ஒரு ஃபுல் பாட்டிலையும் காலி செய்துவிட்டேன். எத்தனை சிகரெட் புகைத்தேன் என்றே தெரியவில்லை. போதை தலைக்கு ஏறி, சோபாவிலேயே உறங்கிவிட்டேன்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக இப்படித் தான் ஒரே குடியாகப் போய்க்கொண்டிருகிறது. நடந்த எல்லாவற்றை தாத்தாவிடம் எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே சோபனா ஏற்பாடு செய்துக் கொடுத்த ரூமிலேயே எவ்வளவு நாள் தான் அடைந்துக்கிடப்பது? எங்காவது வெளியில் சென்று வரலாம் என்று அவ்வப்போது தோன்றும். ஆனால் அன்று ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த எல்லாம் சம்பவங்களும் என்னை மனதளவில் கடுமையாக பாதித்திருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எனக்கு வெளியில் செல்லவே அச்சமாக இருந்தது. அதனால் குடியின் பிடியிலேயே நேரத்தைக் கழித்தேன்.
இன்று எவ்வளவு நேரம் உறங்கியிருப்பேன் என்றே தெரியவில்லை. கண் திறந்துப் பார்த்தப்பொழுது நல்ல வெளிச்சமாக இருந்தது. எப்படியும் காலை 10-11 இருக்கும் என்று நினைத்தேன். இரவு குடித்த வோட்காவின் போதை இன்னும் கொஞ்சம் மீதம் இருந்தது. தம் அடிக்க வேண்டும் போல இருந்தது. இரவே சிகரெட் பாக்கெட்டை காலி செய்தது நியாபகம் வந்தது.
என் போன் அடித்துக்கொண்டேயிருந்தது. ஆனால் என்னால் என் போனைக் கூட எழுந்து எடுக்க முடியவில்லை. ஷவரில் நெடுநேரம் இருந்ததால் உடலெல்லாம் அடித்துப் போட்ட மாதிரி வலி.
மீண்டும் மீண்டும் போன் அடித்துக்கொண்டேயிருந்தது. நேற்று நடந்த எல்லா சம்பவங்களும் என் நினைவிற்கு வந்துப் போனது. எரிச்சலாக இருந்தது. எங்காவது ஓடிவடலாம் என்று தோன்றியது. எங்கே போவது என்று தெரியாவிட்டாலும், மும்பையில் இருக்க பிடிக்கவில்லை.
தாத்தாவிடம் நடந்ததை சொல்லலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் எனக்குள் இருந்தது. அவரிடம் சொன்னால் ஆறுதலாக இருக்கும் தான், ஆனால் இந்த வயதிலும் அவருக்கு என்னைப் பற்றிய கவலை தான் அதிகமாகும்.
அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று எனக்கு தெரியவில்லை.
மீண்டும் மீண்டும் போன் அடித்துக்கொண்டேயிருந்தது.
அந்தப் போனை எழுந்து எடுக்க எனக்குள் சக்தியில்லையா? அல்லது யாருடனும் பேச விருப்பமில்லாததால் போனை எடுக்கவில்லை என்று என்னால் சரியாக சொல்ல முடியாது. அதனால் சோஃபாவிலே படுத்தேயிருந்தேன்.
கை நீட்டினால் இருக்கும் டீப்பாயில் தான் என போன் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் நான் அதனை எடுக்க முயலவில்லை.
அந்த நேரம் பார்த்து காலிங் பெல் அடித்தது.
எனக்கு இன்னும் எரிச்சலானது. யாரட இந்த நேரத்தில் பெல் அடிப்பது என்று ஒரு நொடி யோசித்தேன். யாராக இருந்தால் என்ன என்று புரண்டுப் படுத்தேன்.
மீண்டும் பெல் விடாமல் அடித்தது.
சோம்பலாக எழுந்துச்சென்று கதவைத் திறந்தேன்.
என் தோழி சோபனா நின்றிருந்தாள்.
“ஏண்டி. எவ்வளவு தடவ போன் பண்ணுறது” என்றாள்.
“என்னடி அவ்வளவு அவசரம். நைட்டு தானே குடிச்சிட்டு உன்கிட்ட போன் பேசிட்டு போதையில படுத்தேன்” என்றேன் பாவமாக, அவள் வந்த அவசரத்தை புரிந்துக்கொள்ளாமல்.
“தெரியும் டி. நீ குடிச்சிட்டு மட்ட ஆயிருப்பனு”
“அதான் நேர்லயே வந்து உன்னைய கூட்டிக்கிட்டு போகலாம்-னு வந்தேன்” கொஞ்சம் கோபத்துடனே சொன்னாள்.
நான் அந்தக் கோபத்தைப் பொருட்படுத்தாமல், “எங்கடி கூட்டிக்கிட்டு போகப்போற. உங்க ஊரு திருச்சிக்கா?” என்றேன் அவளிடம் நக்கலாக.
அவள் எப்போதும் கொஞ்சம் பொறுமையானவள். என்னைப் போன்று அவசரக்காரியுமல்ல, கோபக்காரியுமல்ல. ஆனால் இன்று அவள் கொஞ்சம் நிதானம் இழந்திந்தாள். என்னவோ தவறாக இருக்கிறது என்று மட்டும் என்னால் யூகிக்க முடிந்தது.
“சரி. என்ன இவ்வளவு அவசரம்?” என்றேன்.
அவளிடம் அதற்கு பதிலில்லை. அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
என்னை போனை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.
என் போனைப் பார்த்தேன். தாத்தாவிடம் இருந்து 12 மிஸ்டுகால்கள் இருந்தன. சோபனாவிடமிருந்து 23 மிஸ்டுகால்கள் இருந்தன. இன்னும் சில நம்பர்களிலிருந்தும் மிஸ்டுகால்கள் இருந்தன. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
முப்பத்தி இரண்டாவது பகுதியின் லிங்க்…
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு