Monday, December 23, 2024
Home > இலக்கு > அவசரம்

அவசரம்

     இன்றைய அவசர உலகின் வேகத்திற்கு பலர் ஒன்ற முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் உலகம் தன் வேகத்தினைக் குறைக்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது. எல்லாவற்றிற்கும் அவசரம். காலையில் எழுந்தது முதல் இரவு வரை அவசரம், அவசரம், அவசரம். இப்படியான அவசர உலகில், கருத்துக்களும் அவசரமாய் பகிரப்பட்டு வருகின்றது.

     ஒரு சம்பவம், பேட்டி, விபத்து, கொண்டாட்டம், வெற்றி, தோல்வி என எதுவாய் இருந்தாலும் மக்கள் கருத்துச் சொல்ல தயாராக இருக்கிறார்கள். ஆனால் இன்று யார் எந்தக் கருத்துச் சொன்னாலும் அது பெரும்பாலும் அன்றே மறக்கப்படுகிறது அல்லது இருட்டடிக்கப்படுகிறது. மேலும் அநேக மக்களின் கருத்துக்கள் உணர்ச்சிகளின் குமுறலாகவும், மனவோட்டத்தின் வெளிப்பாடகவுமே நின்று விடுகிறது.

     முகநூல், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களும் மக்களின் குமுறலையும், உணர்ச்சிக் கொந்தளிப்பையும் தான் எதிபார்க்கின்றன. ஆதாரப்பூர்வமாய் யார் கருத்துக்களை பகிர்ந்தாலும், அது இங்கே எடுபடாமல் போகிறது. வதந்திகளுக்கும், பொய்களுக்கும், பகுதி உண்மைகளுக்குமான இடமாக சமூக வலைத்தளங்கள் வேகமாக மாறி வருகிறது. இல்லையில்லை நாம் தான் அப்படி மாற்றி வருகிறோம். அப்பொழுது தான் எல்லாவற்றையும் பரபரப்பாக்க (VIRAL) முடியும், ஊடங்களிலும் பிரபலமாக முடியம் என்பது தான் காரணம். இந்தப் போக்கு நிச்சயம் கண்டிக்கத் தக்கவை. அதே சமயம், பேராபத்துக் காலங்களில், இளைஞர்களை களத்துக்கு கொண்டு வந்து மற்றவர்களுக்கு உதவிட கைக்கொடுப்பதும் சமூக வலைத்தளங்கள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சமூக வலைத்தள நிறுவனங்களைப் பற்றி பிறகு விரிவாய் அலசுவோம்.

இப்பொழுது, என் வரையறைகளுக்கு வருமுன், இரண்டு மேற்கோள்களை இங்கே பகிர விரும்புகிறேன்.

  1. மதிப்பிற்குரிய எழுத்தாளர், திரு. அசோகமித்திரன் அவர்கள், ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் சொன்னார், ”உடனே உடனே எழுதினால் அது பத்திரிக்கை செய்தி மாதிரி ஆகிவிடும். மிக விரைவிலேயே அனுதாபம் எற்பட்ட இடத்தில் கூட சந்தேக நிழல் பரவும். அதனால் ஒரு இடைவெளி விட்டு எழுதுவது நல்லது” மேலும் “இணைய எழுத்துக்கள் மீது எனக்கொரு நெருடல் இருக்கிறது. அவர்களின் எழுத்துக்கள் எடிட்டர்களை கடந்து வந்தால் தான் சிறப்பாகும். எடிட்டர்கள் ரொம்பச் சிறிய மாற்றத்தில் எதையும் சிறப்பாக்கிவிடுவார்கள்” என அவர் கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
  2. என் ஆசான், ரியாஸ்அகமது அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அது, “உண்மை சுடும், எதார்த்தம் பலரை கலங்கவைக்கும்” மேலும் சொல்வார்,”வதந்திகளுக்கும், பொய்களுக்கும் ஆயுள் குறைவு, ஆனால் பரவிடும் வீரியமும், போலியான நம்பகத்தன்மையும் அதற்கு அதிகம். அதேசமயம், உண்மை தான் என்றும் வெல்லும், உண்மைகள் தான் என்றும் கதாநாயகன், பொய்கள் எப்போதும் வீரிய மிக்க வில்லன்கள். கடைசியில் நாயகன் தான் வெல்வான்” என்று சொல்வார்.

