வாழ்க்கையின் சாபம்
எழுதியது: நண்பர் நவீண்
வாழ்க்கை என்பது சிலருக்கு வரமாவும் சிலருக்கு சாபமாகவும் அமைகிறது. ஆனால் அது எனக்கு ஒரு சாபமாகவே தோன்றுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் தருமபுரி பேருந்து நிலையம் அருகே மதியம் சுமார் 12 மணி அளவில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்க, சாலையின் நடுவே ஒரு முதியவர் மயங்கிய நிலையில் இருந்தார். அவர் அருகே சென்றுப் பார்த்த பொழுது அவருக்கு தோலில் ஒரு விதமான நோய் இருப்பது போல எனக்கு தெரிந்தது. யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. என் அம்மா என்னிடம் 10 ரூபாய் கொடுத்து அவரிடம் கொடுக்கச் சொன்னார். அதை வாங்கிக்கொள்ள கூட அவருக்கு சுயநினைவு இல்லை. அவர் அப்படியே இருந்தால் இறந்து விடுவார் போலும். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
அவரின் இந்த நிலைமைக்குச் செல்லக் காரணம் அவர் மட்டுமா? அல்லது அவர் உறவினர்களும், நண்பர்களும் காரணமா? இல்லை நாமும் காரணமா? எனக்கு என்னவோ நாமும் ஒரு வகையில் காரணமே என்று தோன்றுகிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் இதை ஒத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். இந்த உலகமே அனைத்து உயிரிங்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது தானே.
ஆனால் நமக்கு நம்முடைய சந்தோஷங்கள் மட்டுமே பெரிதாக தெரிகிறது. வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என நாம் மட்டுமே வரம் வாங்கி வந்ததை போல் நடந்துக் கொள்கிறோம். வாழ்க்கை சிறப்பானது தான் ஆனால் நாம் மட்டுமே அதை அனுபவிக்கும் போது அது எப்படி சிறப்பானதாக ஆக முடியும்? எல்லோரும் சமமாக இருப்பதில் தானே உண்மையான சந்தோஷம் இருக்க முடியும்?
நாம் இன்று வாழ்க்கையை ஜெயித்து விட்டதாக தனி மனிதனாக மார்தட்டிக் கொள்ளளாம். ஆனால் ஒரு சமூகமாக நாம் தோற்று விட்டோம். என்றைக்கு இந்த உலகில் அனைத்து சமூக மக்களும், இன மக்களும், மற்ற எல்லா உயிர்களும் சுயமான இன்பமுடன் வாழ்கிறதோ அன்று மட்டுமே நாம் ஜெயித்ததாக அர்த்தம். அப்போது மட்டுமே நம் வாழ்க்கையை நாம் கொண்டாட முடியும். அப்போது மட்டுமே நாம் நம் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்ததாக அர்த்தம். ஆனால் என்றைக்குமே அப்படி ஒரு நிலை சாத்தியமேயில்லை என்பதே நமது வாழ்க்கையின் சாபம்.
-முடிந்தால் நீங்களாவது பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள்
(இக்கருத்தை முடிந்தால் உங்கள் பட்டிக்காடு வலைதளத்தில் பகிருங்கள்… இப்படிக்கு நவீண்)
இன்று முதல் பட்டிக்காடு தளத்தில் ஒரு புதிய பகுதி துவக்கப்படுகிறது. இப்பகுதியில் பட்டிக்காடு தளத்தின் வாசகர்கள் எழுதும் கடிதங்களும், படைப்புக்களும் அப்படியே பதிவேற்றப்படும். சிறு சிறு தவறுகளையும், எழுத்துப் பிழைகளும் மட்டுமே திருத்தப்படும். வாருங்கள் வாசகர்களே!!! வரலாற்றைப் புதிய கோணத்தில் பதிவு செய்வோம்!!! என்றும் உங்களது படைப்புகளுக்காகக் காத்திருக்கும்…
– பட்டிக்காடு…