இலக்கில்லா பயணம் எங்கேயும் சென்று சேர உதவாது. அதேபோல் எனது இணையப் பயணம் இலக்கில்லாமல் தொடர்ந்தால் சமூகத்தினை சரியாக பதிவு செய்ய முடியாதோ என்கிற அச்சம் எனக்குள் எழுகிறது. ஆகவே என் இணைய பயணத்திற்கு எனக்கு நானே 5 (ஐந்து) வரையறைகளை வகுத்துள்ளேன். இதனை விதிமுறை என கூற முடியாது. ஏன்னெனில் எப்படி சத்தியம் செய்வது மீறப் படுவதற்கோ, அதேபோல் விதிமுறை வகுப்பதும் மீறப் படுவதற்குத் தான்.
விதிமுறை என்றால் பின்பற்ற வகுக்கப்பட்ட ஒரு சரியான வழிமுறை என்று பொருள். வரையறை என்றால் தரம், அளவு, ஆழம், அமைப்பு என்று பொருள். ஆகச் சரியானவை என சாமானியனும், ஆட்சியில் இருப்பவர்களும் நினைப்பதை, நம்புவதை ஆதரத்துடன் விளக்கவும், விமர்சிக்கவும், பதிவிடவும் துவக்கப்பட்டது தான் பட்டிக்காடு தளம். நாகரிக ஓட்டத்தில் பங்கு பெற முடியாமல் தவிப்பவனின் பார்வையில் சமூகத்தினை பகுப்பாயும் பொழுது, வகுக்கப்பட்ட சட்ட நெறிகளை உடைத்துக்கொண்டு வெளி வர வேண்டிய நிலை வரலாம். மேலும், நகர நாட்டுப்புறங்கள், அவர்களாகவே ஒரு நாகரிகத்தை தலைமுறை தலைமுறையாய் பேனிக்காத்து வருகிறார்கள். அது நான் கண்ட வரையில் பல விதிமுறைகளை மீறியதாகவே எனக்கு படுகிறது.
வரையறை என்னும் பொழுது என் எழுத்திற்கு நானே சில எல்லைகளை வகுத்துக்கொண்டு அந்த எல்லைக்குள் என் கருத்துக்களை வெளிப்படுத்தி வரலாம். இதன் மூலம் என் எழுத்து பாதை மாறிச் செல்லாமல் சரியான பாதையில் பயணிக்கும் என்பது என் எண்ணம். இந்த வரையறைகளும் ஒரு நாள் மீற வேண்டி வரும், ஆனால் மீறவே கூடாது என்ற தடையோ தயக்கமோ இருக்காது.
எதனை சொல்ல வருகிறோன் என்று முடிவெடுத்து தான் எழுத முயற்சிக்கிறேன், ஆனால் அனேக நேரங்களில் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் பாதை மாறி விடுகிறேன். சில சமயங்களில் எப்படி ஒரு கருத்தினை எழுதுவது என்ற குழப்பங்களும், பல சமயங்களில் இதனை ஏன் எழுத வேண்டுமா என்ற தயக்கங்களும் என்னை சுதந்திரமாய் எழுதவிடுவதில்லை. இவற்றை தவிர்க்க எனது வரையறைகள் உதவும் என்கிற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. ஒரு வேலை, என் இலக்குகளை அடைய முடியாமல் போனால் என் பாணியை மாற்றிக்கொள்ளும் வகையில் தயாராகவே இருக்கிறேன்.
ஆகவே, இந்த பட்டிக்காட்டான் சொல்ல வருவது யாதெனில், என்னுடைய அடுத்த 5(ஐந்து) பதிவுகளும் என்னுடைய வரையறைகளை விளக்கும். அதுவே என் இலக்கும்.
-விரைவில் விவரமாய்