Monday, December 23, 2024
Home > வகையற்ற > அலைகள் ஒய்வதில்லை – வாசகர் எழுத்து-2

அலைகள் ஒய்வதில்லை – வாசகர் எழுத்து-2

அலைகள் ஒய்வதில்லை!!!

எழுதியது: பெயர் கூறிப்பிட விரும்பாத வாசகி

சில நேரங்களில் நமக்குத் தெரியும். நமக்கு எதோ கெட்டது எற்படப் போகிறது, அதனால் நாம் கடுமையாக பாதிக்கப் போகிறோம் என்று தெரியும். அந்த நிகழ்வு தவிர்க்க முடியாது எனவும், அதனை தவிர்க்க நாம் என்ன தான் முயற்சி எடுத்தாலும் அது கடைசியில் வெறும் முயற்சியாகவும், அந்த முயற்சி நமது ஆறுதலுக்காக நாம் எடுத்தது எனவும் புரியும். நம்மால் அப்படிப் பட்ட தருணங்களில் எதுவும் செய்ய முடியாது எனவும், நம் கைகளில் எதுவுமில்லை எனவும் நமக்குத் தெரியும். ஆனால் நடப்பது நடந்தே தீரும்.

நம்மால் அப்படிப் பட்ட கெட்ட தருணங்கள் வருவதனைப் பார்க்க மட்டுமே முடியும். அதன் ஒவ்வொரு நொடியையும் நம்மால் உணர முடியும். அதன் கோரமுகத்தினை அணுஅணுவாக அனுபவித்துத் தான் ஆக வேண்டும். நாம் கடற்கரையில் நின்றால் எப்படி அலைகள் நமது கால்களை நோக்கி வந்துக் கொண்டே இருக்குமோ அது போல அந்த கெட்ட தருணங்களில் கெட்ட நிகழ்வுகளின் வீச்சி நம்மை தாக்கிக் கொண்டே இருக்கும்.

அந்த அலைகள் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. தூரத்தில் இருப்பது போல தோற்றமளிக்கும், நம்மை நோக்கி வராததுப் போல தோற்றமளிக்கும் ஆனால் நம் சுதாரிப்பதற்கும் அது நம்மைக் கடந்துச் சென்றிருக்கும். அது தவிர்க்க முடியாத ஒன்று என அப்போது கூட நம்மால் உணரமுடியாது. அப்படியான தருணங்களில் நாம் அங்கேயே நிற்பது போன்ற ஒரு மாய உணர்வு ஏற்படும். ஆனால் நமது கால்களுக்கு அடியில் இருக்கும் மணலே நம்மை உள்ளே இழுத்துவிடும். என்ன நடக்கிறது என நாம் உணர்வதற்குள் நாம் நினைந்திருப்போம். அப்பாடா நாம் தப்பித்தோம் என நிமிர்வதற்குள் அடுத்த அலை நம் காலடியில் இருக்கும். சரி கொஞ்சம் பின்னே நிற்போம் என்று நினைத்தாலும் அங்கேயும் அந்த அலை வந்து காலைத் தொடும். மீண்டும் நம்மை உள்ளே இழுக்கும். மீண்டும் அடுத்த அலை வந்து நம்மை உள்ளே இழுக்கும் வரை நாம் உலகமே நம் காலடியில் என நினைப்போம். ஆனால் மீண்டும் அலை வந்து நம் காலை இழுக்கும் பொழுது நாம் பதறுவோம்.

அப்போது நாம் வாழ்க்கை துவங்கிய இடத்திற்கே வந்து நிற்போம். அப்போது கூட நாம் நமது கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க மாட்டோம். எல்லாம் நமது கைக்குள் தான் இருக்கிறது, நம்மால் முடியும் என நாமே நம்மைத் தெற்றிக் கொள்வோம். ஆனால் நாம் செய்வது எதுவும் நமது கெட்ட காலங்களில் நமக்கு கை கொடுக்காது என நமக்கு புரியாது. காரணம் எல்லாம் சரியாக இருக்கும் என நாம் நமது பாதையில் பயணித்துக் கொண்டே இருப்போம். பாதையில் மேடுபள்ளங்கள் எல்லாம் சகஜம் என நமக்கு நாமே சாக்கு போக்கு சொல்லிக் கொள்வதைத் தவிர நம்மால் எதுவும் செய்துவிட முடியாது.

ஆனால் உண்மையில், எல்லா கெட்ட நிகழ்வுகளுக்கும் ஒரு முடிவு உண்டு. அதனை நோக்கி செல்ல நாம் தான் பயணப்பட வேண்டி இருக்கும். ஆனால் அதுவாகவே நம்மை நோக்கி வரும் என வெறும் பார்வையாளனாகவே இருந்துவிடுகிறோம். ஒருவரின் வெற்றியும் தோல்வியும் இந்த இடத்தில் தான் முடிவாகிறது. மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தாலும் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில் இருக்கும் நேர்த்தியே எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.

– அலைகள் ஒய்வதில்லை…