இனி மும்பையை சுற்றிப் பார்க்க கிளம்ப வேண்டியது தான் என்ற சந்தோஷத்தில் அவசர அவசரமாக ஓட்டலுக்கு வந்து, உடை மாற்றிக் கொண்டு, ஓட்டல் பஃபேவில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன்.
கிளம்பும் முன் மணியைப் பார்த்தேன், மணி 8.00 என்று காட்டியது.
“முதலில் லோக்கல் டிரைன்ல போயி பழகிக்கோங்க. அப்ப தான் மும்பை உங்களுக்கு ஈஸியா இருக்கும்” என்று அந்த பெரியவர் ராமசாமி சொன்னது நினைவிற்கு வந்தது.
நேராக மலாட் கிழக்கு புறநகர் ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அந்த ரயிலின் கடைசி நிறுத்தமான சர்ச்கேட் ரயில் நிலையத்திற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டேன். டிக்கெட் எடுக்கவே கால் மணி நேரமானது. அவ்வளவு கூட்டம். எங்க ஊரின் மொத்த மக்கள் தொகையைப் போல இரண்டு மடங்கு மக்களாவது அந்த புறநகர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தனர். எனக்கு பிரம்பிப்பாக இருந்தது.
பூளு டாப்ஸ். வைட் லேக்கின் போட்டுக் கொண்டு என் பின்னால் டிக்கெட் எடுக்க நின்றிருந்த பெண்ணிடம் சர்ச்கேட் ரயில் நிலைத்திற்குச் செல்ல எந்த பிளாட்பாரத்தில் இரயில் ஏற வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவளும் போனில் யாருடனோ இந்தியில் பேசிக் கொண்டே என்னிடம் சைகை மொழியில் 3ஆவது பிளாட்பார்மில் ஏறுமாறு சொன்னாள்.
நானும் அதற்கு ஏற்றார் போல அந்த பிளாட்பாரத்திற்கு போவதற்கு முக்கிய வழியை அடைந்தது மட்டும் தான் நானாக செய்தது. அலேக்காக என்னைக் தள்ளிக் கொண்டு மூன்றாவது பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டனர். அவ்வளவு கூட்டம்.
எல்லா பிளாட்பாரங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டமிருந்தது. இந்த மாதிரி கூட்டமொல்லாம் எங்கள் ஊரு வெள்ளி சந்தையில் மட்டுமே நான் பார்த்திருக்கேன். ரயிலுக்கே இவ்வளவு கூட்டமென்றால், மும்பை எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று பிரம்மிப்பு அடைந்தேன்.
இரயில் வந்தது.
நமக்கு தான் இன்னும் நேரம் இருக்கிறதே. அடுத்த வண்டியில் பயணித்துக் கொள்ளலாம் என்று சற்று ஒதுங்கி நிற்க முயற்சி செய்தேன்.
விட்டார்களா?
அலேக்காக என்னையும் இரயிலுக்குள் கொண்டு வந்திவிட்டார்கள் இந்த மும்பை வாசிகள்.
இரயில் சரியாக ஒரே நிமிடத்தில் கிளம்பியது. அதற்குத் தான் இவ்வளவு விரைவாக மக்கள் இரயிலில் ஏறுகிறார்கள் என்று யூகித்துக்கொண்டேன்.
என் ரயில் பெட்டியில் இருக்கும் சுற்றிப் பார்த்தேன். எங்கேயும் அமர இடமில்லை. நிற்கக்கூட இடமில்லை. அவ்வளவு நெருக்கடி.
கோட் சூட் போட்ட ஆசாமி முதல் பள்ளிக் கல்லூரி செல்லும் மாணவர்கள் வரை அந்த இரயில் பெட்டியே கலகல என்று இருந்தது.
சிலர் புத்தகம் படித்தனர். சிலர் மொபைலில் சிரியல் பார்த்துக்கொண்டிருதனர். சிலர் யாருடனாவது போனில் பேசிக்கொண்டிருந்தனர். வெகு சிலரே அருகில் இருந்த நபரிடம் பேசிக் கொண்டு வந்தனர்.
அப்போது தான் முதன் முதலாக அவளைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். என் முன்னாள் கல்லூரிக்கால காதலி திவ்யா போலவே இருந்தாள். அதனால் தான் அவளையே பார்த்தேன். திவ்யா தான் கல்யாணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாளே என்று நினைத்துக் கொண்டேன். அவளை நினைத்தாலே ஏனோ எனக்கு கண் கலங்கிவிடுகிறது. முதல் காதல். அதுவும் ஏழு வருடக்காதல். நான் எடுக்க முடியாத சில முடிவுகளாலும், நான் எடுத்த சில தவறான முடிவுகளாலும் அந்தக் காதல் கைக்கூடாமல் போனது. அதனை நினைத்து நான் கலங்காத நாளில்லை. மீண்டும் இதனை சரி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், எப்படியாவது எல்லா கருத்து வேறுபாடுகளையும் சரி செய்து என் திவ்யாவையே திருமணம் செய்துக்கொள்வேன். இனி நடக்க வாய்ப்பில்லை.
முடிந்ததை நினைத்து என்ன பயன் என்று என் மனதிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே அவளைத் தேடினேன் என் கண்களால். கூலர்ஸ் போட்டிருந்தாள். பச்சை நிற சல்வாரும் அதற்கு ஏற்ற கலரில் லெக்கின்னும் அணிந்திருந்தாள். கொஞ்சம் குண்டாக அழகாக இருந்தாள், கையில் சின்ன வேலட் வைத்திருந்தாள். பிரபல ஐடி கம்பெனி ஒன்றின் ஐடி கார்டை கழுத்தில் அணிந்திருந்தாள். ஆனால் அவள் தூரத்தில் இருந்ததால் அவளின் பெயரை மட்டும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
( இன்னும் நாயகன் பெயரே சொல்லவில்லை. அதற்குள் நாயகியின் பெயரை சொல்லிவிடுவேனா என்ன? வாய்ப்பு இல்ல ராசா )
என்னைப் போலவே இரயில் பெட்டியில் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு சும்மா நின்றுக்கொண்டிருந்த ஒரே பெண் அவள் தான்.
(அப்பாடா ஒரு வழியா கதையின் நாயகி கேரக்டரை அறிமுகப் படுத்துகிறான் என்று நினைத்து ஏமாந்துவிடாதீர்கள். அதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. நாயகனும் நாயகியும் முதன் முதலாக பேசிக் கொள்ளும் அந்த பகுதியை எழுத ஒரு நல்ல நாள் பார்த்து வைத்திருக்கிறேன். அதற்குள் இன்னும் நிறைய சம்பவங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது)
ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கூட்டம் ஏறிக்கொண்டேயிருந்தது. சில ரயில் நிறுத்தங்களில் இறங்குபவர்கள் அதிகம் இருந்தனர். அந்த இடங்கள் எல்லாம் அலுவலகங்கள் நிறைந்திருக்கும் முக்கிய இடங்கள் என தெரிந்துக்கொண்டேன்.
நான் கவனித்தது முக்கியமான அம்சம் என்னவென்றால், எல்லா பெண்களும் ஏன் மிகையாக மேக்கப் போட்டு இருந்தார்கள் என்பதே.
அவளைத் தவிர. ( நாயகி பாஸ் எப்படி விட்டுக் கொடுக்க முடியும்.)
மீண்டும் ஒரு ரயில் நிலையத்தில் இரயில் நின்றது. நான் அவளைப் பார்க்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அந்த ரயில் நிலையத்திலேயே அவள் இறங்கினாள்.
நானும் அங்கேயே இறங்கிவிடலாம் என்று யோசித்து முடிப்பதற்குள்…
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு