Monday, December 23, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 10

ஒண்ணுமில்ல… பகுதி 10

ஒன்பதாவது பகுதியின் லிங்க்

மீண்டும் ஒரு ரயில் நிலையத்தில் இரயில் நின்றது. நான் அவளைப் பார்க்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அந்த ரயில் நிலையத்திலே அவள் இறங்கினாள்.

நானும் அங்கேயே இறங்கிவிடலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் இரயில் கிளம்பியது. நானும் அவளையே பார்த்துக்கொண்டிந்தேன். இரயிலை விட்டு கீழே இறங்கிய பின், கூட்டத்தில் வந்ததால் களைந்திருந்த தன் உடையை சரி செய்துக் கொண்டாள். நான் அவளைப் பார்க்கிறேனா என்று மீண்டும் ஒரு முறை என்னைத் திரும்பிப் பார்த்து தேடினாள். அவள் என்னைத் தேடுகிறாள் என்று தெரிந்தது எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சி தான். ஆனால் அதனை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அவளுக்கு வந்த போன் அழைப்பை எடுத்துப் பேசிக் கொண்டிருந்தாள். இரயில் வேகமெடுத்தது. அவள் எனக்கு தூரமாகிக் கொண்டே வந்தாள். ஒரு கட்டத்தில் அவள் வெகு தொலைவில் மறைந்தே போனாள். அவளைப் பார்த்தவுடன் என் மனதில் ஏதோ தோன்றியது. ஆனால், என்னவென்று சரியாகச் சொல்ல முடியவில்லை.

கடைசி இரயில் நிலையம் வர வர கூட்டம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வந்தது. எனக்கும் அந்தப் பெட்டியில் ஒரு சீட் கிடைத்தது. சீட் கிடைத்த பத்தாவது நிமிடத்தில் கடைசி இரயில் நிலையமான சர்ச் கேட் இரயில் நிலையம் வந்து சேர்ந்தது. நாங்கள் இறங்குவதற்குள் அந்த இரயிலில் ஏற கூட்டம் தயாராக இருந்தது. நான் கடைசியாகத் தான் அந்த பெட்டியை விட்டு இறங்கினேன்.

இறங்கிப் பார்த்தால், இரயில் நிலையம் பிரம்மாண்டமாக இருந்தது. கூட்டம் இன்னும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. மணி 8.45ஐ நெருங்கியதால், அலுவலகம் செல்ல முண்டியடித்துக்கொண்டு இரயில் ஏற மக்கள் காத்திருந்தனர். எனக்கு அந்த இடம் எங்கள் ஊர் திருவிழாவை நியாபகப்படுத்தியது.

நிறைய பிளாட்பாரங்கள் இருந்தன. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தூரத்தில் வெளியே போகும் வழி தெரிந்தது. அதனை நோக்கில் மெல்ல நடக்க ஆரம்பித்தேன். கூட்டம் கட்டுக் கடங்காமல் இருந்தது. எப்படியோ வெளியில் வருவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. நான் அந்த இரயில் நிலையத்திற்குள்ளும், வெளியேவும் நிறைய செல்பிகளும், புகைப்படங்களும் எடுத்துக்கொண்டேன்.

சிறுது தூரத்தில் நடந்து சென்றேன். அங்கே ஒரு ரோட் சிக்னல் இருந்தது. அதில் எல்லா பக்கங்களிலும் வண்டிகள் நின்று முன் செல்ல சிக்னலுக்காக காத்திருந்தன. நான் அப்போது தான் முதன் முதலாக மும்பையின் டிராபிக் நிலையை கண்ணில் கண்டேன். இன்ச் பை இன்சாக டிராபிக் நகர்ந்துக்கொண்டிருந்தது. சாலையைக் கடக்க நான் பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது.

எனக்கு ரொம்பவும் தாகமாக இருந்ததால், சில்லென்று என்று ஒரு பாட்டில் மினரல் வாட்டர் வாங்கிக் குடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஏப்ரல் மாத சூரியனின் வெப்பம் அதிகரித்துக்கொண்டிருந்தது. அங்கே இருந்த ஒரு பெட்டிக் கடையில் இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு, குளுமையான ஒரு பாட்டிலை எடுத்துக்கொண்டேன். அந்தக் கடைக்காரன் எனக்கு மீதி ஒரு ரூபாயைக் கொடுத்தார். நான் ஆச்சரியமாகப் பார்த்தேன். பாட்டிலின் விலை பத்தொன்பது ரூபாய் என்று பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்தது.

நான் மனதில் நினைத்துக் கொண்டேன், “அடேய், இதே எங்க ஊரா இருந்துச்சினா இந்நேரம் கூலிங் சார்ஜ் என்று சொல்லி இன்னும் இரண்டு ரூபாய் அதிகம் கரந்து இருப்பார்களே” என்று.

(நாயகன் இனி மும்பையை மெல்ல சுற்றிப் பார்த்துவிட்டு வரட்டும், அதற்குள் நாம் நாயகியின் கதையைக் என்னவென்று பார்ப்போம்)

பதினொறாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு