அப்போது…
“ரியாஸ்… ரியாஸ்” என்று தயாவின் குரல் கேட்டது.
போலிஸ் வண்டிக்கு அருகில் இருந்த நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். தயா குத்துக்கல்லாக எங்களை நோக்கி ஆம்புலன்ஸிலிருந்து வந்துக்கொண்டிருந்தான். அவன் உடலில் இருந்த இரத்தம் காய்ந்திருந்தது. அவன் அடிப்பட்ட தன் வண்டியிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தைக் கழுவினான். ஒரு பாட்டில் தண்ணீரை அப்படியே தன் தலையில் ஊற்றினான், உடலில் இருந்த இரத்தக்கறை எல்லாம் போய்விட்டது. வண்டியிலிருந்து புதிய சட்டையை எடுத்து உடுத்திக்கொண்டு எங்களருகில் வந்தான்.
(தயா-திவ்யா காதல் கதையின் மூன்றாவது அத்தியாயம் இது. முதலிரண்டு அத்தியாயங்களின் படித்துவிட்டு தொடரவும். அதன் இணைய முகவர் இதோ… அத்தியாயம்-1, அத்தியாயம்-2)
“ரியாஸ். இரும்புக்கடை தேவாவை வண்டி எடுத்துக்கிட்டு வரச்சொல்லியிருக்கேன். அவன் வந்ததும் நீ வீட்டுக்கு போயிடு. பானு கிட்ட நான் அப்புறமா பேசுறேன்-னு சொல்லு. இந்த இடம் கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேசன் ரேச்ஜில தான் வருது. அடிப்பட்ட வண்டியும் அந்த ஸ்டேசனோடது தான்-னு நினைக்கிறேன்”
“நம்ம வக்கீல் குமார் சாரை வரச்சொல்லியிருக்கேன். இன்னு 10-15 நிமிஷத்துல வந்துடறேன்-னு சொல்லியிருக்காரு.”
“நீ திவ்யாவையும் கூட்டிக்கிட்டு கிளம்பு” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே போன் வந்ததால், அதனை எடுத்துப் பேசிக்கொண்டே எங்கள் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
உயிரோடு இருக்கறவனுக்காக இப்படி அழுது புலம்பினோம் என்று தலையில் அடித்துக்கொண்டேன். எனக்கு இது ரொம்பவும் அவமானமாக இருந்தது. ஒரு புறம் நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகவும் இருந்தது. வக்கீலாக நான் எவ்வளவோ ஆக்ஸிடண்ட் ஸ்பாடில் இருந்திருக்கிறேன். ஆனால், இது மாதிரி நான் எங்கேயும் நடந்துக் கொண்டதில்லை. என் மேலே எனக்கு கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது, இருந்தாலும், அடக்கிக் கொண்டேன்.
திவ்யாவையும் கூட்டிக்கிட்டு கிளம்பு என்று தயா சொன்னது என்னை இன்னும் கோபமாக்கியது. அதே கோபத்துடன் ரியாஸைப் பார்த்தேன்.
“இவனுக்கு ஒன்னும் ஆகல திவ்யா.”
“அத தான் நான் அப்பவே சொல்ல வந்தேன். நீதான் ஓவரா ரீயாக்ஷன் கொடுத்துட்ட” என்றான்.
“அவன பாக்க வர மாட்டேன். எனக்கு கல்யாணமே வேணாம்-னு சொல்லிட்டு இப்ப தயா மேல கொஞ்சமா பாசம் இருக்கும் போலயே” என்றான் நக்கலாக.
“வெரி ஃபன்னி” என்றேன்.
நான் ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்ததால், “நீ வர சொன்னனு தான் வந்தேன். வந்துப் பாத்தா வண்டி அப்பளம் மாதிரி நொறுங்கி கிடக்குது. நீ ஆம்புலன்ஸ்-ல பாரு-னு பொதுவா சொன்ன, உன் கண்ணு வேற கலங்கியிருந்தது. அதான் அவனுக்கு ஏதோ ஆகிடிச்சி-னு நினைச்சிட்டேன்”
“ஆம்புலன்ஸுகுள்ள பாத்த அப்பவும் அவன் படுத்திருந்தவிதம் என்னை ரொம்பவும் குழப்பிடுச்சு” என்றேன் கோபமாக.
“என்னமோ அவனுக்காக வந்த மாதிரி, கூட்டிக்கிட்டு கெளம்பு-னு சொல்றான், என்னைய என்ன அவன் பெண்டாட்டினு நினைச்சிக்கிட்டானா. அவன்கிட்ட சொல்லிவைய். நானும் என் வண்டியில தான் வந்திருக்கேன்-னு. நான் யார நம்பியும் இல்ல. நான் இண்டிபெண்டட் வுமன். முதல்ல இந்த மெரட்டர வேல எல்லாம் வேற யார்கிட்ட யாவது வச்சிக்க சொல்லு. யார்கிட்ட வந்து என்ன பேசறான். இடியட். அந்தப் பொண்ணு இவன விட்டுட்டுப் போனது தப்பேயில்ல. சரியான கண்ட்ரோல் பிரீக் ஆக இருப்பான் போல”
“திவ்யா” என்றான் ரியாஸ் கோபமாக.
“உன் நண்பன பத்தி எதுவும் சொன்னா கோபம் பொத்துகிட்டு வருமே. சரி என்ன எதுக்கு இப்ப வர சொன்ன? என்ன ஹெல்ப் வேணும்? சீனியர் வேற வந்துட்டு இருக்காராம்? எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சி? நீங்க இடிச்சிங்களா? இல்ல அவங்க வந்து இடிச்சாங்களா?” என்று கேள்விகளாய் அடுக்கினேன்.
“அவன்கிட்ட சொல்லாம உன்ன பாக்க கூட்டிட்டு வந்தது கோவுச்சிக்கிட்டு துரை வண்டியக்கூட விட்டுட்டு ஆட்டோ ஏறி கிளப்பிட்டாரு. நீயும் அப்ப அங்க தான இருந்த, பாத்தியே”
“ஆமா சொல்லு”
“கொண்டலாம்பட்டி பைபாஸ்-ல பாதியில ஆட்டோவ மறிச்சி. அவன்கிட்ட கொஞ்சிக் கூத்தாடி சமாதனப்படுத்தி என் வீட்டுக்கு கூட்டிக்கிட்டி போகலாம்-னு நினைச்சேன்.”
“ஆனா, வீட்டுக்கு எல்லாம் வேணாம். வண்டிய சங்ககிரி டோல் கேட்டிற்கு விடு-னு சொல்லிட்டான்” என்று ரியாஸ் என்ன நடந்தது என்பதனை என்னிடம் விவரிக்கத் துவங்கினான்.
“அடிக்கடி மூடு சரியில்லனா இந்த மாதிரி தான் வண்டிய எடுத்துக்கிட்டு இராக்கோழி மாதிரி சுத்துவான். அப்ப அப்ப நானும் போவேன். இன்னைக்கும் அப்படி தான் போலாம்-னு கிளம்பினோம்.”
“உத்தமசோழபுரம் பாலத்துக்கிட்ட வந்த அப்ப, அவங்க அம்மாகிட்ட இருந்து போன் வந்தது. துபாய்-ல இருந்து கனடாவுக்கு பிளைட் ஏறிட்டாங்களாம். போயிட்டு கூப்புடுறோம்-னு சொல்ல தான் போன் வந்தது”
“போன்-ல பேசிக்கிட்டு இருக்கும் போதே கோபமா வண்டிய நிறுத்தச் சொல்லி, இறங்கி, கொஞ்சம் தள்ளி நின்னு பேசிக்கிட்டு இருந்தான்.”
“அவன் வர்றதுக்குள்ள பானுக்கிட்ட நான் வர லேட் ஆகும்-னு சொல்ல போன் எடுத்தேன்.”
“எதிர்-ல இருந்து ஒரு போலிஸ் வண்டி ரொம்ப வேகமா வந்தது.”
“எனக்கு சுதாரிக்கக்கூட நேரமில்லை. வந்தே வேகத்துல டம்முனு முன்னாடி இடிச்சிட்டிச்சி. எனக்கு என்ன ஆச்சி-னு புரிஞ்சிக்கவே கொஞ்ச நேரம் ஆச்சி. நல்ல வேளை தயா வண்டியில இல்ல. அவனுக்கு எதுவுமாகல.”
