருந்தும் மாற்றத்திகான போர்கால நடவடிக்கைகள். அதற்கு இளைஞர்களின் பங்களிப்பும், வாசிப்பும் மிகமிக அவசியம். சமூக வலைத்தளங்களில் பல லட்சம் இளைஞர்கள் தமிழில் தட்டச்சு செய்கிறார்கள். அவர்கள் தமிழில் வரும் பதிவுகளை தேடிச் சென்று படிக்கிறார்களே. இதனைவிட அதிகம் பேர் Tanglish பாணியில் பதிவிடவும், பகிரவும் செய்கிறார்களே. ஆக, கல்வியிலும், மக்களின் மனோ நிலையிலும், அரசு மற்றும் அதிகார மட்டத்திலும், செய்தித்தாள்களின் தரத்திலும், இணையத்திலும் அவசர, அவசிய மாற்றங்கள் ஏற்பட்டால் நிச்சயம் தமிழுக்கு மீண்டுமொரு வசந்தகாலம் காத்திருக்கிறது. இவற்றுள், இணையம் தவிர மற்ற நிலைகளில் குறிப்பிட தகுந்த மாற்றங்கள் எற்பட்டு வருகின்றது. ஆக இணையத்தமிழ் தான் இனி மாற்றங்கள் நிகழப்போகுமிடம்.

தமிழுக்கு ஒரு அருமையான வாய்ப்பு – இனையத்தில் தமிழ்

இணையத்திற்கு சாவி போன்று இருப்பது ஆங்கில மொழி தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் 2015ஆம் ஆண்டு இறுதியில் ஒரு ஆச்சரியமான ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியானது. ஆங்கில மொழியின் உலகளாவிய ஆதிக்கத்தில் இருந்து இணையம் மெல்ல மெல்ல தன்னை விடுவித்துக்கொண்டு வருகிறது என்பது தான் அந்த ஆராய்ச்சியின் சாரம். வரலாற்றில் முதல் முறையாக 2015ல் தான் இணையத்தில் 50% சதவீதத்திற்கு அதிகமாக ஆங்கிலம் தவிர்த்த பிற மொழி இணைய தளங்கள் பயன்பாட்டில் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியா என்ன? என்று வினாவும் முன் இந்த பத்தியை முழுவதுமாக படித்துவிடுங்கள். 1990களில் இணையத்தில் ஆங்கிலத்தின் பங்கு 95% சதவீதமாகவும், 2000களில் இது 80% சதவீதமாகவும் குறைந்து, இப்பொழுது 2015ல் 50% சதவீதத்திற்கும் குறைவாக மாறியுள்ளது. மேலும், இந்த ஆராய்ச்சியில் சமூக வலைதளங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. அவற்றை சேர்த்திருந்தால் நிச்சயம் ஆங்கிலத்தின் பங்கு வெகுவாக குறைந்திருப்பதை கண்டிருப்போம்.

 இணைய உலகம் மெல்ல மெல்ல ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுக்கொண்டு வருகிறது. ஆனால் 250 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய, சீன நாட்டு மொழிகளின் இணைய ஆதிக்கம் வெறும் 4.5% முதல் 5.0% சதவீதமே. இந்தி, உருது, தமிழ், தெலுங்கு, மாராத்தி போன்ற அனைத்து இந்திய மொழிகளின் பங்களிப்பு சேர்த்து வெறும் 1.5% சதவீதம் தான். அதிலும் தமிழின் பங்கு மிக மோசம், வெறும் 0.05% சதவீதம் தான். ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் வெறும் 45 கோடி மக்கள் தான், ஆனால் அவர்கள் வலைப்பதிவுகள் வழியாகவும், இணைய தளங்கள் வழியாகவும், சமூக வலைத்தளங்கள் வழியாக எழுதிக்குவிக்கிறார்கள். அதனால் தான் இணையத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு இணையம் பரவலாக கிடைத்தது 1990களில், நம்மை போன்ற எழ்மை நாடான இந்தியாவிற்கு இணையம் பரவலாக கிடைத்ததே 2009ற்கு பிறகு தானே.

நம் மக்களும், முக்கியமாக இளைஞர்கள், எழுதிக்குவிப்பார்கள் என்று நம்புவோம். ஆக இணையத்தில் தமிழ் மொழி நுகர்வுக்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது. இதனை சரியாக பயன்படுத்த அரசாங்கம் எப்போதும் போல எதுவும் செய்யாது, அது கிடக்கட்டும். ஆனால் நிச்சயமாக நுகர்வதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதே சமயம், Tanglish பாணியில் சமூக வலைத்தளங்களில் நிறைய கருத்துக்கள் பகிரப்படுகின்றன என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. இதற்கு பல புறக்காரணங்கள் இருந்தாலும், இந்த பாணி மிகவும் வண்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் தாய் மொழியில் பேச மட்டும் தெரிந்தால் போதும் என்று சமூகத்தில் ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வேண்டுமானால், Tanglishல் ஆவது தமிழ் மொழி பயன்பாட்டில் இருக்கிறதே என்று வெட்டிப் பேச்சு பேச அந்த எழுத்துக்கள் பயன்படும். அதனால் தமிழ் மொழிக்கும், தமிழ் இணையத்திற்கும் எந்த பயனுமில்லை என்பதே எதார்த்தம்.

தமிழ் மொழிக்கு வசந்த காலம் வெகு தொலைவில் இல்லை. அதேசமயம், இணையத்தில் தமிழ் மொழியானது நடை பழகி வருகிறது.  இனி, ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குத் தான் இணையம் என்னும் சர்வாதிகாரமும் ஏகாதிபத்தியமும் மெல்ல சாகும். பல்வேறு மொழிகளுக்கான சமத்துவமாகவும், ஜனநாயகமும், இணையம் விரைவில் மலரும். அதில் தமிழ் மொழியின் பங்கும் நிச்சயம் இருக்கும். இதுவே தமிழ் மொழி மீண்டு எழ காரணமாய் இருக்கப்போகிறது.

     –     தென்றல் வீசட்டும்