கேள்வி: வசனமா முக்கியம் என்ற பதிவில் சினிமாவை சாடி எழுதியிருந்ததை வாசித்தேன். நீங்கள் எழுதியதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம், மக்களின் அறியாமையையும், மக்களின் மூடத்தனங்களையும் தோலுரித்து காட்டுவது சினிமாக்கள் தானே. எடுத்துக்காட்டாக தங்கமீன்கள் என்ற படத்தை எடுத்துக் கொள்வோம். அது தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம். அதனை மக்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் திரிசா இல்லன்ன நயன்தாரா என்று ஒரு படம் வந்தது. குப்பைப்படம் அது. ஆனால் அதற்கு கூடிய கூட்டத்தில் பகுதி கூட தங்கமீன்கள் என்ற ஒரு நல்ல சமூதாய கருத்துள்ள படத்திற்கு கூடவில்லையே. மக்கள் சரியில்லை, அவர்களாகவே திருந்தினால் தான் உண்டு. மக்களுக்காக கொடி பிடிக்காமல் உருப்படியாக எதாவது எழுதுங்கள். என்ன நான் சொல்வது சரியா?
– பெயர் கூற விறும்பாத வாசகர்
பதில்: வசனமா முக்கியம் என்ற பதிவு நல்ல ஆரோக்கியமான விவாதங்களை எழுப்பும் என்று நினைத்தேன். ஆனால் அது படங்களுக்கு எதிராக எழுதப்பட்டது என விவாதங்கள் கிளம்பியதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இனி, வாசகரின் கேள்வியில் உள்ள சாரத்திற்கு வருவோம். வாசகர் முன் வைக்கும் முதன்மையான கேள்விகள் இரண்டு.
- மக்கள் சரியில்லை. அவர்கள் என்றும் திருந்தப் போவதில்லை. சமூதாயத்திற்கான மாற்றம் இனி மக்களிடம் இருந்து வராது. அது மீடியாக்கள் மூலம் தான் நிகழப்போகிறது என்பதானை மறைமுகமாக முன்வைக்கிறார்.
- நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பதில்லை. தங்கமீன்கள் என்ற ஒரு படத்தை மக்கள் ஆதரிக்காமல், குப்பைப்படங்களுக்கு தங்களின் ஆதரவை தருகிறார்கள் என்ற கோபம்.
மக்கள் சரியில்லையா?
மக்களுக்கு எப்போதும் தங்களுக்கு எது வேண்டும், எது சரி என சுயமாக யோசித்து முடிவேடுக்கத் தெரியும். ஆனாலும் தன்னை சுற்றியிருப்பவர்கள் எதேனும் பகடி செய்வார்கள் என பயம் கொள்வார்கள். ஆகவே பெரும்பான்மையானவர்கள் தங்களுக்கு எது சரி என்பதனை விடவும் ஊரோடு ஒத்துப் போய்விடுவோம் என முடிவெடுக்கிறார்கள். அது பல நேரங்களில் தவறான முடிவாகிவிடுகிறது. இது சரியா? தவறா? என்பது இங்கே பிரச்சனையில்லை. மக்களே சரியில்லையா? என்பது தான் இங்கே கேள்வி.
- மக்களுக்கு எது சரி, எது தவறு என்பதனை கற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறைந்துக் கொண்டே வருகின்றன. ஆம் மக்கள் சரியில்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சரியில்லாமல் போய்விடவில்லை.
- ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு வாழ்வியல் முறையுண்டு. அதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். சேற்றில் காலை வைக்கும் விவசாயியும், விடிய விடிய வேலைப் பார்க்கும் ஐடி ஊழியரும் ஒன்றல்ல. அதேபோல வங்கியில் வேலைப் பார்க்கும் ஊழியரும், மூட்டை தூக்குபவரும் ஒன்றல்ல. ஆக மக்கள் முன் அவர்களின் சுயத்தை இழந்துவிடுமாறு கூறும் எந்த பிரச்சாரமும் எடுபடாது. அதே வேலையில் அவர்களிடம் இருக்கும் குறைகளை களைய அவர்கள் எப்போதும் தயாரகவே இருக்கிறார்கள். இங்கே அவர்களுக்கு முதலாளித்துவ அறிவுறைகள் தேவையில்லை. அவர்களுக்கு அறியாமையை போக்கும் களப்பணியே தேவை.
- மக்கள் சரியில்லை… மக்கள் சரியில்லை… என கூறும் எல்லோரும் மக்களில் ஒரு பகுதியினர் தான் என்பதனை மறந்துவிடக் கூடாது.
- மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஒரு முறை சொன்னார், “மக்களுக்கு என்ன தேவை என்பது அவர்கள் முன் காண்பிக்கும் வரை அவர்களுக்கே தெரியாது.” இது எல்லோருக்கும் பொருந்தும்.
ஆம்… தங்கமீன்கள் ஓடவில்லை…
உண்மைதான், தங்கமீன்கள் படம் எதிர்பார்த்த அளவிற்கு திறையரங்கில் ஓடவில்லை. ஆனால் அதற்காக சமூகம் அந்த படத்தை நிராகரித்துவிட்டது என எடுத்துக் கொள்ளக்கூடாது. சினிமா என்பது வியாபாரம். அதில் வெற்றி பெற தரம் மட்டுமே போதாது என்பதே இங்கே கசப்பான உண்மை. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அதேபோல, விடுமுறை நாட்களில் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சிறப்பு திரைப்படங்களில் தங்கமீன்கள் போன்ற சிறந்த திரைப்படங்களும் அடங்கும். மேலும் தலைசிறந்த படங்களுக்கு தமிழக மக்களும், அரசாங்க விருதுகளும் எப்போது ஆதரவளித்தே வந்துள்ளன என்பது கடந்தகால வரலாறு. நீங்கள் ஒரு பொருளை தரமாக தயார் செய்கிறீர்கள் என்பதற்காக மட்டுமே ஒருவர் உங்கள் பொருளை வாங்க வேண்டும் என்பதில்லை. வியாபாரத்தில் எந்த எல்லைகளும் கிடையாது. முதலில் சினிமாவும் வியாபாரம் என்பதனை புரிந்துக் கொள்ளுங்கள்.
அன்புள்ள வாசகரே, கடைசியில் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். ஒரு சினிமா ஓடவில்லை என்பதற்காக தமிழக மக்கள் எல்லோரும் சரியில்லை என நீங்கள் சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்க பார்வை. சீக்கிரம் மாற்றிக் கொள்ளுங்கள்.
– மக்கள் தீர்பே மகேசன் தீர்ப்பு…