Tuesday, December 24, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல – முதல் அத்தியாயம்…

ஒண்ணுமில்ல – முதல் அத்தியாயம்…

“நான் எங்கயாவது போறான். என்ன கொஞ்ச தனியா விடுங்கமா” என்று அம்மாவிடம் கத்திவிட்டு எனது சிவப்பு யமஹா ஆர்.எக்ஸ் 135ஐ எடுத்துக்கொண்டு ரெட்டப்பாலத்திற்கு செல்ல நினைத்தேன்.

அதற்குள், “ராஜேஸ். உன் தம்பி எங்கேயே வண்டி எடுத்துட்டுப்போறான் பாருடா” என்று அம்மா அண்ணனை அழைத்தாள்.

அதற்குள் நான் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தேன்.

நேற்றும், இன்றும் என் வீட்டில் நடந்த களபேரங்களால் நான் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது இந்த இரண்டு நாட்கள். எனக்கு தனிமை தேவைப்பட்டது. என் நண்பர்களையும் இந்த நேரத்தில் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. அதனால் தான் தனியே சென்றேன்.

நான் அந்த இடத்திற்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தான், ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் அந்த தண்டவாளத்தைத் தாண்டி சென்றிருந்தது. தூரத்தில் நான் வந்துக்கொண்டு இருந்தபோது தான் அந்த ரயில் ரெட்டப்பாலத்தைக் கடந்தது. அடுத்த ரயில் வருவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது.

நட்ட நடு இராத்திரியில் வீட்டைவிட்டு கோவித்துக்கொண்டு வந்துவிட்டேன். என் வாழ்க்கையே இருண்டு போனது மாதிரி எனக்கு தோன்றியது. எங்கயாவது தனியாக கொஞ்ச நேரம் போய் இருக்கலாம் என்று ரெட்டப்பாலத்திற்கு வந்தேன்.

என் நண்பர்கள் குமார், தயா மற்றும் கோபியுடன் அடிக்கடி வந்து இந்தப் பாலத்திற்கு வந்திருக்கிறேன். என் சொந்த ஊரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இந்தப்பாலம் இருக்கிறது. மாலையில் நேரங்களில் இந்த ரெட்டப்பாலத்தில் அமர்ந்து ஏதாவது ஊர் நியாயம் பேசிக்கொண்டிருப்பது எங்களுக்கு பெரும் பொழுதுபோக்கு.

நாங்கள், ஆளுக்கு ஒரு தொழில் செய்து வந்தாலும், எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு மாலை 7 மணிக்கு எல்லாம் இங்கே வந்து சேர்ந்திடுவோம். தயா தான், எங்களை எப்போதும், ஒருங்கிணைப்பான். யாராவது ஒருவர் வரவில்லை என்றாலும் அந்த சந்திப்பு அன்றைக்கு ரத்தாகிவிடும். சுவரஸ்யமான விசயங்களைப் பேசும் போது இரவு 11-12 வரைக்கூட அங்கே அமர்ந்துப் பேசிக்கொண்டிருப்போம்.

அமைதியான அந்த இரவு சற்றே எனக்கு ஆறுதலாக இருந்தது. எனக்கு சற்றே களைப்பாக இருந்ததால், ஆள் நடமாட்டமில்லாத இந்த நேரத்தில் இந்த இரயில் தண்டவளத்தில் தலைவைத்துப் படுத்திருந்தேன். படுத்த சில நிமிடங்களில் நான் தூங்கியிருந்தேன்.

ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தூரத்தில் ஒரு ரயில் வரும் ஓசைக் கேட்டது. ரயில் இஞ்சினின் ஒளி சன்னமாய் தெரிந்தது.

இரயில் வருவதற்குள் எழ முயற்சி செய்தேன். எவ்வளவு முயன்றும் என்னால் எழ முடியவில்லை. ரயில் என்னருகில் வந்துவிட்டது. இன்னும் சில நூறு அடிகள் தான். அதற்குள் எழுந்தாக வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்தேன். ஏனோ என்னால் எழ முடியவில்லை.

எழ முடியவில்லையா? எழ விரும்பவில்லையா? என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது.

ரயில் டிரைவர் ஹாரன் அடிக்கும் சத்தும் என் காதுக்கு கேட்டது. மீண்டும் எழ முயற்சி செய்தேன்.

முடியவில்லை.

யாரும் என்னைக் கட்டிப்போட்டு இருக்கவுமில்லை. எவ்வளவு முயன்றும் என்னால் எழ முடியவில்லை.

அதற்குள் ரயில் என்னருகில் வந்துவிட்டது. இன்னும் சில நொடிகள் தான். மீண்டுமொரு முறை முயன்றுப் பார்த்தேன். முடியவில்லை. இனி அவ்வளது தான் என நினைப்பதற்குள்…

இரயில் என் மீது ஏறி என் உடலும் தலையும் தனித்தனியாகத் துண்டானது…

அதற்குள்…

அதற்குள் உடல் முழுவதும் தொப்பையாக நினைந்திருந்தது. எனக்கு விழிப்பு வந்துவிட்டது. திடுக்கிட்டு எழுந்துப் பார்த்தேன். சில நொடிகளுக்கு நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்கே தெரியவில்லை. சுதாரித்து எழுந்து நான் படுத்திருந்த கட்டிலின் மீது அமர்ந்தேன்.

மீண்டும் அதே கனவு. பெருமூச்சு விட்டு விட்டு, எனது எம்ஐ பேண்டில் மணியைப் பார்த்தேன். மணி காலை 5.14 என காட்டியது.

எழுந்து, பல் துளைக்கி, காலைக் கடனை முடித்துவிட்டு வந்து, எனது அறையிலிருந்த சோஃபாவில் அமர்ந்தேன். அருகிலிருந்த ஒரு ஜக் தண்ணீரை எடுத்து முழுவதுமாக குடித்தேன்.

என் ஐபோனைத் தேடினேன். அது உயிரில்லாமல் என் தலையணைக்கு அருகில் கிடந்தது.

அதனை எடுத்து சார்ஜ் போட்டுவிட்டு மீண்டும் சோஃபாவில் அமர்ந்தேன். நான் தங்கியிருந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் தங்கியிருந்தது கொஞ்சம் காஸ்ட்லியான ஓட்டல் என்பதனால் வசதிகளுக்கு குறைவில்லை.

ஒரு பெரிய கட்டில், அருகிலேயே மினி பிரிட்ஜ், ஒரு மினி ஹால். அதில் எதிரெதிரே இரண்டு கருப்பு நிறத்திலான சோஃபாக்கள். நடுவிலே ஒரு டிப்பாய். பெரிய பாத்ரூம், ஹீட்டர், ஷ்வர், ஹைர் டிரையர் என சகல வசதிகளும் நிறைந்திருந்தது. இந்த அறையில் சிறப்பு அம்சம் மூட் லைட்டிங்காம். எனக்கு எனோ அதனை சோதித்துப் பார்க்கும் மூடில்லை.

ஒரு நாள் வாடகை ரூ.2299 பிளஸ் ஜிஎஸ்டி வேறு. அதுவும் ஏதோ டிஸ்கவுண்ட் சேலில் புக் செய்ததால் இந்த விலை, இல்லையென்றால், இதன் ஒரு நாள் வாடகை ரூ.5000 பிளஸ் ஜிஎஸ்டி. ஒரு வாரத்திற்கு இந்த அறை புக் செய்யப்பட்டிருந்தது.

இந்த விலைக்கு எங்கள் ஊரில் மாத வாடகைக்கு, ஒரு நல்ல வீடே பிடித்திருக்கலாம். ஆனால், மொழி தெரியாத ஊரில் இவ்வளவு காசு செலவு செய்ய வேண்டி இருந்தது.

எல்லாம் தயாவும், கோபியும் செய்த வேலை. அவர்கள் தான் வலுக்கட்டாயமாக, நான் இந்த சோலோ டிரிப் போக வேண்டும் என முடிவு செய்து, பிக்கப் அண்டு டிராப் முதல், சுற்றிப் பார்க்க கைடு வரை எல்லாவித சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தனர். நான் வேண்டாம் என எவ்வளவு சொல்லியும் அவர்கள் என்னை இந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதற்கான மொத்த செலவிற்கான காசை என் ஐடி வேலைக்கார அண்ணன் ராஜேஷிடம் வாங்கிவிட்டார்கள். அவனும் குற்ற உணர்ச்சியில் இருந்ததால், மறுப்பு எதுவும் சொல்லாமல் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்திவிட்டான். நான் கேட்டால் சல்லிக்காசு கூட கொடுக்க மாட்டான். சரி. அது வேற கதை.

கோபியும் தயாவும் என்னை அனுப்பி வைத்தார்கள் என்பதனை விட, ஒரு வாரத்திற்கு என்னை ஊரிலிருந்து  துரத்திவிட்டு அவர்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று திட்டம் போட்டு வைத்திருந்தார்கள். நான் அவர்களை சில நாட்களாகப் படுத்தியப் பாடு அப்படி. என் புராணங்களை புலம்பி புலம்பி அவர்களை ஒரு வழியாக்கிவிட்டேன்.

என்ன செய்வது. விதி என் வாழ்க்கையில், ரோகித் சர்மா மாதிரி அடித்து ஆடிக்கொண்டிருக்கிறது. விதியின் திருவிளையாடல் இன்னும் முடியவில்லை என்றே நினைக்கிறேன். இல்லையென்றால் இப்படி மொழி தெரியாத ஊரில் வந்து என்னை மாட்டிவிட்டிருக்குமா என்னை?

நேற்று மாலை கோவையிலிருந்து பிளைட்டில் ஏறி, இரவு இந்த ஊருக்கு வந்து சேர்ந்து, ஏர்போர்டில் கைடை தேடி அலைந்து, இந்த ஓட்டலுக்கு வந்து அறையில் படுக்கும்பொழுது மணி 1.00ஐ தாண்டியிருந்தது.

காலை 11 மணிக்கு வந்து என்னை பிக்கப் செய்து கொள்வதாகச் சொல்லிவிட்டு, என்னுடன் வந்த சுமார் 45 வயது மிக்க கைடு கிளம்பினார். கிளம்பும் முன் அவன் பெயர் என்ன என்று கேட்டேன். தாஸ் என்றார். அவரின் பூர்வீகமும் தமிழ்நாடு தானாம். அவரின், அப்பா காலத்தியே பஞ்சம் பிழைக்க வந்து இங்கேயே செட்டில் ஆகியிருந்தார்கள். தமிழைத் தவிர எல்லா மொழிகளையும் சரளமாக பேசுகிறார். ஏனோ அவருக்கு தமிழ் சரியாக வரவில்லை. எல்லா மொழிகளையும் கலந்து தான் தமிழில் பேசினார். எனக்கு சற்றே கோபமே வந்துவிட்டது. நான் பேசும் சில வார்த்தைகளை அவன் புரிந்துக்கொள்ள சிரமப்பட்டதால், நான் ஆங்கிலத்திலேயே அவனுடம் பேச ஆரம்பித்திருந்தேன்.

நமட்டு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு என் ஐபோனை எடுத்துப்பார்த்தேன். 28% சார்ஜ் ஆகியிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் சார்ஜ் ஏறட்டும் என்று அப்படியே வைத்துவிட்டு அறையை மீண்டும் ஒரு நோட்டம்விட்டேன்.

ஒட்டல் போன் அருகே ஒரு டேபிளில் இருந்தது. அதில் சில மெனு கார்டுகளும் இருந்தன.

என் கண்களை சில நிமிடங்கள் அதில் அலைப்பாய விட்டேன்.

எனக்கும் கொஞ்சம் பசித்த மாதிரி இருந்தது. ஏதாவது சூடாக குடிக்கலாம் என்று தோன்றியது.

சாப்பாட்டிலிருந்து சரக்கு வரை 24 மணி நேரமும் ரூமுக்கே சப்ளை செய்யப்படும் என்று அந்த மெனு கார்டுகளில் போட்டுடிருந்தது.

காபி விலையைப் பார்த்தேன். ரூ.99 பிளஸ் ஜிஎஸ்டி என்று இருந்தது. அடப்பாவிகளா காபி விலையை  கேட்டா. காபி பாக்கட் விலை சொல்றீங்களே என அலுத்துக்கொண்டேன் மனதில்.

சரி வெளியில் சென்று, காபி குடிக்கலாம் என்று ஐபோனை ஏர்-பார்டையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன், இந்த மொழி தெரியாத மும்பையில்.

சரி வெளியில் சென்று, காபி குடிக்கலாம் என்று ஐபோனை ஏர்-பார்டையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன், மராத்தி-இந்தி மொழி தெரியாத மும்பையில்.

ஏர்-பார்டை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு, ஏ.ஆர். ரகுமான் இசையில், என் மனதிற்கு பிடித்த, “ஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதல் நான் தான் என்று” என்ற பாடலை ஒலிக்க விட்டு அறையை சாத்திவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.

நான் தங்கியிருந்தது மலாட் கிழக்கு புறநகர் இரயில் நிலையத்திற்கு அருகில்.

இந்தத் தெருவில் ஏதுவும் குடிக்க வேண்டாம், இரயில் நிலையம் இருக்கும் தெருவிற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து அதனை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தேன்.

அதற்குள் அந்த பாடல் முடிந்து, இளையராஜாவின் இசையில், “சாய்ந்து சாய்ந்து” என்ற பாடல் ஒலிக்கத் துவங்கியது.

ரோடு கார்னரில் ஒரு பெரிய பேக்கரி இருந்தது. அங்கே அமர்ந்து காபி குடிக்கலாம் என்று கடையினுள்ளே சென்றேன்.

வீராப்பாக வந்துவிட்டேன். வந்து கடையில் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை.

டீ என்றால்,“பையா… ஏக் சாய்” என்று ஸ்டைலாகச் சொல்லிவிடலாம்.

காபிக்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை.

மஹாராஸ்டிராவில் மாராத்தி மட்டும் தான் பேசுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், இங்கே இந்தி பேசுபவர்களே அதிகமிருந்தார்கள். பெரும்பாலும் பீகார், யுபி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களாகவே இருந்தனர்.

சூரியன் ஒளி வீசத் துவங்கியிருந்தது.

எப்படியே ஒரு வழியாக காபி ஒன்றை ஆடர் சொல்லி ஒரு கார்னர் சீட் தேடிச் சென்று அமர்ந்தேன்.

காபி வருவதற்குள் நான் ஆழ்ந்த யோசனையில் முழ்கியிருந்தேன்.

ஏன் மும்பை வந்தோம் என்று தான் முதலில் யோசித்தேன்.

ஏ.ஆர். ரகுமானின் “தள்ளிப்போகாதே” பாடல் என் காதில் ஒலித்துக் கொண்டிருப்பதைக் கூட நான் ரசிக்க முடியாமல் வெறுமையாய் இருந்தேன்.

ரெட்டப்பால ரயில் கனவு வெறும் கனவு மட்டுமல்ல.

உண்மையிலேயே, நான் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலைச் செய்துக்கொள்ள படுத்திருந்தேன். அன்று குமார், மட்டும் கூட வரவில்லை என்றால், அன்றே நான் இறந்திருப்பேன்.

ஊரைக்கூட்டி, ஆசை ஆசையாய் திருமணம் செய்தால், அந்த திருமணம் ஒரு இரவுக்கூட நீடிக்கவில்லை என்றால் என்ன செய்வது. இரண்டாவது நாள் இரவில் எங்களுக்கும் பெண் வீட்டாருக்கும் பெரும் ரகளையே வந்துவிட்டது.

ஊரே, எங்கள் வீட்டின் முன் தான் திரண்டு இருந்தார்கள்.

பல்லுப்போன கிழவன், கிழவி முதல், கையில் துள்ளி விளையாடும் நண்டு சிண்டு வரை அன்றைக்கு எங்கள் வீட்டு முன் தான்.

டீவி சீரியல்களை விட எங்கள் வீட்டு கதை தான் ஊரெல்லாம்.

பஞ்சாயத்து கூடியது.

எங்கள் வீட்டு சார்பாக பேச பெரும் படையே நின்றிருந்தது.

ஆனால், பெண் வீட்டு சார்பாக பேச, என் மாமனார் மட்டுமே வந்திருந்தார்.

எங்கள் வீட்டு சார்பாக ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். என் அண்ணனியின் சொந்தக்காரப் பெண்ணைத் தான் எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தனர்.

என் அண்ணன் என்ன செய்வது எனறு தெரியாமல் அமைதியாக இருந்தான்.

அப்போது தான் நான் மாடியிலிருந்து கீழே பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு வந்தேன்.

எல்லோரும் பேசி முடித்தவுடன், என் மாமனார் பேசினார்.

“என் பொண்ணு தப்பு செஞ்சிட்டா. அதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுகிடறேன். பஞ்சாயத்து என்ன சொன்னாலும் நான் கட்டுப்படறேன்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

யாரும் எதிர்பார்பதற்கு முன், என் மாமனார் ஊராரின் காலில் விழப்போனார்.

நான் சட்டென்று அவரை தடுத்து நிறுத்தி, “வேண்டாம் மாமா. வாங்க உங்க வீட்டுல நான் வந்து விடறேன்” என்று சொல்லி வலுக்கட்டாயமாக அவரை அழைத்துக்கொண்டு அவர் வண்டியை நான் எடுத்து அவரை அவர் வீட்டில் விட கிளம்பினேன்.

ஊரே என்னை விசித்திரமாகப் பார்த்தது. கொஞ்சம் சலசலப்புகள் எழுந்து அடங்கியது.

குமாரும் என்னுடைய காரை எடுத்துக்கொண்டு என்னை பின் தொடர்ந்தான்.

அவரை வீட்டில் விட்டு கிளம்பி வரும் வழியில் தான் அந்த ரெட்டப்பால சம்பவம் நடந்தது.

குமார் தம் அடிப்பதற்காக அங்கே வண்டியை நிறுத்தினான். எனக்கு நிக்கோடின் வாசம் ஒத்துவராது என்பதனால் அவன் கொஞ்சம் தள்ளி நின்னு தம்மடிக்கச் சென்றான்.

அப்போது தூரத்தில் ரயில் வருவது தெரிந்தது. நான் தண்டவாளத்தை நோக்கி நடந்து, தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருந்தேன்.

தம்மடிக்கும் முசுவில் என்னை குமார் கவனிக்கவில்லை.

இரயில் கிட்ட வந்த பின்பு தான் அவன் என்னை கவனித்தான்.

இன்னும் சில நொடிகள் தான் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைத்திருந்தேன்.

அதற்குள் குமார் ஓடி வந்து, அவன் உயிரையும் பணையம் வைத்து என்னை பிடித்து இழுத்து ஓரமாகத் தள்ளினான். இரயில் எங்களை கடந்துச் சென்றது.

இருவரும் பெருமூச்சு விட்டோம்.

எழுந்ததும் இரண்டு அறைவிட்டான்.

மீண்டும் ஒரு தம்மை எடுத்துப் பற்ற வைத்தான்.

அதற்குள்…

“பையா காபி” என்று சர்வர் என் யோசனையை கலைத்தான்.

ரெட்டப்பாலத்தில் என்னை அறைந்த பின் சிறுது நேரத்திற்கு குமார் என்னிடம் எதுவுமே பேசவில்லை.

சிறிது நேரம் இருவரும் அங்கேயே அமைதியாய் எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்திருந்தோம்.

அவன் மீண்டும் ஒரு தம்மை எடுத்து பற்ற வைத்து இழுத்தான், என்னை முறைத்துக்கொண்டே.

சட்டென்று எழுந்து, வீட்டிற்குச் செல்ல வண்டியை எடுத்தான். நான் ஏதும் பேசாமல் வண்டியில் ஏறிக்கொண்டேன். ரெட்டப்பாலத்தில் நடந்ததை வீட்டில் யாரிடமும் அவன் சொல்லவில்லை. எங்கள் குழும நண்பர்கள் கோபி, தயாவிற்கு கூட அங்கு நடந்ததை தெரியாமல் பார்த்துக்கொண்டான்.

அவன் ஏதாவது வீட்டில் சொல்லியிருந்தால், இந்நேரம் என் வீட்டில் பெரிய ரணகளமே நடந்திருக்கும். நல்ல வேளையாக அவன் அப்படி ஏதும் செய்யவில்லை.

அன்றிரவு அவன், என்னுடன் என் அறையிலே படுத்துக்கொண்டான்.

எதுவும் பேசாமல் படுத்ததிலிருந்தே, அவன் என் மேல் கடும் கோபத்தில் இருக்கிறான் என்று நான் புரிந்துக்கொண்டேன்.

*************************

இங்கே நீங்கள் குமாரைப் பற்றியும், நண்பர்கள் கோபி, தயாவைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

குமார், என் பால்ய கால நண்பன். என் பக்கத்து வீட்டுக்காரப் பையன் தான் அவன்.

நாங்கள் பள்ளியிலிருந்து, கல்லூரி வரை ஒன்றாக படித்தோம். நாங்கள் இருவரும் திருச்சியில் பி.இ. சி.எஸ்.ஈ படித்தோம். என் அண்ணன் ராஜேஸும் அதே தான் படித்துவிட்டு, அப்போது இன்போஸில் நிறுவனத்தில் வேலையில் இருந்தான். இப்போது மாறி டிசிஎஸ் வந்துவிட்டான். அதனால் நாங்களும் அவனைப் பின் பற்றி பி.இ. சேர்ந்தோம். நன்றாக படித்தோம்.

ஹெச்.சி.எல். நிறுவனத்தில் எனக்கு நல்ல வேலை கிடைத்தது. குமாருக்கு கிடைக்கவில்லை. அதனால் நானும் அந்த வேலைக்கு போகவில்லை. குமார் அப்போதே என்னை வேலைக்குப் போகச் சொல்லி வற்புறுத்தினான்.

“உனக்கு நல்ல ப்ரொகிரமிங் எல்லாம் வருதுல. ஏன் நீ வேலைக்கு போகலைனு சொல்ற” என்றான்.

“எனக்கு ப்ரொகிரம்ங் நல்ல வருதுங்கிறது எல்லாம் உண்ம தான். ஆனா ஒரே எடத்துல உட்காந்து வேல பாக்குறது எல்லாம் என்னால முடியாது” என்றேன் வீராப்பாக அவனிடம்.

ஆனால் அந்த முடிவு என் காதல் வாழ்க்கையையும் பதம் பார்க்கும் என்று அப்போது எனக்கு தெரியாது. அப்போதே இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று குமார் என்னை எச்சரித்திருந்தான்.

இருந்தபோதும், நான் என் முடிவில் உறுதியாக நின்றேன். வேலை வேண்டாம், தொழில் தான் எதிர்காலம் என்று என் மனம் சொல்லியது.

சில வருடங்கள் தொழில் கற்றுக்கொண்டு, குமாருடன் சேர்ந்து எங்கள் சொந்த ஊரான இளம்பிள்ளையிலேயே ஏதாவது தொழில் துவங்கலாம் என்று ஊருக்கே வந்துவிட்டேன். குமாரின் அப்பா ஏற்கனவே தறி வைத்திருந்தார். சிலருக்கு வெளியில் ரகமும் கொடுத்து, சிறிய அளவில் தொழில் செய்து வந்தார்.

தொழில் துவங்கும் முன் எம்.பி.ஏ படிக்கலாம் என்று நான் முடிவெடுத்தேன். குமார் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து தொழில் கற்றுக் கொள்கிறேன் என்றான். அது இருவருக்கும் சரியென தோன்றியது. நான் எம்.பி.ஏ படிக்கும் போது அறிமுகமானவர்கள் தான் கோபியும், தயாவும். நாங்கள் மூவரும் ஒரே வகுப்பு. இருவரும் எங்கள் ஊர் தான்.

அதனால் எளிதில் நண்பர்கள் ஆகிவிட்டோம். என்னையும் குமாரையும் போலவே, கோபியும், தயாவும் பால்ய நண்பர்கள். அவர்கள் இருவரும் ஏற்கனவே சொந்தத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

வேறு சாதிப் பெண்ணை குமார் காதலித்து, அதனை ஊரே எதிர்த்த பொழுது, என் அப்பாவின் ஆசியோடும், கோபியின் புத்திசாலித்தனமான ஐடியாவாலும், தயாவின் ஆள் பலத்தாலும் அவன் காதலை நாங்கள் சேர்த்து வைத்தோம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு.

அதனால் எங்களுக்குள் இன்னும் நன்றாக செட்டாகிவிட்டது.

நான் தான் கடைசியாக திருமணம் செய்து கொண்டவன். அவர்கள் மூவருக்கும் காதல் திருமணம். எனக்குத் தான் காதல் செட் ஆகவேயில்லை.

எனக்கும் காதலுக்கும் அப்படி என்ன பகையோ.

அதுவும் நான் காதலில் தோற்ற பின் இவர்கள் மூவரையும் படுத்தியப்பாடு இருக்கே, அது பெரிய ரணகளம்.

இதுவே என் நண்பர்கள் குழாமின் முன் சுருக்கம்.

**************************

குமார், என் நண்பர்கள் கோபி, தயாவை உசுப்போற்றி, என்னை மும்பைக்கு பேக்-அப் செய்தான். அதுவும் நான் ஏற்கனவே சொன்னதைப் போல என் அண்ணன் செலவில்.

குமாருக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். மும்பை வேலையை என்னை வைத்து என் மனதை திசை திருப்ப செய்தான். எங்களுடய புதிய வேலைக்கு மிசின் பார்க்கும் வேலையை என் தலையில் கட்டிவிட்டான்.

இதில் நான் மும்வை வந்தக் கதை சுவாரஸ்யமானது.

அந்தக் கதை என்னவென்றால்…

இதில் நான் மும்பை வந்தக் கதை சுவாரஸ்யமானது.

அந்தக் கதை என்னவென்றால்…

ரெட்டப்பால சம்பவத்திற்குப் பிறகு, நான் எங்காவது சென்று வந்தால் தான் சரி பட்டுவரும் என்று குமாருக்கு தோன்றியது. ஆனால், கோபியும்-தயாவும் தாங்களும் கூட வருவோம் என்று அடம் பிடிப்பார்கள் என்று குமாருக்குத் தெரியும்.

மும்பைக்கு போகலாம் என்று சொல்லிவிட்டு, நாம நாலு பேரும் கோவா போகலாம் என்று கோபி-தயாவிடம் குமார் சொல்ல, அவர்கள் கண்கள் விரிந்தன. அவர்களும் கனவு காண ஆரம்பித்துவிட்டனர். ஏன் என்றால் எங்கள் குழாமின் பல வருட கனவு கோவாவிற்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அவர்களது மனைவிமார்களின் அனுமதி கிடைக்காததால் இவ்வளவு நாட்களாக நாங்கள் விரும்பும் கோவாவிற்குச் செல்லவே முடியவில்லை எங்களால். அதனால், இந்த சந்தர்பத்தை தவறவிடக் கூடாது என்று கோபி-தயாவிற்கு ஆசை பிறந்தது.

அதனால், இதனை மட்டும் எப்படியாவது வீட்டில் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குமார் அவர்களிடம் சொன்னான்.

ஏன் என்று அவர்கள் கேட்க, கோவா என்றால் என் வீட்டில் விட மாட்டார்கள் என்று ஒரு பொய்யை சொன்னான். அவர்களும் நம்பி டிக்கெட் வரை புக் செய்துவிட்டார்கள். குமார் போகப்போவதில்லை என்று தெரிந்தே தனக்கும் டிக்கெட் புக் செய்தான்.

பின்பு ஒரு மாஸ்டர் பிளான் போட்டு எல்லோருக்கும் ஆப்பு வைத்தான்.

தன் மனைவியிடம், “உன் கிட்ட பொய் சொல்லிட்டு போக எனக்கு விருப்பமில்லை. நாங்க மும்பை போகல. கோவாவுக்குப் போறோம்” என்று சொல்ல குமாரின் மனைவி வெடித்துச் சிதறிவிட்டாள் கோபத்தில்.

குமாரின் மனைவியும், கோபி-தயாவின் மனைவிமார்களும் இணைப்பிரியா தோழிகள். இந்தத் தகவலை அப்படியே கோபி-தயாவின் மனைவிமார்களுக்கு  தகவலாக கொடுத்துவிட அவர்களும் ரூத்ர தாண்டவம் ஆட, அவர்கள் மூவரும் மும்பைக்கு வருவது கட்டானது.

டிக்கெட் காசு எல்லாம் வேஸ்ட். இருந்தாலும் குமார் போட்ட மாஸ்டர் பிளானில் வெற்றி பெற்றுவிட்டான். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து நான் மட்டும் மும்பை போக வேண்டும் என்று வற்புறுத்துவதைப் போன்ற தோற்றத்தை குமார் உருவாக்கிவிட்டான்.

என் நண்பன் குமாருக்கு, மும்பையில் சில வேலைகள் இருந்தது. ரொம்ப நாட்களாக அவனால் அங்கு போய் வர முடியாமல் அந்த வேலைகள் கிடைப்பிலே கிடந்தது.

ஏதோ புது மிசின் எல்லாம் வந்திருக்கிறது. அது எப்படி இருக்கின்றது என்று பார்த்துவிட்டு, அதனை நாமும் வாங்க வேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பான். அந்த மிசின் வாங்கிய பின் தான் நாங்கள் தனியாக தொழில் துவங்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தோம்.

இப்போது குமாருக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.

என்னை தனியாக மும்பைக்கு அனுப்பியது மாதிரியும் ஆனது. எங்களது எதிர்கால தொழில் திட்டத்திற்காக மிசின்களைப் பார்க்க மும்பை சென்றது மாதிரியும் ஆனது.

எனக்கு உதவுவதற்குத் தான் மும்பையில் தாஸை கைடாக குமார் ஏற்பாடு செய்தான்.

****************

முதலில் நியூஸ் பேப்பர் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அப்போது என்ன நடந்தது என்றால்…

எப்படியாவது கிடைத்த நேரத்தை சரியாக செலவிட வேண்டும் என்று தோன்றியது எனக்கு. ஏழு மணி நேரம் தனிமையில், அதுவும் மும்பைப் போன்ற பெரு நகரத்தில். நாளை முதல் வேலை, வேலை என்று கொஞ்சம் பிஸி ஆகிவிடுவேன். மும்பையை சுற்றிப்பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு. தனிமையில் பயணம் செய்வது தியானம் செய்வதற்குச் சமம். அப்போது நமக்கு ஒரு விதமான மன அமைதி கிடைக்கும். ஆனால் போகும் இடம் சரியில்லை என்றால், சரியான கடுப்பாகிவிடும்.

என் நண்பன், குமார், நான் தினமும் அலுவல் சம்பந்தமாக எங்கேயெல்லாம் போக வேண்டும் என்று லிஸ்ட் போட்டு அனுப்பி வைத்திருந்தான். அதன் படி தான், தாஸும் என்னை அழைத்துச் செல்லப் போகிறார் என்று தெரியும். முதல் நாளான இன்று மட்டும் ஏதாவது மாலுக்கு சென்று படம் பார்க்கவும், ஷாப்பிங் செய்யவும் நேரமிருந்தது. படம் பார்பதென்றால், நான் சேலத்திலேயே தியேட்டரிலேயே பார்த்திருப்பேனே. அதற்கு ஏன் நான் மும்பை வரைக்கும் வர வேண்டும். எனக்கு இது சரிப்பட்டு வரும் என்று தோன்றவில்லை.

(இந்த படம் நல்லாயிருக்கும்-னு நம்பி தியேட்டருக்குப் போயி, மொக்க வாங்குற மாதிரி ஆகிவிடும். பலருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும்.)

அதனால் மும்பையில் இன்று என்ன எல்லாம் நடக்கிறது என்று தெரிந்துக்கொண்டால் அதற்கு ஏற்றார் போல, என் கைடு தாஸ், வரும் வரை மும்பையை சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டம் போட்டேன்.

அதற்கு செய்தித்தாள் தான் சரியான தேர்வு. அதில் தான், இன்று மும்பையில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெளிவாகப் போட்டு இருப்பார்கள். எந்த இடத்திற்கு போகப்போகிறோம் என்று தெரிந்துக்கொள்வதைவிட, எந்த இடத்திற்குப் போகக் கூடாது என்று தெரிந்து, நம்மை பல துன்பங்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

அதனால் தான், நான் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரின் செய்தித்தாள்களை வாங்கி அந்த ஊரைப் பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்வேன். அதுவும் டீக்கடை என்றால் இன்னும் சவுகரியமாக போய்விடும். டீக்கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அந்த பகுதியின் முழு விவரத்தையும் கரந்துவிடலாம். ஆனால் மொழி தெரியாத ஊரில், எனக்கு இருந்த ஒரே வாய்ப்பு, செய்தித்தாளிலிருந்து தான் தகவல்களைத் திரட்ட வேண்டும். எல்லா தகவல்களும் செய்தித்தாள்களில் கொட்டிக்கிடக்கும். நாம் தான் நமக்குத் தோதான செய்திகளைச் சேகரிக்க வேண்டும்.

முதலில் நியூஸ் பேப்பர் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் தங்கியிருந்த மலாட் பகுதியில் எங்கே பேப்பர் வாங்குவது என்று எனக்கு தெரியவில்லை. எப்படியும் ஓட்டல் லாபியில் பேப்பர் இருக்கும் என்று எண்ணினேன். அதனால் ஓட்டல் லாபியிற்கு விரைந்தேன். ஆனால், ஓட்டலுக்குச் செல்லும் வழியிலேயே ஒரு பெரியவர் ரோட்டோரத்தில் பேப்பர் விற்றுக்கொண்டிருந்தார்.

ஹிந்தியில் எப்படி பேப்பர் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை.

அங்கே மற்றவர்கள் எப்படி பேப்பர் கேட்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று நின்றிருந்தேன். என் நேரம் அப்போது யாரும் வரவில்லை.

நான் சில நிமிடங்களாக அங்கேயே நிற்பதைப் பார்த்தவர், என்னைப் பார்த்து “கியா?” என்றார்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பதற்றத்தில், “ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர முயன்றேன்.

(அப்பாடா ஒருவழியாக டைட்டிலைக் கதைக்குள் கொண்டுவந்துவிட்டான் என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கு கேட்கிறது)

ஒண்ணுமில்லைனு சொன்னதற்கு அந்தப் பெரியவர், “தம்பி. நீங்க தமிழா” என்று கேட்டு எழுந்து என் அருகில் வந்து அவர் கடைக்கு அருகில் இருந்த மர பெஞ்சில் என்னை அமர வைத்தார்.

முதன் முறையாக முப்பை வந்தப்பிறகு ஒரு அந்நியர் என்னிடம் தமிழிலில் பேசுகிறார். அவர் என்னிடம் தமிழில் பேச பேச எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மும்பையுடனான எனது நெருக்கம் அந்த பெரியவர் மூலமாகவே எனக்குள் இன்னும் அதிகமானது. அவரது கடையில் தமிழ் நாளிதழ்களும் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தினத்தந்தி மற்றும் தினகரனின் மும்பை பதிப்பு நாளிதழ்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். கூடவே இரு ஆங்கில நாளிதழ்களையும் வாங்கிக் கொண்டேன்.

“ஆமாங்க ஐயா. தமிழ்நாடுல இருந்து வேல விசயமா வந்திருக்கேன். இங்க ஓட்டல தங்கியிருக்கேன்” என்றேன் அந்தப் பெரியவரிடம்.

“தமிழ்நாட்டுல எங்க”

“சேலமுங்க”

“அப்படியா”

“ஆமாங்க”

“நம்மளுக்கு பூர்வீகம் எங்கங்க”

“எனக்கு கோயமுத்தூரு பக்கத்துல சூலூருங்க. நான் சின்ன பையனா இருக்கும் போதே அப்பா கூட குடும்பத்தோட இங்க வந்துட்டோமுங்க.” என்றார்.

“அட நம்ம கொங்கு பகுதியா நீங்களும். ரொம்ப நல்லதா போச்சிங்க. இங்க தான் ஒரு வாரம் தங்க போறேன். கூட பேச்சுத்துணைக்கு ஆள் இல்லையேனு கவல பட்டேன். நல்ல வேல நீங்க இருக்கீங்க.”

“ஐயா நம்ம பேருங்க”

“இராமசாமி. சூலூர் இராமசாமி”

“நம்ம பெரியார் ஐயா பேருங்களா”

“ஆமா தம்பி. எங்க அப்பா பெரியாரோட தீவிர ஆதரவாளர். அதனால தான் அந்த பேர எனக்கு வச்சாரு.”

“நல்லதுங்க”

“தம்பி. நம்ம ஊரு பக்கமா போயிட்டிங்க. காபி தண்ணி சாப்படாம உங்கள் அனுப்ப மனசு வாரலீங்க.” என்று சொல்லிவிட்டு எனக்கும் அவருக்கும் டீ சொன்னார்.

“ஐயா. டீ ரொம்ப நல்லா இருக்குதுங்க”

“தம்பி. இது இரானி சாய். நல்லா டேஸ்டா இருக்கும்” என்று அந்த டீக்கடையின் அருமை பெருமைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

“தம்பிக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்கலா” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

எனக்கு கடுப்பாக இருந்தது. அண்ணன் கல்யாணம் செஞ்சிக்கிட்ட சொந்ததுல இருந்து தீபானு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி. அவ. எனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லனு சொல்லிட்டு, அவ பாட்டுக்கு வெளிநாட்டுக்கு கிளம்பிப் போயிட்டா. அதை அவரிடம் சொல்ல எனக்கு விருப்பமில்லை.

“இன்னு இல்லீங்க” என்றேன்.

“பாக்க ஜம்முனு இருக்கீங்க. சீக்கிரமே நல்லபடியா முடிஞ்சுடும். கவல படாதீங்க” என்றார் ஆறுதல் சொல்வதைப் போல. அப்படியே அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசி வியாபாரம் செய்து வந்தார். காலையில் நாளிதழ் விற்கிறாராம். மாலையில் இதே இடத்தில் காய்கறி விற்கிறாராம். எப்படியும் அவருக்கு 70 வயதிற்கு மேலிருக்கும்.

இந்த மாதிரி பெரியவர்களிடம் பேசும்பொழுது, நாம் வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுக் கொள்ளலாம். அவர்களுடைய அனுபவத்திலிருந்து நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கும். சில தகவல்கள் நமக்கு ஆச்சரியமூட்டுவதாகக் கூட இருக்கும். இன்னும் சில தகவல்கள் நம் தினசரி வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை. சிலநேரங்களில் அவர்களின் தற்பெருமைகளை பேசுவார்கள் அல்லது சரமாரியாக அட்வைஸ் மழை பொழிவார்கள். நாம் அதனை பொறுத்துக்கொண்டால் போதும். நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கும்.

“ஐயா பெரியவரே. உங்ககிட்ட நான் கேட்டேனா” என்பதனைப் போன்று முகம் சுழித்தேன்.

நான் முகம் சுழிப்பதைத் தெரிந்து அவரே வேறு சில விசயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார். நானும் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே, நாளிதழ்களை புரட்ட ஆரம்பித்தேன். தமிழ் நாளிதழ்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டுச் செய்திகளே ஆக்கிரமித்து இருந்தன. ஆங்கில நாளிதழில் பெரும்பாலும் விளம்பரம், விளையாட்டு, வியாபாரம் போன்ற செய்திகளே இருந்தன. ஆக இந்த நாளிதழ்கள் மூலமாக எனக்கு எந்த விவரமான தகவல்களும் கிடைக்கவில்லை. மும்பையைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு வீணாகிவிடுமோ என்ற எனக்குள் கவலை எழுந்தது.

அப்போது அந்தப் பெரியவரிடம் உதவி கேட்டால் என்ன என்று எனக்குள் வினா எழுந்தது. நான் மனதில் நினைத்தது அவருக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை.

அவரே தொடர்ந்தார்.

“தம்பி. இன்னிக்கு எங்க போகப் போறீங்க”

அப்பாடா அவரே கேட்டுவிட்டார். அவரிடமிருந்து அருகில் சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்களைக் தெரிந்துக் கொண்டேன். நாளைப் பார்க்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்துக் கிளம்பினேன்.

“தம்பி. உங்க பேரு.” என்று அவர் கேட்க.

அதற்குள் எனக்கு போன் அடிக்க. நான் போன் பேசிக்கொண்டே அவரிடம் டாடா காட்டிவிட்டு கிளம்பிவிட்டேன்.

(இதனைப் படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கே இன்னும் என் பெயரை சொல்லவில்லை, அதற்குள் எப்படி இந்தப் பெரியவரிடம் சொல்லுவேன்)

இனி மும்பையை சுற்றிப் பார்க்க கிளம்ப வேண்டியது தான் என்ற சந்தோஷத்தில் அவசர அவசரமாக ஓட்டலுக்கு வந்து, உடை மாற்றிக் கொண்டு, ஓட்டல் பஃபேவில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன்.

கிளம்பும் முன் மணியைப் பார்த்தேன், மணி 8.00 என்று காட்டியது.

“முதலில் லோக்கல் டிரைன்ல போயி பழகிக்கோங்க. அப்ப தான் மும்பை உங்களுக்கு ஈஸியா இருக்கும்”  என்று அந்த பெரியவர் ராமசாமி சொன்னது நினைவிற்கு வந்தது.

நேராக மலாட் கிழக்கு புறநகர் ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அந்த ரயிலின் கடைசி நிறுத்தமான சர்ச்கேட் ரயில் நிலையத்திற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டேன். டிக்கெட் எடுக்கவே கால் மணி நேரமானது. அவ்வளவு கூட்டம். எங்க ஊரின் மொத்த மக்கள் தொகையைப் போல இரண்டு மடங்கு மக்களாவது அந்த புறநகர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தனர். எனக்கு பிரம்பிப்பாக இருந்தது.

பூளு டாப்ஸ். வைட் லேக்கின் போட்டுக் கொண்டு என் பின்னால் டிக்கெட் எடுக்க நின்றிருந்த பெண்ணிடம் சர்ச்கேட் ரயில் நிலைத்திற்குச் செல்ல எந்த பிளாட்பாரத்தில் இரயில் ஏற வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவளும் போனில் யாருடனோ இந்தியில் பேசிக் கொண்டே என்னிடம் சைகை மொழியில் 3ஆவது பிளாட்பார்மில் ஏறுமாறு சொன்னாள்.

நானும் அதற்கு ஏற்றார் போல அந்த பிளாட்பாரத்திற்கு போவதற்கு முக்கிய வழியை அடைந்தது மட்டும் தான் நானாக செய்தது. அலேக்காக என்னைக் தள்ளிக் கொண்டு மூன்றாவது பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டனர். அவ்வளவு கூட்டம்.

எல்லா பிளாட்பாரங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டமிருந்தது. இந்த மாதிரி கூட்டமொல்லாம் எங்கள் ஊரு வெள்ளி சந்தையில் மட்டுமே நான் பார்த்திருக்கேன். ரயிலுக்கே இவ்வளவு கூட்டமென்றால், மும்பை எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று பிரம்மிப்பு அடைந்தேன்.

இரயில் வந்தது.

நமக்கு தான் இன்னும் நேரம் இருக்கிறதே. அடுத்த வண்டியில் பயணித்துக் கொள்ளலாம் என்று சற்று ஒதுங்கி நிற்க முயற்சி செய்தேன்.

விட்டார்களா?

அலேக்காக என்னையும் இரயிலுக்குள் கொண்டு வந்திவிட்டார்கள் இந்த மும்பை வாசிகள்.

இரயில் சரியாக ஒரே நிமிடத்தில் கிளம்பியது. அதற்குத் தான் இவ்வளவு விரைவாக மக்கள் இரயிலில் ஏறுகிறார்கள் என்று யூகித்துக்கொண்டேன்.

என் ரயில் பெட்டியில் இருக்கும் சுற்றிப் பார்த்தேன். எங்கேயும் அமர இடமில்லை. நிற்கக்கூட இடமில்லை. அவ்வளவு நெருக்கடி.

கோட் சூட் போட்ட ஆசாமி முதல் பள்ளிக் கல்லூரி செல்லும் மாணவர்கள் வரை அந்த இரயில் பெட்டியே கலகல என்று இருந்தது.

சிலர் புத்தகம் படித்தனர். சிலர் மொபைலில் சிரியல் பார்த்துக்கொண்டிருதனர். சிலர் யாருடனாவது போனில் பேசிக்கொண்டிருந்தனர். வெகு சிலரே அருகில் இருந்த நபரிடம் பேசிக் கொண்டு வந்தனர்.

அப்போது தான் முதன் முதலாக அவளைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். என் முன்னாள் கல்லூரிக்கால காதலி திவ்யா போலவே இருந்தாள். அதனால் தான் அவளையே பார்த்தேன். திவ்யா தான் கல்யாணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாளே என்று நினைத்துக் கொண்டேன். அவளை நினைத்தாலே ஏனோ எனக்கு கண் கலங்கிவிடுகிறது. முதல் காதல். அதுவும் ஏழு வருடக்காதல். நான் எடுக்க முடியாத சில முடிவுகளாலும், நான் எடுத்த சில தவறான முடிவுகளாலும் அந்தக் காதல் கைக்கூடாமல் போனது. அதனை நினைத்து நான் கலங்காத நாளில்லை. மீண்டும் இதனை சரி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், எப்படியாவது எல்லா கருத்துவேறுபாடுகளையும் சரி செய்து என் திவ்யாவையே திருமணம் செய்துக்கொள்வேன்.இனி நடக்க வாய்ப்பில்லை.

முடிந்ததை நினைத்து என்ன பயன் என்று என் மனதிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே அவளைத் தேடினேன் என் கண்களால். கூலர்ஸ் போட்டிருந்தாள். பச்சை நிற சல்வாரும் அதற்கு ஏற்ற கலரில் லெக்கின்னும் அணிந்திருந்தாள். கொஞ்சம் குண்டாக அழகாக இருந்தாள், கையில் சின்ன வேலட் வைத்திருந்தாள். பிரபல ஐடி கம்பெனி ஒன்றின் ஐடி கார்டை கழுத்தில் அணிந்திருந்தாள். ஆனால் அவள் தூரத்தில் இருந்ததால் அவளின் பெயரை மட்டும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

(இன்னும் நாயகன் பெயரே சொல்லவில்லை. அதற்குள் நாயகியின் பெயரை சொல்லிவிடுவேனா என்ன? வாய்ப்பு இல்ல ராசா)

என்னைப் போலவே இரயில் பெட்டியில் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு சும்மா நின்றுக்கொண்டிருந்த ஒரே பெண் அவள் தான்.

(அப்பாடா ஒரு வழியா கதையின் நாயகி கேரக்டரை அறிமுகப் படுத்துகிறான் என்று நினைத்து ஏமாந்துவிடாதீர்கள். அதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. நாயகனும் நாயகியும் முதன் முதலாக பேசிக் கொள்ளும் அந்த பகுதியை எழுத ஒரு நல்ல நாள் பார்த்து வைத்திருக்கிறேன். அதற்குள் இன்னும் நிறைய சம்பவங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது)

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கூட்டம் ஏறிக்கொண்டேயிருந்தது. சில ரயில் நிறுத்தங்களில் இறங்குபவர்கள் அதிகம் இருந்தனர். அந்த இடங்கள் எல்லாம்  அலுவலகங்கள் நிறைந்திருக்கும் முக்கிய இடங்கள் என தெரிந்துக்கொண்டேன்.

நான் கவனித்தது முக்கியமான அம்சம் என்னவென்றால், எல்லா பெண்களும் ஏன் மிகையாக மேக்கப் போட்டு இருந்தார்கள் என்பதே.

அவளைத் தவிர. (நாயகி பாஸ், எப்படி விட்டுக் கொடுக்க முடியும்.)

மீண்டும் ஒரு ரயில் நிலையத்தில் இரயில் நின்றது. நான் அவளைப் பார்க்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அந்த ரயில் நிலையத்திலேயே அவள் இறங்கினாள்.

மீண்டும் ஒரு ரயில் நிலையத்தில் இரயில் நின்றது. நான் அவளைப் பார்க்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அந்த ரயில் நிலையத்திலே அவள் இறங்கினாள்.

நானும் அங்கேயே இறங்கிவிடலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் இரயில் கிளம்பியது. நானும் அவளையே பார்த்துக்கொண்டிந்தேன். இரயிலை விட்டு கீழே இறங்கிய பின், கூட்டத்தில் வந்ததால் களைந்திருந்த தன் உடையை சரி செய்துக் கொண்டாள். நான் அவளைப் பார்க்கிறேனா என்று மீண்டும் ஒரு முறை என்னைத் திரும்பிப் பார்த்து தேடினாள். அவள் என்னைத் தேடுகிறாள் என்று தெரிந்தது எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சி தான். ஆனால் அதனை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அவளுக்கு வந்த போன் அழைப்பை எடுத்துப் பேசிக் கொண்டிருந்தாள். இரயில் வேகமெடுத்தது. அவள் எனக்கு தூரமாகிக் கொண்டே வந்தாள். ஒரு கட்டத்தில் அவள் வெகு தொலைவில் மறைந்தே போனாள். அவளைப் பார்த்தவுடன் என் மனதில் ஏதோ தோன்றியது. ஆனால், என்னவென்று சரியாகச் சொல்ல முடியவில்லை.

கடைசி இரயில் நிலையம் வர வர கூட்டம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வந்தது. எனக்கும் அந்தப் பெட்டியில் ஒரு சீட் கிடைத்தது. சீட் கிடைத்த பத்தாவது நிமிடத்தில் கடைசி இரயில் நிலையமான சர்ச் கேட் இரயில் நிலையம் வந்து சேர்ந்தது. நாங்கள் இறங்குவதற்குள் அந்த இரயிலில் ஏற கூட்டம் தயாராக இருந்தது. நான் கடைசியாகத் தான் அந்த பெட்டியை விட்டு இறங்கினேன்.

இறங்கிப் பார்த்தால், இரயில் நிலையம் பிரம்மாண்டமாக இருந்தது. கூட்டம் இன்னும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. மணி 8.45ஐ நெருங்கியதால், அலுவலகம் செல்ல முண்டியடித்துக்கொண்டு இரயில் ஏற மக்கள் காத்திருந்தனர். எனக்கு அந்த இடம் எங்கள் ஊர் திருவிழாவை நியாபகப்படுத்தியது.

நிறைய பிளாட்பாரங்கள் இருந்தன. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தூரத்தில் வெளியே போகும் வழி தெரிந்தது. அதனை நோக்கில் மெல்ல நடக்க ஆரம்பித்தேன். கூட்டம் கட்டுக் கடங்காமல் இருந்தது. எப்படியோ வெளியில் வருவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. நான் அந்த இரயில் நிலையத்திற்குள்ளும், வெளியேவும் நிறைய செல்பிகளும், புகைப்படங்களும் எடுத்துக்கொண்டேன்.

சிறுது தூரத்தில் நடந்து சென்றேன். அங்கே ஒரு ரோட் சிக்னல் இருந்தது. அதில் எல்லா பக்கங்களிலும் வண்டிகள் நின்று முன் செல்ல சிக்னலுக்காக காத்திருந்தன. நான் அப்போது தான் முதன் முதலாக மும்பையின் டிராபிக் நிலையை கண்ணில் கண்டேன். இன்ச் பை இன்சாக டிராபிக் நகர்ந்துக்கொண்டிருந்தது. சாலையைக் கடக்க நான் பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது.

எனக்கு ரொம்பவும் தாகமாக இருந்ததால், சில்லென்று என்று ஒரு பாட்டில் மினரல் வாட்டர் வாங்கிக் குடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஏப்ரல் மாத சூரியனின் வெப்பம் அதிகரித்துக்கொண்டிருந்தது. அங்கே இருந்த ஒரு பெட்டிக் கடையில் இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு, குளுமையான ஒரு பாட்டிலை எடுத்துக்கொண்டேன். அந்தக் கடைக்காரன் எனக்கு மீதி ஒரு ரூபாயைக் கொடுத்தார். நான் ஆச்சரியமாகப் பார்த்தேன். பாட்டிலின் விலை பத்தொன்பது ரூபாய் என்று பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்தது.

நான் மனதில் நினைத்துக் கொண்டேன், “அடேய், இதே எங்க ஊரா இருந்துச்சினா இந்நேரம் கூலிங் சார்ஜ் என்று சொல்லி இன்னும் இரண்டு ரூபாய் அதிகம் கரந்து இருப்பார்களே” என்று.

(நாயகன் இனி மும்பையை மெல்ல சுற்றிப் பார்த்துவிட்டு வரட்டும், அதற்குள் நாம் நாயகியின் கதையைக் என்னவென்று பார்ப்போம்)

– மீண்டும் சந்திப்போம் இன்னும் சில தினங்களில் அத்தியாயம் இரண்டுடன்…

எழுத்து – பட்டிக்காடு