ஒரு ஊரில் கவிதா என்ற ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரின் பணக்காரர்கள் இருக்கும் பகுதியில் தான் அவள் வீடும் இருந்தது. அவள் வீட்டிலும் செல்வத்திற்கு குறைவில்லை தான். அவளுக்கு தேவைக்கான அனைத்து வசதிகளும் அவள் வீட்டில் கிடைத்தது. அன்பாக அவளைப் பார்த்துக் கொள்ள வேலைக்கு ஆட்கள் கூட அவள் வீட்டில் இருந்தனர். ஆனாலும் எதோ ஒரு குறை. என்னவென்று சொல்ல முடியவில்லை. கவிதா அந்தப் பகுதியிலேயே மிகமிக அழகானவள். அவளைக் கொத்திக் கொண்டுப் போக பல ஜோடிக் கண்கள் அவளையும், அவள் வீட்டையும் நோட்டமிட்ட படியே இருக்கும். அவள் வெளியே வந்துவிட்டால் போதும், அவள் பின்னேயும் முன்னேயும் அவளை கவர காத்துக்கிடப்பார்கள் என்றால் பார்த்திக் கொள்ளுங்களேன். ஆனால் அவளுக்கோ கருப்பனை கவர என்ன செய்யலாம் என்ற யோசனை.
கருப்பன், அவள் வீட்டு காவல்காரனுடன் கூட அடிக்கடி வருபவன். காவல்காரன் வயதானவர் என்பதால் யாரும் கருப்பன் அவனுக்கு துணையாக வருவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கருப்பன் பார்க்க சுமாராக இருப்பான். கருப்பன் அவள் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். கவிதாவிற்கு, அவன் மேல் இருந்த ஈர்ப்பு நாள் பட நாள் பட அதிகமானது. அவனுக்கும் அவள் மேல் ஒரு இது தான், ஆனால் எஜமான் வீட்டுப் பெண்ணைப் போய் எப்படி? என்ற தயக்கத்தில் இருந்தான். அவளிடம் அவன் எதையும் வெளிக்காட்டவே இல்லை. இப்படியே போய்க் கொண்டிருந்த பொழுதில், ஒரு நாள் வீட்டில் கவிதாவை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு அவள் வீட்டினர் ஒரு திருமணத்திற்காக வெளியூர் சென்று இருந்தனர். அன்றைக்கு கடுமையான குளிரின் காரணமாக வீட்டின் வாசலிலே தான் கருப்பன் படுத்திருந்தான். வீட்டினுள் எதோ சத்தம் கேட்டு, கருப்பன் உள்ளே சென்றான். அங்கே கவிதா தனிமையில் இருக்க, இருவருக்கும் காதல் துளிர்விட்டது. அந்த துளிர், வளர்ந்து, இல்லற உறவாக மாறியது. கவிதா மனதிற்குள் இருந்த அந்த ஏதோ ஒரு குறையும் நீங்கியது. இவர்களின் காம காவியத்தை காவல்காரன் பார்க்க, அதனை அப்படியே தனது எஜமானரிடம் ஒப்பித்தான். ரொம்ப விசுவாசமானவன் போல. ஆனால் எஜமானரோ ஒன்றும் சொல்லவில்லை. அவர் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாததால் காவல்காரன், தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டான்.
அடுத்த நாள், கவிதாவிற்கு சமமாக கருப்பன் நடத்தப்பட்டான். எஜமானரே கருப்பனுக்கு விருந்தளித்தார். கவிதா கண்ணில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கேடுத்தது. தமது உறவிற்கு அங்கிகாரம் கிடைத்ததாகவே நினைத்தாள். அன்றுடன், கருப்பன் வருவது நின்றுவிட்டது. காவல்காரன், புதியவனுடன் வர ஆரம்பித்தான். கவிதாவின் வாழ்வில் அதற்குப் பிறகு நிறைவே ஏற்படவில்லை. சிலகாலம் கழித்து, ஒரு நாள் இரவில் கவிதாவிற்கு வாரிசுகள் பிறந்தன, இரண்டு ஆண் பிள்ளைகள். அப்படியே கருப்பனைப் போன்றே இருந்தனர். எஜமானர் வீட்டில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. அடுத்த நாள் காலை வந்துப் பார்த்த காவல்காரன் அப்படியே உறைந்து நின்றான்.
சேரிப் பக்கத்திலிந்து வந்த கருப்பனின் வாரிசுகள் தான் அவை என்று அவன் கண்டுகொண்டான். கவிதா, கருப்பனை தேடினாள். காவல்காரனைப் பார்த்தாள். அவன் கண்ணீருடன் கவிதா முன் குற்ற உணர்ச்சியுடன் தலைக்குனிந்து நின்றான். மனதில் அன்று விருந்தளித்த தினத்தை ஒரு நோடி நினைத்துப் பார்த்தான். சேரித் தெரு நாய், கருப்பன், மேல் வீட்டு நாய் கவிதாவுடன், உறவுக் கொண்டான் என்ற ஒரே காரணத்திற்காக எஜமானர், கருப்பனைக் கொல்ல விருந்தில் மருந்து கலந்து கொடுத்ததும், கருப்பனுக்கு கடைசி மரியாதை செய்ததும், காவல்காரனின் கண் முன்னே வந்து மறைந்தன. பெரும் தவறுக்கு துணை நின்றோமே என காவல்காரனுக்கு மூச்சடைத்தது. கண்களில் மேலும் கண்ணீர் கசிந்தது, கவிதாவைப் பார்த்தான். கவிதா, தனது குட்டிக் கருப்பன்களுக்கு பாலுட்டிக் கொண்டிருந்தாள், எஜமானரோ அவள் தலையை கோதிவிட்டுக் கொண்டே இரு குட்டி நாய்களுக்கு ஆயிரங்களில் விலைப் பேசிக் கொண்டிருந்தார். தன் குட்டிகள் விலைப் பேசப்படுவது தெரியாத கவிதாவின் கண்களிலும் கருப்பனை நினைத்து கண்ணீர் கசிந்திருந்தது.