கேள்வி: ஏதேனும் சுவரசியமான பயண அனுபவம் இருக்கிறதா?
பதில்:
நிச்சயமாக பயணங்கள் சுவரசியமானது தான். அதிலும் பேருந்துப் பயணம் மிக மிக சுவரசியமானது. பல விசித்திரமான மனிதர்களை இப்பயணத்தில் ஊடே சந்திக்க முடிகிறது. பட்டிக்காடு தளத்தில் எழுதப்படும் பெரும்பாலான பதிவுகளுக்கு பயணங்களே துவக்கப் புள்ளியாக இருக்கும். முன்பெல்லாம் பேருந்துப் பயணம் என்றாலே அலர்ஜி தான். ஆனால் போகப் போக அதில் ஒரு அழகியல் இருப்பதனை உணர்ந்துக் கொண்டேன். இப்போழுதெல்லாம் அடுத்தப் பேருந்துப் பயணம் எப்போது என்று ஏங்க ஆரம்பித்துவிட்டேன். அப்படியான ஒரு பேருந்துப் பயணத்தினை இங்கே விவரிக்கிறேன்.
ஒரு முறை, ஒரு மாலை வேளையில் நாமக்கலில் இருந்து திருச்சிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அரசாங்க பேருந்தில் ஏறி முன் படியில் இருந்து மூன்றாவது வரிசையில் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்துக் கொண்டேன். நாமக்கல் பேருந்து நிலையம் ஆங்கில எழுத்தான “L” வடிவில் இருக்கும். பல பேருந்து நிலையங்களில் இருப்பது போல அல்லாமல் உள்ளே வருவதற்கு ஒரு வழியும், வெளியே செல்வதற்கு ஒரு வழியும் இருக்கும். அதனால் எந்தப் பேருந்தாக இருந்தாலும் பேருந்து நிலையதையே ஒரு சுற்று சுற்றிவிட்டுத் தான் வெளியேறியாக வேண்டும்.
அப்போது, ஐயா சுண்டலுங்க, சூடான சுண்டல், அம்மா சுண்டலுங்க… சுண்டல் வாங்களிங்களா? என ஒரு 50 வயது மிக்க பெண்மணி தனது கம்பிரமான குரலில் எட்டுத்திக்கும் கேட்கும் படி தனது மசாலா கலந்த சூடான சுண்டல்களை காகித பொட்டலங்களாக தலைக்கு மேல் இருக்கும் கூடையில் அடுக்கி வியாபாரம் செய்துக் கொண்டே நான் பயணித்த பேருந்தை தாண்டிச் சென்றார். அந்த சூடான சுண்டலின் மசாலா மனம் என் மூக்கின் வழியே உள்ளே புகுந்து ஏதோ இரசாயன மாற்றம் செய்ய, எனக்கும் சுண்டல் சாப்பிடலாம் என்பது போல இருந்தது. ஆனால் அதற்குள்ளே அந்த சுண்டல் விற்கும் அம்மா என்னை தாண்டிச் சென்றுவிட்டாள். ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். வெள்ளாரியை துண்டு துண்டாக நறுக்கி அதனை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு நான்கைந்து சிறுவர்கள் பேருந்து பேருந்தாக ஏறி விற்றுக் கொண்டிருந்தார்கள். அதே போன்று சிறு சிறு பொட்டலங்களில் கடலைப் பருப்பும், கடலை மிட்டாயும், அன்னாசி பழமும், கொய்யாக்காயும், பப்பாளித் துண்டுகளும் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு பலர் விற்றுக் கொண்டிருந்தார்கள். அவை எதுவுமே வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை ஆனாலும் எதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
பேருந்து நிலையத்தில் இருந்த கூட்ட நெரிசலில் சிக்க நான் பயணித்த பேருந்து வெளியே செல்வதற்காக ஒவ்வொரு அடியாக முன்னேறிக் கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். அங்காங்கே தள்ளுவண்டியேடு சில வியாபாரிகள் வண்டியில் பொரியோடு நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அதில் ஒருவரை அழைத்தேன். அவர் வேக வேகமாக தனது தள்ளுவண்டியைச் செலுத்தி என் பேருந்தின் அருகிலே வந்தார். அவரிடம் என்ன இருக்கிறது என்று கேட்டேன். மசாலா பொரியும், வேக வைத்த நிலக்கடலையும் இருப்பதாக சொன்னார். ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்த பொழுது அந்த வண்டியில் ஒரு மூட்டையில் பாதி அளவிற்கு பொரியும், ஒரு அடுப்பும், அதன் மேல் ஒரு சட்டியில் வேக வைக்கப்பட்ட நிலக்கடலையை சூடாக்கும் வகையில் எதோ சில தொழில்நுட்பங்களை செய்திருந்தார். அதனை சரியாக கவனிக்கவில்லை. அதற்குப் பக்கத்தில் இரு பிளாஸ்டிக் குண்டாக்கள் இருந்தன. பெரிதாக இருந்த ஒன்றில் வெங்காயமும், கேரட்டும், கொத்த மல்லித் தளைகளும் சிறிது சிறிதாக வெட்டப் பட்டு அது ஒரு கலவையாக இருந்தன. சின்னதாக இருந்த ஒன்றில் மனக்கும் மசாலா இருந்தது. ஒரு கோலா பாட்டிலில் எதோ ஒரு எண்ணையும் இருந்தது. பொரியையும் மசாலவையும் கலக்க கூடவே ஒரு எவர் சில்வர் குண்டாவும் ஒரு கரண்டியும் இருந்தது. அவரிடம் எவ்வளவு விலை என்றுக் கேட்டேன். நிலக்கடலை பொட்டலம் 5 ரூபாயும், மசாலா பொரி 10 ரூபாயும் என்றார். அவரின் பதிலில் நான் வாங்க மாட்டேன் என்ற நினைப்பு இருந்ததுப் போல உணர்ந்தேன். அதனைக் கண்டுக்கொள்ளாமல் எனக்கு ஒரு மசாலா பொரி வேண்டும் என்று கேட்டேன். அவரின் முகத்தில் சிறுப் புன்னகைக் கீற்று வந்ததைக் நான் கவனிந்தேன். அன்றைய மாலையின் முதல் போனி நான் தான் போல, அவர் அர்வமானார்.