“நான் சீட் பெல்ட் போட்டு இருந்தேன். வண்டி ஆன்-ல தான் இருந்தது. நல்ல வேளை ஏர்பேக் ஓபன் ஆகி என்னை காப்பாத்திடுச்சி. ஆனா கையில தான் ஏதோ ரொம்ப வலிச்சது. இப்ப பரவாயில்ல. தலையில லேசான காயம்.” என்றான்.
ரியாஸ் பேசிக்கொண்டு இருக்கும் போதே நான் தயாவை திரும்பிப் பார்த்தேன். அவன் இன்னமும் போன் பேசிக் கொண்டிருந்தான்.
***********************
அங்கிருந்து கோபமாக ஆட்டோ எறி கிளம்பிவிட்டேன். ஆட்டோ டிரைவரிடம் கொண்டலாம்பட்டி பைபாஸிற்கு போகச் சொல்லிவிட்டு கண்மூடி சீட்டில் சாய்ந்தேன். இன்று நடந்ததையெல்லாம் மனதில் அசைப் போட்டுக்கொண்டிருந்தேன்.
அங்கே ஹோண்டா வண்டியில் பின் சீட்டில் அமர்ந்திருந்த, துப்பட்டாவில் முகத்தை மூடியிருந்த பெண்ணை பிடித்திருந்தது. அவள் என்னைப் பார்த்த பார்வை எனக்குள் அப்படியே இருந்தது. அந்தப் பார்வையில் ஒரு சோகமும் கலந்திருந்தது. சரி யாரோ என்று அப்போது விட்டுவிட்டேன். ஆனால், ரியாஸ்-பானுவும் திவ்யாவைப் பார்க்கத் தான் என்னை கூட்டிக்கொண்டு வந்தார்கள் என்று தெரிந்ததும், அந்த ஹோண்டா வண்டியில் பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண் தான் திவ்யா என்பதும் எனக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது.
அந்த நொடியில் எனக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. ஒரே குழப்பமான சுழ்நிலை. ஒரு வகையில் திவ்யா என்னுடைய வக்கீல். மேலும் இந்த சம்பந்தமே வேண்டாம் என்ற முடிவில் இருந்தேன்.
இந்த சம்பந்தம் என்றில்லை, இனி எந்த சம்பந்தம் வந்தாலும் வேண்டாம் என்ற முடிவிலே நான் தீர்க்கமாக இருக்கிறேன். என்னால் அனுவை மறக்க முடியாது. அவளை மறந்து இன்னோரு வாழ்க்கையை என்னால் தேடிக்கொள்ளவும் முடியாது. எனக்குள் ஏற்பட்டிருக்கும் காயம் என்றைக்கும் மறையாது. அது ஆறவும் ஆறாது. அதே சமயம் ஹோண்டா வண்டியில் பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண் தான் திவ்யா என்றவுடன் தேவையில்லாமல் அவளை காயப்படுத்திவிட்டோமே என்று எனக்கு தோன்றியது. மேலும் என்னால் தேவையில்லாமல் அவர்களுக்குள் பிரச்சனையை உண்டாக்கிவிட்டோம் என்ற குற்ற உணர்வும் என்னிடம் இருந்தது. என்ன நடந்திருந்தாலும் என் முடிவில் நான் தீர்க்கமாகமானது. திருமணமே வேண்டாம் என்பதே என் முடிவு.
எல்லாம் தெரிந்த ரியாஸ் செய்தது பெரும் தவறு. நம்பிக்கை துரோகம். அவன் அப்படி செய்வான் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அம்மாபேட்டை பிரிவில் இனி திவ்யாவைப் பற்றி பேசவே மாட்டேன் என்று அவன் சொன்னதும், அதனை நான் நம்பிவிட்டேன். அதுவும் காரில் ஏறியவுடன் அவன் சிரித்ததன் காரணம் எனக்கு இப்போது புரிகிறது. எனக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்துவிட்டது. அதனால் தான் ஆட்டோ ஏறிக் கிளம்பிவிட்டேன்.
ஆட்டோவை துரத்திக்கொண்டு கொண்டலாம்பட்டியே வந்துவிட்டான். வந்தவன், ஏதேதோ பேசி என்னை சமாதானப்படுத்திவிட்டான். அருகிலிருந்த குமார் அண்ணன் ஓட்டல் கடையிலே சாப்பிட்ட பிறகு அவன் வீட்டிற்கு கிளம்பலாம் என்றான். நான் வீட்டிற்கு வேண்டாம், வண்டியை சங்ககிரி டோல் கேட்டிற்கு விடு என்றேன்.
அனு என் வாழ்க்கையை விட்டுப் போனதிலிருந்தே அடிக்கடி இரவு நேரங்களிலும், மனம் கனமாக இருக்கும் நேரங்களிலும் இப்படி வண்டியை எடுத்துக்கொண்டு சங்ககிரி டோல் கேட்டிற்கும் சேலத்திற்கும் போவது எனக்கு பழகிப்போனது. அப்படி அடிக்கடி போவது எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அவளுடன் பழகியது ஏழு வருடங்கள் தான் என்றாலும், என் வாழ்க்கையில் எழுபது வயதில் கூட அவளுடன் பழகிய நாட்கள் எனக்கு பசுமையாக இருக்கும். இப்படிப்பட்ட தனிமையான பயணங்களே என்னை மனிதனாக வைத்திருக்கிறது.
காதலில் தோற்றவர்கள் எல்லோரும் இது மாதிரி ஏதேனும் கிறுக்குத்தனங்கள் செய்துக்கொண்டிருப்பார்கள். நன்றாக கவனித்துப் பாருங்கள். அதிலும் காதலில் தோற்றவனின் நண்பர்கள் படும் பாடு தான் பெரும்பாடு. காதலில் தோற்றவர்களுடைய கிறுக்குக்தனங்களால் அதிகம் பாதிக்கப்படுவதும் கூட இருக்கும் நண்பர்களே. அது அவர்களுக்கு தெரியாது, புரியவும் புரியாது. இதை நானே ரியாஸிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். எனக்கும் இது போன்ற கிறுக்குத்தனமான வேலையை செய்ய பிடித்திருந்தது. அதிலே ஒரு சுகமிருக்கிறது. அது காதலில் தோற்றவர்கள் மட்டுமே புரிந்துக் கொள்ளக்கூடிய சுகம். அதை சுகம் என்று சொல்வதைவிடவும் போதை என்று சொல்வதே சரி. அந்த போதையில் திளைக்கும் போது எனக்கு இந்த உலகமே மறந்துவிடும். நான் ஒரு ஜென் நினையில் அப்போது இருப்பேன்.
எனது கல்லூரி காலங்களில் இப்படி இரவில் காரில் தனியாக போக நினைத்தால் அவ்வப்போது அவனையும் துணைக்கு கூட அழைத்துக்கொள்வேன். இரவு வீட்டிற்கு வர தாமதமாகும் என்பதால் அவன் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும். ஆனாலும், என்னுடன் வந்தால் பானுவைப் பார்க்கலாம் என்ற காரணத்திற்காக எல்லா பிரச்சனைகளை சமாளித்து என்னுடன் வந்திருக்கிறான். சில நேரங்களில் திரும்பி வர நேரம் ஆகும் என்பதால் அப்போதெல்லாம் என் வீட்டிலேயே தங்கியிருக்கிறான். இப்போது பானுவிற்கும் அவனுக்கும் கல்யாணமாகிவிட்டதால் அவன் வருவதும் குறைந்துவிட்டது. மேலும் எனக்கு தனிமையின் போதையும் பழகிவிட்டது.
உத்தமசோழபுரம் மேம்பாலம் அருமே வந்தபோது அம்மா போனில் அழைத்தார். நேரத்தைப் பார்த்தேன். துபாயிலிருந்து கனடா போகும் பிளைட்டில் ஏற காத்திருப்பார் என்று நினைத்துக்கொண்டே போனை எடுத்தேன்.
எடுத்தவுடன், முதல் கேள்வியே, “என்னடா திவ்யா-வ பாத்தியா” என்று கேட்டார் எனது அம்மா. எல்லோரும் கூட்டுக் களவாணிகளாக இருக்கிறார்களே என்று எனக்கு கடுப்பாக இருந்தது. ரியாஸை வண்டியை நிறுத்தச்சொல்லி நான் ரோட்டில் இறங்கி போச ஆரம்பித்தேன்.
எல்லாம் பேசி முடித்தவுடன், “சரி நல்லபடியா கனடா போயிட்டு போன் போடுங்க” என்று சொல்லி போனை வைத்துவிட்டு பார்த்தால் போன் பேசிக்கொண்டே திருமணிமுத்தாற்றுப் பாலத்தின் அருகே வந்திருந்தேன். திரும்பி வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வண்டியின் அருகே வந்த போது, டமார் என்று ஒரு சத்தம் கேட்டது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. ரியாஸின் அலறல் சத்தம் கேட்டு வண்டி அருகே அலறி ஓடினேன். ஆம்புலன்ஸிற்கும் போன் அடித்தேன்.
போலிஸின் போலிரோ வண்டி என்னுடைய மாருதி எஸ்-கிராஸ் வண்டியின் முன் பக்கம் பலமாக மோதியிருந்தது. என் வண்டியின் கதவைத் திறந்து, ரியாஸை வெளியில் இழுத்து, பின் சக்கரத்தில் சாய்ந்தபடி ரோட்டில் உட்கார வைத்தேன். கையில் பயங்கரமாக வலி இருக்கிறது என்றான். தலையில் லேசாக இரத்தம் வழிந்தது. நான் சற்றே பயந்துவிட்டேன். என் கர்சீப்பை எடுத்து அவன் முகத்தில் வழிந்திருந்த இரத்தத்தை முழுவதும் துடைத்துவிட்டுப் பார்த்தேன். சிறிய சிராய்ப்பு மட்டுமே இருந்தது என்னை ஆறுதல் படுத்தியது.
அதற்குள் நான்கு ஆம்புலன்ஸ் வண்டிகள் அடுத்தடுத்து வந்துவிட்டன. முதலில் வந்த வண்டிக்கு ரியாஸை மெல்ல அழைத்துச்சென்று முதலிதவி கொடுக்கச்சொல்லிவிட்டு போலிஸ் வண்டியில் அலறல் சத்தம் அதிகமாக இருந்ததால், அங்கே விரைந்தேன். போலிஸ் வண்டியில் டிரைவர் சீட்டில் ஒரு சப்-இன்ஸ்பெக்ட்ரும், அவருக்கும் அருகில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரும், பின் சீட்டில் மூன்று காவலர்களும் இருந்தனர். இரு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் கடுமையாக அடிப்பட்டிருந்தது. அவர்கள் இருவரையும் இரு ஆம்புலன்ஸ்லில் தனித்தனியாக ஏற்றி கிளப்பிவிட்டேன். பின் சீட்டில் இருந்த மூன்று காவலர்களையும் ஒரே ஆம்புலன்ஸில் எற்றி முதலுதவி கொடுத்துக்கொண்டிருந்த போது ரியாஸ் இருக்கும் ஆம்புலன்ஸிற்கு விரைந்தேன். அவன் கையிலும் தலையிலும் கட்டுடன் ஆம்புலன்ஸ் வண்டியிருந்து இறங்கி வந்தான்.
“ஒன்னுமில்லை டா. சுழுக்கு மாதிரிதான் இருக்கு. இப்ப பரவாயில்ல. வலி குறைஞ்சிடுச்சு.” என்றான்.
அவன் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டான். காயம் சிறிதாக இருந்ததால் நானும் அவனை வற்புறுத்தவில்லை.
“போலிஸ் வண்டி வேற பெரிய பிரச்சனை ஆகும்-னு நினைக்கிறேன். எதுக்கும் துணைக்கு இருக்கட்டும்-னு வக்கீல் குமார் சாரை வர சொல்லியிருக்கேன். அவரும் ஈரோடு கோர்ட் வேலை முடிஞ்சி வந்துக்கிட்டு இருக்காராம்” என்றேன் ரியாஸிடம்.
“நான் திவ்யாவ வர சொல்லியிருக்கேன்” என்றான் ரியாஸ்.
“அவள ஏண்டா இங்க வர சொன்ன”
“இல்ல டா. அவ ஆக்சிடண்ட் ஸ்பாட் நிறைய பாத்துட்டு இருக்கா அதனால தான் அவளையும் வர சொன்னோன்.”
சிறிது அமைதியிற்குப் பின்னர், “இந்த போலிஸ்காரனுங்க எல்லோரும் குடிச்ச மாதிரி இருக்கு.” என்றேன் ரியாஸிடம்.
“அப்படியா சொல்ற” என்றான்.
“எந்த ஆஸ்பித்திரிக்கு கொண்டு போயிருக்காங்க?” என்றான்.
“விநாயக மிசின்ஸ் ஆஸ்பித்திரிக்கு தான் டா. ஏன் கேக்குற.”
“நல்லதா போச்சு.” என்றான்.
“அங்க தான், நம்ம வஸந்த் டாக்டரா இருக்கான். மறந்துட்டயா டா?” டாக்டர் வஸந்த் எங்களுடன் பேட்மிட்டன் விளையாடும் நண்பர்.
“அட ஆமால…”
“நீ இங்கயே இரு. நான் அவன் கிட்ட பேசி பிளட் சாம்பிள்ஸ் எடுத்து வைக்க சொல்றேன்.”
“ரொம்ப டையர்டா இருக்கு. நான் ஆம்புலன்ஸ்-ல கொஞ்சம் படுத்திருக்கேன்.” என்று அவனிடம் சொல்லிவிட்டு. இரத்தமாய் இருந்த என் சட்டையை கழற்றி காரில் போட்டு விட்டு ஆம்புலன்ஸில் ஏறிப் படுத்தேன். இந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் உதவியாளரும் இன்னொரு ஆம்புலன்ஸில் இருந்த காவலர்களுக்கு உதவ சென்றுவிட்டனர். எனக்கு ரொம்பவும் களைப்பாக இருந்தது. என் முகத்தில் இருந்த இரத்தக் கறையை மட்டும் ஆம்புலன்ஸில் இருந்த மற்றுமொரு உதவியாளர் துடைத்து சிறிது உதவினார். அடிப்பட்ட காவலர்கள் எல்லோரையும் ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டதால் அவர்களின் இரத்தம் வழிந்து என்மேல் படிந்து கறையாகியிருந்தது.
அதுவரை வேகமாக துடித்துக் கொண்டிருந்த என் இதயம் அப்போது தான் இயல்பிற்கு திரும்பியது.
இனி அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
******************************
ரியாஸ் சொன்ன எல்லா தகவல்களையும் கேட்டுக்கொண்டேன். மேலும் ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதும் எனது சீனியர் குமார் சாரும் வந்து சேர்ந்திருந்தார். அவரிடம் நடந்ததை விவரித்தேன். போலிஸ் வண்டிய இடிச்சது பெரிய பிரச்சனையாகும் என்று அவர் என்னிடம் சொன்னார். எனக்கும் அப்படியே தோன்றியது. அடுத்தது என்ன செய்யலாம் என்று நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது ஒரு போலிஸ் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து மஃப்டியில் ஒருவர் இறங்கினார். நானும் எனது சீனியர் குமார் சாரும் அருகில் சென்று யார் என்று பார்க்கலாம் என விரைந்தோம்.
அங்கே வந்திருந்தது. சிட்டி டெப்பூடி கமிஷ்னர் கணேஷ் ஆத்மஞானம்.
அவர் கொஞ்சம் வில்லங்கமான ஆள் என்று எனக்கு தெரியும். ஏற்கனவே அவருக்கும் எனது சீனியர் வக்கீல்களுக்கும் சிறு மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. அப்போதும் கணேஷ் டிஸ்பியாக இருந்தார். கோயமுத்தூருக்கு மாற்றலாகி சென்றுவிட்டார் என்பது மட்டும் தான் எனக்குத் தெரியும். சில நாட்களுக்கு முன்பு தான் சேலத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார் என்று எனது சீனியர் என்னிடம் சொன்னார்.
“இவனா. இவன் எதுக்கு இங்க வந்திருக்கான்-னு தெரியலயே”
“திவ்யா. அடுத்தது என்ன நடக்கும்-னு தெரியாது. எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருங்க” என்றார்.
எனக்கு லேசாக வியர்தது.
அப்போது.
– அடுத்தது என்ன…
(தயா-திவ்யா காதல் கதை – அத்தியாயம் – 3)
மீண்டும் சந்திப்போம்… அடுத்த அத்தியாத்தில்…
Finally Ganesh has arrived