கேள்வி பதில் 6:
கேள்வி: மார்ச்-8 ஆம் தேதி அன்று வரும் மகளிர் தினம் பற்றி கருத்து கூறுமாறு என் தோழிகளின் வேண்டுகோளுக்கான பதில்…
பெண்கள் தினம், மகளிர் தினம், உமன்ஸ் டே… இது போன்ற கொண்டாட்டங்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரபலம் ஆகி வருகிறது. இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது. மேலும் இதற்கு சக ஆண்களின் ஆதரவும் இருப்பது நமது சமூகம் சற்றே வளர்ச்சி அடைந்திருக்கிறது என நம்பிக்கையூட்டுகிறது. ஆனால் இந்த இடத்தில் என் மனதில் லேசான ஒரு பதற்றம் உருவாகிறது. பதற்றத்திற்கு காரணம், ஏன் பெண்கள் தினம் கொண்டாடப் பட வேண்டும் என்ற கேள்வி எனக்குள் எழுவது தான். ( பெண்ணியவாதிகளே முகத்தை சுழிக்காதீர்கள், மேலே படியுங்கள் ). ஆண்டில் ஒரு நாள் பெண்களுக்கான தினம் என்றால் மீதம் இருக்கும் 364 நாட்கள் என்ன ஆண்களுக்கான தினமா? 50% சதவீதம் பெண்கள் இருக்கும் உலகில் பெண்களுக்கான நாள் வருடத்தில் ஒரு நாள் தானா? எப்படி இக்கருத்தை, என் சக பெண்கள் ஏற்றுக் கொண்டு, உலக மகளிர் தினம் கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள் என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
சரி. வருடம் முழுக்க கஷ்டங்களைக் கடந்து வாழும் பெண்களுக்கான அடையாளமாய் ஒரு தினம் தான் உலக மகளிர் தினம் என் வைத்துக் கொள்வோம். ஆனால் இங்கேயும் இடிக்கிறதே? பெயரிலேயே அடையாளம் ஒட்டிக் கொண்டு இருக்கிறதே, பிறகு எப்படி இது உண்மையான மகளிர் தின கொண்டட்டமாக இருக்கும், வெறும் வெற்று அடையாளமாகவும், விளம்பரத்துக்காகவும், வணிக நோக்கம் கொண்ட மற்றுமொரு நாளாக மட்டுமே தானே இருக்கும். யார் தலையில் மிளகாய் அரைக்க முயல்கிறார்கள். வருடத்தில் 364 நாட்கள் நசுக்கிவிட்டு, எதற்கு அடையாளமாய் மகளிர் தினத்தை வருடம் வருடம் நினைவுக் கூற வேண்டும் ?
முடிவாக, உலக மகளிர் தினம் கொண்டாட தான் வேண்டும், அது தான் மகளிருக்கான அடையாளம் என நீங்கள் நினைக்குமாயின் பின் வருமாறு கூட செய்யலாமே. பெண்களே பெண்களுக்கு பெண்கள் (அ) மகளிர் தினம் கொண்டாடுவதை புறந்தள்ளிவிட்டு ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து பெண்கள் தினம் கொண்டாடலாமே! முடியாது என்கிறீர்களா? சரி. நாம், நம் பிறந்த நாளை எப்படி கொண்டாடுகிறோம்? நமக்கு மட்டும் நாமே மட்டும் என கொண்டாடிக் கொள்கிறோமா? இல்லையே. நண்பர்கள், பழகியவர்கள், பெற்றோர், சொந்தங்களுடன் தானே கொண்டாடுகிறோம், பரிசுகளும் பரிமாறிக் கொள்கிறோம். பிறந்த நாளையே அப்படிக் கொண்டாடும் பொழுது, மகளிர் தினத்தை அப்பா, அண்ணன், தம்பி, தோழன், காதலன், கணவன், மாமன் என மகளிரைச் சுற்றியுள்ளவர்களுடன் கொண்டாடலாமே? முதலில் முயற்சிப்போம், முடியாவிட்டால், யோசிப்போம் பெண்களே.
*****
கேள்வி: பெண்கள் வேலைக்கு போக வேண்டுமா?
இந்த கேள்வி பதில் சொல்லப் போகும் முன் பலரிடமும் இந்தக் கேள்விக் குறித்து விவாதித்த அனுபவத்தை முதலில் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த கேள்விக்கு, தங்கள் மகள் வேலைக்கு போக வேண்டும் என பெண்ணை பெற்ற பல பெற்றோர் பதில் சொன்ன போது அடைந்த ஆனந்தம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஏன்னென்றால் அதே பெற்றோர் தனது மகள் திருமணமான பிறகு வேலைக்கு போவதை விரும்புவதில்லை. ஏனென்று கேட்டால் ஆளுக்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் வேலைக்குப் போகக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். பிறகு ஏன் இலட்சங்கள் செலவு செய்து படிக்க வைக்கிறார்கள் என்பது தான் யாருக்கும் புரியாத புதிராக உள்ளது.
சரி புதிதாக திருமணமான இளைஞர்களின் பெற்றோர்களிடம் பேசிப் பார்த்ததில், மருமகள் வேலைக்குப் போவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தான் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த சந்தோஷமும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. காரணம் கேட்டால், எங்களுக்கு பேரன் பேத்தி வந்துவிட்டால் அவர்களை யார் பார்த்துக்கொள்வது? அந்த ‘வேலை’ இருக்குல்ல என பதில் கேள்வியல்லவா கேட்கிறார்கள். அதே சமயம் திருமணமான ‘புது மாப்பிள்ளைகளுக்கு’ தன் மனைவி வேலைக்கு போவதில் பெரும்பாலும் உடன்பாடு இருப்பதில்லை. ஆனால் இங்கேயும் இருக்கிறது ஒரு ‘டிவிஷ்டு’ உண்டு. இவையெல்லாம், ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்து அவை பள்ளி செல்லும் பருவம் வரை தான். அதற்கு பிறகு தன் ‘மனைவிமார்களும்’ வேலைக்குப் போய் குடும்பத்தை கரை சேர்க்க உதவ வேண்டும் என கணவன்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அட, இனியாவது சந்தோஷப் பட்டுக் கொள்ளலாம் என நினைத்து, அது போன்ற சூழ்நிலையில் வேலைக்கு போகும் சில பெண்களையும், வேலைக்கு போக வேண்டும் என வீட்டு நேருக்கடியில் இருக்கும் சில பெண்களையும் சந்தித்து பேசியதில் பெருங்குழப்பமே மிஞ்சியது. என்னெனில் அவர்களில் பெரும் பாலனவர்களுக்கு வேலைக்கு போவதில் இஷ்டமே இல்லை. தெளிவாக சொல்வதெனில், அவர்களுக்கு வேலை செய்ய பிடித்திருக்கிறது, ஆனால் வேலைக்குப் போக பிடிக்கவில்லையே. இஷ்டமில்லாத வேலையில் அவர்களால் என்ன பெரிதாக செய்துவிட முடியும்? குழப்பமாக இருக்கிறதல்லவா. இந்த குழப்பங்களை கொஞ்சம் தீர்க்க முயல்வோமா?
மேலே இருக்கும் பத்தியைப் மீண்டும் ஒருமுறைப் படித்துப் பாருங்கள். அதில் கூறியுள்ள கருத்துக்கள் எல்லாமே சம்பந்தப்பட்ட பெண்ணை சுற்றி இருப்பவர்களின் கருத்து தானே. அதில் எங்காவது ஒரு இடத்திலாவது சம்பந்தப்பட்ட பெண்ணின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்கிறதா? இல்லையே. நமது சமூகத்தில் தான் பெண்களின் கருத்துக்கு ஆண்கள் யாரும் மதிப்பளிபதில்லையே. அது அப்பனாக இருந்தால் என்ன? கணவனாக இருந்தால் என்ன? காதலனாக இருந்தால் என்ன? சகோதரனாக இருந்தால் என்ன? தோழனாக இருந்தால் தான் என்ன? எப்போது ஆண்களின் கண்களுக்கு பெண்கள் அடிமைகளாகத் தானே தெரிகிறார்கள். சொன்னதைச் செய் என்பது தானே நமக்கு இருக்கும் வேத மந்திரம்.
அதே சமயம் தன் குடும்பம் படும் பணக் கஷ்டங்களைத் தீர்க்க பல்வேறு இன்னல்களைச் சந்தித்திக் கொண்டும், வேலைக்குப் போயும், போராட்டமான வாழ்க்கையை வாழும் பலப் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். பிடித்த வேலைக்காக உலகம் சுற்றும் பெண்களும் இருக்கிறார்கள் தானே. ஆனால் இவற்றுள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவும், மேல்தட்டு குடும்பங்களின் பெண்களாகவும் தானே இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தில் ஏதோ ஒன்றிரண்டு குடும்பங்களில் மட்டும் தானே அப்படி இருக்கிறது? மேலும் நடுத்தர வர்க்கத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் ஏராளம். பலரின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்டு திகைத்துப் போய் இருக்கிறேன். பெரும்பாலான பெண்கள் தன்னுடைய சக தோழிக்குக் கூட தன்னுடைய உண்மையான நிலையை வளிப்படுத்துவதில்லையே.
அவற்றுள் ஒன்று இதோ. திருமணத்திற்கு முன் பெண்ணின் பெற்றோர் பெரும்பாலும் தனது மகளை வேலைக்கு அனுப்புவதற்கு ஒரு சுயநலம் ஒளிந்திருக்கிறது. அது, தனக்கு வரப்போகும் ‘மாப்பிள்ளை’ வீட்டார், படிக்க வைத்த பெண்ணை ஏன் வீட்டிலேயே வைத்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்காமல் இருக்கவே. இன்னும் சிலரோ, எக்காரணம் கொண்டும் என் மகளை வேலைக்கு அனுப்ப மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பார்கள். எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை, ஆனால் பெரும்பாலான நடுத்தர வர்க்க வீடுகளில் இது தான் நிலை. ஆனால், அந்தப் பெண் வேலைக்குப் போக விரும்புகிறாளா? அப்படியானால் எங்கே வேலைக்கு போக விரும்புகிறாள்? அல்லது மேலே படிக்க விரும்புகிறாளா? அவளின் கருத்தொன்ன என்பதை யாரும் காது கொடுத்துக் கேட்கத் தயாராயில்லை. இன்னும் சில குடும்பங்கள் இருக்கின்றன, அவற்றில் பத்திரிக்கையில் தன் பெண் இன்ன நிறுவனத்தில் இன்ன வேலைக்கு போகிறாள் என போட்டுக் கொள்ளவே தன் பெண்ணிற்கு பிடித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் வேலைக்கு அனுப்பும் அவலம் இருக்கத் தானே செய்கிறது.
ஒரு பெண்ணின் பிறந்த வீட்டிலேயே இப்படி என்றால் அவள் புகுந்த வீட்டிற்குச் சென்றால் என்ன என்ன நடக்கும்? யோசித்துப் பார்க்கவே வெறுமையாக இருக்கிறது. ஏன் ஒரு பெண் திருமணமான உடன் தன் கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும்? அது தானே எல்லா பிரச்சனைகளும், எல்லா கொடுமைகளும் ஆரம்பப் புள்ளி. ஏன் இரு குடும்பங்களும் சேர்ந்து, திருமணமான உடனே முதலிரண்டு வருடங்களுக்கு புதுமணத் தம்பதிகளை தனிக் குடித்தனம் வைக்கக் கூடாது. (இப்போழுது ஆங்காங்கே இம்முறை நடைமுறையில் இருக்கிறது ஆனால் பரவலாக இல்லை) இக்காலத்தில் சகோதரனில்லாமல் வாழும் பெண்களும், சகோதரி இல்லாமல் வாழும் ஆண்களும் அதிகமாய் இருக்கும் பொழுது, திருமணமான உடன் தனிக்குடித்தம் சென்றால் ஆண் என்றால் எப்படிப் பட்டவன் எனப் பெண்ணும், பெண் என்றால் எப்படிப் பட்டவள் என ஆணும் புரிந்துக் கொள்ள எவ்வளவு உதவியாய் இருக்கும். நமது சமூகமும் என்றாவது ஒரு நாள் அப்படிப்பட்ட முன்னேற்றத்தை நோக்கி நகரும்.
சரி, இன்றைய எதார்த்தத்திற்கு வருவோம். நான் சந்தித்த பெண்களில் ஒருவரின் கதை என்னை மிகக் கடுமையாக பாதித்தது. பல இரவுகள் அந்த பெண்ணின் கண்ணீர் என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டது. அவளின் கதையை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். அதன் சுருக்கமாக இதோ.
“அவள் கோவையில் ஒரு பொது நிருவனத்தில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவில் 3 வருடங்களாக பணியாற்றி வருகிறாள். வீட்டிற்கு ஒரே பெண், கூடப் பிறந்தவர்கள் யாருமில்லாத சுழ்நிலையில் அவளின் பெற்றோர்க்கு பக்க பலமாக அருகிலேயே திருமணம் முடித்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள். மிக மிக நியாயமான ஆசை தானே. மேலும் அவளுக்கு சொந்த ஊரிலேயே அந்த நிரந்தரமான பொதுத் துறை வேலைக் கிடைத்ததால் அவளால் வேலையில் நன்கு பிரகாசிக்க முடிந்தது. வேறு ஊருக்கு மாறுதலாகிச் சென்றாலும் அதே வேலையில் மீண்டும் முதலில் இருந்து துவங்கினால் இந்த வெற்றி சாத்தியப் படாமல் கூடப் போகாலாமல்லவா? இப்படியான நிலையில் அவளுக்கு வரன் பார்க்கத் துவங்கியுள்ளனர் அவள் வீட்டினர். அவளுக்கு வந்த பெரும்பாலான சம்பந்தங்கள் பெங்களூரு, புனே, ஐதராபாத் போன்ற பெரு நகரங்களில் கணினித் துறையில் வேலைப் பார்ப்பவர்களாக இருந்தனர். ஏனோ எதுவும் கைகூடவில்லை. அப்போது பார்த்து, அப்பெண்ணின் பெரியப்பாவுடன் பணிப்புரிந்தவரின் மகனுக்கு அவளைப் பெண் கேட்டு வந்தனர். அவனும் அதே கணினித்துறை ஆள் தான். மருதமலையில் வைத்துப் பெண் பார்க்கும் படலம் நடந்தது. எல்லோருக்கும் சம்பந்தம் பிடித்துப் போனது. சரி பெண்ணும் மாப்பிள்ளையும் ஒன்றிரண்டு வார்த்தைகள் தனியாக பேசட்டும் என அவர்களைப் பேசவிட்டார்கள் பெரியவர்கள்.
அப்போது, அவன் சொல்லியிருக்கிறான், நான் சிடிஎஸ் சென்னையில் பிரிவில் தான் வேலைப் பார்க்கிறேன். ஆகவே அங்கே மாற்றலாகி வந்துவிடு. ஆனால் அவளுக்கே அவன் சிடிஎஸ் கோவையில் வேலை செய்வதாகத் தான் சொல்லப் பட்டிருந்தது. மாப்பிள்ளை தான் அவசரப்பட்டு உண்மையை உளறிவிட்டான். அவள் அதற்குப் பட்டென்று மாற்றலாகி வர முடியாது என்று சொல்லிவிட்டாள். அவனே அவள் சொல்வதைக் கேட்கவே இல்லை. பெரியவர்கள் அடுத்த மாதம் நிச்சயம் என்றும் அடுத்த 6 மாதத்தில் கல்யாணம் என்று முடிவு செய்ய, அவள் இடிந்து போனாள். அவனாக அவளுக்கு தொடர்பு கொண்டான். அவன் குணம் உட்பட் எல்லாமே அவளுக்கு பிடித்து தான் இருந்தது. ஆனால் அவள் முன்னால் இருந்தது இரண்டே பிரச்சனைகள் தான் ஒன்று, அப்பா அம்மாவை கோவையில் தனிமையில் விட மனமில்லை அவர்களுக்கோ சென்னை போன்ற நகரம் சரிவராது என அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. மற்றொன்று, ஆசையுடன் செய்து வரும் வேலையை விட்டு மாற்றலாகி போக மனமில்லை. தன் அடையாளத்தை ஏன் அழித்திக் கொள்ள வேண்டும் என்றவள், அந்த மாப்பிள்ளை பையனிடம் என்ன செய்யலாம் என யோசனைக் கேட்டாள். அவனே உங்கள் பெண் இப்படி வேலையை விட்டு வர மாட்டேன் என்று சொல்கிறாள் என பிரச்சனை செய்ய அரம்பித்துவிட்டான், ஏதோ அவளை மனமுடித்தவன் போல.
இவள் வீட்டினர் எல்லோரும் அவளுக்கு அறிவுரைக் கூற அரம்பித்துவிட்டனர். அவள் குழம்பிப் போய்விட்டாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை அவளுக்கு. நிச்சய நாளுக்கு முதல் நாள், சரி, இது நமக்கு சரியாக வராது என முடிவெடுத்து, அந்தத் தகவலை அந்த பையனின் அப்பாவிடமே நேரடியாக சென்று சொல்லிவிட்டாள். அவரும் புரிந்துக்கொண்டு நிச்சயத்தை நிறுத்திவிட்டு சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று அவளின் வீட்டிற்கு வந்து அவள் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அவளின் பெரியப்பாவிற்கு தகவல் தெரிந்து, அவர் வீட்டிற்கு வந்து, அவளை வாய்க்கு வந்தப் படி திட்டிவிட்டு சென்றார். இதே மாறி இருந்தால் உனக்கு மாப்பிள்ளையே கிடையாது என்று சாபம் வேறு. அவளின் நின்றுப் போன நிச்சயதார்த்ததிற்காக, அப்போது தான் அவளின் வீட்டிற்குள் நுழைந்திருந்தேன். வீடே அல்லோலப் பட்டுக் கிடந்தது. என்னைப் பார்த்ததும் அவள் விட்ட கண்ணீருக்கு என்னால் அப்போது விடை சொல்ல முடியவில்லை. ஏதோ அன்று என்னால் முடிந்தவரை அறுதல் சொல்லிவிட்டு வந்தேன், அவளின் பெற்றோர்க்கு.”
இப்போது அந்த தோழிக்கும் சேர்த்து பதில் சொல்கிறேன். அதற்கான ஒற்றை வரி பதில் இது தான். தனக்கென அடையாளத்தை உருவாக்க நினைத்தால் ஒரு பெண் வேலைக்குப் போக வேண்டும். (தொழிலும் செய்யலாம்)
*****
அடுத்த தொகுப்பில் (கேள்வி-பதில்-7ல்) விவாதிக்கப் போகும் கேள்விகள்.
1. பெண்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும்?
2. உங்கள் வீட்டில் அதிகமாக உழைப்பது அப்பாவா? அம்மாவா?
3. ஒரு பெண் ஆதாயத்திற்காக வேலைக்குப் போக வேண்டுமா? அல்லது அடையாளத்திறகாக போக வேண்டுமா?