கேள்வி: ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களை கூலிகள் என்று விமர்சிக்கும் போக்கு அதிகரித்த வண்ணம் இருக்கிறதே?
பதில்:
சில உண்மைகள்…
- வளர்ந்த நாடுகளில் எடுபிடி வேலை, கணினி வேலை, வண்டி ஓட்ட டிரைவர், பிளம்பர், எலக்டிரிசியன், கால் செண்டர் வேலைகளைச் செய்ய ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கிறது என்பதனை போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. செலவீனங்களைக் குறைக்க மட்டும் அத்தகைய வேலைகளுக்கு இந்தியா போன்ற நாடுகளில் இருப்பவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள்.
- இதற்குக் காரணம் அவர்களிடம் இருக்கும் பணபலம். அதன் மூலமாக அவர்கள் தொழில்நுட்பம் என்னும் ஒரு பலமான ஆயுதத்தை உருவாக்கி வருகிறார்கள். ஆனால் அதனை சரிவர உருவாக்க அவர்களிடம் ஆள் பலமில்லை. அதனால் தான், இந்தியா, சீனா போன்ற மனித வளமிக்க நாடுகளிலிருந்து மனிதர்களை ‘இறக்குமதி’ செய்து கொள்கிறார்கள்.
- அவர்களுக்குத் தேவை லாபமும், நல்ல மூதலீடுகளும். அந்த வேலையைச் செய்யவே நமது இளைஞர்கள் வருடம் முழுவதும் உழைக்கிறார்கள்.
- நம் நாட்டு இளைஞர்கள் மேலைநாடுகளில் உருவாக்கும் ஒவ்வொரு கணினியும், செயலியும், மென்பொருளும், மற்ற எண்ணற்ற சேவைகளும் பிற நாடுகளுக்கு விரிந்து அதன் மூலம் அவர்களுக்கு கோடிக்கணக்கில் டாலர்கள் வருமானமாக வருகிறது.
- அன்று ஆங்கிலேயர்களுக்கு நாம் மொத்தமாக அடிமைப் பட்டுக் கிடந்தாலும், நமக்கான சுயத்தினை இழக்காமல் இருந்தோம். இன்று சுதந்திரம் கொட்டிக்கிடந்தாலும், அவர்கள் உருவாக்கும் பொருள்களுக்கும், சேவைகளுக்கும் அடிமைப் பட்டுகிடக்கிறோம். அன்றும் அடிமைப்பட்டுக் கிடந்தோம், இன்றும் அடிமைப்பட்டு கிடக்கிறோம் நாளையும் அடிமைப்பட்டு கிடக்கத்தான் போகிறோம். அன்று அது போதை வஸ்தாகவும் அவனது மொழியாகவும் மற்றும் பலவாகவும் இருந்தது, இன்று அது பொருளாகவும், சேவையாகவும், இணையமாகவும் இருக்கிறது, நாளை அது செயற்கையான நுண்ணறிவாகவோ (Artificial Intelligence), இணையமே எல்லாமாகவும் (Internet of Things) இருக்கப் போகிறதோ ஒழிய அடிமைப்பட்டுக் கிடப்பது மாறப் போவதில்லை.
- இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபட மூடியுமா? என்பது விவாதத்திற்குறிய விசயம். அதே சமயம், இந்த வகையான அடிமைத்தனத்திலிருந்து நமக்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா? என்பதும் விவாதத்திற்குரியது. ஆனால் ஒன்று, இதில் அடிமையாக இருப்பது எந்த அளவிற்கு ஆபத்தோ, அதே அளவிற்கு இதிலிருந்து முழுவதும் விலகி இருப்பதும் ஆபத்து தான்.
சரி. ஏன் ஐடி பணியாளர்கள் கூலிகளில்லை…
- இவர்கள் உலகையே இயக்குபவர்கள், இவர்கள் தான் இன்றைய உலகின் எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்கள். இவர்களின் பங்கில்லாமல் இனி சிறு கண்டுபிடிப்பும் சாத்தியமில்லை என்பதே நிதர்சனம்.
- கணினித் துறை என்பது, தான் வளர்ந்து, மற்ற துறைகளையும் வளர்க்கிறது. அள்ள அள்ள குறையாத ஆற்றல் கொண்டது கணினித்துறை. அதில் உலகம் போற்றும் அளவிற்கு பெயர் பெற்றவர்கள் நமது நாட்டினர் என்பது எவ்வளவு பெரிய சாதனை.
- இன்றைய ஐடி வல்லுநர்கள் சேவை தருபவர்கள் (Service Providers) என்ற நிலைமாறி, மென்பொருள் தருபவர்கள் (Product Suppliers) என்ற நிலையை நோக்கி முன்னேற்றம் கண்டு வருகிறார்கள்.
- இந்தியாவில் வேலைக்குப் போவோரில் வெறும் 1 சதவீதமே இருக்கும் ஐடி-பிபிஓ ஊழியர்கள் வருடாவருடம் 9 இலட்சம் கோடி வருவாய் ஈட்டித் தருகிறார்கள். இது நம் இந்திய பட்ஜெட்டில் சரிபாதி. இரண்டு வருடங்களுக்கு ஐடி துறையில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, இந்திய தேசத்திற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டே போட்டுவிடலாம் நண்பர்களே.
- இத்துறையில் நேரடியாக 35 இலட்சம் பேரும், மறைமுகமாக 65 இலட்சம் பேரும் வேலைப்பார்க்கிறார்கள். அதாவது 1 கோடி குடும்பங்களுக்கு இவர்கள் வருவாய் ஈட்டித் தருகிறார்கள், தோராயமாக அந்தப் பணத்தின் மூலமாக நேரசியாக 4 கோடி இந்திய மக்கள் பயன் பெறுகிறார்கள். மறைமுகமாக 12 கோடிப் இந்தியர்களுக்கு வாழ்வளிக்கும் துறை தான் இந்தியக் கணினித்துறை. எனவே அவர்களை கூலிகள் என்று எப்படிச் சொல்ல முடியும். அப்படி சொல்வது சரியா?
ஒரு வேளை. ஐடி பணியாளர்கள் கூலிகளோ…
- எனக்கு இவ்வளவு கூலி வேண்டும் என போராட முதுகெலும்பு இல்லாதவனை கூலிகள் என மேல் நாட்டு அறிவு ஜீவிகள் வரையறுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் நமது ஐடி ஊழியர்களையும், பிபிஓ ஊழியர்களையும் கூலிகள் என்று தானே அழைக்க வேண்டும். ஏன்னெனில் கடந்த 10 வருடங்களாக இத்துறைக்குள் நுழைபவர்களின் ஆரம்ப ஊதியத்தில் கொஞ்சம் கூட மாற்றமில்லையே.
- பத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு வேலைக்கு 25,000 ரூபாய் கொடுத்தாலும் தகுதியான ஆட்கள் கூட கிடைக்க மாட்டார்கள். ஆனால் இன்றோ, அதே வேலையைச் செய்ய 20,000 ரூபாய் கொடுங்கப் போதும் என 10 பேர் வரிசையில் அல்லவா நிற்கிறார்கள். “நீ இல்லனா போடா ஆயிரம் கூலிக்காரர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்வது அதிகமாகி வருகிறதே. அதனால் தானே யாருக்கும் ஆரம்ப கட்ட சம்பளம் உயரவேயில்லை.
- சொல்வதை செய்யும் ரோபோக்களாக மட்டுமே நமது ஐடி-பிபிஓ துறையில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களாக யோசித்து ஏதும் செய்துவிட அவர்களின் பணி அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. அதேநேரம், அவர்களுக்கு யோசிப்பதற்கான மனத்திடமும், மனநிலையும் இல்லை என்பதும் உண்மைதானே.
- கட்டிட வேலைச் செய்பவன் இரவில் குடித்தால் தான் அடுத்த நாள் வேலையைச் செய்ய முடியும் என்ற மாயை உண்மையானால், ஐடியில் இருப்பவர்களும், பிபிஓவில் இருப்பவர்களும் ‘பெருமை’ என்ற மாயையில் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதானே. உண்மையில் ஐடியிலும், பிபிஓவிலும் வேலைச் செய்வது பெருமையல்ல, அது நமது சுயத்தையே காவு கேட்கும் கொடுமை தானே. பெருமை என்னும் புதைக்குழியில் இருந்து தப்புபவர்கள் நூற்றுக்கு ஒருவர் தானே.
- பெருமை என்ற மாயையில் இருந்து இவர்களாகவே வெளிவரவும் முடியாது, ஐடி-பிபிஓ நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்கள் பெருமை என்ற மாயையில் இருந்து வெளியேற அனுமதிக்காது. அவ்வளவு ஏன் அரசாங்களும் அவர்களை மாயையில் இருந்து வெளிவருவதி விரும்பாது என்பதே உண்மை. காரணம் இவர்கள் சம்பாதித்துக் கொடுக்கும் பணம் அரசாங்கங்களுக்கு வேண்டுமே, அதனால் அவர்களுக்கு பெருமை கிடைக்குமே.
- எங்கள் நாட்டில் 40 மணி நேரமே வார வேலை நேரம் என பீற்றிக் கொள்ளும் நாடுகளுக்காகவே நமது ஐடி-பிபிஓ ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் வார வாரம் 60-70 மணி நேரம் வேலைச் செய்கிறார்கள்.
முடிவாக…
அவர்கள் கூலிக்காரர்கள் என்றானால் அவர்களை கூலிக்காரர்கள் ஆக்கியது நாம் தான்.
ஒரு சாம்சங் அல்லது சோனி டிவியில் கிரிக்கெட் போட்டி பார்க்கும் போது கூட பெப்ஸி, கோக் என குடித்துக் கொண்டு, பீசாவும், பிஸ்கடுகளும் என மென்றுக் கொண்டு, ஐபோன்களில் டிவீட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப் என கருத்துச் சொல்லிக் கொண்டு, கடலைப் போட்டுக் கொண்டு, மேலும் எவ்வளவோ தேவையில்லாத வெளிநாட்டு பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு, எண்ணற்ற வாகனங்களை வாங்கிக் குவித்து கொண்டு, அதற்கு ஊற்ற பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோல், டீசல் என வாங்கிக் கோடிக்கணக்கான டாலர்களைச் செலவு செய்யும் நமக்கு, வெளிநாட்டிற்கு கூலிக்காரர்களாக இருந்து இராபகலாக உழைத்து டாலரில் சம்பாதித்து நமது டாலர் செலவுகளுக்கு அந்நியச் செலாவணி ஈட்டி, அந்தக் கடன்களை அடைக்கும் ஐடி-பிபிஓ ஊழியர்களை கூலிக்காரர்கள் என்று சொல்ல என்ன தகுதியிருக்கிறது? அவர்களுக்கு அரசாங்கள் மரியாதை தருவது இதனால் தான் என்பதனை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
நாம் நமது வார்த்தைகளைக் கொஞ்சம் யோசித்துப் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். யாரும் யாரையும் கூலிகளாக பார்க்கக் கூடாது. உண்மையில் யாரும் யாருக்கும் கூலிகளல்ல. அதுவே அறம். முதலில் இந்தியப் பொருட்களை வாங்குவோம், இந்தியனாக வாழப்பழகுவோம்.
– எல்லோரையும் நேசிக்கக் கற்றுக் கொள்வோம்.