Monday, December 23, 2024
Home > அரசியல் > #தேர்தல்2016 > வேட்பாளர் பட்டியல் #தேர்தல்2016 – பதிவு…2

வேட்பாளர் பட்டியல் #தேர்தல்2016 – பதிவு…2

இந்தத் தேர்தலில் போட்டியில் இருக்கும் வேட்பாளர்களைப் பற்றிய அலசல்களுக்கு போகும் முன்னர் நமது ஜனநாயக முறைப் பற்றி சில அடிப்படைகளை விளக்கி விடுகிறேன்.

  1. நமது ஜனநாயக முறைப்படி முதல்வர்/பிரதமர் வேட்பாளரை அறிவித்து தான் போட்டியிட வேண்டும் என எந்த சட்டமுமில்லை. அதேபோல முதல்வர்/பிரதமர் வேட்பாளரை அறிவிக்க எந்தத் தடையுமில்லை. ஆனால் முதல்வர்/பிரதமர் என்பவர் தேர்தல் மூலம் தேர்தேடுக்கப்பட்டவர்கள் மூலமாக தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் தான்.
  2. தமிழக சட்டமன்றம் 234 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் 117 உறுப்பினர்களுடைய ஆதரவு கொண்டவர் முதல்வராக தேர்தேடுக்கப்படுவார். அது ஒரு கட்சியின் தலைவராக மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
  3. அதேபோல தனக்கு ஆதரவு தெரிவித்த அந்த 117 பேரில் இருந்து மட்டும் தான் அமைச்சரவையை தேர்தேடுக்க வேண்டும் என்பதில்லை.  அமைச்சரவை அமைக்க 234 உறுப்பினர்களையும் பரிசீலிக்க முதல்வராக வருபவருக்கு உரிமையுண்டு. எடுத்துக்காட்டாக அம்பேத்கர் அப்படி தான் அமைச்சரானார். என்ன ஒன்று, அமைச்சராக இருப்பவர் அரசுக்கு எதிராக செயல்படுபவராக தார்மீக ரீதியில் இருக்க முடியாது. எனவே அவரும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவராகவே அறியப்படுவார்.

இனி வேட்பாளர் பட்டியல்களை அலசுவோம்…

அதிமுக கூட்டணி…

அதிமுக கட்சியில் அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்த பிறகு திமுக கூடாரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியாம் என செய்தி வரும் அளவிற்கு மிக மோசமான பட்டியலாகிவிட்டது. கடந்த முறை போட்டியிட வாய்ப்பு கொடுத்த 100 பேருக்கு இந்த முறை வாய்ப்பில்லை. இப்போதிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் 60க்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதேபோல இப்போது இருக்கும் அமைச்சர்களில் 10 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் புகார்களுக்கு ஆளான பல அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் உள்ளாட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள். அவர்களில் அனேகமானோர் ஊழல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்களுக்கு ஆளானவர்களாக இருக்கிறார்கள். ஆக மொத்தத்தில்…

  1. அனேக அமைச்சர்கள் எதிரணியில் பலம் பொறுந்திய வேட்பாளர்களுடன் மோத உள்ளனர். வெற்றி பெருபவருக்கு மட்டுமே முக்கியத்துவம். தோற்பவருக்கு இது தான் கடைசி தேர்தலாக இருக்கும்.
  2. அடுத்த 5 வருடங்களுக்கு தனக்கும், கட்சிக்கும் அடிமையாக இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  3. அதிமுக வேட்பாளர்கள் பலர் திறமையற்றவர்களாக இருப்பது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

திமுக கூட்டணி…

காமராஜரை எதிர்த்து கல்லூரி மாணவரை நிறுத்தி வெற்றி பெற்ற கட்சி திமுக. சாமானியனுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய கட்சி திமுக. ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு “a shadow of himself” அதாவது பழைய பெருமைகளுக்கு ஒப்பாமல் குனி கூறுகி நிற்பது. அது போலவே இன்று திமுக ஆகிவிட்டது. திமுகவில் குறுநில மன்னர்களைப் போன்றது மாவட்ட செயலாளர்கள் பதவி. திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் தான் அமைச்சர்கள் மற்றும் எல்லாம். ஒரு காலத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் போது சொல்வார்கள் சேலத்தில் கருணாநிதி நுழைய வேண்டுமானால் அவர் வீரபாண்டியாரின் அனுமதி பெற்ற பிறகே நுழைய முடியும் என்று. அப்படியானால் திமுகவில் குறுநில மன்னர்களின் சொல்வாக்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். அப்பேர்பட்ட குறுநில மன்னர்கள் போட்ட ஆட்டத்தால் தான் 2011,2014ல் திமுக தோற்றது. திமுக இன்னும் திருந்தவில்லை. அப்பேர்பட்ட குறுநில மன்னர்கள் அனேக பேருக்கு திமுக தலைமை மீண்டும் இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. மேலும் முன்னாள் குறுநில மன்னர்களின் வாரிசுகளுக்கும் கிட்டதிட்ட 24 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் புதுமுகங்கள் என்ற போர்வையில். பல தொகுதிகளில் மீண்டும் மீண்டும் ஒருவருக்கே போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. இவையெல்லாம் மீறி, தகுதி வாய்ந்த வேட்பாளர்களாக ஒரு சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். கட்சியை உடைத்து, மாற்று கட்சிகளில் இருந்து தமது கட்சிக்கு வரும்படி ஆசைக்காட்டி அழைத்து, பல லெட்டர்பேட் கட்சிகளுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி என திமுகவின் இந்த தேர்தல் வேட்பாளர் பட்டியல் பெருத்த ஏமாற்றமே. ஆக மொத்தத்தில்…

  1. ஸ்டாலினை ஆதரிக்கும் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களின் நோக்கம் திமுக வென்று மீண்டும் ஆட்சி அமைத்தால் தனது வாரிசுகளுக்கு எதாவது பதவியும், தனது வருங்கால சந்ததிகளுக்கு சொத்தும் சேர்க்க வேண்டும் என்ற நோக்கமே. இது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் என்னவோ இன்னும் கட்சியை முழுமையாக ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் விடவில்லை போலும்.
  2. தலைவன் எவ்வழியோ மக்களும் அதே வழியே. இது பழமொழி. ஆனால் இன்றைக்கு திமுகவினால் ஒரு புது மொழி உருவாகி இருக்கிறது. அது யாதொனில், மக்கள் எவ்வழியோ தலைவனும் அதே வழி. ( எ.கா. தன் மகனுக்கு கட்சியில் நல்ல எதிர்காலமும் வாய்ப்பும் வேண்டி திமுக தலைவர் மகன்கள், மகளை ஆதரிக்கும் குறுநில மன்னர்களான மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினர்)
  3. திமுக வேட்பாளர்கள் பலர் மீது மக்களுக்கு கோபம் தீர்ந்தபாடில்லை இது கொஞ்சம் ஓட்டுக்களை நிச்சயம் சிதறடிக்கும்.

தேமுதிக-தமாக-மக்கள் நல கூட்டணி…

இக்கூட்டணி வேட்பாளர்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால், ஓட்டை சிதறடிக்க வேண்டும், ஆகவே, அதற்கு தகுதியான வேட்பாளர்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்துள்ளனர். இக்கூட்டணி வாங்கும் ஒவ்வொரு வாக்கும் திமுக அல்லது அதிமுக என எதோ ஒரு கட்சியை காலி செய்யும். அது எது என்பது தமிழக மக்கள் கையில் உள்ளது. ஆனால் குறைந்த பட்சம் சாமானியர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்ட கூட்டணியாக இருப்பது இக்கூட்டணி தான். ஆக மொத்தத்தில்

  1. இக்கூட்டணி கட்சி தலைவர்களை விட பலம் பெற்ற வேட்பாளர்கள் இல்லை என்றே சொல்லலாம். இக்கூட்டணி அனேகமாக 10 தொகுதிகளை வெல்லலாம். ஆனால் 50 தொகுதிகளில் இரண்டாமிடம் வந்துவிட வாய்ப்பு இருக்கிறது. கிட்டதிட்ட 100 மூன்றாமிடம் பெறும் என்பது போல தான் கள நிலவரம் உள்ளது.
  2. திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள், வைகோவின் மதிமுக, விஜயகாந்தின் தேமுதிக, இரு கம்யூனிஸ்டுகள், வாசனின் தமாக என எல்ல கட்சிகளுமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் புதுமுகங்களுக்கும், தகுதியானவர்களுக்கும் இத்தேர்தலில் வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
  3. இவ்வளவு இருந்தும் விஜயகாந்தை மக்கள் முதல்வராக ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள் என்பது தான் இக்கூட்டணியின் பலவீனம்.

பாமக…

கிட்டதிட்ட 150க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்கள் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அனேகமாக 5 தொகுதிகளில் இவர்களுக்கு வெற்றி கிடைக்கலாம், 15 இடங்களில் இரண்டாமிடமும், 30 இடங்களில் மூன்றாமிடமும் கிடைக்கலாம். மற்ற இடங்கள் என்ன என்று கேட்கிறீர்களா? வேறு என்ன, டிபாசிட் இழப்பார்கள். ஆனால் போட்டியில் இருக்கும் முதல்வர் வேட்பாளர்களின் கொஞ்சமேனும் உருப்படியான, தகுதியான ஒரு வேட்பாளர் என்றால் அது அன்புமணி தான். இத்தேர்தலில் இவர்கள் அடைய வைத்திருக்கும் இலக்கே 6% ஓட்டு மற்றும் 5 எம்.எல்.ஏக்கள் தான். அது இல்லாவிடில் இவர்களின் மாம்பல சின்னத்திற்கு ஆப்பு வரலாம். ஆக மொத்ததில்…

  1. அன்புமணி என்ற ஒற்றை மனிதரையும், தனது சாதி பலத்தையும் மட்டுமே நம்பி களம் இறங்கியிருக்கும் கட்சி, பாமக.
  2. சமூக சேவை செய்வர்களில் தனது சாதிக்காரர்களாக பார்த்துப் பார்த்து அவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  3. இதன் வேட்பாளர்களின் கணிசமானவர்களின் மீது கொலை முயற்சி, வன்முறையை தூண்டும் விதத்தில் பேச்சு, தீண்டாமைக்கு தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பது கவலையளிக்கிறது. இது சேதாரத்தை மேலும் அதிகப்படுத்தலாம்.

மற்றவை…

இவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தங்களின் பலத்தை சோதிக்கவும், கட்சிகள் தங்களை சேர்த்துக் கொள்ளாததாலும், இன்னும் பிற நோக்கங்களுக்காகவும் போட்டி போடுகின்றன பாஜக உட்பட. அவர்களுள் பெறும்பான்மையான வேட்பாளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பினும் அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி தான். ஆனால் இவர்கள் பிரிக்கும் ஒவ்வொரு ஓட்டும் ஒன்று திமுகவையோ அல்லது அதிமுகவையோ பதம் பார்க்கும்.

வேட்பாளர் மாற்றம்…

ஏற்கனவே அறிவித்த வேட்பாளர்களை மாற்றக்கோரி அக்கட்சியினரே போராடுவது நிச்சயம் ஜனநாயகம் கொஞ்சமேனும் இருப்பதைக் காட்டுகிறது. வியூக மாற்றம், வேட்பாளர் மீதான மக்கள் எதிர்ப்பு, திரைமறைவு காரணங்கள் என காரணங்கள் இருக்கிறது ஒவ்வொரு வேட்பாளர் மாற்றத்திற்கும் (அதிமுக தவிர).

பெண் வேட்பாளர்கள் எவ்வளவு???

மேலே உள்ள 4 கூட்டணிகள் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு மிக  மிக குறைந்த அளவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 4 கூட்டணிகளின் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் கூட 50% இடமான 117 கூட வரவில்லை என்பது மிக மிக வருத்தமாக இருக்கிறது. இதனைப் பற்றி விரிவாக பிறகு அலசுவோம்.

ஆக மொத்ததில்…

தமிழக மக்கள் பெரும்பாலும் வேட்பாளர்களைப் பார்த்து ஓட்டுப் போடுவதில்லை அவர்களின் ஓட்டு எப்போதும் தலைவர்களுக்குத் தான். அதற்கு இத்தேர்தலும் விதிவிலக்காக இருக்கப் போவதில்லை.

– மே 19ன் முடிவு பலருக்கு முடிவுகட்டும்…