Monday, December 23, 2024
Home > கேள்விபதில் > பெண்ணுக்குத் தேவை ஆதாயமா? அடையாளமா?- கேள்விபதில் – 7

பெண்ணுக்குத் தேவை ஆதாயமா? அடையாளமா?- கேள்விபதில் – 7

கேள்விபதில்-7

1. பெண்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும்?

பணம். இது தான் இன்றைய பெரும்பாலான உழைக்கும் பெண்களுக்கு மிக தேவையானதாக இருக்கிறது. அதனை இலக்காக வைத்தே இக்காலத்தில் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். பணம் மட்டுமே மிக முக்கியக் காரணம் என முடிவு செய்ய வேண்டாம். வேறு பல காரணங்களும் இருக்கலாம். ஆனால் மிக முக்கிய காரணமாக இருப்பது பணமே. ஆனால் இது தான் இன்றைய எதார்த்தம். ஒவ்வொரு மனிதனுக்கும் பணத்தின் தேவை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பணவீக்கம், பொருளாதாரம் 1000 காரணம் சொன்னாலும் பணத்தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதனை யாராலும் தடுக்க முடியாது. அதற்கு ஏற்றார்போல், நவீனம் என்ற பெயரில் வீட்டிற்குள் மின்னனுப் பொருட்கள் அதிகமாக நுழைந்துக் கொண்டே இருக்கிறது. ஆக பணம் இருந்தால் தான் நிம்மதியும், வசதி வாய்ப்புகளும் கொண்ட வாழ்க்கையை வாழ முடியும் என்றாகிவிட்டது. இது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் பணத்திற்காக மட்டுமே வேலைக்குப் போக வேண்டுமா?

இன்றைய பெண்கள் நிறைய படிக்கிறார்கள. பல இடங்களில் ஆண்களைவிட பெண்கள் தான் படிப்பில் நிறைய சாதிக்கிறார்கள். ஆனாலும் ஏன் வேலைகளில் பெண்களால் மிகப் பெரிய அளவில் சாதிக்க முடிவதில்லை? இங்கு தான் பெண்களுக்கும் தெரியாத, ஆண்களுக்கும் புரியாத வியாபார அரசியல் விளையாடிக் கொண்டிருக்கிறது. பெண்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும் என பார்ப்பதற்கு முன் இந்த வியாபார அரசியலையும் பார்க்க வேண்டும்.

எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக, ஐடி நிறுவனங்களில் நிகழும் வியாபார அரசியலைப் பார்த்துவிடுவோம். ஐடி நிறுவனங்களில் பெண்களுக்கு பல நல்ல வாய்ப்புகளை வழங்கிவருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் அதில் ஒரு சுரண்டல் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

ஐடி நிறுவனங்கள் புராஜக்ட் அடிப்படையில் தான் செயலாற்றுகின்றன. அப்படிக் கிடைக்கும் புராஜக்டுகள் அதிகபட்சம் 2-3 வருடங்களில் முடிக்கப் பட வேண்டியதாக இருக்கும். இந்த சுழ்நிலையில், அந்த புராஜக்டுகளில் பல புதிய பெண்களை வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள். அது சிறு நிறுவனமாக இருந்தாலும் சரி அல்லது விப்ரோ போன்ற பெரு நிறுவனமானாலும் சரி. அந்தப் பெண்களுக்கு பெரும்பாலும் கொடுக்கப்படும் வேலைகள் எடுபிடி வேலைகளாக இருப்பதாக ஐடி துறையில் பணிப்புரியும் பெண்களே என்னிடம் குமுறியுள்ளனர். அந்தப் பெண்களுக்கு அந்தப் பணியில் கற்க ஏதுமேயில்லை என்று சொல்லவில்லை. அங்கே கற்பதற்கும் நிறைய இருக்கிறது, ஆனால் பலருக்கு சரியான வாய்ப்புகள் தான் தரப்படுவதில்லை. சரி. விசியத்துக்கு வருவோம்.

ஐடி நிறுவனங்களில் வேலைக்கு எடுக்கப்படுவர்கள் பெரும்பாலும் திருமணமாகதவராகவும், அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்கக பின் புலத்தில் வந்தவராகவும், கண்டிப்பாக வேலைக்குப் போய் குடும்பத்தைக் கரை சேர்க்க வேண்டிய இடத்தில் இருப்பவராகவும் இருக்கக்கூடியவர்களாகத் தான் இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் தான் அவர்களுக்குத் தேவை, அப்போது தானே அவர்கள் அந்த புராஜக்ட் முடியும் வரையாவது வேலைப் பார்ப்பார்கள். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தக்கூடுயது.  இது தான் வியாபார தந்திரம். இங்கே என்ன வியாபார அரசியல் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? சரி உங்கள் வட்டத்தில் இருப்பவர் எவரேனும் ஐடி நிறுவனத்தில் வேலையில் இருப்பார்கள், அவர்களிடம் ஐடி வேலையில் இருந்து ஏன் நினைத்த நேரத்தில் வெளியேர முடியவில்லை என்று கேட்டுப் பாருங்கள்.

ஐடி நிறுவனங்களில் எல்லாரும் சமம், மேலாளரைக் கூட பெயர் சொல்லி அழைக்கலாம், திறமைக் கேற்ற ஊதியம் என பெருமைகளைக் அடிக்கிக் கொண்டே போகலாம் தான். ஆனால் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் தராதவை தான் ஐடி நிறுவனங்கள். அவர்களுக்குத் தேவை புராஜக்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு கூலியாட்கள் தேவை. அப்படியான கூலிகளாக மாறத் தான் இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் முயன்றுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பெற்றோரும், பள்ளி கல்லூரிகளும், ஆசிரியர்களும், அவ்வளவு ஏன் அரசாங்கங்களும் கூட உதவியாக இருக்கின்றன. பெண்களே கூலிகளாக முயற்சி செய்யாதீர்கள், கூலி கொடுக்கும் இடத்திற்கும் வர தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இப்போதில்லை, எப்போதும் வாய்ப்புகள் தானாக கிடைக்காது நீங்கள் கேட்டால் எதுவும் கிடைக்காமல் இருக்காது என்பதனையும் நீங்கள் தான் புரிந்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கான வாய்ப்புகளைத் தேடிச் சொல்லுங்கள். எப்போதும் கிடைத்த வேலையிலேயே செட்டில் ஆகி விடலாம் என யோசிக்காதீர்கள் மக்களே. உங்களுக்கான பிரதான வாய்ப்புகள் ஏராளமாய் காத்திருக்கிறது உங்களின் தேடலுக்காக.

இதுப் போன்றே எல்லா துறைகளிலும் வியாபார அரசியலும், சுரண்டல்களும் இருக்கும். அதனை எல்லாம் மீறித்தான் இந்திரா நூயி (பெப்சி-தலைமை செயல் அலுவலர்), சவிதா ஜீண்டல் (ஆசியாவின் பணக்காரப் பெண்மணி), சுஷ்மா சுவராஜ் (இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்), சந்தா கோச்சர்(ஐசிஐசிஐ-தலைமை செயல் அலுவலர்), அருந்ததி பட்டாசரியா (பாரத ஸ்டேட் வங்கி-தலைமை செயல் அலுவலர்), ஐரான் சர்மிளா (அசாம் போராளி) மற்றும் எண்ணிக்கையற்ற இந்திய பெண்களும், இந்தியத் தாய்மார்களும் சாதிக்க முடியாதவையெல்லாம் சாதித்து இந்த தேசத்தை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளனர்.

முடிவாக, பெண் வேலைக்குப் போக வேண்டுமானால் அவள் தனக்காகவும் தன் சுய முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே வேலைக்குப் போக வேண்டும். இந்திய தேசத்தில் ஒரு பெரும் புரட்சி வரப் போகிறது, அதனை முன்னேடுக்கப் போவது பெண்களாக இருக்கப் போகிறார்கள். அதற்கு தயாராகுங்கள்!!!

2. உங்கள் வீட்டில் அதிகமாக உழைப்பது அப்பாவா? அம்மாவா?

ஒரு வீட்டில் அதிகம் உழைப்பது ஆணா? பெண்ணா? என்ற கேள்விற்கு பதில் சொல்வது மிக மிக எளிது. நிச்சயம் பெண்கள் தான் வீடுகளில் அதிகம் உழைக்கிறார்கள் அதே சமயம் அவர்களே அதிக சுரண்டல்களையும், கூலியில்லாத வேலைகளையும் செய்து வருகிறார்கள். ஒரு ஆண் 100 சதவீதம் உழைக்கிறான் என்றால் ஒரு பெண் 150 சதவீதம் உழைக்கிறாள். ஆண் பெண்ணுக்காக உழைப்பதை விட பெண் ஆணுக்காக உழைப்பது அதிகம். இன்னும் சொல்லப் போனால் பெண் தனக்காக உழைப்பதை விட ஆணுக்காக உழைப்பதே அதிகம். உங்கள் அம்மாவைக் கேட்டுப்பாருங்கள் இன்னும் நிறையத் தெரியும். எப்போதும் போல இதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா? இதோ அடித்தப் பத்தியைப் பாருங்கள், உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள்.

ஆண்கள் துணையின்றி சமூகத்தில் சாதித்து இருக்கும் பல குடும்பங்களின் உணர்ச்சிகரமான கதைகளை நாம் கேட்டுக் கேட்டு வளர்ந்திருக்கிறோம். ஆனால் பெண் துணையின்றி இருக்கும் ஒரு குடும்பத்தைக் கூட கேள்விப்பட்டதேயில்லை. மகளாக, இரண்டாம் தாரமாக, பாட்டியாக, சொந்த பந்தமாக, வேலைக்காரியாக அந்த குடும்பங்களில் ஒரு பெண் பாத்திரம் பிரதானமாக தவறாமல் இருக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது? பெண்கள் தான் அதிகம் உழைக்கிறார்கள். எந்த ஊதியமும் இல்லாமல் பாசத்திற்கான உழைப்பாக அவர்களின் உழைப்பு இருக்கிறது.  அங்கே தான் ஆண்களின் சுரண்டல்களும் ஒழிந்திருக்கிறது.

இன்னும் நம்ப முடியவில்லையா? ஒரு செய்தி சொல்கிறேன். ஆமெரிக்காவில் 87% ஆண்கள் பெண்ணின் உதவியில்லாமல் வாழ முடியவில்லை என  கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். நிச்சயம் நமது நாட்டில் இந்தச் சதவீதம் அதிகமாகத் தான் இருக்குமே ஒழிய குறையாது. Everyday is women’s day because without women, men can’t have a day.

3. ஒரு பெண் ஆதாயத்திற்காக வேலைக்குப் போக வேண்டுமா? அல்லது அடையாளத்திறகாக போக வேண்டுமா?

கண்டிப்பாக ஒரு பெண் அடையாளத்திற்காக மட்டுமே வேலைக்குப் போக வேண்டும். ஆதாயத்திற்காக வேலைக்குப் போகும் பெண்களே பலவிதமான சுரண்டல்களுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். அடையாளம், ஆதாயத்தைக் கொடுக்கும். ஆதாயம், அடையாளத்தை கெடுக்கும்.

– விடைகளைத் தேடுவோம்.

(மேலுள்ள கருத்துக்கள் யாவும் விவாதத்திற்கு உரியவையே)