இருபத்திஎட்டாவது பகுதியின் லிங்க்…
முதல் துளியை ரூசிப்பதற்குள், “தம்பி” என்று, ஒரு குரல் கேட்டது, கூடவே, என் தோளில் யாரோ தட்டுவதைப் போலிருந்தது.
நான் திரும்பிப் பார்த்தேன்.
ராமசாமி ஐயா என் பின்னே நின்று, என் தோளைத்தட்டி என்னை அழைத்தார்.
“ஐயா. நீங்களா?” என்றேன்.
“என்ன தம்பி. தலையில, கையில எல்லாம் கட்டு கட்டியிருக்கிங்க” என்றார் பதற்றமாக.
இவரிடம் உண்மையைச் சொல்லலாம் என்று தான் முதலில் என் மனதில் தோன்றியது. ஆனால் சுற்றி நிறைய நபர்கள் இருந்ததால் எனக்கு ஒரு பெண்ணிடம் செருப்பில் அடி வாங்கியதை அவரிடம் சொல்லத் தோன்றவில்லை.
குமாரிடம் சொன்ன அதே கதையை அவரிடமும் சொன்னென்.
அவர் என்ன நடந்தது என்று கேட்டுவிட்டு, கண்கலங்கிவிட்டார்.
“என் தோளைப் பற்றி, தம்பி, என்னை மன்னித்துவிடுப்பா. நான் தான் உன்னைய லோக்கல் டிரைன்ல போக சொன்னேன்”
அவர் கண்கள் கலங்கியது.
“எங்க இருந்தோ வந்த பையன் இப்படி கட்டுப் போடற அளவுக்கு ஆயிடுச்சே” என்று மிகவும் வருத்தப்பட்டார்.
( வாசகர்களின் மைண்ட் வாய்ஸ்: இப்படி அவனைக் கட்டுக் கட்ட வெச்சதே உன் பேத்தி தான் பெரியவரே. அது எப்ப நம்ம ஹீரோவுக்கு தெரிய போகுதோ. இவன் எழுதற வேகத்த பாத்தா இன்னும் 30-40 எபிசோட்ஸ் போகும் போலயே. இது எல்லாம் பாவம் மை சன்.)
டீயை குடிங்க தம்பி என்று அவர் கண்களைத் துடைத்துக்கொண்டு சொன்னார். அவரும் ஒரு ஈரானி சாய் ஆடர் செய்தார். டீ மாஸ்டர் அவருக்கு வந்து பவ்யமாக வந்துக் கொடுத்தது, அந்தக் கடைக்கு ராமசாமி ஐயா எவ்வளவு முக்கியமான வாடிக்கையாளர் என்று தெரிந்தது.
எனக்கு அடிப்பட்டதைப் பற்றி மீண்டும் ராமசாமி ஐயாவிடம் பேசக்கூடாது என்று தோன்றியது. அவரும் அதனைப் பற்றி என்னிடம் மீண்டும் கேட்கவில்லை. ஆனால் அவர் மனதில் ஒரு வித குற்ற உணர்ச்சி இருந்தது. அதனை எப்படிப் போக்குவது என்று எனக்குத் தெரியவில்லை.
“தம்பி. நிறைய வேல இருக்குனு சொன்னீங்க. இந்த நிலைமையில எப்படி” என்றார்.
“ஐயா வந்த வேலை முக்கியம். அத தள்ளிப்போட வேணாம்னு பாக்குறேன். சின்ன அடி தான ஐயா சமாளிச்சிக்களாம். என் கூட என் கைடு தாஸ் இருக்காரே. அதனால எனக்குப் பிரச்சனையில்ல ஐயா. நீங்க கவல படாதீங்க” என்றேன்.
பேசிக்கொண்டே, ஈரானி சாயைக் குடித்து முடித்தோம். நான் குடித்த ஈரானி சாய்க்கும் சேர்த்து அவரே பில் கட்டினார். என் பர்ஸை அவர் எடுக்கவே விடவில்லை.
பேசிக்கொண்டே அவர் கடையை நோக்கி நடந்தோம்.
அவருடன் கடையில் அமர்ந்துக்கொண்டேன். அங்கே ஒரு மாரத்திப்பெண் தான் கடையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவர் கல்லாவுடன் சரி. முதன் முதலில் நான் ராமசாமி ஐயாவைப் பார்த்தப் பொழுது அந்தப் பெண் விடுமுறையில் இருந்திருப்பாள் போல.
மலாட் புறநகர் இரயில் நிலையம் நோக்கி விரைந்துக்கொண்டிருந்த பலர், அவர் கடையைத் தாண்டிப்போகையில் அவரை பார்த்து வணக்கம் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் போல. இதை நான் கவனித்ததை அவரும் கவனித்தார்.
“தம்பி. எனக்கு வணக்கம் வைக்கிறவங்க மூக்கால் வாசி பேரு தமிழர்கள் தான் பா”
“அப்படியா. பாத்தா அப்படி தெரியலயே ஐயா”
“பஞ்சம் பொழைக்க வந்தாச்சு. அந்த ஊருக்கு ஏத்த மாதிரி மாத்திக்க வேண்டியதா இருக்குதே. என்னப்பா பண்றது”
அவர் சொன்னதற்கு ஒருவிதமாக தலையாட்டி வைத்தேன்.
ராமசாமி ஐயாவிடம் பேசிக்கொண்டிருந்தால் மணி போவதே தெரியவில்லை.
மணி பத்தை நெருங்கையில் தாஸ் போன் அடித்தார், “சார். வந்துட்டேன்” என்றார்.
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு