அன்று வழக்கம்போல உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு நானும் ரியாசூம் கிருஷ்ணனுக்காக காத்திருந்தோம். எங்களது உடற்பயிற்சி கூடத்திற்கு அருகே ஒரு தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. கிருஷ்ணன் அங்கே தான் வேலை செய்கிறான். அந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகியின் மேலாளராக பணியாற்றுகிறான். நாங்கள் மூவரும் ஒன்றாக முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) ஒன்றாக படித்தோம். நானும் ரியாசூம் தொழிலுக்கு வந்துவிட்டோம், ஆனால் கிருஷ்ணன் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சிபெற்று இங்கே வேலைக்கு சேர்ந்துவிட்டான்.
அன்று அவனுக்காக காத்திருந்த வேளையில் கருப்பு நிற மருத்துவ உடையில் ஒரு பெண் எங்கள் இருவரையும் கடந்து சென்றாள். இதற்கு முன்பும் அவளை இதே இடத்தில் பார்த்திருக்கிறேன். ரியாசூம் நானும் இன்று எங்கே உணவருந்தலாம் என்று அழ்ந்த விவாத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். அப்போது தான் அவள் எங்களை கடந்து சென்றாள். ரியாசு தான் அவளை முதலில் பார்த்தான்.