சட்டென்று அந்த எவர் சில்வர் குண்டாவை எடுத்தார், இரண்டு கை பொரியை அள்ளிப் போட்டார். அதில் ஒரு கை அளவிற்கு சூடான நிலக்கடலையும், ஒரு கை அளவிற்கு வெங்காய, கேரட், கொத்தமல்லி கலவையையும், ஒரு டீ-ஸ்புன் அளவிற்கு அந்த காரமான மசாலாவும், கொஞ்சம் எண்ணையும் கலந்து ஒரு பத்து கலக்கு கலக்கி ஒரு பேப்பரை எடுத்து அப்படி என்பதற்குள் ஒரு சுற்று சுற்றி பொட்டலம் போட்டு அதிலே அந்த பொரிக் கலவையைக் கொட்டி, ஐயா மசாலா பொரி என எனது வலதுக் கையில் கொடுத்துவிட்டு இடதுக் கையில் இருந்த 10 ரூபாய் தாளைப் பெற்றுக் கொண்டு தனது இருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு கல்லாப் பெட்டியில் பொட்டார். அவர் பொரியை கலக்கிய விதத்தினைப் பார்த்து இன்னொரு மசாலா பொரி என்று சொல்ல வருவதற்குள் பேருந்து வேகமேடுத்தது.
பல ஊர் பேருந்து நிலையங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் தின் பண்டங்கள் கிடைப்பதுப் போல வேறு எந்த ஊரிலும் கிடைப்பதில்லை. தமிழ்நாட்டிலே இது போன்று ஒரு பன்முகம் கொண்ட பேருந்து நிலையத்தை நான் கண்டதில்லை. இதிலே முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கிடைக்கும் எதுவுமே பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பல்ல, அவை எதுவும் காற்றடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளிலில் விற்க்கப்படும் தின்பண்டங்களுமல்ல. அந்தப் பேருந்து நிலையத்துல் கிடைப்பவை யாவும் நம் நாட்டின் பாரம்பரிய தின்பண்டங்களும், பழங்களுமே. வாய்ப்புக் கிடைத்தால் ஒரு முறை நாமக்கல் பேருந்து நிலையம் வழியாக பயணித்துப் பாருங்கள். உங்களுக்கும் ஏதேனும் இது சுவரசியமான நிகழ்வுகள் கிடைக்கலாம்.
ஒரு கொசுறு தகவல்: பயணங்களின் பொழுது நாம் நமக்கு துணிமணிகள் எடுப்பதுப் போல எண்ணங்களுடன் பயணித்தால் நம் கண்களிலே துணிக்கடை விளம்பரங்களும், துணிக்கடைகளும், விதவிதமாக துணிமணி உடுத்தி இருப்பவர்களுமே தெரிவார்கள். பசியோடு பயணித்தால் ஒவ்வொரு சின்னச் சின்ன சாப்பாடுக் கடை முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை நம் பார்வைக்கு வந்துச் செல்லும். கொய்யா, மாங்கா என ரோட்டோரத்தில் எந்தக் கடையிருந்தாலும் அது நம் கண்ணில் படும். அவ்வளவு ஏன்? எங்கோ எண்ணையில் வதங்கும் மசாலா மனம் நம் மூக்கை துளைக்கும். அந்த வாசனை வரும் திசையை நமது கண்கள் தானாக தேடும். மொபைலில் சிக்னல் கிடைக்கவில்லை என்றால் எர்டெல், எர்செல், ஐடியா என எதோ ஒரு நிறுவனத்தின் விளம்பரம் பலகை நம் கண்ணில் படும்.
ஒரே பாதையில் நாம் எத்தனை முறை பயணித்தாலும் அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கும். நாம் போகும் பாதை ஒன்று தான், அந்தப் பாதையில் இருக்கும் அனைத்தும் அதே இடத்தில் பல நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக அங்கேயே இருக்கும். ஆனால் நம் அதனை எளிதாக கடந்து சென்று விடுவோம். இது தான் வாழ்க்கை. நாம் ஏன் ஒரு முடிவு எடுக்கிறோம் என்பது நமக்கே தெரியாது, ஆனால் எல்லா முடிவுகளுக்குப் பின்னாலும் ஏதேனும் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கும். அது தெரிய வேண்டிய நேரத்தில் தெரிய வேண்டிய இடத்தில் தெரியும். மொத்ததில் பயணங்களே மனித வாழ்வை சுவரசியமாக்குகின்றன.
– பயணிப்போமா?
நீங்கள் ரிசர்வேசன் செய்யாத ரயிலில் ஒரு முறை பயணம் செய்து பாருங்கள். இது போன்ற பல சுவாரியங்களும் சமுதாயத்தின் பல முகங்கலும் உங்களுக்கு தெரியும்.
ஆம் நண்பரே. சமுதாயத்தின் ரேகைகளை அங்கு தான் பார்க்க முடியும்.
-பட்டிக்காடு