Monday, December 23, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 02

ஒண்ணுமில்ல… பகுதி 02

முதல் பகுதியின் லிங்க்

அதற்குள் உடல் முழுவதும் தொப்பையாக நினைந்திருந்தது. எனக்கு விழிப்பு வந்துவிட்டது. திடுக்கிட்டு எழுந்துப் பார்த்தேன். சில நொடிகளுக்கு நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்கே தெரியவில்லை. சுதாரித்து எழுந்து நான் படுத்திருந்த கட்டிலின் மீது அமர்ந்தேன்.

மீண்டும் அதே கனவு. பெருமூச்சு விட்டு விட்டு, எனது எம்ஐ பேண்டில் மணியைப் பார்த்தேன். மணி காலை 5.14 என காட்டியது.

எழுந்து, பல் துளைத்து, காலைக் கடனை முடித்துவிட்டு வந்து, எனது அறையிலிருந்த சோஃபாவில் அமர்ந்தேன். அருகிலிருந்த ஒரு ஜக் தண்ணீரை எடுத்து முழுவதுமாக குடித்தேன்.

என் ஐபோனைத் தேடினேன். அது உயிரில்லாமல் என் தலையணைக்கு அருகில் கிடந்தது.

அதனை எடுத்து சார்ஜ் போட்டுவிட்டு மீண்டும் சோஃபாவில் அமர்ந்தேன். நான் தங்கியிருந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் தங்கியிருந்தது கொஞ்சம் காஸ்ட்லியான ஓட்டல் என்பதனால் வசதிகளுக்கு குறைவில்லை.

ஒரு பெரிய கட்டில், அருகிலேயே மினி பிரிட்ஜ், ஒரு மினி ஹால். அதில் எதிரெதிரே இரண்டு கருப்பு நிறத்திலான சோஃபாக்கள். நடுவிலே ஒரு டிப்பாய். பெரிய பாத்ரூம், ஹீட்டர், ஷ்வர், ஹைர் டிரையர் என சகல வசதிகளும் நிறைந்திருந்தது. இந்த அறையில் சிறப்பு அம்சம் மூட் லைட்டிங்காம். எனக்கு எனோ அதனை சோதித்துப் பார்க்கும் மூடில்லை.

ஒரு நாள் வாடகை ரூ.2299 பிளஸ் ஜிஎஸ்டி வேறு. அதுவும் ஏதோ டிஸ்கவுண்ட் சேலில் புக் செய்ததால் இந்த விலை, இல்லையென்றால், இதன் ஒரு நாள் வாடகை ரூ.5000 பிளஸ் ஜிஎஸ்டி. ஒரு வாரத்திற்கு இந்த அறை புக் செய்யப்பட்டிருந்தது.

இந்த விலைக்கு எங்கள் ஊரில் மாத வாடகைக்கு, ஒரு நல்ல வீடே பிடித்திருக்கலாம். ஆனால், மொழி தெரியாத ஊரில் இவ்வளவு காசு செலவு செய்ய வேண்டி இருந்தது.

எல்லாம் தயாவும், கோபியும் செய்த வேலை. அவர்கள் தான் வலுக்கட்டாயமாக, நான் இந்த சோலோ டிரிப் போக வேண்டும் என முடிவு செய்து, பிக்கப் அண்டு டிராப் முதல், சுற்றிப் பார்க்க கைடு வரை எல்லாவித சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தனர். நான் வேண்டாம் என எவ்வளவு சொல்லியும் அவர்கள் என்னை இந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதற்கான மொத்த செலவிற்கான காசை என் ஐடி வேலைக்கார அண்ணன் ராஜேஷிடம் வாங்கிவிட்டார்கள். அவனும் குற்ற உணர்ச்சியில் இருந்ததால், மறுப்பு எதுவும் சொல்லாமல் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்திவிட்டான். நான் கேட்டால் சல்லிக்காசு கூட கொடுக்க மாட்டான். சரி. அது வேற கதை.

கோபியும் தயாவும் என்னை அனுப்பி வைத்தார்கள் என்பதனை விட, ஒரு வாரத்திற்கு என்னை ஊரிலிருந்து  துரத்திவிட்டு அவர்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று திட்டம் போட்டு வைத்திருந்தார்கள். நான் அவர்களை சில நாட்களாகப் படுத்தியப் பாடு அப்படி. என் புராணங்களை புலம்பி புலம்பி அவர்களை ஒரு வழியாக்கிவிட்டேன்.

என்ன செய்வது. விதி என் வாழ்க்கையில், ரோகித் சர்மா மாதிரி அடித்து ஆடிக்கொண்டிருக்கிறது. விதியின் திருவிளையாடல் இன்னும் முடியவில்லை என்றே நினைக்கிறேன். இல்லையென்றால் இப்படி மொழி தெரியாத ஊரில் வந்து என்னை மாட்டிவிட்டிருக்குமா என்னை?

நேற்று மாலை கோவையிலிருந்து பிளைட்டில் ஏறி, இரவு இந்த ஊருக்கு வந்து சேர்ந்து, ஏர்போர்டில் கைடை தேடி அலைந்து, இந்த ஓட்டலுக்கு வந்து அறையில் படுக்கும்பொழுது மணி 1.00ஐ தாண்டியிருந்தது.

காலை 11 மணிக்கு வந்து என்னை பிக்கப் செய்து கொள்வதாகச் சொல்லிவிட்டு, என்னுடன் வந்த சுமார் 45 வயது மிக்க கைடு கிளம்பினார். கிளம்பும் முன் அவன் பெயர் என்ன என்று கேட்டேன். தாஸ் என்றார். அவரின் பூர்வீகமும் தமிழ்நாடு தானாம். அவரின், அப்பா காலத்தியே பஞ்சம் பிழைக்க வந்து இங்கேயே செட்டில் ஆகியிருந்தார்கள். தமிழைத் தவிர எல்லா மொழிகளையும் சரளமாக பேசுகிறார். ஏனோ அவருக்கு தமிழ் சரியாக வரவில்லை. எல்லா மொழிகளையும் கலந்து தான் தமிழில் பேசினார். எனக்கு சற்றே கோபமே வந்துவிட்டது. நான் பேசும் சில வார்த்தைகளை அவன் புரிந்துக்கொள்ள சிரமப்பட்டதால், நான் ஆங்கிலத்திலேயே அவனுடம் பேச ஆரம்பித்திருந்தேன்.

நமட்டு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு என் ஐபோனை எடுத்துப்பார்த்தேன். 28% சார்ஜ் ஆகியிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் சார்ஜ் ஏறட்டும் என்று அப்படியே வைத்துவிட்டு அறையை மீண்டும் ஒரு நோட்டம்விட்டேன்.

ஒட்டல் போன் அருகே ஒரு டேபிளில் இருந்தது. அதில் சில மெனு கார்டுகளும் இருந்தன.

என் கண்களை சில நிமிடங்கள் அதில் அலைப்பாய விட்டேன்.

எனக்கும் கொஞ்சம் பசித்த மாதிரி இருந்தது. ஏதாவது சூடாக குடிக்கலாம் என்று தோன்றியது.

சாப்பாட்டிலிருந்து சரக்கு வரை 24 மணி நேரமும் ரூமுக்கே சப்ளை செய்யப்படும் என்று அந்த மெனு கார்டுகளில் போட்டுடிருந்தது.

காபி விலையைப் பார்த்தேன். ரூ.99 பிளஸ் ஜிஎஸ்டி என்று இருந்தது. அடப்பாவிகளா காபி விலையை  கேட்டா. காபி பாக்கட் விலை சொல்றீங்களே என அலுத்துக்கொண்டேன் மனதில்.

சரி வெளியில் சென்று, காபி குடிக்கலாம் என்று ஐபோனை ஏர்-பார்டையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன், இந்த மொழி தெரியாத மும்பையில்.

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 9.00 மணிக்கு… மும்பையிலிருந்து…

பகுதி 03 லிங்க்

எழுத்து – பட்டிக்காடு

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dharma
Dharma
4 years ago

??