Monday, December 23, 2024
Home > சிறுகதை > கோபியும் நண்பர்களும்

கோபியும் நண்பர்களும்

“கேம்பஸ் இன்ட்ர்வியூவில் கலந்துக்க வேணாம்” என அன்புவும், நவீணும் முடிவாக இருந்தார்கள்.

“ஆமா, நீங்க பணக்கார வீட்டு பசங்க. வேலை இல்லனா தொழில பாக்க போயிடுவீங்க. காட்ட வத்து படிக்க வச்ச எங்க அப்பா முன்னாடி என்னாலலாம் கைய கட்டி நின்னு திட்டு வாங்க முடியாது டா” என்று சொன்னேன். “நான், கேம்பஸ் இன்ட்ர்வியூவில் கலந்துக்கப் போறேன். லக்கு இருந்தா வேல கிடக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கோபமாக கேண்டீனில் இருந்து வெளியேறிவிட்டேன்.

“டேய்… கோபி.. கோவிச்சுக்காத டா” என அன்பு என்னைப் பின் தொடர்ந்து வந்தான். கூடவே நவீணும் தான்.

“பின்ன என்ன டா! நானே இரண்டு அரியர் வச்சு இப்போதான் அத கிளியர் பன்னியிருக்கேன். சரி கேம்பஸ்ல எதாசும் வேல கிடைக்கும்னு வேண்டிட்டு இருக்கேன் கோயில் கோயில. நீங்க வந்து கலந்துக்க வேணாம்னா எப்படி இருக்கும்” என என் கோபத்தை வெளிக்காட்டிக் கொண்டே நடந்தேன்.

“சரி என்னமோ பன்னு” என நவீண் சொல்லிவிட்டு எங்கள் அறைக்குச் சென்றுவிட்டான்.

அன்புவைப் பார்த்தேன் “அவன் எப்பவும் இப்படிதான்னு தெரியாத. எங்க போயிடப் போறான். அப்புறமா அவன சமாதானப் படுத்திக்கலாம்” என்று சொன்னான். பிறகு கல்லூரியில் நடந்த நிகழ்வுகளை அசைப் போட்டப் படியே எங்களின் அறைக்கு வந்து சேர்ந்தோம்.

“ஆமா அன்பு, ஏன் கேம்பஸ் வேணாம்னு சொல்ற” என பேச்சை மீண்டும் ஆரம்பித்தேன்.

“டேய் கோபி. இப்போ கேம்பஸ்ல கலந்துகற எல்லோரும் நல்ல திறமையானவங்கனு சொல்ல முடியாது. நிறைய பேரு சராசரி தானே டா. அவனுங்க கூட இவ்வளவு திறமயா இருக்குற நீ  ஏன் போட்டு போடுறனு தா சொல்றோம்”.

“இப்ப உனக்கு கேம்பஸ்ல வேல கிடைக்குது வேச்சிப்போம். அடுத்து என்ன? கம்பனி காரங்க சொல்ற எல்லாம் செய்யனும். நாம இப்ப தான் நாலாவது வருசத்துல அடி எடுத்து வச்சிருக்கோம். நம்ம படிப்பே இன்னும் ஒரு வருசம் இருக்கே. அதுக்குள்ள நமக்கு எதுக்குடா வேல? சொல்லு?”  என அவன் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. சிறு அமைதிக்குப் பின் அவனே தொடர்ந்தான்.

“உனக்கு புடிச்சு இருக்கோ இல்லையோ. கம்பனிக்கு பொறதுக்கு முன்னாடியே அவன் சொல்றதலாம் நாம செய்யனும். ஒரு வருசம் கழிச்சு தான் வேலனு சொல்வான். அப்புறம் 6 மாசம் டிரைனிங் வேற கொடுப்பான். எப்படிப் பாத்தாலும் இன்னும் நீ வேலக்கு போக ரெண்டு வருசமாகுடா. அங்க போனாலும் உன்னால பெருச கத்துக்க முடியாது. அங்க நீ சாதிக்கனும்னு நினச்சாலும் அதுக்கான இடம் இருக்காது. அதுக்குள்ள உன்னோட பல திறமங்க உங்கிட்ட இருந்து காணாம போயிடும். அவனுக்கு ஏத்த மாதிரி நீ மாறிடுவ. நம்ம சீனியர் கோகுல் அண்ணா எப்பேர் பட்ட திறமையான ஆளு, அவரு இன்போசிஸ்ல்ல சேந்து இப்ப பத்தோட பதினொன்னா ஆயிட்டார்ல. கோவிந்தண்ணா பாரு. எந்த கம்பனிலயும் கேம்பஸ்ல சேலக்ட் ஆகல, ஆனா திறமையான ஆளு. பெங்களுருக்கு வேல தேடி போனாரு, ஒரு சின்ன கம்பனில சேந்தாரு. இப்போ ரெண்டே வருசத்துல அந்த கம்பனில முக்கியமான ஆளா மாறிட்டாரு. ஆனா இப்போதான் கோகுல் அண்ணாக்கு புராஜக்டே கிடச்சிருக்கு.” என் அன்பு சொல்லிக் கொண்டிருக்க நான் கேம்பஸ்கான படிவத்தை பூர்த்தி செய்து முடித்திருந்தேன்.

“இப்ப நான் என்ன பண்ணட்டும்” என அவன் கண்களைப் பார்த்த படியே கேட்டேன்.

“உருப்படியா படிப்ப முடி. உன்னோட திறமைய வளத்துக்கோ. நமக்கான வேல நிறைய இருக்கு. கொஞ்ச நாள் தேடுனா நல்ல வேலயே கிடக்கும்.”னு சொல்லிவிட்டு எனது பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சரிப் பார்த்தான். 

“சரி யோசிக்கிறேன்” என சொல்லிவிட்டு உறங்க சென்று விட்டேன்.

*****

அவன் அவ்வளவு சொல்லியும் நான் கேட்கவில்லை. இண்டர்வியூவில் கலந்துக் கொண்ட எனக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் “சிஸ்டம்ஸ் இஞ்சினியர்” வேலை கிடைத்தது. வருடம் ரூபாய் 3.25 இலட்சத்தில் சம்பளம் என்று சொன்னார்கள். வாழ்வில் பெரிதாக சாதித்து விட்டதாக நினைத்துக் கொண்டேன். அப்பா, அம்மாவிற்கு அளவுக் கடந்த கொண்டாட்டம். ஊர்பூராவும் சொல்லிவிட்டார்கள். பெருமையாக இருந்தது. செமஸ்டர் லீவில் ஊருக்குச் சென்ற பொழுது எல்லோரும் ராஜ மரியாதைக் கொடுத்தார்கள்.

லீவு முடிந்து கல்லூரிக்கு வந்த பின் இன்போசிஸ் நிறுவனத்தார் கேம்பஸ் கனேக்ட் என்ற பெயரில் நடத்திய சிறப்பு வகுப்பில் அதிகப்படியாக கலந்துக் கொள்ள நேர்ந்ததால் நவீண், அன்பு என இருந்த என் நட்பு வட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வந்தது. சிறப்பு வகுப்புக்கள் முடிந்து இரவு அறைக்கு வருவதற்கு அதிக நேரம் பிடித்தால், கல்லூரி அருகிலேயே வேறு ஒரு அறைக்கு மாறிக் கொண்டேன். அன்புவிற்கும், நவீணுக்கும் இந்த முடிவினால் வருத்தம் இருந்ததை அவர்கள் கடைசி வரை வெளிக்காட்டிக் கொள்ளவேயில்லை. என் சட்டு, புட்டு சாமான்களை என் புதிய அறைக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டுப் போனார்கள், கனத்த இதயத்தோடு.

கல்லூரியிலும் நவீணுடனும், அன்புவிடமும் பெரிதாக பேசிக்கொள்ள முடியவில்லை. “கோபி! கோபி!” என அவ்வப்போது என்னைத் தேடு வருவார்கள். ஆனால் சந்தர்ப்ப சுழ்நிலையால் அவர்களை சந்திக்க முடியாமலே போய்விட்டது. அவர்களும் புராஜக்ட் அது இது என அலைந்து திரிந்ததால் அவர்களுடன் பயணுள்ள வகையில் நேரம் செலவளிக்க முடியாமல் போய்விட்டது. அவ்வப் பொழுது படங்களுக்குச் செல்வதோடு அவர்களின் நட்பு நின்றுவிட்டது.

*****

நவீண் அவனின் அப்பாவின் நிறுவனத்தை எடுத்து நடத்த ஆரம்பித்துவிட்டான். அன்பு, மும்பையிலுள்ள ஏதோ ஒரு மொபைல் செயலி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவ்வப்பொழுது பேசிக்கொள்வோம், அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து தெரிந்துக் கொள்வதோடு சரி. நான் அப்போது தான் செங்கல்பட்டு அருகே இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு புராஜக்டில் செட்டில் ஆகியிருந்தேன். இரண்டு முறை சம்பள உயர்வு பெற்றுவிட்டேன். எங்கள் கம்பனியிலேயே, அமெரிக்கா செல்ல ஹெச்1பி விசாவிற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை துவக்கி இருப்பதாக சொன்னார்கள். இருந்தும் எனது வேலையின் மேல் ஒரு வெறுப்பு எட்டிப் பார்க்கத் துவங்கி இருந்தது. வேறு நிறுவனங்களில் இருந்தும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக வாய்ப்புகள் வந்த வண்ணமிருந்தன. தற்போதய நிறுவனத்திற்கு அருகிலேயே ஒரு வீடு பார்த்திருந்தேன். நான் எதிர்பார்க்கும் விலையில் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது வீடு. வீட்டில் எல்லோருக்கும் வீடு பிடித்திருந்தது. அப்பா அந்த வீட்டை வாங்கிவிடலாமே என்று சொல்லிக் கொண்டிருந்தார். வாங்கலாமா? வேண்டாமா? என எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. வாழ்க்கையில் அடுத்த முடிவு எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன்.

*****

நான்கு வருடம் கழிந்திருந்த பிறகு, ஒரு நாள் நாங்கள் மூவரும் ஒன்றுக் கூடுவோம் என முடிவு செய்து, சேலம் ஏற்காடு பகுதியில் இருந்த நவீணின் பண்னை வீட்டில் கும்மாளமடித்துக் கொண்டிருந்தோம். அப்போது

“கோபி! அடுத்து என்ன?” என நவீண் கேட்டான். என் மனதில் இருந்ததை எல்லாம் அவனிடம் கொட்டிவிட்டு அவன் என்ன சொல்வான் என எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் அவனோ எதோ யோசித்தவாறே அன்புவிடம் பேச ஆரம்பித்து இருந்தான்.

“கோபி, இப்போ உனக்கு என்ன தாண்டா பிரச்சனை?” என அன்பு என்னிடம் கேட்டான். “இப்பதானேடா சொன்னேன்” என அவனை முறைத்தப் படியே மீண்டும் அவனிடம் சொன்னேன் “இப்ப என்ன பன்னறதுனு தெரியல. குழப்பமா இருக்கு. வீடு வாங்குவதா? இல்ல வேற கம்பனி மாறி வெளிநாடு போகவா.”

அன்பு பேச ஆரம்பித்தான். “கோபி. உங்க குடும்பம் ஒஹோனு வாழ்ந்தக் குடும்பம். உன்னோட படிப்புச் செலவுக்காக உங்க அப்பா காட்ட வுத்து படிக்கவச்சாப்ல, அப்போ நீ அந்த காட்டயே திரும்பி வாங்குவது தான் சரினு எனக்குப் படுது.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இந்த யோசனை எனக்கு வராமல் போயிடுச்சே என யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் தொடர்ந்தான்.

“சரி அத வாங்க முடியலனா, உங்க ஊருலயே ஒரு தோட்டத்த வாங்கி அப்பா அம்மாவா அங்க குடிவையி. அவங்களுக்கு சென்னையும், பெங்களூரும் செட் ஆகாதுனு நான் அப்படி சொல்லல. அவங்க அங்கயே இருந்தாங்கனா உன்னேட எதிர்காலத்துல ஐடி வேல வேணானு முடிவேடுத்தா அப்ப அந்த தோட்டம் கைகூடுக்கும்னு தான் அப்படி சொல்றேன். இது என் கருத்துதான் ஆனா நீ தான் நல்லா யோசிச்சி முடுவேடுக்கணும்” என சொல்லிவிட்டு அவன் பேச்சை மாற்றிக் கொண்டான்.

அன்புவிடம் நான் கேட்டேன். “நவீணு தான் அவங்க அப்பா கூடவே செட்டில் ஆயிட்டான். உன்னோட திட்டம் என்ன?”

“டேய்! வெறுப்பேத்தாத டா. இக்கரைக்கு அக்கரைப் பச்ச.” என நவீண் கடுகடுத்தான்.

“நானு. ஒரு வருசம் வேல தேடுனேன். நிறைய வேல கிடைச்சுது ஆனா எதுவும் எனக்கு பிடிச்ச மாதிரி இல்ல. எல்லா வேலையும் ரொம்ப ஈசியா செய்யற மாதிரியே இருந்தது. அப்புறம் மும்பைல ஒரு கம்பனில சேந்தேன். ரொம்ப கஷ்டமான வேல தான். சரினு ஏத்துக்கிட்டேன். ஆனா இப்ப, அந்த வேல எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு. மூனுவருசம் ஆச்சு அங்க சேந்து. அப்புறம். ஊருல ஒரு 2 ஏக்கர் நிலம் வாங்குனேன். 10 லட்சம் லோன் போட்டேன். மூனே வருசத்துல லோன கட்டிட்டேன்.”

“அப்பா அம்மாவுக்கு மும்பைலயே நான் செட்டில் ஆகனும்னு வூடு வாங்க சொன்னாங்க. நான் தான் சினிமா வசனம் பேசி மாட்டேனுட்டேன். இப்ப அங்கயே வூடு வாங்கி இருந்தேன்னா. அமெரிக்கா போகற வாய்ப்ப தேடிப் போயிருக்க மாட்டேன். இப்ப இருக்கற முக்கவாசி பேருங்க அவங்களுக்கு கொஞ்சம் சவுரியமா இருந்தாலே அந்த வேலையே செட்டில் ஆகிறானுங்க.”

“என்னோட பாலிசி என்னா தெரியுமா? கல்யாணதுக்கு முன்னாடி டில்லி, மும்பைனு பெரிய ஊருல வேலப் பாக்கணும், கல்யாணம் ஆன உடனே  அமெரிக்கா, லண்டன்னு போய் இரண்டு மூனு வருசம் வேல பாக்கனும். குழந்த குட்டினு வந்துடுச்சுனா சென்னை, பெங்களூர்ருனு வந்துட்டா போச்சு. முடிந்த வரைக்கும் காச சேத்து சொந்த ஊருல நல்ல வூடு, தோட்டம்னு வாங்கி சேக்கனும். நமக்கு சலிப்பு தட்டுற வரைக்கும் ஐடில வேல பாக்கணும். அப்புறம் தோட்டம் கீட்டாம்னு ஊர சுத்த வேண்டியது தான். அத வுட்டுபுட்டு வூட்ட வாங்கி அதுக்கு லோன கட்டி, அப்புறம் அந்த லோனுக்காக வேலைக்கு போறதுலாம் வேஸ்டு. வாழ்க்கைய ரசிக்கனும். பொண்டாட்டி, புள்ள குட்டினு அமைதியா வாழனும்.” அப்போது என் லேப்டாப்பில் எனக்கு வந்திருந்த கம்பனி மெயில்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டே.

“கடைசியா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. நானு கிராமத்துல இருந்து வந்து தான் இன்னைக்கு ஐடி கம்பனில பெரிய பொருப்புல இருக்கேன். என் புள்ளங்களும் அப்படியே வளரட்டும். அவங்களுக்கு கிராமம் வேணுமா? நகரம் வேணுமானு அவங்களே முடிவேடுக்கட்டும். அவங்களுக்கு கிராமத்தையும் காட்டுவோம். நகரத்தையும் காட்டுவோம். அதுக்கு முதல்ல நம்ம கிராமத்துல நமக்கான அடையாளத்தைக் கொஞ்சம் உருவாக்கணும். கிராமத்தானுக்கு நகரம் புதுசில்ல, ஆனா நகரத்தானுக்கு கிராமம் புதுசு.” என பேசி முடித்து காற்று வாங்க கிளம்பினான் அன்பு.

“வாடா கோபி! சாப்புட போலாம்” என நவீண் கூப்பிட்ட பொழுது. “இதோ இந்த மெயில் அனுப்பிட்டு வர்ரேன்” என எனக்கு வந்திருந்த லண்டன் வேலையை உறுதிப்படுத்து மாறு கேட்டு அந்த நிறுவனத்தின் எச்ஆருக்கு மெயில் அனுப்பிவிட்டு சாப்பிடக் கிளம்பினேன், மனிதில் ஒரு தெளிவோடு.