Monday, December 23, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 05

ஒண்ணுமில்ல… பகுதி 05

நான்காவது பகுதியின் லிங்க்

ரெட்டப்பாலத்தில் என்னை அறைந்த பின் சிறுது நேரத்திற்கு குமார் என்னிடம் எதுவுமே பேசவில்லை.

சிறிது நேரம் இருவரும் அங்கேயே அமைதியாய் எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்திருந்தோம்.

அவன் மீண்டும் ஒரு தம்மை எடுத்து பற்ற வைத்து இழுத்தான், என்னை முறைத்துக்கொண்டே.

சட்டென்று எழுந்து, வீட்டிற்குச் செல்ல வண்டியை எடுத்தான். நான் ஏதும் பேசாமல் வண்டியில் ஏறிக்கொண்டேன். ரெட்டப்பாலத்தில் நடந்ததை வீட்டில் யாரிடமும் அவன் சொல்லவில்லை. எங்கள் குழும நண்பர்கள் கோபி, தயாவிற்கு கூட அங்கு நடந்ததை தெரியாமல் பார்த்துக்கொண்டான்.

அவன் ஏதாவது வீட்டில் சொல்லியிருந்தால், இந்நேரம் என் வீட்டில் பெரிய ரணகளமே நடந்திருக்கும். நல்ல வேளையாக அவன் அப்படி ஏதும் செய்யவில்லை.

அன்றிரவு அவன், என்னுடன் என் அறையிலே படுத்துக்கொண்டான்.

எதுவும் பேசாமல் படுத்ததிலிருந்தே, அவன் என் மேல் கடும் கோபத்தில் இருக்கிறான் என்று நான் புரிந்துக்கொண்டேன்.

*************************

இங்கே நீங்கள் குமாரைப் பற்றியும், நண்பர்கள் கோபி, தயாவைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

குமார், என் பால்ய கால நண்பன். என் பக்கத்து வீட்டுக்காரப் பையன் தான் அவன்.

நாங்கள் பள்ளியிலிருந்து, கல்லூரி வரை ஒன்றாக படித்தோம். நாங்கள் இருவரும் திருச்சியில் பி.இ. சி.எஸ்.ஈ படித்தோம். என் அண்ணன் ராஜேஸும் அதே தான் படித்துவிட்டு, அப்போது இன்போஸில் நிறுவனத்தில் வேலையில் இருந்தான். இப்போது மாறி டிசிஎஸ் வந்துவிட்டான். அதனால் நாங்களும் அவனைப் பின் பற்றி பி.இ. சேர்ந்தோம். நன்றாக படித்தோம்.

ஹெச்.சி.எல். நிறுவனத்தில் எனக்கு நல்ல வேலை கிடைத்தது. குமாருக்கு கிடைக்கவில்லை. அதனால் நானும் அந்த வேலைக்கு போகவில்லை. குமார் அப்போதே என்னை வேலைக்குப் போகச் சொல்லி வற்புறுத்தினான்.

“உனக்கு நல்ல ப்ரொகிரமிங் எல்லாம் வருதுல. ஏன் நீ வேலைக்கு போகலைனு சொல்ற” என்றான்.

“எனக்கு ப்ரொகிரம்ங் நல்ல வருதுங்கிறது எல்லாம் உண்ம தான். ஆனா ஒரே எடத்துல உட்காந்து வேல பாக்குறது எல்லாம் என்னால முடியாது” என்றேன் வீராப்பாக அவனிடம்.

ஆனால் அந்த முடிவு என் காதல் வாழ்க்கையையும் பதம் பார்க்கும் என்று அப்போது எனக்கு தெரியாது. அப்போதே இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று குமார் என்னை எச்சரித்திருந்தான்.

இருந்தபோதும், நான் என் முடிவில் உறுதியாக நின்றேன். வேலை வேண்டாம், தொழில் தான் எதிர்காலம் என்று என் மனம் சொல்லியது.

சில வருடங்கள் தொழில் கற்றுக்கொண்டு, குமாருடன் சேர்ந்து எங்கள் சொந்த ஊரான இளம்பிள்ளையிலேயே ஏதாவது தொழில் துவங்கலாம் என்று ஊருக்கே வந்துவிட்டேன். குமாரின் அப்பா ஏற்கனவே தறி வைத்திருந்தார். சிலருக்கு வெளியில் ரகமும் கொடுத்து, சிறிய அளவில் தொழில் செய்து வந்தார்.

தொழில் துவங்கும் முன் எம்.பி.ஏ படிக்கலாம் என்று நான் முடிவெடுத்தேன். குமார் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து தொழில் கற்றுக் கொள்கிறேன் என்றான். அது இருவருக்கும் சரியென தோன்றியது. நான் எம்.பி.ஏ படிக்கும் போது அறிமுகமானவர்கள் தான் கோபியும், தயாவும். நாங்கள் மூவரும் ஒரே வகுப்பு. இருவரும் எங்கள் ஊர் தான்.

அதனால் எளிதில் நண்பர்கள் ஆகிவிட்டோம். என்னையும் குமாரையும் போலவே, கோபியும், தயாவும் பால்ய நண்பர்கள். அவர்கள் இருவரும் ஏற்கனவே சொந்தத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

வேறு சாதிப் பெண்ணை குமார் காதலித்து, அதனை ஊரே எதிர்த்த பொழுது, என் அப்பாவின் ஆசியோடும், கோபியின் புத்திசாலித்தனமான ஐடியாவாலும், தயாவின் ஆள் பலத்தாலும் அவன் காதலை நாங்கள் சேர்த்து வைத்தோம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு.

அதனால் எங்களுக்குள் இன்னும் நன்றாக செட்டாகிவிட்டது.

நான் தான் கடைசியாக திருமணம் செய்து கொண்டவன். அவர்கள் மூவருக்கும் காதல் திருமணம். எனக்குத் தான் காதல் செட் ஆகவேயில்லை.

எனக்கும் காதலுக்கும் அப்படி என்ன பகையோ.

அதுவும் நான் காதலில் தோற்ற பின் இவர்கள் மூவரையும் படுத்தியப்பாடு இருக்கே, அது பெரிய ரணகளம்.

இதுவே என் நண்பர்கள் குழாமின் முன் சுருக்கம்.

**************************

குமார், என் நண்பர்கள் கோபி, தயாவை உசுப்போற்றி, என்னை மும்பைக்கு பேக்-அப் செய்தான். அதுவும் நான் ஏற்கனவே சொன்னதைப் போல என் அண்ணன் செலவில்.

குமாருக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். மும்பை வேலையை என்னை வைத்து என் மனதை திசை திருப்ப செய்தான். எங்களுடய புதிய வேலைக்கு மிசின் பார்க்கும் வேலையை என் தலையில் கட்டிவிட்டான்.

இதில் நான் மும்வை வந்தக் கதை சுவாரஸ்யமானது.

அந்தக் கதை என்னவென்றால்…

ஆறாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு