Monday, December 23, 2024
Home > சிறுகதை > தண்ணீரில் நான் பார்த்த முகம் – #சிறுகதை

தண்ணீரில் நான் பார்த்த முகம் – #சிறுகதை

என் மச்சினிச்சியின் (மனைவியின் பெரியப்பா பெண்) திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சேலத்திலிருந்து திருச்செங்கோடு செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். நான் ஒரு சிறு தொழில் செய்து வாருகிறேன். தொழில் நிமித்தமாக எதிர்பாராதல் வந்த ஒரு வேலையால், சென்னை சென்று புதிய சேலை மாதிரிகளை காட்டி, வாடிக்கையாளரிடம் சம்மதம் வாங்கினால் மட்டுமே உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற நிலை. என் வேளையாட்களை யாரையேனும் அனுப்பி வைக்கலாம் என்றால், அவர்கள் ஏதாவது தவறாக புரிந்துக்கொண்டு வந்து என்னிடம் சொன்னால், என்ன செய்வது என்ற பயத்தில் நானே செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

“திவ்யா, அவசர வேலையா சென்னை போகனும்டி. இன்னைக்கு என்னால அங்க வர முடியாது” என்று திருச்செங்கோட்டில் இருக்கும் என் மனைவியிடம் அலைப்பேசியில் அழைத்துச் சொன்னேன். இதனால் அவள் கடும் கோபம் கொண்டுவிட்டாள்.

“உங்க வீட்டாளுங்க விசேசத்துக்கு இப்படி வராம இருப்பீங்களா? எங்க வீட்டாளுங்க எந்த முக்கியமான விசேசத்துக்கு கூப்பிட்டாலும் வர்றதில்ல. என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க? கோயில் கும்பாபிஷேகம், உறுதி சாப்பாடு, கிடாவெட்டு, கட்டுசோறுனு எந்த விசேசத்துக்கும் வர்றதில்ல. என்ன தான் உங்களுக்குப் பிரச்சனை…?” என்று போனில் திட்டிவிட்டு, ஒப்பாரி வைக்கத் துவங்கிவிட்டாள்.

“அடியே திவ்யா, அடியே இருடி. இப்ப எதுக்குடி ஒப்பாரி வைக்குற”

“என்னத்த இருக்கறது, இதுக்கு தான் எங்க அப்பா உன்ன எனக்கு கல்யாணம் பண்ணிவெச்சாங்களா? ஒரு நல்லது கெட்டதுக்குக்கூட ஜோடியா கலந்துக்க முடியல…”

“இப்ப எதுக்குடி அழுவுற?” என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டாள். அவள் என் மேல் கோபம் கொண்டாலும் என் வேலையை நான் செய்து தானே ஆக வேண்டும், அதனால் சென்னை சென்று வேலையை முடித்துவிட்டு நான் அன்றிரவே இரயிலைப் பிடித்து காலையில் முகூர்த்த நேரத்திற்கு முன்பு திருச்செங்கோடு மலைக்கோவிலுக்குச் சென்று திருமணத்தில் கலந்துக்கொண்டேன். பிறகு மனைவியிடம் மன்னிப்புக்கேட்டு சரிகட்டியது தனிக்கதை.

எந்த ஒரு தொழில் முனைவோருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனையே குடும்பத்தார் எதிர்பார்க்கும் நேரங்களை அவர்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர்களிடம் செலவிட முடியாமல் இருப்பதே. பிறந்தநாள், திருமணநாள், பண்டிகைகால நாட்கள் என முக்கிய நாட்களில் ஏதாவது ஒரு வேலை வந்து அந்த நாட்களின் மகிழ்வை அது கெடுத்துவிடும். பெரும்பாலான பெண்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் கோபத்தைக் கொடுத்தாலும், அதுவே பழகிவிட்டால், கடைசியில் அவர்கள் எதிர்பார்ப்பதை குறைத்துக்கொள்வார்கள். ஆனால், எப்போது வேண்டுமானாலும், வேண்டிய வண்ணம் விடுப்பெடுத்துக் கொள்ளலாம். எல்லாம் வேளையாட்கள் அமைவதைப் பொறுத்து தான். தொழில் முனைவர்களின் வாழ்க்கை இந்த மாதிரி நிறைய நிறைகளுடனும் குறைகளுடனும் தான் இருக்கிறது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இயலாமல் போனதும், என் மனைவி என்னை கடிந்துக்கொண்டதும், என் மனதிற்கு கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. ஆகவே திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து மணமகள் வீட்டிற்கு மணமக்களை அழைத்து வரும் மறுவீடு அழைப்பு நிகழ்வுக்கு மனைவியுடன் முதல் ஆளாக சென்று கலந்துக்கொண்டேன். குமாரபாளையத்திலிருக்கும் மச்சினிச்சி வீட்டிற்குச் சென்று மச்சினிச்சியையும் சகலையையும் திருச்செங்கோடு மணமகள் விட்டிற்கு அழைத்து வரும் வரை இருந்து அந்த நிகழ்வினை மனமார சிறப்பித்தோம் நானும் என் மனைவியும்.

அப்படி, அங்கு சென்றிருந்த பொழுது, நண்பகல் 12:30 மணியளவில் சகலையுடன் வெளியில் செல்ல வேண்டிய வேலை வந்தது. குமாரபாளையம் நகரில் இருக்கும் ஒரு உணவத்தில் விருந்துக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு வர வேண்டும். நான் வண்டியை எடுத்தேன். அவர் பண்பலையில் ஒலித்த பாடலின் ஒலியை குறைத்துவிட்டு, நான் சென்னை சென்றபொழுது திருமணத்தில் நடந்த பல நிகழ்வுகளை அவர் என்னிடம் ஆர்வமாக பகிர்ந்துக்கொண்டார். சில சமயங்களில் பெண் வீட்டார் நடந்துக் கொண்ட விதத்தில் அவருக்கு இருந்த குறைகளையும், அதனை சகலையின் வீட்டார் எப்படி கையாண்டனர் என்பதனையும் என்னிடம் மனம் விட்டு பேசிக்கொண்டு வந்தார்.

சகலையாக இருப்பது மிகவும் கடினமான ஒன்று. புது மாப்பிள்ளை தன் மனதிலுள்ள குறை நிறைகளை மனம் விட்டு சகலையிடம் தான் எளிதாகச் சொல்ல முடியும். அந்த தகவல்களை யார் மனமும் நோகாமல் பெண் வீட்டாரில் சம்பந்தப்பட்டவருக்கு புரியவைப்பது கடினம். அதனைவிட கடினம் சகலையிடம் சொல்லச் சொல்லி ஏதேனும் நம்மிடம் சொன்னால், அதனை சகலையின் மனம் நோகாமல் அவரிடம் சொல்ல வேண்டும். அது கத்திமேல் நடப்பதற்குச் சமம். கொஞ்சம் தடுமாறினாலும் இரு வீட்டாரின் கோபத்தையும், விரோத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

அதேசமயம், புது மாப்பிள்ளை வந்தவுடன், மூத்த மாப்பிள்ளையை ஒதுக்கும் நிகழ்வு நிச்சயம் நடக்கும். பெரும்பாலும் அது இயற்கையான நிகழ்வதாகத் தான் இருக்கும். ஆனால் மனித மனம் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளுமா? நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. நம்மை திட்டமிட்டுத் தான் பெண் வீட்டார் ஒதுக்குகிறார்கள் என்று நாம் எல்லாம் தெரிந்ததைப் போல நினைத்துக் கொண்டிருப்போம். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மரியாதையெல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பும். அதற்குள் கண்டதை நினைத்து குழம்பி இருப்போம்.

“சகல, எத்தனை சாப்பாடு சொல்லியிருக்கீங்க”

“15 சாப்பாடு சொல்லியிருக்கேங்க. 25-30 பேர் வரைக்கும் தாராளமா சாப்பிடலாம்னு சொன்னாங்க-ங்க”

“அப்ப சரி-ங்க”

“ஆ… இங்க தானுங்க… நீங்க மெடிக்கல் பக்கத்துல வண்டிய நிறுத்திட்டு வாங்க, நான் உள்ள போயி என்னானு பாக்குறேனு-ங்க”

“சரி. நான் வரேனு-ங்க. நீங்க உள்ள போங்க சகல”

நான் வண்டி நிறுத்த நினைத்த இடத்தில் முன்னும் பின்னுமாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நான் இறங்கி முன்னே இருந்த ஒரு வண்டியை கொஞ்சம் முன் நகர்த்திவிட்டு நாங்கள் வந்த வண்டியை நிறுத்திவிட்டு, உணவகத்தை நோக்கி நடக்கத் துவங்கினேன். அப்பொழுது ஒரு 70 வயது மிக்க பாட்டி, என்னைத் தாண்டி நடந்துச் சென்றார். நான் அந்த பாட்டியைப் பார்த்தப்படியே முன்நகர்ந்தேன். உணவகத்திற்குள் சென்றதும் அந்தப் பாட்டியை திரும்பிப் பார்த்தேன். நான் வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு முன்னே ஒரு பள்ளம் இருந்தது. அதில் நேற்று பெய்ந்த மழைநீர் நின்றுக் கொண்டிருந்தது. சேறு வடிந்து சாலையில் நடந்துச் செல்பவர்களின் முகம் தெரியும் அளவிற்கு மழைநீர் தெளிந்திருந்தது. அதில் அந்தப் பாட்டி தன் முகத்தை பார்த்து, தன் தலை முடியை சரி செய்துக்கொண்டிருந்தார்.

அந்தப் பாட்டி சிகப்பு வண்ணத்தில் புடவையணிந்திருந்தார். புடவை அழுக்காக இருந்தாலும், அந்தப் பாட்டிக்கு நன்றாக இருந்தது. ஆனால் பாட்டி மிகவும் மெலிந்திருந்தார். அவருக்கு ஒரு வேளை உணவு வாங்கிக்கொடுக்கலாம் என்று மனதில் தோன்றியது. உணவத்தில் சகலை பணம் கொடுக்க நின்றுக்கொண்டிருந்தார். நான் உணவு பரிமாறுபவரிடம் சென்று ஒரு சாம்பார் சாதத்தை கட்டி எடுத்து வரச்சொன்னேன்.

“இது யாருக்கு-ங்க”

“அதோ நிக்கறாங்களே அந்த பாட்டிக்கு-ங்க”

“தெரிஞ்சவங்களா சகல”

“இல்லீங்க” என்றதும் என் சகலை என்னை பார்த்தார்.

“வண்டி நிறுத்திட்டு வரும் போது பார்த்தேனு-ங்க, பசியில இருந்த மாதிரி இருந்துச்சிங்ளா. அதான் சாப்பாடு வாங்கிக் கொடுக்கலாமுனு தோனுச்சு-ங்க”

அந்த சாம்பார் சாதத்திற்கும் சேர்த்து அவரே பணம் கட்டிவிட்டார். நான் எவ்வளவு முயன்றும் என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. உணவகத்திலிருந்து கிளம்பும் தருவாயில் உணவகத்தின் உரிமையாளர் வந்து சேர்ந்தார். உணவக பணியாட்களிடம் சாப்பிட்டினை வண்டியில் வைக்கச் சொன்னார். நானும் பணியாட்களும் சென்று வண்டியில் சாப்பாட்டை வைத்த பிறகு, அந்தப் பாட்டியிடம் நான் வாங்கி வந்த சாம்பார் சாததைக் கொடுத்தேன்.

முதலில் வாங்கிக்கொள்ள தயங்கியவர், பின் தலை குனிந்த நிலையில் வாங்கிக் கொண்டார். அந்தப் பாட்டியை சாப்பாடு வாங்கிக் கொடுத்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டோமோ என்று என் மனம் என்னை சிந்திக்க வைத்தது. நான் பாட்டியிடம் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு வண்டியை நோக்கி நகர்ந்துவிட்டேன். சகலை உணவக உரிமையாளிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் வெய்யிலின் தாக்கம் அதிகமிருந்ததால், வண்டியில் அமர்ந்து குளிரூட்டியை இயக்கி வெயிலின் தாக்கத்தை தணிந்துக்கொண்டேன். பண்பலையில் எனக்கும் பிடித்த பாடல் ஒலிக்கத்துவங்கியது,

“செவ்வானம் சேலைக் கட்டி சென்றது வீதியில…

மனம் நின்றது பாதியில…

என்னைக் கொன்றது பார்வையில…

மின்சாரம் மின்னல் வெட்டி போனது சாலையில…

கனல் மூண்டது கண்களில…

உயிர் வேகுது நெஞ்சினிலே…”

ஜோதிகா, பிரித்திவிராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வித்யாசாகர் இசையில் கேட்கக்கேட்க மனதை வருடும் பாடலிது. ஆனால் இப்பாடல் ஒலிக்க ஒலிக்க என் கண்கள் அந்தப் பாட்டியைத் தேடியது. பாட்டி சாம்பார் சாதத்தை முழுவதுமாக சாப்பிட்டு முடித்துவிட்டு, அந்த இலையை மடித்து மருந்தகத்திற்கு அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நின்றுக் கொண்டிருந்தார். யாரையோ தேடுவதைப் போல தெரிந்தது. அவர் சாப்பிட்ட கையைக் கூட கழுவாமல் யாரைத் தேடுகிறார் என்ற சிந்தனையில் வண்டியை மீண்டும் நிறுத்திவிட்டு, குடிக்க ஒரு குப்பியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கி அந்தப் பாட்டியை நோக்கி நகர்ந்தேன்.

அதற்குள் அந்தப் பாட்டி பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மீண்டும் ஒருமுறை தன் முகத்தை பார்த்து தன்னை சரிசெய்துக் கொண்டார். நான் பாட்டியின் இந்த செயலை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் சுதாரிப்பதற்குள், இரு கைகளிலும் தண்ணீர் எடுத்துப் பருகத் துவங்கினார். வேண்டிய அளவு  தண்ணீர் குடித்து முடித்துவிட்டு, அதிலேயே கையைக் கழுவிக்கொண்டு, உதட்டையும் துடைத்துக்கொண்டார். நான் நின்றுருப்பதைப் பார்த்தவுடன், என்னிடம்,

“மகராசா நீ நல்லா இருக்கனும் சாமி” என்று சொல்லிவிட்டு, என் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்துவிட்டு அந்தப் பாட்டி தன் பையையும், ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார். நான் அந்த மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தைப் பார்த்தேன். அந்த மழைநீர் மீண்டும் தெளிந்து அது என் முகத்தை பிரதிபலித்துக்கொண்டிருந்தது.

“சகல போலாமா” என்று குரல் கேட்க, நான் கையில் வைத்திருந்த குப்பி நீர் முழுவதையும் குடித்துவிட்டு வண்டியில் ஏறி சகலையுடன் அவரது வீட்டிற்கு சென்றேன். யார் அந்தப் பாட்டி, எங்கிருந்து வந்தார்கள். எனக்குள் நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டு, நமக்கு முன் இருப்பதை எப்படியெல்லம் பயன்படுத்தலாம் என்றொரு பெரிய வாழ்க்கைப் பாடமே எடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

எத்தனையோ முறை மச்சினிச்சி வீட்டிற்குச் சென்றிவிட்டேன். குமாரபாளையம் நகரில் பல தெருக்களையும் சுற்றித் திரிந்துவிட்டேன். ஆனால் அந்தப் பாட்டியை நான் மீண்டும் பார்க்கவேயில்லை. மீண்டும் அவரைப் பார்த்தாலும், அவருக்கு என்னை நினைவு இருக்குமா என்று தெரியவில்லை, ஆனால் நிச்சயம் அவர்களிடம் ஏதாவது பேச முயற்சி செய்வேன். ஏனோ தெரியவில்லை, வயது முதிர்ந்து, சாலையில் சுற்றித் திரியும் மூத்த குடிமக்களுக்கு அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் தோன்றும். சாகும் போதாவது அவர்கள் கண்ணியமாக சாக வேண்டும்.

– எழுத்து: பட்டிக்காடு

– தொடர்புக்கு : pattikaadu@outlook.com, writerpattikaadu@gmail.com

– மேலும் படிக்க : https://www.pattikaadu.com