முப்பத்தி நான்காவது பகுதியின் லிங்க்…
அந்தேரி காவல் நிலையத்திற்குள் தயக்கத்துடனே சென்றோம். காவல் நிலையத்திற்குச் சென்ற அனுபவம் இதற்கு முன் எனக்கு இருந்ததில்லை. அதனால் யாரை சந்திக்க வேண்டும் என்று தெரியவில்லை. போலிஸ் ஸ்டேசன் மாதிரியே தெரியவில்லை. சந்தக்கடை மாதிரி பெரும் கூட்டமிருந்தது. அருகிலேயே அந்தேரி புறநகர் இரயில் நிலையமும், அந்தேரி மெட்ரோ இரயில் நிலையமும் இருந்ததால், அந்த இடமே பெரும் கூட்டமாக இருந்தது. அந்தேரி இரயில் நிலையத்திற்கு அருகிலேயே இந்த போலிஸ் ஸ்டேசன் இருப்பது தெரிந்திருந்தால், நானும், சோபனாவும் புறநகர் ரயிலேயே வெகுவிரைவாக வந்திருப்போம்.
அவசரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்று நமக்குத் தெரிவதில்லை. நிதானத்தை தவிரவிடும் பொழுதே தவறுகள் நடக்கத் துவங்குகிறது.
அந்தேரி போலிஸ் ஸ்டேசனில் யாரைப் பார்க்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தோம். அங்கே இருந்த பெண் எஸ்.ஐ.யை போய் பார்க்கும் படி சொன்னார் ஒரு காவலர். அவர் சொன்னவரை சந்தித்து தாத்தாவைப் பற்றி விசாரித்தோம்.
இஸ்பெக்டர் ரூமில் அவர் இருப்பதாகவும், அங்கே விசாரனை நடந்துக் கொண்டிருப்பதாகவும், மேலும் நீங்கள் வந்தால், அங்கே அழைத்துவரச் சொல்லியிருக்கிறார் என்று எங்களை அழைத்துக்கொண்டு இஸ்பெக்டர் ரூமிற்கு விரைந்தார்.
குழப்பத்துடனேயே அங்கே சென்றோம்.
அங்கே சென்றவுடன் எனக்குப் புரிந்துவிட்டது. குறி தாத்தாவிற்கு அல்ல, எனக்கு என்று. அங்கே நான் கண்ட காட்சி என் உடலைக் கூசியது.
ஒரு எழுபது வயது முதியவரை சுவர் ஓரமாக நிற்க வைத்துவிட்டு, இன்ஸ்பெக்டரும், என் கம்பெனியின் முன்னாள் எச்.ஆரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
என்னை அந்த அறைக்குள் கூட்டிச் சென்ற பெண் எஸ்.ஐ., என் மேல் அந்த எச்.ஆர் புகார் கொடுத்திருப்பதாகச் சொன்னார் இந்தியில். அப்படியானால், நீங்கள் என்னை மட்டும் தானே அழைத்து விசாரித்து இருக்கவேண்டும். ஏன் என் தாத்தாவை அழைத்து வந்திருக்கிறீர்கள்? என்றேன். உங்களைத் தேடினோம் நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அதனால், உங்களைப் பற்றி விசாரிக்க அவரை அழைத்துவர வேண்டியதாகிவிட்டது என்று கதைச் சொன்னார்.
அவரின் வயதிற்காவது மரியாதைக் கொடுத்து அவரை ஒரு பெஞ்சிலாவது உட்கார வைத்திருக்க வேண்டும் என்றேன். அவர்கள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
நானும் சோபனாவும் தாத்தாவின் அருகில் சென்றோம்.
“என்னய பத்தி யோசிக்காதமா. முதல்ல அவங்க உன் மேல என்ன புகார் கொடுத்திருக்காங்கனு கேளு” என்றார். இவ்வளவு பிரச்சனைகளிலும் அவர் என்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சோபனாவை அவருடன் விட்டுவிட்டு இஸ்பெக்டர் டேபிள் அருகே வந்து, என் மேல் என்ன அப்படி என்னப் புகார் கொடுத்திருக்கிறார் இந்த எச்.ஆர் என்று அவரிடம் கேட்டேன்.
“நீ டிரான்ஸ்பெர் கேட்டு அவர் தர மறுத்தபோது, அவருக்கு நீ லஞ்சமா, உன் உடம்பையே தர தயாராக இருப்பதாகவும், அப்போதும் டிரான்ஸ்பர் மறுத்தால், போலிஸிலும், கம்பெனியிலும் டிரான்ஸ்பெருக்காக அவர் உன்னைப் படுக்கைக்கு அழைத்ததாக புகார் கொடுக்கப்போவதாக அவரை நீ மிரட்டியிருக்கிறாய். அதனால், அவர் உன் மேல் கிரிமினல் புகார் கொடுத்திருக்கிறார்.” என்றார் அந்த இஸ்பெக்டர்.
அவர் சொன்னதை நம்ப முடியாமல் நான் இஸ்பெக்டர் அருகில் நின்றுருந்த பெண் எஸ்.ஐயைப் பார்த்தேன், அவரும் அதிர்ச்சியாக என்னைப் பார்த்தார். இது ஒரு போலியானப் புகார் என்று அந்த பெண் எஸ்.ஐக்கு புரிந்தது.
“சார். நான் தான் அவர் மேல முதல்ல புகார் கொடுத்திருக்கேன், அத முதல்ல விசாரிங்க? நான் கொடுத்த புகார்-ல உண்மை இருக்கிறதால, அவரை எங்க கம்பெனியில இருந்து வேலைய விட்டு நிறுத்திட்டாங்க.” என்று நான் கோபமாக பேசிக்கொண்டிருந்தப் பொழுதே இன்பெக்டர் கோபமாக அவர் சீட்டிலிருந்து எழுந்தார்.
முப்பத்தி ஆறாவது பகுதியின் லிங்க்…
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு