கேள்வி: பட்டிக்காடு – ஆணா? பெண்ணா?
நிச்சயம் இந்தக் கேள்வி எழும் எனத் தெரியும். காரணம், என் இணையதளத்தில் ஆணா? பெண்ணா? என எந்த விதமான தகவல்களும் குறிப்பிடவில்லை.
பெண் என்று எண்ணி பட்டிக்காடு தளத்தை வாசிக்கும் வாசகருக்கு நான் பெண்ணாகவும், ஆண் என்று எண்ணி வாசிப்பவருக்கு நான் ஆணாகவும் மட்டுமே தெரிய வேண்டும். அதேசமயம், பெண் வாசகருக்கு ஆணின் பார்வையில் இருக்கும் நியாயங்களையும், ஆண் வாசகருக்கு பெண்ணின் பார்வையில் இருக்கும் நியாயங்களையும் எடுத்துரைக்கும் விதமாக இருக்க வேண்டும். இதற்காகத் தான் ஆணா, பெண்ணா எனக் குறிப்பிடவில்லை.
இது எளிதான பணியல்ல. காரணம், எப்போதும் ஆணின் பார்வையும், பெண்ணின் பார்வையும் நேர்க்கோட்டில் பயணிக்காது. எப்போதும் பெண்ணின் பார்வையானது, தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்சிக்களை இணைத்து அதற்குள் மறைந்திருக்கும் அர்த்தத்தையும், தொடர்ச்சியையும் கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டது. அதே சமயம் ஆணின் பார்வை ஆழமானது, எதையும் தீர விசாரித்து, வாத பிரதிவாதங்களை ஆராய்ந்து, காரணக் காரியங்களை வேர்வரை அலசிப் பார்க்கக்கூடியது. ஆகவே தான் ஒரு பெண்ணால் பல வேளைகளை ஒரே நேரத்தில் செய்ய முடிகிறது, ஆணால் அது முடிவதில்லை.
ஆணின் மனம் பிரித்துப் பார்க்கும், பெண்ணின் மனம் சேர்த்துப் பார்க்கும். பெண்ணின் மனம் ஆழ்ந்து யோசிக்கும் திறன் கொண்டது, அதனால் நினைவு வைத்திக் கொள்ளும் திறனும் அதிகம். ஆணுக்கோ விடைக்கானும் வேட்கையும் திறனும் அதிகம், அதனால் ஆழமான பார்வைக் கொண்டது. இவை எந்த அளவிற்கு அறிவியல் பூர்வமானது என்பது விவாதத்திற்குரியவை. நான் சொல்ல வருவது யாதெனில், என்னுடைய எழுத்தில் பரந்து விரிந்தப் பார்வையும், ஆழமான விவாதமும் இருக்கும்.
ஆகவே பாலின வேறுபாடில்லாமல் சமூகத்தை பட்டிக்காடு பதிவு செய்யும். ஆகவே, இனி, பட்டிக்காடு ஆணா? பெண்ணா? எனக் கேள்வி எழத் தேவையில்லை.
கேள்வி: யார் படிப்பார்கள் என எழுதுகிறாய் ? – தோழி தி.பா.
பட்டிக்காடு தளத்திற்கு பெரிய வாசகர் வட்டமில்லை தான். தினமும் இரண்டு மூன்று பேர் கூட தளத்தை பார்வையிடவில்லை தான். அப்படிப் பார்பவர்களும் பட்டிக்காடு தளத்தின் முகப்பை மட்டும் பார்பவர்கள் தான். ஆக “ஒரு சில தீவர வாசகர்களே இருக்கும் தளத்திற்கு ஏன் இவ்வளவு உழைப்பை விரையமாக்க வேண்டும்” என என் தோழி தி.பா. அவர்கள் கேட்பது நியாயமானது தான். என்னைப் பற்றி ஏதோ கொஞ்சம் தேரிந்தவர் அவர், என் மேலுள்ள அக்கரையில் இந்தக் கேள்வியைக் கேட்கிறார். நம் மேல் ஒருவர் கரிசனம் காட்டும் பொழுது மனதிற்குள் பல சமயங்களில் ஆனந்தமாக தான் இருக்கும், சில சமயங்களில் கோபமாக கூட மாறும். ஆனால், இங்கு ஆனந்தப் படவோ, கோபப்படவோ ஏதுமில்லை. ஏன்னென்றால் இந்தக் கேள்வியில் ஒரு உண்மை இருக்கிறது. அது, யாரும் தமிழில் அதிகமாக படிப்பதில்லை.
ஏன் யாரும் தமிழில் அதிகமாக படிப்பதில்லை என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டுமானால் சில உப கேள்விகள் தேவை. அவை யாதென்று பார்ப்போமா? மேலும் இந்தக் கேள்விகளுக்கு பட்டிக்காடு பதில் செல்ல வேண்டிய தேவையில்லை, உங்களின் மனதிடம் இக்கேள்விகளைக் கேட்டாலே போதும்.
1. செய்தி, சினிமா, வலைப்பூக்கள் போன்ற தளங்கள் தவிர்த்து தமிழில் ஒரு 10 இணைய தளங்களின் பெயர்களை சொல்ல முடியுமா?
2. சமூக வலைத்தளங்கள் தவிர்த்து தமிழ் மொழியில் ஒரு சாமனியனால் ஒரு கருத்தை பதிவு செய்வதற்கு ஏதேனும் இணையதளம் தமிழில் இருக்கிறதா?
3. இப்போது கணிதத்தில் ஒரு சந்தேகமெனில் அவற்றை நிவர்த்தி செய்ய தமிழில் எதேதும் இணைய தளமுள்ளதா?
4. கவர்ச்சியைத் தாண்டி தமிழர்களைக் கவர ஏதேனும் இணைய தளமுள்ளதா?
5. விளையாட்டுகளைப் பற்றி ஏதேனும் தமிழில் படிக்க, அறிந்துக் கொள்ள இணைய தளமுள்ளதா?
6. தமிழில் சிறந்த சொற்பொழிவுகளின் தொகுப்பு ஏதாவது இணைய தளத்தில் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் அது எத்தனை பேரிடம் சென்று சேர்ந்திருக்கிறது?
7. தமிழ் விக்கிபீடியா, சினிமா, ஆபாசம், எழுத்தாளர்களின் வலைத்தளங்கள், செய்தி நிறுவனங்களின் தளங்கள், சமூக வலைத்தளங்கள் இவற்றைத் தவிர உண்மையிலேயே தமிழில் எதேனும் உருப்படியான இணைய தளங்கள் இருக்கிறதா? அதற்கான தேடுதல் எத்தனை பேரிடமுள்ளது?
8. வீக்கிபீடியா என்னும் தளம் தமிழில் உள்ளது. அது பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதனை யாரேனும் பயன்படுத்தியதுண்டா? வீக்கிபீடியாவில் யார் வேண்டுமானலும் தங்களின் பங்களிப்பை தரலாமே இதாவது நமது யுவன் யுவதிகளுக்கு தெரியுமா?
9. இணைய தளத்திலேயே தமிழ் புத்தகங்களை வாங்க இப்போது வசதி இருக்கிறதே? அதாவது பலரை சென்று சேர்ந்திருக்கிறதா?
10. குறைந்தபட்சம் தமிழில் சிறந்த ஒலி, ஒளி அம்சங்களுடன் கூடிய காணொளி காட்சிகள் இருக்கிறதா? ( சினிமா, பாலியல் காட்சிகள் தவிர்த்து)
கடைசியாக ஒரு கசப்பான உண்மையை ஆதாரத்துடன் விளக்குகிறேன். பிரபல காணொளி வலைத்தளமான www.youtube.comல் tamil என்று தட்டச்சு செய்து பார்த்தால் ஆபாசங்களே பிரதானமாக வருகிறது அல்லது சினிமா செய்திகள் இவற்றைத் தவிர்த்து வேரொன்றும் வருவதில்லை. இதோ ஆதாரம்.
இதே, www.youtube.comல் English என்று தட்டச்சு செய்து பார்த்தால் ஆங்கில மொழிப் பற்றியே வருகிறது. இதோ ஆதாரம்.
தமிழ் மொழிப் பற்றி ஏதும் தெரியாத ஒருவர், www.youtube.comல் tamil என்று தேடினால் வரும் ஆபாசங்களைக் கண்டு என்ன நினைப்பார். நமது தாய், சகோதரி, தோழிகள் மற்றும் இன்னும் பிற உறவுகளைப் பற்றி அவர் மனதில் என்ன மாதிரியான கருத்து உருவாகும். அவ்வளவு ஏன் தமிழ் குடும்பத்தில் பிறந்து, அகதியாகவும், பொருளீட்டவும் வெளி நாட்டில் புலம் பெயர்ந்த குழந்தைகள் தமிழ் மொழியை இணைய வாயிலாக கற்க இணையத்தில் உலாவும் பொழுது, மேற்கண்ட தளங்களை பார்வையிட்டால், அந்த பிஞ்சு குழந்தை மனதில் நம்மைப் பற்றி என்ன அபிப்பிராயம் தோன்றும்? நம்மை பாலியல் வேட்கைக் கொண்ட மிருகங்கள் என நினைத்துவிடாதா? அல்லது நமது சமூக வளர்ச்சி அவ்வளவு தான் என நினைத்துவிடாதா?
இத்தனை ஆண்டுகாலம் பல படையெடுப்புகளையும், பல மொழி திணிப்புகளையும் தாண்டி நிற்கும் தமிழ் மொழிக்கு நாம் கொடுக்கும் சரியான மரியாதை இதுதானா? வெட்கமாக இருக்கிறது. என் தாய் மொழியின் மானத்தை இணையத்தில் ஒரு நிறுவனம் ஆபாசமாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது. நம்மால் என்ன செய்ய முடிந்தது? நம்மால் என்ன தான் செய்ய முடியும். இத்தனைக்கும் www.youtube.com கூகுள் தலைமை செயல் அதிகாரியான தமிழர், சுந்தர் பிச்சை அவர்களின் கீழ் தானே செயல்படுகிறது. அவரின் கவனத்திற்கு இதனை எடுத்துச் செல்ல முடியுமா? கண்டிப்பாக யாராவது எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி எடுத்து செல்ல வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. டிவிட்டர், மூகநூல், கூகுள் பிளஸ் போன்ற எதோ ஒரு சமூக வலைத்தளத்தின் மூலமாவது இதனை அவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புகள் இருக்கிறது.
ஆக, தமிழ் இணையதள பரப்பில் உருப்படியாக ஏதுமில்லை. தார்க்க ரீதியாக வெறும் வெற்றிடமாக மட்டுமே தமிழ் இணையதள பரப்பு இருக்கிறது. அப்படியானால் இங்கே ஒரு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது என்று தானே அர்த்தம். சன் தொலைக்காட்சி நிறுவனம் போன்றோ, HCL நிறுவனம் போன்றோ தமிழ் நாட்டில் இருந்து மாபெரும் ஊடக நிறுவனமாய் நவீன தொழில்நுட்பத்துடன் ஒரு நிறுவனம் பிறக்கப் போகிறது. அது தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்ற போகிறது. இதனை சரியாக பயன்படுத்த நம் இளைஞர்களுக்கு தெரியவில்லை. அது தான் இங்கே பிரச்சனை. அதனைக் கனவாக கொண்டே பட்டிக்காடு தளம் பயனிக்கிறது.
மேலும், ஆங்கிலம் இன்று ஒரு நுகர்வு மொழியாக மட்டும் தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. சிற்சில சிற்றின்பங்களையும், பொருளாதார ரீதியிலும், உலகை அறிந்து கொள்ள உதவது போன்ற விசியங்களில் மட்டுமே ஆங்கில மொழி பிரதானமாக நமக்கு கை கொடுக்கிறது. ஆனால் இது மட்டுமே வாழ்க்கையில்லையே. காலங்காலமாக பல மொழிகளை கடந்து தான் வந்திருக்கிறோம். அப்படியான நிலையில் நேற்று வரை எந்த மொழியாலும் நம்மை அசைத்துப் பார்க்க முடியவில்லையே ஆனால் இன்றோ தமிழ் மொழியின் ஆனி வேரையே ஆங்கிலம் அசைத்துப் பார்க்கிறதே.
ஏழ்மையான குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் மட்டுமே இன்று வேறு வழியில்லாமல் அரசு பள்ளிகளில் தமிழை வேண்டா வெறுப்பாக கற்கின்றன. கொஞ்சமேனும் பொருளாதாரம் மேம்பட்டுள்ள குடும்பங்களில் இரண்டாவது மொழியாக கூட தமிழை குழந்தைகள் இன்று கற்பதில்லையே. 2006ஆம் ஆண்டில் தமிழ் மொழியை ஒரு பாட மொழியாக கண்டிப்பாக கற்கக் கூட சட்டம் கொண்டு வந்திருக்கிறோம். இதனை எவ்வளவு பெருமையாக தமிழக அரசியல் மேடைகளில் பீற்றிக் கொண்டிருக்கிறது. அவமானமாக இருக்கிறது. எல்லாம் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
முடிவாக. தமிழ் மொழி இணையப் பரப்பில் ஒரு வறட்சி நிலை இருக்கிறது. அதனை பதிவு செய்ய வேண்டிய நிலையும், வாய்ப்பும் தான் பட்டிக்காடு தளம் தொடந்து இயங்க ஊக்கமாக இருக்கிறது, இருக்கும். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் பட்டிக்காடு தளத்தின் கட்டுரைகளும், பதிவுகளும் மக்கள் மனதில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர உதவியாய் இருக்கும்.
– இதுவும் கடந்து போகும்.