அடையாளம் என்பதற்கு இரண்டு வகையான அர்த்தம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. தனி மனிதனின் அடையாளம் என்பது எனது முதல் பார்வை, மற்றொன்று ஒருவருக்கு கிடைக்கும் புகழ் சம்மந்தப்பட்டது.
தனி மனித அடையாளம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. தன் அடையாளத்தை வெளிகாட்ட வேண்டுமா என்பதை சம்மந்தப்பட்ட நபர் தான் தேவையான சமயங்களில் முடிவு செய்ய வேண்டும். இது ஒருபுறம் இருக்க மற்றொரு அடையாளத்திற்கு வருவோம்.
புகழ் மூலமாக கிடைக்கும் அடையாளத்திற்காக ஒவ்வொருவரும் ஏங்குபவர்கள் தான். அடையாளம் கிடைத்துவிட்டால் பிறர் நம் மேல் கவனம் செலுத்துவார்கள். அப்படி செலுத்தப்படும் கவனம், அங்கீகாரம் பெற்றுத்தரும். அங்கீகாரம் கிடைத்துவிட்டால் அது அதிகாரத்தைப் பெற்றுத்தரும் என்பதே மனித மனத்தின் நம்பிக்கை. அதனால் தான், மனம் அடையாளத்திற்காக ஏங்குகிறது. நமக்குள் ஒருவித பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள, அடையாளம் பெற வேண்டும் என்பது வெறியாகிறது. ஆனால் நம்மால் எதுவும் முடியாது என மனம் உணரும் பொழுது, அது தன்னைத்தானே சாந்தப்படுத்திக் கொள்கிறது.
அதேசமயம், ஒரு சிறு பிழை ஒருவரின் அடையாளத்தினை எளிதாக அழித்துவிடும். தனி மனித அடையாளமாகட்டும் அல்லது புகழாகட்டும் வாழ்வின் இழந்ததை மீட்க முடியாத அளவிற்கு அடையாளங்களை துவம்சம் செய்ய பலர் காத்திருக்கிறார்கள். சமூகம் அப்படித்தான், ஆக சமூகத்தை கையாளும் பொழுது யாருக்கும் எந்த தீங்கும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
இப்படியான சுழ்நிலையில், இத்தளம் சமூகத்தில் நடப்பதை பதிவு செய்ய துவக்கப்பட்டது. அதனால் தான், தனிமனிதனை முன்னிறுத்தாமல் பட்டிக்காடு என்றப் பொதுப் பெயரில் தளம் துவக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தளத்தில் பகிரப்படப்போகும் சாமானிய மனிதனின் நிகழ்வுகள் யாவும் முடிந்தவரையில் சம்பந்தப்பட்டவரின் முன் அனுமதி பெற்றே பகிரப்படும். அனுமதி கிடைக்காத பட்சத்தில் பெயர் மாற்றம் செய்து மட்டுமே வெளியிடப்படும்.
ஆக என் மூன்றாவது வரையறை யாதெனில்,
“அடையாளம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. பட்டிக்காடு தளம் எப்போதும் சக மனிதர்களின் அடையாளங்களை முன் அனுமதியின்றி பயன்படுத்தாது.”
– அடக்கமாய் அலசுவோம்.