இன்றும் அதே கனவு… எழுந்து மணி பார்த்தேன். காலை 7.45 ஆகியிருந்தது. ஐயோ, நெடு நேரம் தூங்கிவிட்டேன் போல, என்று எழுந்து குளித்து ரெடியாகிவிட்டேன்.
நான் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண். பிறந்து வளர்ந்தது, படிப்பு என எல்லாமே மும்பையில். மும்பையைத் தவிர நான் வேறு எந்த ஊருக்கும் போனதுக் கூட கிடையாது. நன்றாக படித்து இப்போது ஒரு ஐடி கம்பெனியில் சீனியர் சிஸ்டெம்ஸ் இஞ்சினியராக உள்ளேன். நல்ல சம்பளம். இப்போது தான் வயது 24 ஆகிறது ஆனால் அதற்குள் சில முறை தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்து முயற்சித்துப் பார்த்துவிட்டேன். ஆனால் எனோ என்னால் சாக அளவிற்குப் போக முடியவில்லை. கடைசி நொடியில் கூட தற்கொலை எண்ணத்திலிருந்து வெளியாகி இருந்திருக்கிறேன்.
நேற்று இரவு. எவ்வளவு நேரம் அழுதிருப்பேன் என்று கூட எனக்குத் தெரியாது. நான் அழுததில் என் தலையணையே நினைந்திருந்தது. அப்படியே துங்கிவிட்டேன் போல.
அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் கல்யாணம் ஆவதைப் போல மீண்டும் மீண்டும் எனக்கு கனவு வருகிறது. அந்தக் கனவே தினமும் காலையில் என்னை எழுப்பிவிடுகிறது.
என்னை அவ்வளவு நேசித்துவிட்டு, எப்படி அவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முடியும் என்ற கேள்விக்கு, எனக்கு பதிலே இல்லாததால் தான் எனக்கு விழிப்பு வருகிறது.
நான் சொல்லிக்கொண்டிருப்பது ராபினைப் பற்றி. என் முன்னாள் காதலன். நானும் அவனும் இரண்டு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்துள்ளோம், ஒரே வீட்டில், கணவன் மனைவியாய், திருமணம் செய்து கொள்ளாமலேயே.
என் பெற்றோரின் திருமணத் தோல்விக்குப் பின் எனக்கு திருமணத்தில் நாட்டமேயில்லை. ஆனானும் ஏன் அவனைப் பிடித்திருந்தது. ஏன் அவன் பின்னால் போனேன். ஏன் அவனுக்காக ஏங்குகிறேன் என்று இன்னுமும் என்னால் என்னையே புரிந்துக்கொள்ள முடியவில்லை.
நானும் அவனும் எதிர் எதிர் ஆபிஸ். அவ்வப்போது பொது கேண்டினில் பார்த்துப் பேசியதுண்டு. எப்படி எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது என்றே தெரியவில்லை. மூன்றே மாதத்தில் அவன் என்னிடம் பிரபோஸ் பண்ணினான். நான் உடனே ஏற்றுக்கொண்டேன். அடுத்த சில வாரங்களில் லிவ்விங் டூகேதர் என்று அவன் வீட்டிற்கு நான் குடியேறினேன். அன்றில் இருந்து துவங்கிய எங்களது காதல் பயணம் முடிந்து இன்னுடன் சரியாக முப்பது நாட்களாகிறது. அன்றே அவன் வீட்டிலிருந்து என்னை வெளியேற்றிவிட்டான்.
நான் நடு ரோட்டில் நின்றிருந்தேன்.
என் தோழி சோபனாவின் ஏற்பாட்டில் இப்போது இந்த மும்பையில் கோரேகான் பகுதியிலுள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறேன். இன்னும் சில நாட்கள் தான் இங்கு. பிறகு என் சொந்த இடத்திற்குச் செல்லப்போகிறேன்.
எனக்கு இப்போது கொஞ்சம் தனிமை தேவைப்படுகிறது.
காதல் என்பது இரு பக்கமும் கூர்மையாக உள்ள கத்தி. அதனை சரியாக கையாளவில்லை என்றால், அது நம்மையும் பதம் பார்த்துவிடும். உலகத்தில் எல்லா காதலும் வெற்றியடைவதில்லை. பெரும்பாலான காதல்கள் தோல்வியிலேயே முடிகிறது. அதனால் தான் என்னவோ உலகின் மிகச்சிறந்த காதல் கதைகள் எல்லாம் சோகக் கதைகளாகவே முடிகின்றது. என்னுடையதும் ஒரு சோகக்கதை தான்.
என் கதை என்னவொன்று பார்க்கும் முன்…
பன்னிரொண்டாவது பகுதியின் லிங்க்
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு