கேள்வி: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் இனி பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறதாமே?
பதில்:
தற்பொழுது நடைமுறையில் இருப்பது 33% தான். பெண்களின் அயராத உழைப்பும், பெரும்பாலும் ஊழலற்ற பொது வாழ்வும், அவர்களுக்கு 50% இடங்களை தட்டிப் பெற உதவியாய் இருந்திருக்கிறது. ‘பெண்களுக்கு எதுக்கு அரசியல் என நம் தாத்தாக்கள் பேசினார்கள், பெண்களுக்கு எதுக்கு உள்ளாட்சியில் 33% இட ஒதுக்கீடு என நம் தந்தைமார்கள் பேசினார்கள், இதோ அவர்கள் 50% என்ற அளவிற்கு முன்னேற்றம் அடைந்து வந்துள்ளனர்’. இனி வரும் காலங்களில் அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இடையூறாக மட்டும் இருக்கவே கூடாது. சரி, நம் புராணத்திற்கு வருவோம்.
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வரப் போகிறது. பாமர அரசியல் மொழியில் சொல்ல வேண்டுமானால் ‘பஞ்சாயத்து’ தேர்தல். இந்திய அரசு பாராளுமன்றத்தின் மூலம் 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொண்டு வந்த, அதிகார பகிர்ந்தளிப்பு சட்டமான பஞ்சாயத்து இராஜ் சட்டத்தினால் உருவானது தான், இன்று பரவலாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் வடிவம். இது நமது காந்தி அவர்கள் 1940களிலேயே இது போல ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று விரும்பினார். ஒருவழியாக பல்வேறு பஞ்சாயத்துகளுக்குப் பிறது 1993ஆம் ஆண்டு தான் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. அதற்கு முன்னும் பல படிநிலைகளில் பஞ்சாயத்து அமைப்புகள் இருந்தன. ஆனால் அவையும் அரசு இயந்திரத்தில் ஒரு பகுதியாக மாறியது இந்தச் சட்டத்தால் தான்.
இன்றைய தேதியில் தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை இதோ,
12 மாநகராட்சிகள்
123 நகராட்சிகள்
529 பேரூராட்சிகள்
385 பஞ்சாயத்து யூனியன்கள்
12525 ஊராட்சிகள்
ஆக மொத்தம் 13,574 தலைமை பதவிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடக்கப் போகிறது. அவற்றில் 6,787 தலைமை பொறுப்புகளுக்கு பெண்கள் தேர்ந்தேடுக்கப்படப் போகிறார்கள். மீதம் இருக்கும் 6,787 இடங்கள் ஆண்களுக்கு. இந்த கணக்கு தலைமைப் பொறுப்பிற்கு மட்டும் தான். இது தவிர சுமார் 42,000 கவுன்சிலர்களுக்கும் அப்போது தேர்தல் நடக்கப் போகிறது. ஆக அவற்றில் 20,000 இடங்கள் பெண்களுக்குத்தான். கிட்டத்திட்ட 28,000 பொறுப்புகளுக்கு பெண்கள் தேர்ந்தேடுக்கப்பட உள்ளனர். இல்லையில்ல, அவர்கள் சமூக பணியில் வீர நடைப் போடப் போகிறார்கள்.
பொதுவாக, ஊராட்சி பதவிகளுக்கு ஆண்கள் தேர்ந்தேடுக்கப்பட்டால், அவர்கள் தங்களுக்கு பெயர் சொல்லும் வகையில் பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள் என பிறர் கண்ணுக்குத் தெரியும் வகையில் நீண்ட கால முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல் படுத்துவார்கள். அதே பதவிகளுக்கு பெண்கள் தேர்ந்தேடுக்கப்பட்டால், பொது சுகாதாரம், கல்வி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என பிறர் கண்களுக்குத் தெரியாத வகையில் சமூக நலத்திட்டங்களின் மூலம் மக்களின் நீண்ட கால நல வாழ்விற்கான திட்டங்களை செயல் படுத்துவார்கள். ஆனால் நமக்கு பாலங்கள், சாலைகள் மூலமாக கிடைக்கும் பொருளாதார முன்னேற்றமும் வேண்டும், பொது சுகாதாரம், கல்வி, குடிநீர் வசதி மூலமாக கிடைக்கும் சமூக முன்னேற்றமும் வேண்டும். பிரதிநிதித்துவ வகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது, இனி சமத்துவமான வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கலாம். கூடவே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களும் இனி பிரதானமாக பங்குக் கொள்ளவிருப்பதால் இனி குறைந்தபட்சம் உள்ளாட்சிகளிலாவது நல்லாட்சியை எதிர்பார்க்கலாம்.
இது பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்று கருதுவது சரியாக இருக்காது. இது அவர்களின் உரிமை. அவர்களின் உரிமை நிலை நாட்டப்படுகிறது என்றே நாம் கருத வேண்டும்.
– இது ஆரம்பம் தான்…