Monday, December 23, 2024
Home > கேள்விபதில் > வசனமா முக்கியம் – #கேள்விபதில் – 13

வசனமா முக்கியம் – #கேள்விபதில் – 13

கேள்வி: “ஒரு பொண்ணு வீட்டவிட்டு வெளிய போகும் போது, நாலு பயலுக பாத்தா அதுல ஒருத்தன பாத்து சின்னதா சிரிச்ச தான், அவன் மத்த மூனு பேருகிட்ட இருந்து அந்த பொண்ண காப்பத்துவான்” – நிமிர்ந்து நில் என்ற படத்தில் வரும் இந்த வசனம் எந்த அளவிற்கு யதார்த்தமானது? 

– பெயர் கூற விருப்பாத வாசகி.

பதில்:

இந்த வசனம், நிமிர்ந்து நில் படத்தில் “மகா” நல்லவனாக நடித்திருக்கும் ஜெயம் ரவியைப் பார்த்து “எதார்த்தமான” அமலா பால் பேசிய வசனம். திரையங்கில் நிமிர்ந்து நில் படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, இந்த வசனம் திரையில் வருகையில் ஆண்களும், பெண்களும் ஒரு சேர கையைத் தட்டினார்கள்.  டைரக்டர் சூப்பரு… வசனமெல்லாம் தெரிக்குது…. என அருகில் இருந்த பெண் பேசுவதைக் கேட்டேன். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த வசனம் யதார்த்தமாக இருப்பது போல தெரிகிறது. ஆனால் கொஞ்சம் ஆளமாக அலசினால், ஏன் ஒரு பெண்ணுக்கு ஆணைப் பார்த்துச் சிரித்தால் தான் பாதுகாப்பா? என்ற ஒரு கேள்வி எழுகிறது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நான்கு  நண்பர்கள் ஒரு பேருந்து நிலையத்திலே அரசு பேருந்துக்காக நின்று கொண்டிருக்கிறார்கள். அங்கே கல்லூரி பேருந்துக்காக ஒரு மாணவி நின்றுக் கொண்டிருக்கிறாள். அப்போது அந்த மாணவியை நான்கு பேரும் கண் கொட்டாமல் பார்க்கிறார்கள். அப்போது அதில் ஒருவனை மட்டும் அந்த மாணவி பார்த்துச் சிரித்தால் என்னவாகும், அவர்கள் இனி அவளை பார்க்க விடாமல் விட்டுவிடுவார்களா என்ன? என்ன நடக்கும் தெரியுமா?

  1. அதுவரை அந்த மாணவியை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் விட்டிருந்தால் கூட இனி தினமும் அவளின் வருகைக்காக அந்த நான்கு நண்பர்களும் காத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?
  2. அந்த மாணவி வரும் பொழுது, மற்ற மூவரும் அந்த நான்காவது நபரை உசுபேற்றி விட மாட்டார்களா? அவர்கள் இருக்கும் தைரியத்தில் இவன் அந்த மாணவியிடம் அனுக மாட்டானா?
  3. அந்த மாணவியை பின் தொடர அவளின் யதார்த்தமான ஒரு சிறு புன்னகை போதுமே? அதனை வேறு விதமாக எண்ணும் மூடர்கள் நிறைந்த சமூகமாக சினிமாக்கள் நம்மை மாற்றிவிட்டனவே.
  4. நான்கு பேர் தரும் தொந்தரவை விட ஒருவன் தரும் தொந்தரவின் விச்சு அதிகம். அவன் அதே வேலையாக அந்த மாணவி பின் சுற்றி வரவும் வாய்ப்புகள் இருக்கிறது.
  5. சிரிப்பதனால் பாதுகாப்பு கிடைக்கும் என்பதனை என்னால் கற்பனை செய்துக்கூட பார்க்க முடியவில்லை. ஏனெனில் குழந்தைகளிடம் இல்லாத சிரிப்பா? எவ்வளவு குழந்தைகள் நம் நாட்டில் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். சிரிப்பதனால் அந்த மாணவிக்குத் தான் ஆபத்து.

இது போல இன்னும் எவ்வளவோ யூகிக்க முடியாத பல முன்னுதாரனங்கள் இருக்கிறதே. சினிமாவில் வரும் சண்டை, கிராபிக்ஸை நம்ப மறுக்கும் சமூகம், சினிமாவில் பாடல் காட்சிகள் வரும் பொழுது புகைவிட கிளம்பும் சமூகம், அதில் வரும் காதல் காட்சிகளையும், பெண்களைப் பற்றி வரும் சிறு துனுக்களையும் அப்படியே ஏற்றுக் கொள்வது வேடிக்கைத்தான்.

உண்மையில் பெண்களுக்கு பொது வெளியில் பெரிய ஆபத்துக்கள் கிடையாது. பெண்களுக்கான ஆபத்துக்கள், அவர்களை சுற்றியிருப்பவர்களால் மட்டுமே பெரும்பான்மையான நேரங்களில் ஏற்படுகிறது. இது தான் இந்திய குற்றவியல் புள்ளிவிவரங்களும் எடுத்துக் கூறுகின்றன. அவர்களின் புள்ளிவிவரங்களின் படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில்  கிட்டதிட்ட 70% சதவீதமான குற்றங்கள் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தெரிந்தவர்களால் மட்டுமே ஏற்படுகிறது. அது கணவனாக, நண்பனாக இருக்கலாம். எதிர்த்த வீட்டை, பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களாக கூட இருக்கலாம். அவ்வளவு ஏன் சொந்த பந்தங்களாக கூட இருக்கலாம். பொது வெளியில் குற்றங்களே இல்லை என சொல்ல வரவில்லை. ஆனால் நாம் எடுக்கும் எந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் பொது வெளியில் நடக்கும் குற்றங்களுக்கு எதிராகத்தான் உள்ளது. அதே வேலையில் தெரிந்தவர்கள் மூலமாக நடக்கும் குற்றங்களை தடுக்க நாம் இன்னும் நெடும் தூரம் செல்ல வேண்டியுள்ளதை இந்த இடத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

முடிவாக,

சினிமாவில் வரும் வசனமெல்லாம் பெரும்பாலும் கைத்தட்டல்களுக்காக எழுதப்படுபவையே என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் சமூகத்தை பிரதிபலிப்பதாக சொல்லும் சினிமா, இப்போது சமூகத்திற்கு வேண்டாத, ஓவ்வாத பலவற்றை திணித்து வருகின்றது என்பதே உண்மை. சினிமாத்தனத்தில் உண்மையில்லை, உண்மையில் சினிமாத்தனம் இல்லை. ஆக, அந்த வசனத்தை ஆயிரம் வசனங்களில் ஒன்றாக கருதி கடந்து சென்றுவிடு தோழியே…

குப்பை…