Tuesday, January 14, 2025
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 32

ஒண்ணுமில்ல… பகுதி 32

முப்பத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்…

சோபனா என்னுடன், என் அலுவலகத்தில் பணிப்புரியும் பெண். தமிழ்நாட்டில், திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டவள். நானும் அவளும் ஒரே ப்ராஜெக்ட்டில் வேலை செய்கிறோம். அவள் புனேயில் டிரைனிங் முடித்து இந்த ப்ராஜெக்டிற்காக புதிதாக வந்திருக்கிறாள். நானும் சூசனும் தான் இவளை போனில் இண்டர்வியூ செய்தோம். அப்போது அவள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்று தெரியாது. இங்கே வந்த சில நாட்களில் நான் மட்டுமே தமிழ் தெரிந்தவள் என்பதால் என்னுடன் நன்றாக பழகினாள். எனக்கும் அவளது குணம் பிடித்திருந்தால் இருவரும் ரொம்பவும் நெருக்கமாகிவிட்டோம். என் பெஸ்டி அவள். எனக்கு தோன்றிய எல்லா விசயங்களையும் (எல்லாமா? என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது, எதற்கும் நீங்கள் ஒரு மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டுகிறேன்)  அவளிடம் பகிர்ந்திருக்கிறேன்.

என் பள்ளிக் கல்லூரி தோழிகள் என பலர் இந்த மும்பையில் இருந்தாலும், இவள் அளவிற்கு யாரும் நெருக்கமில்லை. தினமும் இவளை என் அலுவலகத்தில் சந்திப்பதால் கூட எனக்கு இவள் நெருக்கமானவளாகத் தோன்றலாம். அவளுக்கும் மும்பையை சுற்றிப் பார்க்க நான் மட்டுமே துணை. உடைகளிலும் அல்ட்ரா மார்டன். ஆனால் மற்றதில் சரியான பட்டிக்காடு. தேவையில்லாமல் இவள் யாரிடமும் அவசியமின்றி பேச மாட்டாள்.

இவள் என்னைப் போலவே சற்று சதைப்பிடிப்புடன் இருப்பாள். அதனாலேயே அவ்வளவு அழகாக இருப்பாள். பல பெண்களே பொறாமைப்படும் அழகு. ஆனால், எத்தனைப் பேர் இவளிடம் காதலைச் சொன்னாலும், நாசுக்காக மறுத்திடுவாள். வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளாடு இருக்கிறவள்.

அவளின் அப்பா மத்திய வருமான வரித்துறையில் பணிப்புரிகிறார். தற்சமயம் சென்னையில் வேலையில் இருக்கிறாள். ரொம்பவும் கண்டிப்புக்கொண்டவர். இவள் ஒரே பெண் தான். உடன் பிறந்தவர்கள் எவருமில்லை. இவளின் அம்மா வீட்டிலேயே சேலைகளை வாங்கி விற்று வருகிறார். மாதமாதம் நான்கு நாட்களாவது விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னைக்குக் கிளம்பிவிடுவாள். இவளால் போக முடியாத மாதங்களில் இவளின் பெற்றோரே கிளம்பி வந்திவிடுவார்கள். சுத்தம் விரும்பி. ரொம்பவும் பொறுப்பானவள்.

ராபினைப் பிரிந்த சமயங்களில் இவள் துணையின்றி என்னால் மீண்டிருக்க முடியாது. இன்னும் முழுமையாக மீள முடியாவிட்டாலும், நான் இவ்வளவு மீண்டதே தாத்தவும், இவளும் இருந்ததால் தான். தாத்தா நேரடியாக சொல்லமுடியாத பல விசயங்களை இவள் மூலமாக என்னிடம் தெரியப்படுத்துவார். எனக்கு பல சமயங்களில் இது கோபத்தை வரவழைத்தாலும், அவர் இவளிடம் சொல்லும் விசயங்கள் எனக்கு நியாயமாக பட்டதால் நான் அமைதியாக இருந்துவிடுவேன். இதனை என் தாத்தா என்னிடமே சொல்லியிருக்கலாமே என்று சில நேரங்களில் தோன்றும். இவளே சில நேரங்களில், அவளுக்குப் பிடிக்காததை செய்யும் பொழுது தாத்தாவுக்கு இது பிடிக்கவில்லை என்று என்னை ஏமாற்றி அதனை செய்யவிடாமல் தடுத்திருக்கிறாள்.

தாத்தாவும், இவளும் சொல்லி நான் கேட்காத ஒரு விசயம் ராபினுடன் லிவ் இன்னாக சென்றதை. திருமணம் செய்துக்கொண்டு போகச்சொன்னார்கள். எனக்கு என் அப்பா-அம்மாவின் திருமண முறிவிற்குப் பிறகு திருமணத்தின் மீதே நம்பிக்கையில்லாமல் இருந்தேன். அதனால், அவர்கள் சொன்னது என் காதில் ஏறவேயில்லை. அப்போது இருவரும் என் முடிவிற்கு தடையாகயில்லை. துணையாகவே இருந்தனர். அவர்களின் பயத்தை மட்டுமே என்னிடம் வெளிப்படுத்தினர். இப்போது கூட என் முடிவிற்காக நான் வருந்தவில்லை. ஆனால் தவறான ஆளை தேர்தேடுத்திவிட்டோமே என்று வருத்தம் தான் எனக்கு உள்ளது.

இங்கே எப்போதும், காதல் தோற்பதில்லை. காதலர்களே தங்களை தோற்கடித்துக் கொள்கிறார்கள். பழியை எளிதாக காதல் மீது சுமத்திவிடுகிறார்கள். அசடு வழிவதும் காதலர்களே, அவசரப்படுவதும் காதலர்களே, அதிகாரத்தை நிலைநாட்ட முயல்வதும் காதலர்களே, அத்துமீறுபவர்களும் காதலர்களே, துணையை அலட்சியப்படுத்துவதும் காதலர்களே, வாழ்க்கை மீதும், எதிர்காலத்தின் மீதும் அச்சத்தை விதைப்பதும் காதலர்களே, ஒருவரை ஒருவர் அடிமைப் படுத்த முயல்வதும் காதலர்களே. எல்லா தவறுகளையும் இவர்களே செய்துவிட்டு மீண்டும் மீண்டும் காதலை கொச்சைப் படுத்துவது அபத்தம். அநியாயம்.

காதல் கண்ணாடி போன்றது, நம் அகம் புறத்தை அப்படியே அச்சு பிசுகாமல் பிரதிபலிப்பது தான் காதல். நமது அகத்தில் நஞ்சை வைத்துக்கொண்டு, காதலைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. தோற்கும் காதலர்களில் யாரேனும் ஒருவர் நிச்சயம் அதிகம் காயமடைந்திருப்பார்கள்.

என் காதலில் நான். தவறான துணையை தேடிக்கொண்டது நான் தான். என் காதல் உண்மையானது, புனிதமானது, உன்னதமானது. ஜாதி, மதம் கடந்தது. பொருளாதார வேற்றுமைகளைக் கடந்தது. ஆனால் போலியான மனிதனை ஆடையாளம் காணமுடியாத அளவிற்கு காதலில் நான் முழ்கியிருந்தேன்.

முப்பத்திமூன்றாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு