எப்படியாவது கிடைத்த நேரத்தை சரியாக செலவிட வேண்டும் என்று தோன்றியது எனக்கு. ஏழு மணி நேரம் தனிமையில், அதுவும் மும்பைப் போன்ற பெரு நகரத்தில். நாளை முதல் வேலை, வேலை என்று கொஞ்சம் பிஸி ஆகிவிடுவேன். மும்பையை சுற்றிப்பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு. தனிமையில் பயணம் செய்வது தியானம் செய்வதற்குச் சமம். அப்போது நமக்கு ஒரு விதமான மன அமைதி கிடைக்கும். ஆனால் போகும் இடம் சரியில்லை என்றால், சரியான கடுப்பாகிவிடும்.
என் நண்பன், குமார், நான் தினமும் அலுவல் சம்பந்தமாக எங்கேயெல்லாம் போக வேண்டும் என்று லிஸ்ட் போட்டு அனுப்பி வைத்திருந்தான். அதன் படி தான், தாஸும் என்னை அழைத்துச் செல்லப் போகிறார் என்று தெரியும். முதல் நாளான இன்று மட்டும் ஏதாவது மாலுக்கு சென்று படம் பார்க்கவும், ஷாப்பிங் செய்யவும் நேரமிருந்தது. படம் பார்பதென்றால், நான் சேலத்திலேயே தியேட்டரிலேயே பார்த்திருப்பேனே. அதற்கு ஏன் நான் மும்பை வரைக்கும் வர வேண்டும். எனக்கு இது சரிப்பட்டு வரும் என்று தோன்றவில்லை.
(இந்த படம் நல்லாயிருக்கும்-னு நம்பி தியேட்டருக்குப் போயி, மொக்க வாங்குற மாதிரி ஆகிவிடும். பலருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும்.)
அதனால் மும்பையில் இன்று என்ன எல்லாம் நடக்கிறது என்று தெரிந்துக்கொண்டால் அதற்கு ஏற்றார் போல, என் கைடு தாஸ், வரும் வரை மும்பையை சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டம் போட்டேன்.
அதற்கு செய்தித்தாள் தான் சரியான தேர்வு. அதில் தான், இன்று மும்பையில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெளிவாகப் போட்டு இருப்பார்கள். எந்த இடத்திற்கு போகப்போகிறோம் என்று தெரிந்துக்கொள்வதைவிட, எந்த இடத்திற்குப் போகக் கூடாது என்று தெரிந்து, நம்மை பல துன்பங்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
அதனால் தான், நான் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரின் செய்தித்தாள்களை வாங்கி அந்த ஊரைப் பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்வேன். அதுவும் டீக்கடை என்றால் இன்னும் சவுகரியமாக போய்விடும். டீக்கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அந்த பகுதியின் முழு விவரத்தையும் கரந்துவிடலாம். ஆனால் மொழி தெரியாத ஊரில், எனக்கு இருந்த ஒரே வாய்ப்பு, செய்தித்தாளிலிருந்து தான் தகவல்களைத் திரட்ட வேண்டும். எல்லா தகவல்களும் செய்தித்தாள்களில் கொட்டிக்கிடக்கும். நாம் தான் நமக்குத் தோதான செய்திகளைச் சேகரிக்க வேண்டும்.
முதலில் நியூஸ் பேப்பர் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் தங்கியிருந்த மலாட் பகுதியில் எங்கே பேப்பர் வாங்குவது என்று எனக்கு தெரியவில்லை. எப்படியும் ஓட்டல் லாபியில் பேப்பர் இருக்கும் என்று எண்ணினேன். அதனால் ஓட்டல் லாபியிற்கு விரைந்தேன். ஆனால், ஓட்டலுக்குச் செல்லும் வழியிலேயே ஒரு பெரியவர் ரோட்டோரத்தில் பேப்பர் விற்றுக்கொண்டிருந்தார்.
ஹிந்தியில் எப்படி பேப்பர் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை.
அங்கே மற்றவர்கள் எப்படி பேப்பர் கேட்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று நின்றிருந்தேன். என் நேரம் அப்போது யாரும் வரவில்லை.
நான் சில நிமிடங்களாக அங்கேயே நிற்பதைப் பார்த்தவர், என்னைப் பார்த்து “கியா?” என்றார்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
பதற்றத்தில், “ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர முயன்றேன்.
(அப்பாடா ஒருவழியாக டைட்டிலைக் கதைக்குள் கொண்டுவந்துவிட்டான் என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கு கேட்கிறது)
அதற்கு அந்தப் பெரியவர்.
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு