Monday, December 23, 2024
Home > சிறுகதை > ஒரு ரவா தோசை பார்சல் – #சிறுகதை

ஒரு ரவா தோசை பார்சல் – #சிறுகதை

எங்கள் நண்பர்கள் குழுவுக்குள் தென்காசியருகே இருக்கும் குற்றால அருவியில் நன்றாக குளியல் போட வேண்டும் என்பது தீராத ஒரு ஆசை. கடந்த ஐந்தாறு வருடங்களாகவே குற்றாலம் போக வேண்டும் என்று மிக தீவிரமாக பேசிக்கொண்டிருந்தோம். எல்லா நண்பர்களுக்குள்ளும் கோவா போக வேண்டும் என்று பேசுவது போல தான் இந்த குற்றாலம் போக வேண்டும் என்று பேசுவதும் நடக்கும். குற்றாலம் ஏழைகளின் கோவா. எவ்வளவு பேசினாலும் நாங்கள் போக நினைத்த நாட்களில் போகவே முடியவில்லை. இருந்தாலும் நாங்கள் குழுவுக்குள் பேசுவதோடு மட்டும் விட்டு விடவில்லை. தேதிகள் குறித்து பேசிக் கொண்டேயிருந்தோம். போகிறோமோ இல்லையோ, ஆனால் போக வேண்டும் என்று பேசுவதில் எங்கள் நண்பர்கள் குழுவுக்கு அவ்வளவு அலாதியான விருப்பம். குற்றாலம் போக வேண்டும், பகலிலும், இரவிலும் முடிந்தவரை குளிக்க வேண்டும், பார்டர் பரோட்ட கடையில் வயறு முட்ட சாப்பிட வேண்டும், கோழி பிடித்து சமைக்க வேண்டும். ஆனால் என்ன, எவ்வளவு பேசியும் போகத்தான் முடியவில்லை. ஏன் இன்று வரை எல்லா நண்பர்கள் குழுவுக்குள்ளும் கோவா, குற்றாலம், பாண்டிசேரி என்று சுற்றுலா செல்ல பேசிப் பேசி அக மகிழ்வது ஒரு வழக்கமாகவே உள்ளது.

திடீரென, எனக்கு தென்காசிக்கு அலுவலக வேலை நிமித்தமாக செல்ல வேண்டி வாய்ப்பு வந்தது. முதலில் நான் செல்வதாக இருந்து, பிறகு இன்னொருவர் செல்வதாக மாறி, கடைசி நேரத்தில் அவர் செல்ல முடியாமல் போனதால், மீண்டும் நானே செல்ல, கிடைத்த வாய்ப்பு அது. எவ்வளவு நாள் என் நண்பர்களுக்குள் பேசிப் பேசி மெருகேற்றிய பயணம் திட்டம் அது. இப்படி ஒரு வாய்ப்பு, தங்கத் தட்டில் வைத்து கொடுப்பதைப் போல என்னைத் தேடி வந்தது. என் அலுவல் பணியை முடித்துவிட்டு, தென்காசியருகே இருக்கும் குற்றாலத்திலும் குளித்து கொண்டாடலாம் என்று நண்பர்களையும் துணைக்கு அழைத்தேன். கடைசி நேரத்தில் அழைத்தால் யாரும் வர முன்வரவில்லை. யாரும் வரவில்லை என்றாலும், நான் தனியே பயணம் செய்தேயாக வேண்டிய நிலை.

காலை 5 மணிக்கு கிளம்பும் வகையில் என் பயணத்திட்டம் தயாரானது. துணைக்கு யாருமில்லை. சேலத்திருந்து தென்காசி வரை தனிமையில் பயணம். கிளம்பும் முன்னிரவு 10.00 மணி வரை, நான் தனியாக போவது தான் திட்டம். ஆனால்  இரவு 10.30 மணிக்கு என் நண்பன் கார்த்தி நானும் உன்னுடன் வருகிறேன் என்று சொன்னான். தனியாக செல்வதனைவிடவும் கூட என் நண்பன் பயணிப்பது நலமே என்றெண்ணினேன். கூடவே, அலுவலில் இருக்கும் மன அழுத்தம் குறைய இந்த பயணம் எனக்கு பேருதவியளிக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமேயில்லை.

நண்பன் கார்த்தியுடன் பயணம் துவங்கியது.

“வாடா கார்த்தி, தனியா தென்காசி வரைக்கும் போகனுமேனு கவலையா இருத்துச்சி, இப்ப நீ வந்துட்டல…” என்றேன் கார்த்தியுடன் இணைந்தவுடன்.

தனியாக போவது அவ்வளவு கஷ்டமானது ஒன்றும் கிடையாது. ஆனால் கூட ஒருவர், அதுவும், நண்பனாக இருந்துவிட்டால், அந்த பயணம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

“வர முடியாம போயிடுமோனு பயந்தேன். நல்ல வேலை முதலாளி, இந்த வாரம், எந்த வேலையும் இல்லனு சொல்லிட்டாரு…” என்றான் கார்த்தி.

“அப்ப உனக்கு ஒரே கொண்டாட்டம் தான் போ…” என்றேன்.

கார்த்தியின் குடும்பம் வெள்ளிப் பட்டறை வைத்திருக்கிறார்கள். அவன் அப்பா, அண்ணன், அண்ணி, அவன், அவனது மனைவி என குடும்பமே சேர்ந்து உழைப்பார்கள். எப்போது வேலை வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் வேலை என்று வந்துவிட்டல், மொத்த குடும்பமும் இரண்டு மூன்று நாட்களுக்கு இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வார்கள். அவர்களது தொழில் அப்படி.

பண்டிகை சமையங்களில் மாதக்கணக்கில் அடுத்தடுத்து வேலையிருக்கும், மற்ற நேரங்களில் அப்படியில்லை. வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்களுக்குத் தான் வேலையிருக்கும். ஆனால் நல்ல காசு. வெளியாட்கள் வைத்தால் அவர்களுக்கு கூலி அதிகமாக கொடுக்க வேண்டியிருப்பதால், வேலை என்று வந்துவிட்டால் மொத்தக் குடும்பமும் சேர்ந்து உழைத்து, லாபத்துடன் கூலியையும் பங்கிட்டுக் கொள்வார்கள். வேலையில்லாத நாட்களில் அவன் அண்ணன் அவர்களது தோட்டத்தில் இருக்கும், விவசாய வேலைகளை பார்க்க போய்விடுவார். கார்த்தியோ கிடைத்த வேலைகளை செய்துக்கொண்டிருப்பான். வண்டி ஓட்ட போவான், தறி ஓட்ட போவான், கறிகடையில் கறி வெட்டுவான், பந்தல் வேலை செய்யப் போவான், ரியல் எஸ்டேட் ஆட்களுடன் இடம் பார்க்க சுற்றிக்கொண்டுருப்பான். இவனுக்கு எல்லா வேலைகளும் அத்துப்படி.

“அட சும்மா இருடா. முதல்ல சேலத்துல இருந்து சீக்கிரம் கிளம்பு, அப்ப தான் டிரிப் மூடுக்கே என்னால வர முடியும். எப்ப எந்த வேலை வரும்னு சொல்ல முடியாது…”

“சரிடா புலம்பாத, நாம கிளம்பலாம்…”

கார்த்தி அவன் போனை வண்டியுடன் இணைத்து,

“ஏப்ரல் மேயில பசுமையேயில்ல காஞ்சு போச்சு டா…

இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போரு டா…

இது தேவையா…

அட போங்கயா…”  என இளையராஜா பாடல்களை ஒலிக்கவிடத் துவங்கினான்.

ஏதேதோ பேசிக்கொண்டே சேலத்திருந்து கிளம்பி, கரூரைத் தாண்டி ஒரு காபி குடிக்க வண்டி நிறுத்தினோம். ஆடிக்காத்து அடிக்கத் துவங்கியிருந்தது. கடையில் காபி குடித்துக்கொண்டிருக்கும் வேலையில் கார்த்தி அன்றைய செய்தித்தாள்களை அலசிக்கொண்டிருந்தான். சூரியன் மேலே எழும்பி வரலாமா? வேண்டாமா? என சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது. காபி குடித்துவிட்டு வண்டிக்கு வருவதற்குள் சூரியன் சுட்டெரிக்க துவங்கியிருந்தது. குளிருக்கு அது இதமாகவும் இருந்தது. சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தென்காசியை நோக்கி பயணத்தை துவக்கினோம்.

சிறிது நேரம் அமைதியாகக் கடந்தது, கரூர்-திண்டுக்கல் சாலையிலுள்ள வேலஞ்செட்டியூர் சுங்கச்சாவடியைக் கடக்க காத்துக்கொண்டிருந்தோம். அப்போது பேச ஆரம்பித்தான்.

“அந்த காலத்துல பாரு. மக்கள் எல்லாம் எவ்வளவு ஆரோக்கியமா இருந்திருக்காங்க. 100 வயசுல கூட எந்த நோவு நொடியில்லாம மக்க இருந்திருக்காங்க. இப்ப பாரு, பேப்பர்ல எந்த பக்கத்துல பாத்தாலும் தீடீர்  மரணம், இளைஞர் ஜிம்மில் மரணம், வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பேருந்து ஓட்டுனர் மரணம். மனுச வாழ்க்கையே இவ்வளவு உறுதியில்லாம போயிருச்சே…” என்று புலம்பத் துவங்கினான்.

“இப்ப என்ன பிரச்சனை உனக்கு…?”

“அப்ப எல்லாம் 80, 90, 100 வயசுனு வாழ்ந்தாங்க. இப்ப எப்ப உசுரு போகுமுனு சொல்ல முடியுமா…?”

“அடேய் மங்குனி மண்டையா, இந்தியாவுல 1950ல சராசரி வயசே 31னு தானே டா. இப்ப பாரு எல்லாம் 65,70னு வாழறாங்க…”

“என்னடா சொல்ற…?”

“நம்பலயா நீ…?”

“எல்லாரும் சொல்றாங்க முன்னோர்கள் இப்படி வாழ்ந்தாங்க, அப்படி வாழ்ந்தாங்கன்னு…?”

“ஆமா முன்னோர்கள் வாழ்ந்தாங்க தான், ஆனா அவங்க சில பேரு தான். அதுவும் நல்ல சாப்பாடு, வறுமையில்லாத வாழ்க்கை, பொருளாதார வசதி, அப்படி இப்படினு கொஞ்சம் சொத்து சொகம் வெச்சிருந்தவங்க எல்லாம் நல்ல வாழ்ந்தாங்க. உழைக்கிறவங்களும், விவசாயிகளும் எங்கடா வாழ்ந்தாங்க…? வறுமையில செத்தும், காலார வந்து செத்தும், அம்ம வந்து செத்தும், போய் காய்ச்சல் வந்து செத்தும், அப்ப தெரியாத பல நோய்கள் வந்து செத்தும், தீடீர் தீடீர்னு போர் வந்து செத்துனு மக்க ஆயுசு, அற்ப ஆயுசு தான். அதுவும் பெண்கள் பிரசவத்துல இரத்த போக்குல சாவறதுலாம் நிறைய நடந்திருக்கு பா…”

“நீ சொல்றதுலாம் சரிதான் மச்சி. ஆனா, அப்ப இருக்குற மாதிரி ஆரோக்கியமான உணவு, இப்ப எங்க கிடைக்குது சொல்லு?, எல்லாத்துக்கும் இப்ப மாத்திரை வந்துருச்சினு சொல்றாங்க. நாம இப்ப அந்த அளவுக்கு முன்னேறிட்டோம். ஆனா சாப்பாடு என்ன தரமானதாவ இருக்கு? சொல்லு…?”

“அடேய், நீ ரொம்ப குழப்பிக்காத டா. அறிவியல் வளர்ச்சி நம்மள ஆயுச அதிகமாக்கியிருக்கு, அதே சமயம் சாப்பாடு பொருள் தரமில்லாம போயிடிச்சு, அதையும் ஒத்துகறேன். ஆனா அதுக்கு கலப்படமும், வியாபாரிகளோட லாப வெறியும் தான் டா காரணம். ஆனா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ, நம்ம ஆயுசு வேணா அதிகமாயிருக்கலாம், ஆனா ஆயுசு அதிகமாக அதிகமாக இன்னொருவர் துணையில்லாம வாழறது ரொம்பவும் கஷ்டமாயிடுச்சு…”

“எப்படியோ நான் சொல்றது சரி தான்னு ஒத்துக்கிட்ட….”

“நான் எப்படா ஒத்துக்கிட்டேன்?”

“இதோ இப்ப தானே சொன்ன, எதும் சரியில்ல, எல்லா கலப்படமாயிருக்குனு…”

“அடேய், நான் அப்படி சொல்லல டா…”

“மாத்தி பேசாதா ஆமா…” என்று கார்த்தி கொஞ்சம் கடுப்பானான். நானும் பேச, அவனும் பேச, எங்களது உரையாடல் சுவாரசியமாக மாறி பயண களைப்பை மறக்கடிக்கச் செய்துக்கொண்டிருந்தது. வண்டி வேடசந்தூரை கடந்து சென்று கொண்டிருந்தது. பயணங்களில் முடிவுமில்லாமல், துவக்கமுமில்லாமல் தோன்றுவதையெல்லாம் தோன்றியவண்ணம் பேசிக்கொண்டு பயணம் செய்வது மனித இயல்புகளில் ஒன்று. காலங்காலமாக பல கதைகள் இப்படித் தான் பேசப்பட்டு வந்துள்ளன.

அப்போது, எங்களது பேச்சு, மனித வாழ்வில் அதிமுக்கியமான கண்டுபிடிப்பு எது என்ற விவாதத்திற்குள் சென்றது.

“ரயில் தான் உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பு” என்றான் தடாலடியாக.

“வெளிச்சம் (மின்சாரம் மூலமாக கிடைத்த செயற்கை வெளிச்சம்) தான் உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பு” என்றேன் நான்.

“மெதுவா போயிட்டு இருந்த உலகம், ரயில் வந்த அப்புறம் எவ்வளவு வேகமாயிடுச்சி. நீயே சொல்லியிருக்கயே…”  என்றான் கார்த்தி.

“ஆமா டா, நானே சொல்லியிருக்கேன். ஆனா ரயிலவிட மிக முக்கியமானது வெளிச்சமும், மின்சாரமும். அதுக்கு முன்னாடி சூரிய வெளிச்சம் இருக்கற வர தான் மக்கள் வெளிய வருவாங்க. இருட்டுல வந்தா விலங்குகள்கிட்ட மாட்டிக்குவாங்க, மனிதன்-விலங்குகள் தாங்குதல்கள் பெரும்பாலும் இருட்டுல தான் நடத்திருக்கு. பகல்ல பெரும்பாலும் வேட்டை தான் நடந்திருக்கு. ஒன்னும் மனுசன் விலங்க வேட்டையாடுவான், இல்ல விலங்கு மனுசன வேட்டையாடும்…” என்றேன் நான்.

“ஆனா வெளிச்சம் மனுசன என்ன, வேகமாவா அக்குச்சி?, ரயில் தானே மனுசன வேகமாக்குச்சி. ரயில் வந்த அப்புறம் தானே மனுசன் அடிக்கடி பயணம் பண்ணவே ஆரம்பிச்சான்…” என்றான் கார்த்தி.

“அடேய், கப்பல்லாம் பல்லாயிரம் வருசமா இருக்குனு சொல்றாங்கனு டா பக்கி. ரயில் பயணம் என்பது வந்தே அதிகபட்சம் 240-250 வருசம் தான் டா இருக்கும், ஆனா, அதுக்கு முன்னாடியே கப்பல்ல வந்து வெள்ளக்காரன் நம்மள ஆள ஆரம்பிச்சிட்டான் டா. மறந்துட்டயா? மனுசன் வாழ்க்கை வெளிச்சம் வேகமாக்குச்சானு தெரியல, ஆனா, மனுசன் வாழ்க்கையில ஒரு நாளோட நேரத்த, வெளிச்சம் அதிகமாக்கி இருக்கு. அது நிறைய வேலை வாய்ப்பை குடுத்திருக்கு, மக்களோட பொருளாதார வசதிய அதிகபடுத்தியிருக்கு, இல்லனு சொல்றயா…?”

“நீ சொல்றத இல்லனு சொல்லிட முடியாது தான்…” என்றான், மேலும் தொடர்ந்தான், “ஆனா, மனுசன் எப்போ பயணம் செய்ய ஆரம்பிச்சானோ அப்போ தான், தன்னை சுற்றியிருக்கும் ஆபத்திலிருந்து அவன் தப்ப ஆரம்பிச்சான். பயணமே மனுசனுக்கு பெரும் வளர்ச்சியைக் கொடுத்துச்சு, ரயில்னு ஒண்ணு வந்த அப்புறம் தான் அந்த பயணம் வேகமாகியிருக்கு, நாம் இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கு அதுதான் காரணம்னு நான் நம்புறேன்…” என்று முடித்தான். கார்த்தி சொல்வதும் சரியென தோன்றியது, ஆம் என்று தலையசைத்தேன்.

ஆண்களுக்குள் ஒரு கருத்தை விவாதிக்கும் பொழுது அது முடிவில்லாமல் திசை தெரியாமல் போகும் பொழுதில் யாரேனும் ஒருவர் அந்த விவாதத்தை சரியான திசையில் மாற்றிவிடுவர். அல்லது, இருவேறு கருத்துக்களிலும் நியாயம் இருக்கும் வேளையில் சரியென தங்களது நிலைபாடுகளில் மாற்றாமில்லாமல் நின்றுவிடுவர். அதனால் தான் என்னவோ ஆண்களின் நட்பிற்குள் எவ்வளவு சண்டை சச்சரவுகள் வந்தாலும், அடுத்து அடுத்து என்று பேச அவர்களுக்கு ஆயிரமாயிரம் கருத்துக்கள் இருக்கு. பெண்கள் மாற்றுக் கருத்து என்று வந்துவிட்டால் அங்கேயே தேங்கிவிடுகிறார்கள்.

திண்டுக்கல்-மதுரை சாலையில், திண்டுக்கல் மாநகரின், புறவழிச்சாலை முடியும் இடத்தில், அடையார் ஆனந்தபவன் உணவகத்தில் காலை உணவை எடுத்துக்கொள்ள வண்டியை நிறுத்தினோம். சேலத்திலிருந்து திண்டுக்கல் வரை சுமார் 200 கிலோமீட்டர் இடைநில்லா பயணம் எங்களுக்கு கொஞ்சம் களைப்பை ஏற்படுத்தியிருந்தது. உணவகத்தில் அமர்ந்து, உணவு பரிமாறுபவரிடம் “ஆளுக்கு நாலு இட்லி” கொண்டுவர சொல்லிவிட்டு, நானும் கார்த்தியும் எங்களது கைபேசியின் அறிவித்தல்களை அலசிக்கொண்டிருந்தோம்.

சுடசுட இட்லி வந்து சேர்த்தது. கூடவே பொடியும் எண்ணையும், இரண்டு கரண்டி பொடி எடுத்து இலையின் ஓரத்தில் வைத்து, அதில் சிறு குழி தோண்டி, மூன்று கரண்டி எண்ணையை விட்டு, அதனை குழப்பி, இட்லியில் பட்டும் படாமல் தொட்டுக்கொண்டு, சட்னியிலும், சாம்பாரிலும் திருப்பி திருப்பி தொட்டுக்கொண்டு, வாயில் வைத்தால், இட்லி வயிற்றுக்குள் இறங்கி கரைவதே தெரியாது. பெரும்பாலும், பயண நேரங்களில், சூடான இட்லி மட்டும் சாப்பிடும் பழக்கம் உடையவன். சில நேரங்களில், வெண்பொங்கல் அல்லது இரவா தோசையும் சாப்பிடுவேன். இவை எதுவும் என் அனுபவத்தில் பயண நேரங்களில் என் உடலை கெடுத்ததில்லை.

இட்லி சாப்பிட்டு முடித்தவுடன், “ காபி குடிக்கலாமா…?” என்று கார்த்தியிடம் கேட்டேன்.

“இல்ல டா, வயறு புரட்டுது, நீ காபி குடிச்சிட்டு வா, நான் வெளியில இருக்கேன்…” என்று சாப்பாட்டு பில் தொகை கொடுக்க முயன்றான்.

“நான் பில் குடுத்துக்குறேன். நீ வெளிய இரு, நான் வந்துடறேன்…”

கமகமவென்று வந்த பில்டர் காபியை இரசித்து இரசித்து கடைசி சொட்டு வரை குடித்துவிட்டு, காபி அதற்குள் தீர்ந்துவிட்டதே என்ற போலியான ஒரு கவலையில் பில்லை செலுத்தச் சென்றேன். எப்போது காபி குடித்தாலும் இந்த கவலை மட்டும் வராமல் இருந்ததில்லை. பலருக்கு டீ பிடித்திருக்கும், ஆனால் எனக்கு எப்போதும் காபி தான் பிடிக்கும்.

அங்கே எனக்கு முன், நாற்பது வயது மிக்க ஒரு ஆட்டோ டிரைவர் நின்று பில் கவுண்டரில் இருக்கும் பெண்ணிடம் பார்சல் சொல்லிக்கொண்டிருந்தார். காக்கி சட்டை மேல் சட்டையாகவும், அதற்குள் நீலம் வெள்ளைக் கலந்த கட்டம் போட்ட சட்டையும், காக்கி பேண்டும், காலில் ஒரு ரப்பர் செருப்புமாக அவர் இருந்தார். பார்த்தாலே தெரிந்தது, அவருக்கு இந்த உணவகமெல்லாம் சரிவராது என்று. இங்கு அவர் ஒரு வேளை வயறு நிறைய சாப்பிட செலவிடும் பணத்திற்கு, அவர் ஒரு நல்ல செருப்பே வாங்கிவிடலாம் என்று எனக்கு தோன்றியது. அவரின் ஏழ்மை நிலையிலும் ஏன் இங்கு வந்து சாப்பிட நினைக்கிறார் என்று எனக்கு குழப்பமாக இருந்தது. இந்த எண்ணம் தவறாக இருந்தாலும், அவரின் தோற்றம் என்னை மேலும் குழப்பியது.

ஏழையாக இருந்தாலும் சரி, நடுத்தரவாசியாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, எடுத்துக்கொள்ளும் உணவு ஒன்று தான். எல்லோருக்கும் வேண்டிய தரமான உணவு அவர்களுக்கு தகுந்த விலையில், எல்லா இடங்களிலும் கிடைக்கத்தான் செய்கிறது. என்ன விலையேனும் கொடுத்து ஒருவர் வாங்க இருக்கும் வேளையில், என்ன விலை வேண்டுமானாலும் வைத்து விற்கவும் ஒருவர் இருப்பார். இங்கே உணவு ஒன்றுதான், ஆனால் அதற்கு விலை கொடுத்து வாங்கும் ஆற்றலில் தான் எப்போதும் வேறுபாடு உண்டு. இங்கே சாலையோர கையேந்தி பவனிலும், கூறை வேய்ந்த இட்லிகடைகளிலும் கிடைக்கும் ருசியை நான் நட்சத்திர உணவகங்களில் கூட கண்டதில்லை. சரியான கடையை கண்டறிந்து உணவுண்டால் போதும். அது முடியாத வேலைகளில் தான் அடையார் ஆனந்த பவன் போன்ற பெருங்கடைகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றனர். இங்கே ருசியை விட, கொள்ளை விலையை விட, குறைந்தபட்ச தரம் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை தான் இது போன்ற உணவகங்களின் வெற்றிக்குக் காரணம்.

அந்த ஆட்டோ அண்ணா, ஒரு பெண்ணிடம் கேட்டு கேட்டு ஆடர் செய்துக்கொண்டிருந்தார். இல்லையில்லை, விலையை விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்குள் ஆர்வம் கொண்டுவிட்டது. பில் கவுண்டரில் கூட்டமும் கூடிக்கொண்டு சென்றது. சிலர் என்னை முந்தி பில் கொடுக்க முன்னேறினர். நான் அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

யார் அந்த பெண்?

ஆட்டோக்காரர் ஏன் அந்த பெண்ணிடம் கேட்டு கேட்டு ஆடர் செய்கிறார்?

அந்த பெண்ணே கேட்கலாமே?

ஏன் அந்த பெண் இவர் கையை பிடித்திருக்கிறாள்?

பில் கவுண்டரில் நிற்கும் பெண் தரும் பதில்கள் ஏன் இந்த பெண்ணை ஆச்சரியமூட்டுகிறது? என

எனக்குள் நொடிக்கு நொடி கேள்விகள் தோன்றிக்கொண்டேயிருந்தன.

சுற்றியிருந்த சிலரை விலக்கிவிட்டு, நான் முன்நகர்ந்து அந்த ஆட்டோ ஓட்டுனர் அருகே சென்றேன்.

“இட்லி தான் எப்பவும் ஹோம்லயே போடுறாங்கல பாப்பா… வேற டிரை பண்ணு…”

“ஆமா அண்ணே… வேற என்ன இருக்கும்?” என்று அந்த பெண் புருவம் உயர்த்தி யோசிக்கிறாள்.

“புதுசா ஏதும் வாங்கிக்க பாப்பா”

“புதுசா என்ன இருக்கும்?” என்று பில் கவுண்டரில் இருக்கும் பெண்ணிடம் ஆட்டோகாரர் கேட்டார்.

“இட்லி எவ்ளோ?”

“55 ரூவா”

“தோச?”

“95 ரூவா”

“பொங்கல்?”

“75 ரூவா”

“உனக்கு என்ன வேணும்மா?” என்றாள் பில் கவுண்டர் பெண், கூட்டம் கூடிவிட்டதால் கொஞ்சம் அவசரத்துடன்.

“இங்க ஷ்பெஷல் என்ன?” என்று கேட்டாள்.

“நெய் ஆனியன் ரவா தோச”

“ரவா தோசையா? அது எப்படி இருக்கும்?”

“தோசையிலயே ஓட்ட ஓட்டயா, வெங்காயம், முந்திரி, மிளகு எல்லாம் போட்டிருக்கும்” என பில் கவுண்டரில் இருக்கும் பெண் சொன்ன பாணி எனக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டேன்.

“அது எவ்ளோக்கா?”

“அது 175 ரூவா”

விலையை கேட்டவுடன் நானே கொஞ்சம் ஆடித் தான் போய்விட்டேன், “என்னது ஒரு ரவா தோசையின் விலை நூற்றி எழுபத்து ஐந்தா…?” என்று. அந்த பெண் என்ன சொல்ல போகிறாள் என்று அவளையே பார்த்தேன்.

“அண்ணே, வேணாம் அண்ணே, போலாம்” என்றாள் அந்தப் பெண் ஆட்டோகாரரிடம்.

“ஏன் பாப்பா?”

“இப்ப தான் மாசம் முழுசா ஒலச்சி மூவாயிர ரூவா கிடைச்சிருக்கு”

“அதான் நீ சம்பாரிச்ச பணம் இருக்குல?”

“ஒரு தோசைக்கு இவ்வளவா அண்ணா?”

சோகத்துடன் இந்தப் பெண் வாசலை நோக்கி நகர, பில் கொடுக்க நின்றுக்  கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக பணம் கட்டிவிட்டு கிளம்பினர். ஆனால் நான் அந்த ஆட்டோகாரரும், அந்த பெண்ணும் பேசிக்கொண்டிருந்ததை கேட்க அந்த பெண்ணின் அருகே சென்றேன்.

இப்போது அந்த ஆட்டோகாரர் அந்த பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னார், “நீ கஷ்ட பட்டு படிச்ச. இப்ப வேல கிடைச்சிருக்கு. ஒரு மாசம் வேலைக்குப் போயி சம்பளமும் கிடைச்சிருக்கு. மொத மாச சம்பளத்துல என்ன பண்ண போறனு ஹோம்ல சிஸ்டர் கேட்ட அப்ப நீ என்ன சொன்ன? ஓட்டல்ல போயி நல்ல சாப்பிடனும் சொன்ன, அதுக்கு தானே சிஸ்டர் என்னைய உன் கூட இந்த ஓட்டலுக்கு அனுப்பி வெச்சாங்க”

“இல்ல அண்ணே. என்ன மாதிரி கண்ணு தெரியாதவங்களுக்கு நம்ம ஹோம் ஒரு வரம் அண்ணே. மொத மாச சம்பளம் கிடைச்ச ஒடனே சிஸ்டர்கிட்ட தான் கொடுத்தேன். ஆனா, அவங்க வாங்க மாட்டேனு சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. உனக்கு என்ன பண்ண தோனுதோ அத பண்ணுனு சிஸ்டர் சொல்லிட்டாங்க. எனக்கு இது வர ஓட்டல் சப்பாடு சாப்பிட்டு பழக்கமில்ல அத்தான் பார்சல் வாங்கிட்டுபோயி ஹோம்ல சாப்பிடலாம்னு பாத்தேன். ஆனா வெலய கேட்ட சாப்புட மனசு வரல அண்ணே.”

“சரி பாப்பா, நான் வாங்கித் தர்றேன். உனக்கு வேல கிடச்சதுக்கு இந்த ஆட்டோ அண்ணாவோட ட்ரீட்டு” என்று அவர் அந்த ரவா தோசையை வாங்கிக் கொடுக்க முன் வந்தார். நடந்தவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்தப் பெண் பார்வையற்றவள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. படைத்தவன் ஏன் இப்படி ஒரு குறையோடு படைத்தான். வெறுமையாக உணர்ந்தேன். நிராயுதபாணியாக நின்றேன். என் பார்வை, மங்கியதை உணர்ந்தேன். என் இதயம் கனத்துடன் துடித்தது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஏன் என்றே தெரியவில்லை. நிலைக்கொள்ள முடியாமல் தடுமாறினேன். அந்த பெண்ணும், ஆட்டோகாரரும் என் கண்முன்னே வெளியேறினர், எதுவும் வாங்காமலே.

“என்னடா இங்கயே நின்னுட்ட?”

“ஸ்வீட் எதும் வாங்கனுமா?”

“இல்ல டா. பில் கட்டிட்டு கிளம்பலாம்”

“இன்னுமாடா பில் கட்டல?”

“காபி வர நேரமாயிடுச்சு”

“மொதல்ல பில்ல கட்டு” என்று பில் கட்டிவிட்டு தென்காசியை நோக்கி வண்டி எடுத்தோம். இம்முறை அவன் வண்டியை ஓட்ட ஆயத்தமானான். உணவகத்தில் நடந்ததை நான் அசைப்போட்டுக்கொண்டே வண்டியில் ஏறினேன்.

“எப்படா குற்றாலும் போவோமுனு இருக்கும். இன்னைக்கு போறோம் குளிக்கறோம், நைட்டு புல்ல குளிக்கறோம், காலையில ஆயில் மசாஜ் பண்றோம், திரும்ப போயி குளிக்கறோம்” என்று குற்றால புராணம் பாடிக்கொண்டே வண்டியை எடுத்தான். அவன் வண்டியை எடுக்கவும், அவன் முதலாளியிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வரவும் சரியாக இருந்தது. வண்டியை ஓரம்கட்டிவிட்டு அழைப்பை எடுத்தான்.

“சொல்லுங்கனோ.” என்று செயற்கையாக வழிந்தான்.

“திண்டுக்கல்ல இருக்கனே” என்றான்.

“100 கிலோ வேலையா”

“உடனே வேணுமா?”

“சாயங்காலம் வந்து வெள்ளி வாங்கிக்கவா”

நான் அவனையே பார்த்தேன். அவன் பேச்சு இனிமையாகவும், அவன் வார்த்தைகள் கனிவாகவும் இருந்தாலும், அவன் கைகள் முறுக்கிக் கொண்டும், கண்கள் சிவந்தும் இருந்தது. பேசுவது தொடர்ந்தது, வண்டியிலிருந்து இறங்கி போன் பேச ஆரம்பித்தான்.

“சரி நாம இளையராஜா பாட்ட போட வேண்டியது தான்” என்று ஒரு நல்ல பாட்டை தேட ஆரம்பித்தேன். எந்த பாட்டை தேர்வு செய்ய மனமில்லாமல் தேடிக்கொண்டே இருந்தேன். கார்த்தியும் பேசிக்கொண்டே இருந்தான். ஒரு பாட்டை நான் தேர்வு செய்து ஒலிக்கவிடவும், அவன் வண்டியில் ஏறவும் சரியாக இருந்தது.

“அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே,

பனி துளியப் போல குணம் படைச்ச தென்னவனே,

மஞ்சலிலே

ஒரு நூலேடுத்து,

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம்முனு…”

என்று பாடல் ஒலிக்க, நானும் கூட சேர்ந்துப் பாட வண்டியில் ஏறியவன் கடுப்பாகிவிட்டான்.

ஸ்டியரிங் வீலை இரு கைகளைக் கொண்டும் அடி அடியென அடித்தான். அவன் வண்டியில் கத்திய கத்தில் நான் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன்.

“அவ்வளவு கேவலமாவாடா நான் பாட்டு பாடிட்டேன்?” என்று அவன் செயல் புரிந்தும் புரியாமலும் எனக்குள் கேட்டுக் கொண்டேன்.

“நான் வந்ததுலயே வொஸ்டு ட்ரிப் டா இது” என்று அவன் சொல்லிவிட்டு வண்டியை எடுத்து திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்குச் சென்றான்.

அங்கே செல்லும் வரை ஒரு வார்த்தைக் கூட அவன் பேசவில்லை, “எனக்கு வேல வந்துடுச்சு, நான் சேலத்துக்கு போறேன். நீ தென்காசிக்கு கிளம்பு” என்று சொல்லிவிட்டு, இது வரையிலான செலவுக்கென்று 1000 ரூபாயை ஜிபே செய்துவிட்டு கிளம்பிவிட்டான். கார்த்தியின் கோமாளித்தனங்களும், அதிரடி முடிவுகளும், தேவையில்லாத வார்த்தைகளும் எனக்கு பழகிவிட்டதால், எனக்கு பெரிதாக அவனிடம் எதிர்வினையாற்ற தோன்றவில்லை. இந்த இடத்தில் அவனை நினைத்து வருத்தமாகத் தான் இருந்தது. நானும் அவனும் வெளிச்சத்தை பற்றி பேசிக்கொண்டு வந்தது நினைவிற்கு வந்து போனது.

தனியாக தென்காசி சென்றுவிட்டு, என் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு சேலம் கிளம்பிவிட்டேன். குற்றாலம் செல்ல மனம் வரவில்லை. நாட்கள், வாரங்கள், மாதங்கள் என உருண்டோடினாலும், என் மனம் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

அது, ஏன் அந்த பார்வையற்ற பெண்ணுக்கு, அந்த தோசையை நான் வாங்கித் தரவில்லை என்று? அவ்வளவு கல் நெஞ்சக்காரனாக மாறிவிட்டேனா? இல்லை கஞ்சனாக மாறிவிட்டேனா? அவ்வளவு தான் மனித மனமா? பல மாதங்கள் உருண்டோடிவிட்டன, ஆனால், இன்னும் என் மனம் என்னை மன்னிக்கவில்லை. உறக்கமற்ற இரவுகளை அந்த நாள் எனக்கு பரிசளித்துவிட்டுச் சென்றது.

எனக்கு அந்த பெண் யாரென்று தெரியாது. அந்த பெண்ணிற்கு நான் எப்படி இருப்பேன் என்றுக் கூட தெரியாது. அவ்வளவு ஏன், படைத்தவனின் தவறால், அந்த பெண்ணிற்கு யாரையும் பார்க்கக் கூட முடியாது. என் வாசம் தெரியாது, என் குரல் கூட தெரியாது. ஆனாலும் நான் அந்த பெண்ணிற்காக வருந்துகிறேன். என் இறப்பு வரை வருந்துவேன். “மனிதாபிமானமாக என்னால் நடக்க முடியவில்லையே?” என்ற குறை என் சவக்குழிக்குள் என்னுடன் புதையுண்டுபோகும்.

ஆனாலும், “ஒரு ரவா தோசை பார்சல்” என்று ஏன் எனக்கு சொல்லத் தோன்றவில்லை?

இறக்கமற்ற உலகத்தில், யாரோ ஒரு மனிதன், தனக்கு வாங்கிக் கொடுத்த ஒரு ரவா தோசையினால், அந்த பெண்ணிற்கு பெரிதாக எந்தவித மாற்றமும் நடந்துவிடப் போவதில்லை. நான் அப்படி செய்திருந்தால் கூட யாரோ ஒருவன், பாவம் பார்த்து வாங்கிக் கொடுத்துள்ளார் என்று கூட அந்த பெண் நினைத்திருக்கலாம். இல்லை, என்னிடம் தான் பணம் இருக்கிறதே இனி நானே வாங்கிக்கொள்வேன் என்று கூட அந்த பெண் என்னிடம் சொல்லியிருக்கலாம். இல்லையென்றால், எனக்கு இந்த உதவி வேண்டாம் என்று கூட அந்த பெண் மறுத்திருக்கலாம். ஆனால், அது எதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒரு வேளை, இப்படியெல்லாம் அந்தப் பெண் நினைக்காமல், “ஒரு நல் உள்ளம் கொண்ட மனிதர் எனக்காக இரக்கப்பட்டு, நான் ஆசையால் சாப்பிட நினைத்த, பொருளாதார சூழலால், வாங்க முடியாத ஒரு ரவா தோசையை, வாங்கிக் கொடுத்து என்னை மகிழ்வித்தார்” என்று அந்த பெண் ஒரு நொடியேனும் நினைக்க வாய்ப்பிருந்திருப்பின், அது இந்த உலகின் மேல் ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை அந்த பெண்ணிற்கு கொடுத்திருக்கலாம். அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்.

இன்னும் அந்த ஒரு வெளிச்சத்திற்காக அந்த பெண் காத்துக் கொண்டிருந்தால்?