ஜென்னல் ஓரத்தில் அமர்ந்து இரயிலில் செய்வது யாருக்குத் தான் பிடிக்காமல் இருக்கும். மாலை சூரியன் மறையும் நேரத்தில் பயணத்தில் கூடவே துணைக்கு ஒரு நல்ல புத்தகம் மட்டும் இருந்துவிட்டால், அந்தப் பயணமேஎவ்வளவு ரசனையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பயணத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவமே இக்கதை.
என் நண்பன் தேவா, பூனேவில் இருந்து மாற்றலாகி சென்னைக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது. இப்போது, வேளச்சேரி பகுதியில் புது வீடு ஒன்றை வாங்கியிருந்தான். சித்திரை மாதம், வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு அழைத்திருந்தான், அலுவல் நிமித்தமாக என்னால் அவன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு போக முடியவில்லை. ஆதலால், இந்த வருடம் ரம்ஜான் விடுமுறை நாளன்று, காலை அவன் வீட்டிற்கு சென்று விட்டு, அவன் குடும்பத்தாருடன் நேரம் செலவழித்துவிட்டு அன்று இரவே சேலம் திரும்பிவிட திட்டமிட்டு, இரயில் டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன்.
எல்லாம் திட்டமிட்டபடி எங்கே நடக்கிறது.
காலை அவன் வீட்டிற்கு வந்ததிலிருந்து, பழைய கதைகளைப் பேசிக் கொண்டு, கல்லூரிக்கால நிகழ்வுகளை நினைத்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே எங்களுக்குத் தெரியவில்லை. மாலை 6.30 மணி ஆகியிருந்தது. இரவு 9.00 மணி இரயிலுக்கு கிளம்ப வேண்டி இருந்ததால், தேவாவின் வீட்டில் இருந்து கிளம்ப ஆயத்தமானேன். அப்போது,
“என்னடா, நாலு வருஷத்துக்கு அப்புறம் வர்ற, அது வந்தவுடனே கிளம்பறனு சொன்ன என்ன?” என்று கேட்டான் தேவா.
“இல்லடா. டிக்கெட் போட்டுட்டேன். நாளைக்கு நிறைய வேல இருக்கு. அதான் சென்னைக்கு மாறிட்டல, நான் இன்னோரு நாள் தங்ககுற மாதிரி வர்றேன்” என்று சொன்னேன்.
நான் எவ்வளவோ போராடிப்பார்த்தேன், அவன் விடவில்லை. என் இரயில் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு. அவனே வெள்ளிக்கிழமை, மாலை 4.15 கோவை எக்ஸ்பிரஸில் சேலத்திற்கு இரயில் டிக்கெட் எடுத்துக் கொடுத்தான். மேலும் இரண்டு நாட்கள் அவனுடன் தங்கி சிறப்பித்துவிட்டு, வகை தொகையாக விருந்து சாப்பிட்டுவிட்டு, வெள்ளைக்கிழமை ஊருக்கு கிளம்பினேன்.
சரியான நேரத்திற்கு வந்து இரயில் ஏறினேன். நான் இரயில் ஏறவும், இரயில் சென்னை இரயில் நிலையத்திலிருந்து கிளம்பவும் சரியாக இருந்தது. என் எதிர் சீட் காலியாக இருந்தது. என் பக்கத்து சீட்டில், ஒரு தம்பதியர் இரு குழந்தைகளுடன் வந்தமர்ந்தனர்.
நான், ஆங்கிலத்தில், பால் கலாநிதி எழுதிய சுயசரிதை புத்தகமான “When Breath Becomes Air” புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். மெல்ல இரயில் கிளம்பியது, நான் அழ்ந்து படித்துக் கொண்டிருந்ததில் அரக்கோணம் தாண்டி காட்பாடி வந்ததே எனக்கு தெரியவில்லை. காட்பாடி வரைக்கும் என் சீட்டிற்கு எதிர் சீட் காலியாக இருந்தது. என்னருகில் அமர்ந்திருந்த தம்பதையருடைய சுமார் ஒரு வயதுடைய கைக்குழந்தை அந்த சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. அவர்களுடைய மூன்று வயது பெண் குழந்தை என்னருகில் அமர்ந்திருந்தாள். காட்பாடி வருவதற்குள் என் மடியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் அந்த சுட்டிக் குழந்தை.
காட்பாடியில் இரயில் சிறிது நேரம் நின்றது. அப்போது என் சீட்டிற்கு எதிர் சீட்டில் ஒரு பெண் வந்தமர்ந்தாள். அமர்ந்தவுடன் அவள் என்னைப்பார்க்க, நான் அவளைப் பார்க்க, நான் மெலிதாக புன்னகைக்க, அவள் என்னை முறைத்தாள். நான் சிறிது அதிர்ந்துப்போனேன். காட்பாடி தாண்டியவுடன் மீண்டும் பால் கலாநிதியின் வாழ்க்கை வரலாற்றைப்படிக்க ஆயத்தமானேன். காட்பாடியில் அந்தப் பெண்ணையும், மற்றும் பல பயணிகளையும் ஏற்றிக் கொண்டு இரயில் கிளம்பியது. அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை, இந்தப் பெண் என் வாழ்க்கையை புரட்டிப் போடப்போகிறாள் என்று.
காட்பாடி தாண்டி அரைமணி நேரம் இருந்திருக்கும், அப்போது என் மடியில் படுத்திருந்த குழந்தை விழித்துக்கொண்டாள். அவளுக்குப் பசித்ததுப் போல, அழ ஆரம்பித்துவிட்டாள். அவளின் அம்மா பிஸ்க்டை அவள் வாயில் திணிக்க முயல, அக்குழந்தை அதனை வேண்டாமென்றது. சில நிமிடங்களில் கனமாக அழ ஆரம்பித்துவிட்டாள், அதனைப் பார்த்து அந்தக் கைக்குழந்தையும் அழ ஆரம்பிக்க, அந்த இடமே களேபெரமானது. கைக்குழந்தைக்கு பால் கொடுக்க குழந்தையின் அம்மா குழந்தையை தூக்கிக்கொண்டு அந்தப்பக்கம் நகர, இத்தனை சத்தத்திற்கு மத்தியில் இதற்கு மேல் எப்படி படிப்பது என என் புத்தகத்தை சீட்டில் வைத்துவிட்டு, என்னிடம் இருந்த கடலைமிட்டையை எடுத்து அந்தக் குழந்தையிடம் கொடுத்தேன். அவள் முதலில் வாங்க மறுக்க, அவளின் அப்பா அதனை வாங்கி அவளிடம் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டாள். விக்கி விக்கி அழுதுக் கொண்டே அவள் அந்தக் கடலைமிட்டாயை சாப்பிட்டாள். அவளை அனைத்து என் மடியில் உட்கார வைத்துக்கொண்டேன்.
அப்போது அந்தக் குழந்தையை என் எதிரில் இருந்த பெண் அழைக்க, குழந்தை அப்படியே அவளிடம் தவ்வியது. என்ன மாயம் செய்தாளே தெரியவில்லை, அந்தக் குழந்தை அந்தப் பெண்ணிடம் நன்றாக ஒட்டிக்கொண்டது. அந்தக் குழந்தையின் அம்மா அதற்குள் வந்துவிட்டார், அவர் அழைத்தும் அந்தக்குழந்தை அந்தப் பெண்ணைவிட்டு அம்மாவிடம் போகவில்லை. அப்போது, அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்தார்கள். குழந்தையின் அம்மா என்னருகில் அமர்ந்திருந்தார். குழந்தை அந்தப் பெண்ணின் மடியில். நான் அந்தப் பெண்ணிற்கு எதிரில்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து அந்தப் பெண், தான் வேலூர் சிஎம்சியில் ஐந்தாமாண்டு மருத்துவம் படித்துவருவதாகவும், தனது பூர்வீகம் ராஜஸ்தான் என்றும், அவளின் தாத்தா காலத்திலேயே, சேலம் வந்து குடியேறிவிட்டதாகவும், ஆக, அவள் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் சேலம் தான் என்று சொன்னாள். அவளின் மரியாதை கலந்த கொங்குத்தமிழ் அழகாக இருந்தது. நான் என் புத்தகத்தை எடுத்துப் படிக்க முயன்றேன். ஆனால், ஏனோ அதற்குமேல் படிக்க முடியவில்லை. என் கவனமெல்லாம் அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதிலேயே இருந்தது. என்னையறியாமலே நான் அவளை இரசிக்க ஆரம்பித்திருந்தேன்.
நல்ல ஆரஞ்சு பழ நிற மேனி, அவளுக்கு. வடக்கத்திய முகம், ஆனால், தமிழ்நாட்டு பெண்களின் முக ஒப்பனையுடன் அம்சமாக இருந்தாள். இரு புருவத்திற்கும் பாலமாக இருக்கும் படி ஒரு சிறியப் பெட்டு. சப்தம் வரும் படியான அழகான தொடு. கழுத்தில் சிறியதாய் ஒரு செயின். வெள்ளையும் நீலமும் கலந்தகலரில் சுடிதார் உடுத்தியிருந்தாள். ஃப்ரி ஹைர் விட்டிருந்தாள். அவ்வப்போது அது அவளின் முகத்தை மறைப்பதுமாகவும், அதனை அவள் விலக்கிவிடுவதாகவும் இருந்தாள். கிட்டதிட்ட அவள் பார்க்க தமிழ்பட நாயகி, பிர்யா பவானி சங்கர், போலவே இருந்தாள். அவளை நான் பார்த்து இரசித்ததை அவள் அக்குழந்தையின் அம்மாவிடம் பேசும் முசுவில் கண்டுக்கொள்ளவில்லை. நல்லவேளை நான் அவளை ரசிப்பதைப் பார்த்திருந்தால், அந்த இடமே ரணகளமாகியிருக்கக்கூடும்.
அதற்குள் ஜோலார்பேட்டை வந்தது. அந்த தம்பதியிர், தமது குழந்தைகளுடன் இறங்கிக்கொண்டார்கள். அங்கே இறங்கும் முன், அந்தக் குழந்தை அவள் மடியில் இருந்து இறங்கி என்னருகில் வந்து என் கண்ணத்தில் முத்தமொன்றைக் கொடுத்தது, டாடா காட்டியது. கடலைமிட்டாய்க்கு நன்றியும் சொன்னது அழகான மழலைத்தமிழில். இதனைப் பார்த்து அவள் சிரிக்க, நான் அவளைப் பார்க்க, அவள் என்னைப் பார்க்க, இருவரும் சிரித்தோம். (என் மைண்ட் வாய்ஸ்: ஐய்யோ… ஜாலி ஜாலி… முறச்சவ… சிரிச்சிட்டா…) அதற்குப்பின் நான் ஜன்னல் வழியே மறையப்போகும் செங்கதிரவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்களது இரயில் பெட்டியில் சுமார் 12 பேர் மட்டுமே இருந்தோம். சென்னையில் ஏறிய மற்ற எல்லோரும் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டையில் இறங்கியிருந்தனர். எங்களுக்கு முன் சீட்டிலும், பின் சீட்டிலும் யாருமில்லை. ஜோலார்பேட்டையிலிருந்து சேலத்திற்கு இரண்டு மணி நேரப்பயணம். சேலம் வரைக்கும் செய்கூலி சேதாரம் இல்லாம போயிடனும் சாமி என்று எனக்கு தெரிந்த எல்லா சாமிகளிடமும் வேண்டிக்கொண்டேன். இதற்கு முன் ஒரு பெண்ணுடன் இவ்வளவு தனிமையில் இருந்ததில்லை. எனக்குள் பயம் ஒட்டிக்கொண்டது. என் கையில் இருந்த புத்தகத்தை இருக்கப்பற்றிக் கொண்டேன். படிக்க முயற்சித்தேன், ஆனால், ஏனோ பக்கங்கள் திரும்ப மறுத்தது.
நான் ஒரு முரட்டு சிங்கிள். கல்லூரி காலங்களில் கூட அவ்வளவாக நான் பெண்கள் எவரிடமும் பேசியது கிடையாது. எந்தப் பெண் வந்து பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லி அனுப்பிவிடுவேன். படித்தது கம்புயூட்டர் இன்ஞினியராக இருந்தாலும், நான் செய்வது என்னவோ ஃபேஷன் டிசைனிங். இரண்டிலும் பெண்களுடன் தான் அதிகம் புழங்க வேண்டியிருக்கும், அப்படி இருந்தும், நான் அவ்வளவாக பெண்களுடன் தனிமையில் இருந்ததில்லை. அப்படி சில சந்தர்பங்களில் அமைந்தாலும், நான் நைசாக அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிடுவேன். அந்த அளவிற்கு நான் முரட்டு சிங்கிளாக இருந்திருக்கிறேன். பயமும் தயக்கமும் தான் நான் இப்படி இருப்பதற்குக் காரணம். (என் மைண்ட் வாய்ஸ்: பிரபோஸ் பன்ன வந்த பொண்ண அக்கானு கூப்பிட்டா… முடியல… அநீயாயத்துக்கு முரட்டு சிங்கிளா இருக்கியே டா… நீங்க நம்பித்தான் ஆகனும்)
ஆனாலும் அவளைப் பார்த்தவுடன் எனக்குள் ஏதோ ஒரு பரவசம்.அவளிடம் எப்படியாவது சேலம் போவதற்குள் பேச வேண்டும் என நினைத்துக்கொண்டேன். (என் மைன்ட் வாய்ஸ்: அந்தப் பொண்ணு சிங்கிலா இல்ல கமிட்டானு தெரிஞ்சிக்கணும் தானே அவ கிட்ட பேசனும்னு நினைக்கிற… நீ நடத்துடா… ) ஆனால், அவள் தான் என்னை முறைத்துக் கொண்டே இருக்கிறாளே, என்னை ஏறேடுத்தும் பார்க்கவில்லையே. நான் என்ன செய்ய அவளிடம் பேச என்று ஒரே குழப்பமாக இருந்தது. அவளுடன் பேச வேண்டும் என என்னுள் ஆசை. ஆனாலும் என்னால் அவளுடன் பேச முடியவில்லை. முயற்சி செய்யவே பயமாக இருந்தது.
ஜோலர்போட்டையில் இருந்து இரயில் மெல்ல கிளம்பியது. சூரியன் இன்னும் மறையவில்லை. கோவை எக்ஸ்பிரஸில் செல்லும் போது ஜோலார்பேட்டைக்கும் சேலத்திற்கும் நடுவே பயணிக்கும் போதே சூரிய அஸ்தமனம் நிகழும். கிழக்கு தொடர்ச்சிமலைகளுக்கு நடுவே இரயில் பயணிக்கும் போது வரும் காற்றிற்கும், மலைகள் மறைத்து மீண்டும் வரும் செங்கதிரும் எனக்குள் எப்போதும் ஒரு பரவசநிலையை ஏற்படுத்தும். மேலும் இரு மார்க்க இரயில் தண்டவாளங்கள் பிரிந்து பிரிந்து சேர்வது, எனக்கு எதோ தகவல் செல்வதைப் போலவே இருக்கும்.
மீண்டும் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு சில பக்கங்கள் கூட தாண்டியிருக்க மாட்டேன்.
“இந்த புக் சூப்பரா இருக்கும். நான் படிச்சிருக்கேன்” என்று ஒரு குரல் கேட்டது.
நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரையும் காணோம். ஆனால் குரம் மட்டும் கேட்டதே எப்படி என எனக்குள் ஒரே ஆச்சரியம். மனதிற்குள் சிறு பதற்றம் தொற்றிக்கொண்டது. எப்படியும் அவள் பேசியிருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில் அவளைப்பார்த்தேன்.
“பால் கலாநிதியோட டேத் ஸ்டோரி. படிச்சிட்டு ரொம்ப பீலிங்கா இருந்துச்சி” என்று அவள் சொன்னாள்.
(மை மைண்ட் வாய்ஸ்: கண்ணா லட்டு திங்க ஆசையா… நான்: அடேய் சும்மா இருடா… நானே பதட்டதுல இருக்கேன்.)
பதற்றத்தில் என்ன பேசுவதென்று எனக்குள் தெரியவில்லை. அவளிடம் ஏதோ உளறி வைத்தேன். என்ன பேசுவது என்று தெரியவில்லை. நல்ல வாய்ப்பை கெடுத்துவிட்டேன். அவளிடம் பேச்சை ஆரம்பிக்க இதற்குமேல் நல்ல வாய்ப்பு கிடைக்காதே என நினைத்தேன்.
“நீங்களும் நிறைய புக் படிப்பிங்களா” என்று மொக்கையாக ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தேன்.
கிளுக்கு என்று சிரித்துவிட்டு, “ஆமா. படிப்பேன். அதுவும் மெடிக்கல் ரிலேடேடா நிறைய படிப்பேன். இப்ப இத படிச்சிட்டு இருக்கேன்” என்று ஒரு புத்தகத்தை அவள் கைப்பையிலிருந்து எடுத்து என்னிடம் காட்டினாள்.
அந்தப் புத்தகம் Sapiens: A Brief History of Humankind.
“சூப்பரான புக்குங்க” என்றேன்.
“படிச்சிருக்கிங்களா?” என்றாள்.
“நான் சமீபத்தில் படித்ததிலே எனக்கு ரொம்ப பிடித்தப் புத்தகம் இது தான்.”
“பெரிய படிபாளியா இருப்பிங்க போலயே.”
“அப்படிலாம் இல்லீங்க. எதோ அப்ப அப்ப படிப்பேன்.”
புத்தகத்தில் ஆரம்பித்த அந்தப் பேச்சு, அப்படியே, அரசியல், மொழி, சாதி, ஹிந்தி, மழை, வேலூர் கிருஸ்தவ மருத்துவக் கல்லூரி என சுற்றி சுற்றி எங்களது பேச்சு போய்க்கொண்டிருந்தது. எனக்குள் இருந்த எல்லா பயங்களும் விலகியது. அவளுடன் பேச பேச, ஏதோ நொடு நாள் பழகியவருடன் பேசுவதைப் போன்று எனக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது. எங்களுக்குள் உலகைப்பற்றிய பார்வை இருவருக்கும் ஓரே கோட்டில் பயணிப்பதைப் போல உணர்ந்தேன். எங்களுக்குள் நன்றாக ஒத்துப்போனது. அவளும் அதை உணர்ந்ததைப் போல தான் எனக்கு அவளின் பேச்சின் மூலம் தெரிந்தது. இதற்கு முன் எந்தப் பெண்ணிடமும் நான் இப்படி உணர்ந்ததில்லை. (மை மைண்ட் வாய்ஸ்: நீங்க இதுக்கு முண்ணாடி யார்கிட்ட சார் இப்படி பேசுனீங்க…)
இரயில் ஏறியவுடன் என்னை முறைத்தவளா, இப்படி என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவள் பெயர் மட்டும் என்னவென்று தெரியாமல் இருந்தது, அவளிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.
“நீங்க என்ன செய்யறீங்க” என்று என் தொழிலைப் பற்றி கேட்டாள்.
“அழகா இருக்கற பெண்ணுகள இன்னும் அழகாக்குறேன்”
“புரியலீங்க” என்றாள்.
“நான் ஃபேஷன் டிசைனர். சேரிஸ் தான் என்னோட ஸ்பெஸாலிட்டி. இளம்பிள்ளைல என்னோட பேக்டரி இருக்கு” என்றேன்.
“ஓ நீங்களும் சேலம் தானா”
“ஆமாங்க” என்றேன். என் பெயரிலிருந்து மொத்த விவரங்களையும் வாங்கிக்கொண்டாள். ஆனால், அவள் பெயரை சொல்லவில்லை அப்போதும். கல் நெஞ்சக்காரி என நினைத்துக்கொண்டேன்.
“நானும் சேலம் தாங்க. தாத்தா காலத்துலயே நாங்க சேலம் வந்து செட்டில் ஆகிட்டோம். நான் ஆரம்பத்துல எட்டாவது வரைக்கும் படிச்சதே தமிழ் மீடியத்துல தான். எங்க வீட்டில நான் மட்டும் தான் நல்லா தமிழ் படிப்பேன். தமிழ் இலக்கியம் எல்லாம் நிறைய படிச்சிருக்கேன். அதுவும் சாரு நிவேதிதா எழுதுன எல்லா புக்கும் படிச்சிருக்கேன்” என்றாள்
எனக்கு சில தகவல்கள் முன்னரே தெரிந்திருந்தாலும், புதிதாக கேட்பதைப் போலவும், எதுவுமே தெரியாததைப் போலவும் காட்டிக்கொண்டேன்.
சாரு தான் எனக்கும் பிடிச்ச எழுத்தாளர், இவளுக்குமா என்று என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஒருவேளை இவள் தான் என்னவளாக இருப்பாளோ என்று எனக்குள் ஒரு ஒளி ஒரு நொடி தோன்றி மறைந்தது. (மை மைண்ட் வாய்ஸ்: கண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா…) நான் எதையும் வெளிகாட்டாமல் அவளிடம் பேச்சை தொடர்ந்தேன்.
“சூப்பருங்க. நல்ல டிரெண்டிங் சேரிஸ் எல்லாம் உங்ககிட்டையே வாங்கிக்கலாம்” என்றாள்
“அது எனக்கு கிடைத்த பாக்கியம்” என்றேன்
“ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டிங்களே” என்றேன்.
“தப்பா எடுத்துக்க மாட்டேன். சொல்லுங்க”
“நீங்க நல்லா அழகா சிரிக்கரீங்க”
அவள் மேலும் வெட்கப்பட்டாள். வெட்கத்தால் அவள் முகம் இன்னும் சிவந்தது.
“நான் ஒரு ஜோசியம் சொல்லட்டுமா?” என்றாள்.
“எத பத்தி”
“உங்கள பத்திதான்”
“சொல்லுங்க” என்றேன்.
“நீங்க இன்னும் சிங்கிள் தான். நீங்க இன்னும் யாரயும் காதலிச்சது கூட கிடையாது”
என் புருவங்கள் உயர்ந்தன.
“உங்க உதட்டை பார்க்கும் போது, நீங்க ஸ்மோக் பண்றவரில்லை தெரியுது. கை விரலை எந்த நிக்கோட்டின் அடையாளத்தையும் காணோம். உங்களுக்கு டிங்கிங் பழக்கமேயில்ல. நீங்க புக் பிடிச்சிருந்தப்ப உங்க கை ஆடவேயில்ல.”
சரியென என்பதைப்போல தலையாட்டி வைத்தேன். எப்படி இவ்வளவு சரியாக சொல்கிறாள் என வியந்தேன்.
“உங்க உயரம் 5அடி11அங்குலம். வெயிட் 85 கிலோ இருப்பிங்க. உங்க சின்ன தொப்ப அழகா இருக்கு”
டக் என்று என் வயிறை நான் சுறுக்கிக் கொண்டேன்.
“நிறைய உங்களுக்கு முடி கொட்டிடுச்சி. ஆனாலும் நீங்க அத பத்தி கவலை படாம இருப்பீங்க”
“நீங்க ரொம்ப அன்பானவங்க. அது அந்தக் குழந்தை உங்க மடியில படுத்தப்ப எதுவும் சொல்லாம, அவளேட முடிய கோதிவிட்டு அவளை தூங்க வெச்சது ரொம்ப அழகா இருந்தது” என்றாள்.
“போதுங்க போதுங்க” என்றேன்.
“இன்னும் ஒன்னு மட்டும் பாக்கியிருக்கே” என்றாள்.
“ஜோசியம் சொல்றேன்னு சொல்லிட்டு என்னைய பத்தி சொல்லிட்டு இருக்கீங்க”
“அட போங்க இது போங்கு” என்றேன்.
“அந்த இன்னோன்னு என்னானுதான் கேளுங்களேன்” என்றாள்.
“கேட்கலனா விடவா போறீங்க. ஒரு முடிவோட தான் இருக்கீங்க. சொல்லுங்க” என்றேன்.
“நான் அந்த குழந்தையோட அம்மாகிட்ட பேசிட்டு இருக்கும் போது, நீங்க என்னைய சைட் அடிச்சீங்க” என்று பொய்யான கோபத்துடன் சொன்னாள். (மை மைண்ட் வாய்ஸ்: இதுவும் போச்சா.)
மாட்டிக்கிட்டோம் என்று தான் நினைத்தேன். ஆனால், செல்லமாக அவள் என்னை முறைத்திவிட்டு, அடுத்தடுத்து நிறைய பேச ஆரம்பித்தாள். அவளும் என்னை சைட் அடித்ததாக சொன்னாள். நான் அவளை அவ்வப்போது பார்த்ததை அவள் ரசித்ததாக சொன்னாள்.
“உங்களுக்கு ஒன்னு புரியுதா?” என்று சூரியன் அஸ்தமிக்கும் தருணத்தில் கேட்டாள்.
“எதைப் பத்தி சொல்றீங்க” என்று கேட்டேன்.
“இருமார்க்க இரயில் பாதைகளும் எனக்கும் ஒன்னு சொல்லுது” என்றாள்.
நான் புருவத்தை உயர்த்தினேன். எனென்றால் எனக்கும் இதே மாதிரி பல நேரங்களில் தோன்றும். ஆனால் அது என்ன என்று அன்று வரை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்ததில்லை.
“அது என்ன தெரியுமா”
“கணவன் மனைவினு இருந்தா வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கனும் எதிர்பார்க்க கூடாது”
“எப்பவும் ஒட்டிக்கிட்டே இருக்ககூடாது. அப்ப அப்ப பிரிஞ்சி பிரிஞ்சி சேரனும். அப்பதான் அந்த வாழ்க்கை சுகமா இருக்கும்.”
“ஊடலும், கூடலுமா இருந்தா தான் அது கல்யாண வாழ்க்கை. இல்லனா அது வெறும் நடிப்பாதான் இருக்கும்.”
“பிரிஞ்சி, பிரிஞ்சி சேர்ற இந்த இரயில் பாதைகளைப் பார்த்தால் எனக்கு அப்படிதான் தோனுது.” என்றாள்.
நான் புரிந்துக்கொள்ள முடியாதது இதுவாகக் கூட இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.
“கருமேகங்கள் சூழ்ந்திருந்த வானத்தைக் காட்டி, நாம சேலத்துக்குப் போறதுக்குள்ள மழை வரும்னு நினைக்கிறேன்” என்றாள்.
நாங்கள் இன்னும் இன்னும் நிறைய நிறைய பேசினோம். அருகில் யாருமில்லாததால், உள்ளூர இருக்கும் பல பல அல்ப ஆசைகளைக்கூட பகிர்ந்துக்கொண்டோம். அவளுடன் பேச பேச, நாங்கள் இருவரும் ரொம்ப நேருக்கமாகிக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. நாங்கள் பேசிக் கொண்டிருந்ததில், மொரப்பூர், பெம்மிடி ஆகிய இரயில் நிலையங்களில் இரயில் நின்று சென்றதைக்கூட கவனிக்கவில்லை. என் இரயில் பெட்டியை சுற்றும் முற்றும் பார்த்தேன். அவளையும் என்னையும் சேர்த்தே மூன்று பேர் மட்டுமே இருந்தோம்.
“உங்ககூட பேசிக்கொண்டு இருந்ததில் சேலம் வந்ததே தெரியல” என்றாள்.
நான் மெலிதாக புன்னகைத்தேன்.
“7.45 சேலம் சென்றிருக்க வேண்டிய இரயில் இன்னும் சேலத்தை தொடவில்லை” என்றாள் அவள்.
மணி 8.20ஐ தாண்டியிருந்தது.
ஜென்னல் வழியாக் வெளியில் எட்டிப்பார்த்தேன். இரயில் மெல்ல வந்து கருப்பூர் இரயில் நிலையத்தில் வந்து நின்றது. எப்போதும் சேலம் இரயில் நிலையத்தில் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், கருப்பூரிலே அல்லது மேக்னசைட் இரயில் நிலையதிலோ சில நிமிடங்கள் இரயில் நின்று சொல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் இரயில் கருப்பூரில் நின்றது.
அவள் முன்பே கணித்தைப் போலவே, கருப்பூர் இரயில் நிலையத்தில் இரயில் நின்றுக் கொண்டிருந்த போதே இடி, மின்னலுடன் கனமாக மழைப் பெய்யத் துவங்கியது. பெரும் சப்தத்துடன், இடி இடித்துக் கொண்டிருந்தது. மின்னல் இருளை பகலாக்கிக் கொண்டிருந்தது. பலமான ஒரு இடி இடித்தவுடன், எங்கள் இரயில் பெட்டியில் எரிந்துக்கொண்டிருந்த லைட் எல்லாம் அணைந்துவிட்டது. இருளில் முழ்கியிருந்தோம். அவ்வப்போது, படும் மின்னல் ஒளியில் அவளின் முகம் ஒரு நொடி மின்னும். அது அப்படியே என்னை சுண்டியிழுத்தது.
அப்படி ஒரு நொடியில், அவளை முத்தமிட எனக்குள் தோன்றியது. அந்த எண்ணமே, எனக்குள் பயத்தை உண்டாக்கியது. அந்த எண்ணம், என் உடலினில் எதோ பரவசத்தை ஏற்படுத்தியது. இதற்கு முன் எதுவும் இல்லாத மாதிரியான உணர்வு எனக்குள் எழுந்தது.அவ்வளவு குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. மெல்ல மெல்ல எப்படியோ அந்த எண்ணத்திலிருந்து வெளி வந்தேன்.
மிக அருகில் இடி விழுந்தால் வரும் சத்தத்தைப் போன்று பயங்கரமான ஒரு சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் நாங்கள் இருவரும் சற்றே பயந்துதான் போனோம். பயத்தில் இருவரும் கைகளைப் பற்றிக்கொண்டு மிக மிக அருகில் வந்தோம். எவ்வளவு அருகில் என்றால், அவளின் இதயத் துடிப்பு என் காதுகளில் கேட்கும் அளவிற்கு அருகில் இருந்தோம். மீண்டும் அதே போன்று ஒரு இடி சத்தம் கேட்டது.
நாங்கள் இன்னும் நெருங்கி வந்தோம். அவளின் தோள் மேல் என்னை கையை வைத்தேன். இன்னோரு கையால் அவள் தலையை கோதிவிட்டேன். அவள் என்னையும் தட்டிவிடவில்லை, என் கையையும் தட்டிவிடவில்லை. இன்னும் நெருங்கினோம். அவள் கையை என் இடுப்பிலே வைத்தாள். என்னை கட்டி அனைத்தாள். அவளின் உடலின் சூடு எனக்கு இதமாக இருந்தது. எனக்கு அந்தசூடு புதுமையாகவும், சுகமாகவும் இருந்தது.
நான் முத்தம் கொடுக்க தயங்கினேன். அவள் தப்பாக எடுத்துக்கொள்வாளோ என்ற பயம். ஒரு முத்தத்தால் அவளை நான் இழக்க விரும்பவில்லை. எவ்வளவு காலமானாலும் அவளின் அன்மைப் பெற்ற பிறகே அவளை முத்தமிட வேண்டும் என எனக்குள் நினைத்துக்கொண்டேன். அவளின் உதட்டருகில் என் உதடுகள் இருந்தது. இடையே ஒரு காகிதம் கூட புகுந்துபோகுமா என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு எங்களது உதடுகள் நெருக்கமாக இருந்தன. அவள் முத்தமிடுவாள் என நான் காத்திருக்க, நான் முத்தமிடுவேன் என அவள் காத்திருக்க, எங்களது இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்ததை என்னால் உணர முடிந்தது.
முதலில், அவளின் மூச்சுக் காற்று என் உதடுகளில் பட்டது, அடுத்து எனது மூச்சுக்காற்று அவள் உதடுகளில் பட்டது. மாறிமாறி மூச்சு விட்டுக்கொண்டிருந்து, யார் முதலில் என நடக்கும் சண்டையைப்போலவே இருந்தது. ஒரு கட்டத்தில் இருவரின் மூச்சும் ஒரே மாதிரி சங்கமித்தது. அந்த நொடி, எனக்கு உணர்த்தியது, அவளுக்கும் முத்தமிட ஆசையென்று. கொஞ்சம் தைரியம் வந்தது. அவள் உதட்டில் என் உதட்டை பதித்தேன், ஒரு நொடிக்கூட ஆகியிருக்கவில்லை. எங்கள் இரயில் பெட்டியில் எல்லா லைட்டும் எரிய ஆரம்பித்தது. சட்டென்று விலகிவிட்டோம். ஆனால், எனக்குள் அந்த நொடியில் மின்னல் அடித்து. என் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆணாக இருந்தால் மட்டுமே அந்த உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள முடியும்.
அவள் வெட்கத்தால் சிரித்தாள். அவளுக்கு என்மேல் காதல் வந்துவிட்டதை அவள் கண்கள் காட்டிக்கொடுத்தது. ஆனாலும், ஒன்றும் நடக்காததைப் போலவே காட்டிக்கொண்டாள். இரயில் கருப்பூரிலிருந்து கிளப்பியது. சரியாக இன்னும் 10 நிமிடத்தில் சேலம் சென்றுவிடும். எனக்கு அவளை பிரியப்போகிறோம் என்ற கவலை தொற்றிக்கொண்டது.
அவள் என்னிடம் எதுவும் பேசவில்லை. நானும் அவளிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் எங்களின் கண்கள் பேசிக்கொண்டன. பார்வையாலே காதலைப் பகிர்ந்துக்கொண்டன.
அவளின் கால் விரல், என் கால் விரலோடு உரசியது. அவள் எதுவும் தெரியாததைப் போல அமர்ந்திருந்தாள். ஆனால், அவளின் கால் விரல்களால், என் கால் விரல்களை நோண்டிக்கொண்டிருந்தாள். எங்கள் கால் விரல்கள் முத்தமிட்டது. அவ்வப்போது சண்டையிட்டது. சில நேரங்களில் ஊடல் கொண்டது, பல நேரங்களில் இருக்கமாக உரசியது. சில தருணங்களில் உறவுக்கூட கொண்டது. சேலம் இரயில் நிலையத்தில் இரயில் நிற்கும் வரை நாங்கள் கால்களால் காதல் விளையாடிக்கொண்டிருந்தோம்.
இரயில் நின்றவுடன். சட்டென்று பதறினாள். தம்பி கூப்பிட வந்திருக்கான், நம்மை ஒன்றாகப்பார்த்தால் பிரச்சனை ஆகிவிடும் என்றாள். என் ஃபோன் நம்பரை கேட்டு வாங்கிக்கொண்டாள். நானே உங்களுக்கு ஃபோன் பண்றேன் என்றாள். என்றாள்.
“உங்க பேரு சொல்லவேயில்லையே” என்றேன்.
“சொல்ல மாட்டேன். கண்டுபிடிங்க.” என்று அவள் சொல்லிவிட்டு நகர துவங்கினாள்.
“ஒய். டாக்டர் தேவிகா….” என்று அவளின் பெயர் சொல்லி அவளைக் அழைத்தேன்
அதிர்ந்தவள், “எப்டி என் பேரு தெரியும்” என்றாள்.
“அது எப்படினு நாம அடுத்த தடவ மீட் பண்ணும் போது சொல்றேன்” என்றதும், இப்போதே சொல்லியாக வேண்டும் என சினுங்கினாள்.
“தம்பி கூப்பிட வந்திருக்கான். நான் சொல்றதுக்குள்ள மாட்டிக்குவ, பரவாயில்லையா?” என்றேன்.
தூரத்தில் அவளின் தம்பி அவளை கூட்டிச்செல்ல வந்திருந்ததால், என்னைவிட்டு கொஞ்சம் நகர்ந்து நின்றாள்.
“நாளைக்கு மதியம் 2.30க்கு அஸ்கர் சினிமாஸ். தேவி2 வந்துடு. அங்க பாப்போம்” என்று சொன்னாள். (மை மைண்ட் வாய்ஸ்: அதுக்குள்ளயா)
அவளின் தம்பி மேலும் அருகில் வருவதற்கும் அவளின் ஒன்றை சொல்லிவிட்டு கிளம்பினேன். அதனைக் கேட்டு வெட்கப்பட்டள், ஆனாலும் சிரித்தாள்.
நான் அவளிடன் சொல்லியது, “கொஞ்சம் கூட்டமில்லாத, கார்னர் சீட்டா பாத்துப் டீக்கட் போடுங்க”
– ஜென்னல் ஓர சீட்டிலிருந்து… கார்னர் சீட்டிற்கு… நடுவிலே கொஞ்சம் காதல்… மேல ஒரு கோடு… (அதான் பா Love In Progress… பொறுமையா போவோம்.)