இருபத்தி இரண்டாவது பகுதியின் லிங்க்…
அப்போது, “ஹாய். தேவி. ஐயம் தேவா” என்று ஒரு குரல் கேட்டது.
நான் திரும்பிப் பார்க்கவும், அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தேறியது. எந்தப் பெண்ணிற்கும் நடக்கக் கூடாத சம்பவமது.
நான் திரும்பும் தருவாயில், எனக்கு முன்னே வந்த ஒரு இருபது வயதுக்கூட ஆகாத பையன் ஒருவன் என் வலது மார்பை அமுக்கிவிட்டு ஓடிவிட்டான்.
எனக்கு அப்படியே உலகமே இருண்டு விட்டது.
என் உடல், என் உரிமை. என் உரிமையை, எப்படி அவன் மீறலாம். யார் அவனுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது. என்ன தெரியும் இருந்தால், ஒரு பெண்ணின் மார்பை ஒரு சின்னப் பையன் அமுக்கிவிட்டு ஓடுவான்.
என் எனக்கு இந்த நாள் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று எனக்கு கோவம் கோவமாக வந்தது. காலையில் ஒருவன் என்னை, வேலை இடமாறுதலுக்காக படுக்கைக்கு அழைக்கிறான். மதியத்தில் ஒரு சிறுவன் என் அனுமதியின்றி என் மார்ப்பை அமுக்கி அவன் சுகம் காண்கிறான். இந்த உலகில் பெண் என்பவள் வெறும் உடல் தானா? என்ன உலகம் இது. பெண்ணாகப் பிறந்ததற்கு கூனிக்குறுகி நிற்கிறேன்.
**************************
இங்கே சட்டங்களுக்குப் பஞ்சமில்லை. கோர்ட், போலிஸ், கேஸுகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், பெரும்பாலனவர்கள் தண்டிக்கப்படுவதேயில்லை. அந்த தைரியத்தில் தான் மீசை முளைக்காத சிறுவர்கள் கூட இங்கள் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையே இங்கே பெரும்பாலும் கேள்விக்கு உள்ளாகப்படுகிறது. இங்கே எப்போதும், பாதிக்கப்பட்ட பெண் தான் நான் பாதிக்கப்பட்டேன் என்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அது மாற வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களே தாங்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும். பல ஐரோப்பிய நாடுகளில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டி சட்டங்கள் இருக்கின்றன. இந்தியாவில் எப்போது அப்படி ஒரு நிலை வருமோ?
இங்கே பெண்கள் மீது பத்து அத்துமீறல்கள் நடந்தால், ஒன்றுக்கூட புகாராகப் பதியப்படுவதில்லை. அப்படித்தான் இன்றைய நவீன இந்தியா இருக்கிறது. இப்படி எல்லா தடைகளையும் மீறு பெண்கள் சாதிக்கும் கதையைக் கேட்கும் போது ஏதோ நானே சாதித்த்தைப் போன்றதொரு உணர்வு எனக்குள் ஏற்படும். அதே சமயம் இந்திய நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள் எல்லாம் எனக்கே நடந்ததைப் போல நான் உட்கார்ந்து கண் கலங்கியது உண்டு. இந்த உலகம் எந்தக் கேள்வியுமில்லாமல் பெண்ணிற்கு கொடுத்திருக்கும் ஒரு சுதந்திரம் அவளது கண்ணீர்.
****************************
நான் அடித்த அடியில் என் செருப்பின் ஹீல்ஸ் பட்டு அவன் தலையில் இரத்தம் வர ஆரம்பித்தது. அந்தத் தருணத்தில் நான் ரொம்பவே பயந்துவிட்டேன். அவன் செத்துவிடுவானோ என்றுக் கூட ஒரு நொடி தோன்றியது. அந்த இரத்தம் என் முகத்திலும் பட்டது. நான் அடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.
நல்ல வேளையாக அது சின்ன காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது.
“கியா… லடுக்கி…” என்று என் வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளைக் கொண்டு அவனைத் திட்ட ஆரம்பித்தேன். எனக்கு அவ்வளவு கெட்ட வார்த்தைகள் தெரியும் என்று எனக்கு அப்போது தான் தெரியும். ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து அவனைத் திட்ட ஆரம்பித்தேன். இதனைக்கும் அவன் மீது எந்தத் தவறும் கிடையாது. அவன் என்னை அந்த நொடியில் அழைக்கவில்லை என்றால், என் உடலை அத்துமீறியவனுக்கும் இன்னும் வசதியாகப் போயிருக்கும். இவன் அழைத்த்தால், அவன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு ஓடிவிட்டான். ஒரு வகையில் இவன் என்னைக் காப்பாற்றியவன் தான். ஆனாலும் அவனை நான் அடித்தேன். இப்போது கெட்ட வார்த்தைகளால் வசைப்பாடிக் கொண்டிருக்கிறேன்.
இந்த கெட்ட வார்த்தைகள் கூட பெண்களை வசைப்பாடும் வார்த்தைகளாகவே இருக்கின்றன. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. பெண்களின் உடல் பாகங்களை ஏன் கெட்ட வார்த்தைகளாக ஆண்கள் உலகில் புலங்குகிறது என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. பெண்களுக்குள் சண்டை வந்தாலும் அதே வார்த்தைகளைத் தான் பயன்படுத்துகிறார்கள். நானே பல முறை அது போன்ற சண்டைகளைப் பார்த்திருக்கிறேன்.
“ஒண்ணுமில்ல… ஒண்ணுமில்ல… சாரி… சாரி…” என்று அவன் என்னிடன் இரு கைக்கூப்பி கெஞ்சினான்.
ஓங்கியக் கையை இறக்கினேன்.
என் கண்களில் கண்ணீர் கொப்பளித்தது. தாரைத் தாரையாக கண்ணீர் வழிந்தது. அவமானமாக உணர்ந்தேன். இந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று தோன்றியது. அவனை அடித்ததில் என் செருப்பு நார் நாராக கிழிந்துப் போயிவிட்டது. செருப்பை கழற்றி அங்கே இருந்த குப்பைத் தொட்டியில் வீசி விட்டு நான் தங்கியிருக்கும் அறையை நோக்கி, வெறும் காலில் விரைந்தேன்.
அறைக்குள் நுழைந்தவுடன் கதவைப் பூட்டிக்கொண்டேன்.
இருபத்திநான்காவது பகுதியின் லிங்க்…
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு