Monday, December 23, 2024
Home > கவிதை > அவன் என்னவன்… – #கவிதை

அவன் என்னவன்… – #கவிதை

அவன் காதலை ஏற்றுக்கோள்வோம் என்று நினைத்ததில்லை…

அவனை ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியவில்லை…

அவன் வருகைக்காக ஏன் இப்படி காத்திருந்தேன் என்று புரியவில்லை…

அவனை காணாத நாட்களில் வரும் அழுகையை கூட துடைத்ததில்லை…

அவன் எனக்கானவன் என்பதில் துளியும் சந்தேகமில்லை…

அவன்…

அவன்…

அவன்… அவன் என்னவன்…

ஆனால்…

 

அவனுக்காக என் பெற்றோரை விட்டுவிலக மனமில்லை…

அவனுக்காக என் வீட்டில் நான் உறுதியாய் போராடவில்லை…

அவனுக்காக என் வீட்டாரை கூட சமாளிக்க இயலவில்லை…

அவனில்லா… ஓர் வாழக்கையை நினைத்துப் பார்த்ததேயில்லை…

அவனில்லா… துடிக்கும் என் இதயத்தை யாரும் புரிந்துக்கொள்ள போவதுமில்லை…

ஆனாலும்…

அவன்…

அவன்…

அவன்… அவன் என்னவன்…

 

அவன் அருகாமை தந்த நம்பிக்கை…

அவன் என்னிடம் பேசிய வார்த்தைகள்…

அவன் விழியால் நான் ரசித்த உலகம்…

அவன் எனக்காக என்னுடன் கண்ட கனவு…

அவன் வாழ நினைத்த வாழ்க்கை…

இல்லாமலே போய்விட்டதே… இவையெல்லாம்…

 

அவனுடன் இருந்தபோது அவனருமை புரியவில்லை…

நான் இன்னும் உறுதியாய் இருந்திருக்கலாம்…

என் வீட்டை சரியாய் கையாண்டிருக்கலாம்…

அவனுக்காக நான் தியாகம் செய்திருக்கலாம்…

அவன் பேச்சையாவது கேட்டிருக்கலாம்…

என் பிடிவாதம் என்னையை பழிகேட்டதை புரிந்திருக்கலாம்…

என் அகந்தையை நான் தவிர்த்திருக்கலாம்…

இறுதியில்…

தவறுமேல் தவறு செய்தேன்…

என் மீதிருந்த அதீத நம்பிக்கையால்…

அவனை நானும் தவறவிட்டேன்…

 

அவன் வேறுமணமுற்றான்…

அவன் மக்கட்பேறு பெற்றான்…

அவனவன் வாழ்வில் முன்நகர்ந்தான்…

அவனில்லாதொருவர் கட்டிய தாலி…

இன்று என் கழுத்தில்…

நான் இன்னும் அவன் நினைவாக…

அவன் என் முதல் காதலனல்லன்…

அவன் என் முதற்கணவன்…

 

இன்னும் நான் அவனை நினைத்து திளைத்திருப்பது…

அவன் என்மேல் கொண்ட காதலால்…

என் காதல்… பெற்றோர் ஏற்க மறுத்த உறவு…

என் சாதி… என் பெற்றோருக்கு கிடைத்த சாவி…

நான்… என் என்னவனை இழந்த பாவி…

அவன்…

அவன்…

அவன்… அவன் என்றென்றும் என்னவன்…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஜூலை 23, 2024

காலை 08.56 மணி…