Monday, December 23, 2024
Home > அரசியல் > #தேர்தல்2016 > தலையாட்டி பொம்மைகளா பெண்கள்??? – #கேள்விபதில் – 16

தலையாட்டி பொம்மைகளா பெண்கள்??? – #கேள்விபதில் – 16

கேள்வி: தமிழக உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத பொறுப்புகளுக்கு பெண்கள் தேர்ந்தேடுக்கப்படப் போகிறார்கள். ஆக, தலையாட்டி பொம்மைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறதா?

– பெயர் கூற விரும்பாத வாசகர்.

பதில்:

வாசகர் கேட்ட கேள்வியில் இரண்டு தவறுகள் இருக்கின்றன.

  1. பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இனி 50% இட ஒதுக்கீடு என்பதே தவறான பார்வை. உண்மையில் இது அவர்களது உரிமை. தமிழக வாக்காளர் பட்டியல் படி பார்த்தால் பெண்களுக்கு 51% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆக அவர்களுக்கான உண்மையான உரிமை இப்போது தான் கிடைக்கிறது. தமிழகத்தில் இந்த மாற்றம் கொஞ்சம் தாமதம் தான். ஆனால் பல இந்திய மாநிலங்களில் இது ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  2. தலையாட்டி பொம்மைகள் என்று குறிப்பிட்டுள்ள வாசகர் அது ஆணா? பெண்ணா? என்பதனை தவறுதலாக குறிப்பிடாமல் விட்டுவிட்டார். (எனக்கு என்னவோ தமிழ்நாட்டில் தற்பொழுது ஆண்கள் தான் தலையாட்டி பொம்மைகளாக இருக்கிறார்கள், இனி அவர்களுக்கு போட்டியாக பெண்களும் உள்ளாட்சி பதவிகளில் வரப் போகிறார்கள் என்று நக்கல் நையாண்டிக்காக குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.)

இனி யார் தலையாட்டி பொம்மைகள் என்ற விவாதம் தேவையற்றது. நம் நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றன. இனியும் தலையாட்டி மொம்மைகளை அதிகாரத்தில் வைத்துக் கொண்டு இருந்தால், மக்களாகிய நமக்கு தான் நஷ்டம். இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என நான் வாதிடவில்லை. பல இடங்களில் பெண்களின் அதிகாரங்களை ஆண்கள் தவறாக பயன்படுத்தும் நிலை இருக்கத்தான் செய்கிறது. கணவனாக,  சகோதரனாக இருப்பதால் அவர்கள் தப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். இனி சமூக வலைத்தள காலத்திலும் அவர்களின் அடாவடிகள் தொடருமாயின் அவர்களுக்கு பேராபத்து தான் காத்திருக்கும். ஆனால், இந்த ஒரே காரணத்திற்காக உள்ளாட்சியில் பெண்களுக்கான 50% நியாயமான அதிகார பகிர்வை எதிர்க்க வேண்டியதில்லை. இப்போது அதிகாரத்திற்கு வரப்போகும் பெண்களால் நமது மகள்களும், பேத்திகளும் அச்சுறுத்தல் இல்லாத சமுதாயத்தில் வாழ வழிப் பிறக்கும் தானே. இவ்வளவு காலம் பதவியில் இருந்த ஆண்கள் யாரும் பெண்களுக்கான சரியான பாதுகாப்பை வழங்கவில்லையே.

நாம் நாட்டில் நான்கு முனைகளும் இப்போது பெண்கள் ஆட்சியில் தானே இருக்கிறது, என்ன புரியவில்லையா?

வடக்கே – ஜம்மு காஷ்மீரில் – திருமதி.மெஹ்பூபா மூஃப்தி சயத்

கிழக்கே – மேற்கு வங்கத்தில் – செல்வி.மம்தா பேனர்ஜீ

மேற்கே – ராஜஸ்தானில் – திருமதி.வசுந்தரா ராஜே சிந்தியா

மேற்கே – குஜராத்தில் – திருமதி.ஆனந்திபென் படேல்

தெற்கே – தமிழ்நாட்டில் – செல்வி. ஜெயலலிதா

Woman Chief Miniters in India as of June 2016

மேலும், 23 கோடி மக்கள் தொகைக் கொண்ட உத்தரபிரதேஷத்தில் முதல்வர் போட்டியில் முன்னனியில் மாயாவதி இருக்கிறார். பெண்களால் ஆள முடியும் என்பதற்கு இந்த உதாரணங்கள் போதாதா? உள்ளாட்சி அமைப்புகளில் இனி தேர்வாகப் போகும் பெண்களுள் ஒருவர் நாளை நமது சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, மத்திய, மாநில அமைச்சர்களாகவோ, தமிழ்நாட்டின் வருங்கால முதல்வராகவோ, அவ்வளவு ஏன் இந்தியப் பிரதமராக வர கூட வாய்ப்புகள் உருவாகலாமே. வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நமது பெண்கள் கையில் இருக்கிறது.

பெண்களின் வாழ்வியலைப் பற்றி பாரதி கண்ட கனவும், காந்தி கண்ட கனவும், பெரியார் கண்ட கனவும் அடைய இன்னும் நீண்ட தூரம் பயனிக்க வேண்டி இருக்கிறது. உள்ளாட்சி பொறுப்புகளில் 50% ஒதுக்கீடு என்பது ஆரம்பமே. இன்னும் அரசு வேலைகள், சட்டமன்றம், நாடாளுமன்றம், என அதிகார பகிர்விற்கான இலக்குகள் நிறைய இருக்கிறது.

ஆண்கள் தலையீடு இருந்தால் பெண்கள் அதனை எதிர்க்க வேண்டும். அது அரசாங்க அதிகாரியாக இருந்தால் என்ன? தாலி கட்டிய கணவனாக இருந்தால் என்ன? பெற்ற மகனாக இருந்தால் என்ன? கடமையை செய் பலனை எதிர்பாராதே.

மாற்றம் நிகழப்போகிறது… அது கண்களுக்கு தெரிகிறது…

– ஐ யம் வெய்டிங்…