     இவையிரண்டும் எவ்வளவு எதார்த்தமான பார்வைகள். இந்த வார்த்தைகள் தான் என்னுடைய முதல் வரையறைக்கு வடிவம் கொடுக்க உதவியது. என்னை தெளிவு நோக்கி நகர்த்தியது. அது சம்மந்தமாக எனக்குள் எழுந்த சில விவாத பார்வைகளை உங்கள் முன் இதோ.

    • எந்த ஒரு சம்பவத்துக்கும், பேட்டிக்கும், நிகழ்வுக்கும், வெற்றி, தோல்விகளுக்கும் இந்த பட்டிக்காடு தளம் உடனடியாக தன் கருத்துத்தினை வெளிப்படுத்தாது. குறைந்தபட்சம் ஒரு வாரம் முதல் 15 நாள் வரை இடைவெளி விட்டு தான் இத்தளத்தில் எதுவும் விவாதிக்கப்படும். உதவிகள் கேட்பதைத் தவிர.
    • ஏன் இந்த அவகாசம்? சமூகத்தினை பதிவு செய்யும் பொழுது, நிச்சயம் உண்மைகளை பதிவு செய்ய வேண்டும். உண்மைகள் வெளிவர சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். உதாரணமாக, தமிழகத்தில், சென்னை வெள்ளத்தை எடுத்துக் கொண்டு பார்த்தால், சமூக வலைதளங்கள் முதல் ஆட்சியில் இருப்பவர்கள் வரை, நூற்றாண்டு கண்டிராத மழை என்று தான் எல்லோரும் மழையை குற்றவாளியாக்கினார்கள் ஆனால் இன்று உண்மை என்னவென்றால், மழை ஒரு காரணம், பிரதான காரணம் எல்லோருடைய பேராசை தான். வரலாறு கண்டிராத வெள்ளத்திற்கு மனித சுரண்டல்களே முக்கிய காரணம் என இன்று பல ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியில் இருப்பவர்களுக்கு முதலீடில்லாமல் லாபம் பார்க்க பேராசை, சிறிய முதலீட்டில் கொள்ளை லாபம் பார்க்க நிறுவனங்களுக்கு பேராசை, அரசு அலுவலர்களுக்கு வந்த வரை சுருட்ட வேண்டுமென பேராசை, நடுத்தர வர்க்க மக்களுக்கோ மிகமிக விரைவில் மேல்தட்டு வர்க்கமாக வேண்டி பேராசை. இவர்களின் பேராசைக்கு என்னைப் போன்ற நகரப் பட்டிக்காடுகள் தானே மீண்டும் மீண்டும் மீண்டும் இறையாகிறார்கள். அவர்களின் குமுறல்களையும் உண்மைகளையும் பதிவு செய்ய அவகாசம் வேண்டும் தானே.
    • பட்டிக்காடு தளம், எந்த விவாதமாயினும், இருபக்கங்களின் வாதங்களையும் எடுத்துரைக்கும். அப்போது தான் என்னுடைய வாசகரின் சிந்தனையிற்கு விவாத முடிவுகளை விட முடியும். அப்படி வாசகரின் முடிவிற்கு விடும் பொழுது தான் கள நிலவரமும் எதார்த்தமும் அவர்களுக்கு சென்றடையும். பலரும் பட்டிக்காட்டுத் தனமாக சிந்திக்கும் பொழுது பல கட்டமைப்புக்கள் உடையும், மாற்றம் தானாக நிகழும்.
    • இவையெல்லாம் விடுத்து, உடனே உடனே கருத்து சொல்லி கருத்துக் கந்தசாமியாக முயற்சி செய்தால், ஸ்டிக்கர் ஒட்டிவிடுவார்கள், என் மக்களே. ஆக எதற்கும் ஒரு இடைவெளி விட்டுச் செயல்படுவது எல்லோர்க்கும் நல்லது.

முடிவாக, என் முதல் வரையறை யாதெனில்,

சரியான தரவுகளின் (Source) அடிப்படையில் மட்டுமே இந்தப் பட்டிக்காடு தளத்தில் ஒரு சம்பவம், பேட்டி, விபத்து, கொண்டாட்டம், வெற்றி, தோல்விப் பற்றி கருத்துப் பகிரப்படும்.

     –     அவசரமில்லாமல் அசரடிப்போம்…