இருபத்திநான்காவது பகுதியின் லிங்க்…
நான் போன் அடித்த அரை மணி நேரத்தில் என் கைடு தாஸ் வந்து சேர்ந்தார். வந்தவர், என்னைப் பார்த்து பதறிவிட்டார். என்ன ஆச்சு, ஏதாச்சு, இரத்தமெல்லாம் வந்திருக்கு என்று தமிழில் தடுமாறாமல் பேசினார்.
நான் இரயில் படியருகே நின்றுக்கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமாக இருத்ததால் என்னை யாரோ தள்ளிக்கொண்டு இறங்க முயற்சி செய்ய, நான் இரயிலில் இருந்து கீழே விழுந்துவிட்டேன். இடது கையை ஊன்றியதில் மணிக்கட்டுப் பகுதியில் லேசான வலியிருக்கிறது. கீழே விழுந்ததில் தலையில் சிறிய சிராய்ப்பு. அவ்வளவு தான். இதில் பதற்றப்பட ஒன்றுமில்லை என்று தாஸிடம் சொன்னேன். மும்பை லோக்கல் இரயில் முதன் முறையாக பயணித்ததில் கொஞ்சம் தடுமாறிவிட்டேன். அடுத்த முறை கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றேன் அவரிடம்.
(பின்னே தேவி செருப்பால் அடித்தாள் என்றா சொல்ல முடியும். நம்ம ஹீரோவுக்கும் தன் மானம் இருக்குமில்ல)
ஒரு மனிதனுக்கு பதற்றமோ, ஆபத்தோ வந்தால், அதனை முதலில் வெளிப்படுத்துவது தன் தாய் மொழியில் தான். என் கைடு தாஸ், நான் மும்பை வந்ததிலிருந்து அரைகுறை தமிழில் தான் பேசிக்கொண்டிருந்தார். இப்போது கொஞ்சம் சரளமாக அவருக்கு தமிழ் வந்துவிட்டது. அதற்காகத் தான் தேவி என்னை அடித்தாளோ என்று நினைவிற்கு வந்துப் போனது. என்னை அடித்தற்கு பதிலாக என் கைடு தாஸை நாலு காட்டி காட்டி இருக்கலாம். இன்னும் சரளமாகத் தமிழ் இவருக்கும் வந்திருக்குமோ என்னவோ. இதனை நினைக்கையில் என்னையறியாமல் எனக்கு சிரிப்பு வந்தது.
“வாங்க. ஹாஸ்பித்திரிக்கு போகலாம்” என்று படியில் சாய்ந்திருந்த என்னை கைத்தாங்கலாக தூக்கி, அருகில் இருந்த ஒரு பிரபல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.
அந்த மருத்துவமனையில், தலையில் சிறிய சிராய்ப்பு மட்டும் இருந்ததால், அதற்கு டிரஸ்ஸிங்க் செய்துவிட்டு, ஒரு டிடி இஞ்சக்ஷன் போட்டனர். அதற்குள், என் இடது மணிக்கட்டு சற்றே வீங்க ஆரம்பித்திருந்தது.
அதனை டாக்டரிடம் காண்பித்தேன். எதற்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துக்கொண்டு வந்துவிடுங்கள் என்றார்.
நானும் தாஸும் எக்ஸ்ரே அறையை நோக்கிச் சென்றோம். அங்கே கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டு மணி நேரமாகிவிட்டது, நாங்கள் எக்ஸ்ரே அறையிலிந்து எக்ஸ்ரேவை வாங்கிக் கொண்டு மீண்டும் டாக்டரிடம் வருவதற்கு.
டாக்டர், என் இடது மணிக்கட்டில் சிறய ஹேர்லைன் கிரக் இருக்கிறது. மூன்று வாரங்களுக்கு கட்டு கட்டியிருந்தால் அதுவாக சரியாகிவிடும், பெரிதாக ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார்.
மொத்த பில் தொகை ஐந்தாயிரத்தை தாண்டியிருந்தது. என்னுடன் வந்த கைடு தாஸ், இந்த மருத்துவமனையில் கொள்ளை அடிக்கிறார்கள் என்று என்னிடம் புலம்பிக்கொண்டு வந்தார்.
என் மைட் வாய்சில் பின் வருமாறு நினைத்துக்கொண்டேன் “தாஸு… நீங்க தானே இந்த மருத்துவனைக்கு என்னைய கூட்டிக்கிட்டு வந்ததீங்க. இப்ப என்ன, அவன் கொள்ளையடிக்கிறான், இவன் கொள்ளையடிக்கிறான்னு புலம்பிக்கிட்டு. சும்மா இருங்க தாஸு” என்று.
உபர் புக் செய்து, மலாட் பகுதியில் இருந்த என் ஓட்டல் அறைக்கு வருவதற்குள் மணி எட்டைத் தாண்டியிருந்தது. ஸ்விக்கியில் சிக்கன் ரைஸ் ஆடர் செய்துவிட்டு என் அறையில் காத்திருந்தேன். தாஸ் இன்று என்னுடனே அறையில் தங்கிக் கொள்ளவா என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
எனக்கு உதவி செய்வதாக இருந்தால், என் நண்பன் குமாருக்கு மட்டும் இந்தத் தகவலைச் சொல்லாமல் இருங்க என்று சொன்னேன். அதற்கு அவர் நான் அப்போதே சொல்லிவிட்டேன் என்றார்.
“எதுக்கு தாஸு என்னைய கேட்காம அவன் கிட்ட சொன்னிங்க. தேர இழுத்து தெருவுலவுட்ட கதயாகப் போவுது. போங்க தாஸு” என்றேன்.
“ஸாரி. சார். ஏதோ அவசரத்துல சொல்லிட்டேன்”
“சரி விடுங்க”
“சார். நாளைக்கு புரோகிரம் எல்லாம் கேன்சல் செஞ்சிடலாமா?”
“எதுக்கு கேன்சல் செய்யறிங்க. நான் நல்லா தான் இருக்கேன்.”
“நீங்க ஏற்கனவே முடிவெடுத்த மாதிரி பத்து மணிக்கே வந்துடுங்க” என்றேன்.
“அப்போ நான் வரேன் சார்.” என்று சொல்லிவிட்டு தாஸ் கிளம்பிவிட்டார்.
என் போன் அடித்தது. எடுத்துப் பார்த்தேன். ஸ்விக்கியில் இருந்து டெலிவெரிபாய் அழைத்திருந்தான், என் அறை என்னைச் சொல்லி, பார்சலைக் கொண்டு வந்து மேலே கொடுத்துவிடுமாறு அவனிடம் சொன்னேன். அவனும் சரியாக கொண்டு வந்துக் கொடுத்துவிட்டுச் சென்றான். டிப்ஸாக இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். வேண்டாம் சார் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
நான் என் அறைக் கதவை மூடிவிட்டு, பார்சலைப் பிரித்தேன். சிக்கன் ரைஸின் மனம் அருமையாக இருந்தது. எடுத்துச் சுவைப்பதற்குள், என் போன் அடித்தது. யாரேன்று எடுத்துப்பார்த்தேன்.
குமார் அழைக்கிறான் என்று காட்டியது என் போன்.
இருபத்திஆறாவது பகுதியின் லிங்க்…
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு