முப்பத்தி ஆறாவது பகுதியின் லிங்க்…
இரவு காய்கறிக்கடையை வியாபாரத்திற்கு தயார் செய்துக்கொண்டிருந்தப்போது, என் பேத்தி, தேவி போனில் அழைத்தாள். நலம் விசாரிப்பிற்குப் பிறகு, என்னிடம் ஒரு விசயம் சொல்ல வேண்டும் என்றும், நாளை மதியத்திற்கு மேல் விட்டிற்கு வருகிறேன் என்றாள். மேலும், சில நாட்களுக்கு என்னுடன் அங்கேயே தங்கப் போகிறாள் என்றும் சொன்னாள்.
நான் கடை எடுத்து வைக்கும் அவசரத்தில் இருந்ததால், சரி வாம்மா நேரில் பேசிக்கொள்ளலாம் என்று போனை வைத்துவிட்டேன். மீண்டும் இரவு கடையை அடைக்கும் முன் தான் தேவி போன் செய்தது நியாபகம் வந்தது. ஏதோ ஒரு விசயம் என்னிடம் சொல்ல வேண்டும் என்றாளே? அது என்னவென்று எனக்குள் ஒரே யோசனை. கொஞ்சம் பயமும்.
கடந்த முறை அவள் அப்படிச் சொன்னப் பொழுது, அவள் ராபினைக் கூட கூட்டிவந்திருந்தாள். அவனுடன் லிவ்-இன்னாக இருக்கப்போகிறேன் என்று குண்டைத்தூக்கிப் போட்டாள். நானும் அவள் நண்பர்கள் மூலமாகவும், சில சமயங்களில் நானே நேரடியாகவும், திருமணம் செய்துக்கொண்டு தனியாய் போய் வாழலாமே என்று அவளிடம் சொல்லிப் பார்த்தோம். அவள் தான் என்றும் திருமணமே செய்துக்கொள்ளப்போவதில்லை என்று பிடிவாதமாக இருந்துவிட்டாள். சரி போகட்டும் நானும் அவள் விருப்பத்திற்கே விட்டுவிட்டேன். குறுக்கே நிற்கவில்லை. அவள் என் சம்மதம் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை தான், ஆனால் அவளை எடுத்து வளர்த்த மரியாதைக்காக என்னிடம் கேட்டப் போது, அதற்கு நான் முட்டுக்கட்டைப் போட்டால் அது தவறாக இருக்கும் என்று எண்ணியே, அரை மனதுடன் அவள் முடிவிற்குச் சம்மதம் சொன்னேன்.
இரவெல்லாம் தூக்கம் வரவேயில்லை. அவள் என்ன விசயம் சொல்லப்போகிறாளோ? என்று எனக்கு கொஞ்சம் கலகமாகவும் இருந்தது. சரி என்னவென்று போன் போட்டு அவளிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தேன். சில முறை தொடர்புக்கொண்டப் பொழுதும் அவள் போனை எடுக்கவில்லை. சரி காலையில் கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். இந்த யோசனைகளால் தூக்கமேயில்லை.
மணி 3ஐத் தொட்டது. இதற்கு மேல் படுத்திருந்தாலும் தூக்கம் வரப்போவதில்லை என்று எழுந்து செய்தித்தாள் விற்கும் கடையை எடுத்து வைக்கலாம் என்று தோன்றியது.
நான் எழுந்து தயாராகி, கடைக்குச் செல்வதற்குள் மணி 4ஐ நெருங்கியிருந்தது. வந்திருந்த பேப்பர்களை எல்லாம் எடுத்து அடுக்கிவைத்துக்கொண்டிருந்தப் பொழுது, என் கடையில் வேளைச் செய்யும் கோகிலா வந்துச் சேர்ந்தாள். அவளும் தினசரிகளை விற்பனைக்காக அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.
“நீங்க தானா மிஸ்டர். ராமசாமி” என்று மராத்தி-இந்திக் கலவையில் ஒருவர் என் கடையருகில் வந்து என்னிடம் கேட்டார்.
“ஆமாம். நான் தான். என்ன வேண்டும்” என்று அவனிடம் கேட்டேன். ஆள் பார்க்க வாட்டசாட்டமாக இருந்தான்.
“தேவி இருக்காங்களா?” என்றான்.
எனக்குத் திக்கென்று இருந்தது. இந்தக் அதிகாலை வேளையில், யார் இவன், என் பேத்தியைத் தேடி வந்திருக்கிறானே என்று தோன்றியது. இதனைப் பற்றிப் பேச வேண்டும் என்றே அவள் என்னை அழைத்திருப்பாளோ? நான் தான் கடை எடுத்து வைக்கும் அவசரத்தில் அதனை சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லையோ என என் மனதில் ஒரு மின்னலைப் போல வந்து நினைவு செய்துவிட்டுப் போனது ஆழ்மனம்.
“என் பேத்தி தான். சார். என்ன விசயமா பார்க்கனும்” என்றேன்.
“நான் அந்தேரி போலிஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்” என்று ஐடி கார்டை எடுத்துக்காட்டினான்.
“உங்க பேத்தி மேல ஒரு புகார் வந்திருக்கிறது, அதனைப் பற்றி விசாரிக்க வேண்டும்” அதனால் தேவியைக் கூப்பிடுங்கள் என்றான்.
“அவள் இப்போது இங்கேயில்லை. அவளின் தோழியின் ஹாஸ்டலில் இருக்கிறாள்” என்றேன்.
விடிந்தவுடன், நானே அவளைக் அழைத்துக்கொண்டு, அந்தேரி காவல் நிலையத்திற்கு கூட்டி வருகிறேன் என்று சொன்னேன். அவன் அதனைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. அவனுடன் வந்திருந்த சில பெண் போலிஸாரை அழைத்து என் வீட்டில் தேவி இருக்கிறாளா? என்று என்னை நம்பாமல் சோதனை செய்யச் சொன்னான். நான் கோகிலாவை அவர்களிடன் என் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்.
நான் தேவிக்கு போன் அடித்தேன். பல முறை அழைத்தும் அவள் போனை எடுக்கவில்லை. நான் அவள் தோழி சோபனாவிற்குப் போன் அடித்து விவரத்தைச் சொன்னேன். தான் நேரில் போய் தேவியைக் கூட்டிக்கொண்டு வருவதாகச் சொன்னாள். என்னப் பிரச்சனை என்று அவளிடம் கேட்டேன். அதற்கு அவள் அது ஆபிஸ் பிரச்சனை என்று மட்டும் சொன்னாள்.
சரி அலுவலகப் பிரச்சனை தானே, பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தேன்.
அதற்குள் அந்தப் பெண் போலிஸார் என் வீட்டை சோதனைச் செய்துவிட்டு, தேவி அங்கேயில்லை என்று அந்த இன்ஸ்பெக்டரிடம் வந்து ரிபோர்ட் செய்தார்கள்.
அவன், யாருக்கோ போன் அடித்து, விவரத்தை சொன்னான்.
எனக்குப் அப்போதே புரிந்தது, இதற்குப் பின்னால், பெரிய பிரச்சனையிருக்கிறது என்று. பிரச்சனை எதுவாக இருந்தாலும், பேத்தியைக் காப்பாற்றியாக வேண்டும்.
போனில் பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டரை கவனித்தேன். அவன் முகம் சிவந்தது. அவன் யாரிடமோ திட்டுவாங்கிக்கொண்டிருக்கிறான் என்று தோன்றியது. என்னால் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடிந்தது. எப்படியும் என்னையும் போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறார்கள் என்று என் உள்மனம் சொல்லியது.
கோகிலா என்னருகில் நின்றுக் கொண்டிருந்தாள்.
“ஐயா, என்ன பிரச்சனை?” என்று என்னிடம் மெல்லிய குரலில் கேட்டாள்.
“நீ கடையப் இன்னைக்குப் பாத்துக்கோ. இவனுங்க என்னையும் கூட்டிக்கிட்டு போகப் போறானுங்க” என்று கோகிலாவிடன் சொன்னேன்.
அந்த இன்ஸ்பெக்டர் என்னருகில் வந்து, “சார், உங்களையும் விசாரிக்க வேண்டும். நீங்க இப்ப எங்கக் கூட ஸ்டேசன் வரைக்கும் வரனும்” என்றான்.
முப்பத்தி எட்டாவது பகுதியின் லிங்க்…
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு