பத்தொன்பதாவது தொகுதியின் லிங்க்…
சூசன் சில விசயங்களை செய்யச் சொன்னார்.
அது என்னவென்றால், இன்று நடந்த எல்லா சம்பங்களையும் விலாவரியாக எழுதி ஒரு மெயில் அனுப்பச் சொன்னார். கூடவே என்னுடைய இடம் மாறுதல் கோரிக்கை என்னவென்றும், அது தனக்கு செய்து கொடுக்காத பட்சத்தில் இந்த வேலையே வேண்டாம் என்றும் அக்கடிதத்தில் எழுதச் சொன்னார்.
நான் நேராக அருகில் இருந்த மும்பை புறநகர் இரயில் நிலையம் சென்றேன். பகல் வேளையில் மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் பெரிதாக கூட்டமிருக்காது. அங்கே மடிக்கணினியுடன் அமர்ந்து வேலை செய்வதைப் போன்று தோதான ஒரு இடத்தில் அமர்ந்து, முதலில் சூசன் சொன்ன அலுவலக வேலையை முடித்தேன்.
என் பிரச்சனைகளை விட இந்தப் ப்ராஜெக்ட் ரொம்பவும் முக்கியம் என்று எனக்குப் பட்டது. இப்போது எல்லா மும்பை புறநகர் இரயில் நிலையங்களிலும் இரயில்வையர் வைஃபை வசதி இருந்தது எனக்கு வசதியாக இருந்தது. என் வேலையை சுலபமாக முடிக்க அந்த இணைய வசதி எனக்கு உதவியது.
பிறகு இன்று நடந்ததை விவரமாக ஒரு புகார் கடிதமாக எழுதியிருந்தேன். அதனை சூசனுக்கும் அவர் எனக்கு அனுப்பிய சில மெயில் ஐடிக்களுக்கும் அனுப்பி வைத்தேன். அந்த மெயில் ஐடியை ஆபிஸ் மெயிலில் டைப் செய்தவுடன் அது, சிஇஓ, சிஓஓ போன்ற பெருந் தலைகளின் ஐடிக்கள் எனத் தெரியவந்தது. மேலும் இந்த அந்த மெயிலை மஹாராஸ்டிரா பெண்கள் நல அமைச்சகத்திற்கும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கும், எங்கள் நிறுவனத்தின் போர்ட் மெம்பர்ஸ்களுக்கும், அனைத்து முன்னனி பத்திரிக்கை மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தேன்.
ஐடியா எல்லாம் சூசனுடையது. யார் யார் மெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் தனியாக ஒரு மெயிலே எனக்கு அனுப்பியிருந்தார். அந்த மெயிலைப் பார்த்தப் பிறகு தான் எனக்கு இந்த ஹெச்.ஆர் நாயை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையே பிறந்தது.
சூசனுக்கு இந்த ப்ராஜெக்ட் ரொம்பவும் முக்கியம். அதில் என் பங்கு என்னவென்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவருக்கு என்னை விட்டுக் கொடுக்க மனமில்லை. ஒரு நல்ல மேலாளருக்கு சிறந்த குணமிது. ஒரு கார்பரேட் நிறுவனத்தில் வேலைச் செய்யும் பெண்ணுக்கும் நல்ல மேலாளர் அமைய வேண்டும், இல்லையேல் திருமணம் முடிந்தக் கையோடு, போங்கடா நீங்களும் உங்களின் வேலையும் என்று பல பெண்கள் வேலைக்குப் போவதை நிறுத்தியதை நானே பார்த்திருக்கிறேன். நல்ல மேலாளர் என்பவர், தமது நிறுவனத்திற்கு, ஒரு பணியாளர் எவ்வளவு முக்கியம் என்று உணர வைப்பாவாராக இருக்க வேண்டும். அப்போது தான் பணியாற்றுபவருக்கும் ஒரு முக்கியத்துவம் இருப்பதைப் போன்று மனநிலை ஏற்படும். எந்த ஒரு நிறுவனத்திற்கும் அதன் பணியாளர்கள் அதன் மீது நம்பிக்கை வைப்பது ரொம்பவும் முக்கியம். அப்போது தான் நிறுவனமும் வளரும், பணியாளர்களும் வளர்வார்கள்.
எல்லாம் முடித்து நான் தங்கியிருந்த கோரேகான் பகுதியிற்கு இரயில் ஏறினேன்.
என் நினைவெல்லாம் எங்கேயோ இருந்தது. அமைதியாய் பெண்கள் பெட்டியில் கிடைத்த சீட்டில் அமர்ந்துக்கொண்டேன். அப்போது மீண்டும் வெறுமையை உணர்ந்தேன்.
நான் இறங்க வேண்டிய இரயில் நிலையம் வந்துக் கூடத் என் கவனமெல்லாம் இன்று நடந்த சம்பங்களைச் சுற்றியே இருந்தது. கோரேகான் இரயில் நிலையத்தில் இரயில் நின்ற பிறகு தான் நான் இறங்கவே ஆயத்தமானேன்.
நான் இறங்கவும், இரயில் கிளம்பவும் சரியாக இருந்தது. நான் என் அறை இருக்கும் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இரயில் நிலையத்தின் நான்காவது எக்ஸிடில் சென்றால் என் அறையை அடைவது எளிது என்பதால், நடைப் பாதையில் மேலே ஏறினேன்.
அப்போது, “ஹாய். தேவி. ஐயம் தேவா” என்று ஒரு குரல் கேட்டது.
(அப்பாட ஒரு வழியாக நாயகன் – நாயகி பெயரை சொல்லியாச்சி. இதுக்கு இவ்வளவு பில்டப்பா என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்குப் புரிகிறது.)
நான் திரும்பிப் பார்க்கவும், அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தேறியது. எந்தப் பெண்ணிற்கும் நடக்கக் கூடாத சம்பவமது.
அது.
இருபத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்…
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு