2014 ஆம் ஆண்டு ஆக்டோபர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று கோவை மெடிக்கல் சென்டரில் இருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு செல்ல வேண்டி இருந்தது. உறவினர் ஒருவருக்கு பக்கவாத அறிகுறிகள் தென்பட்டதால் கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அன்று காலை 8.30 மணிக்கே அன்று நான் கோவை மெடிக்கல் மருத்துவமனையை அடைந்திருந்தேன். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த மருத்துவமனை அன்றைக்கு எனோ கொஞ்சம் நிசப்தமாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த அமைதியான சுழ்நிலையில், பின் வரப்போகும் மூன்று மனிதர்களின் வாழ்விற்கும், சாவிற்குமான போராட்டக்களமாக இருக்கும் என நான் நினைக்கவேயில்லை. அந்த நாள் என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. அப்போது அங்கு அவசரப் பிரிவில் நிகழ்ந்த மூன்று மரணங்கள் என்னை உறையச் செய்துவிட்டன. மூன்று மரணங்களுக்கும் மிக முக்கியமான ஒரு காரணம் மது என்பதனை நான் இங்கே தனியே சுட்டிக் காட்ட தேவையில்லை. மேலும், குடி குடியைக் கெடுக்கும் என்பதனை நான் கண்கூட பார்க்க நேர்ந்தது.
மணி காலை 10ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர்களும், செவிலியர்களும் திடிரென பதட்டமானார்கள். மருத்துவமனைக் காவலர்களும், அங்கே அவசரப் பிரிவில் இருந்தவர்களை அப்புறப்படுத்தி, எதற்கோ தயாராகிக் கொண்டிருந்தனர். எதோ விபரீதம் ஏற்பட்டிருக்கிறது என்று உணர்ந்தேன். என் உறவினரின் படுக்கை அருகே இரண்டு படுக்கைகள் தயார் செய்திருந்தார்கள். அங்கே பதட்டமான சூழ்நிலை நிலவியது. அவசரப் பிரிவின் தலைமை மருத்துவர் தன்னுடைய உதவி மருத்துவர்களிடம் அறுவை சிகிச்சை மையத்தை தயார் செய்வது பற்றியும், ஆம்புலன்ஸ் வந்ததும் செய்ய வேண்டிய முதலுதவி நடைமுறைகள் பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தார். சரியாக 09.55 மணிக்கு, அவசர சிகிச்சைப் பிரிவிற்குள், முதல் ஆம்புலன்ஸ் நுழைந்தது. அதுவரை அமைதியாய் இருந்த அந்த பகுதியில் மருத்துவர்கள் விரைந்தனர்.
கருமத்தம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் பைக்கில் வந்துக் கொண்டிருந்த இரு கல்லூரி மாணவர்கள் அதிவேகமாக வந்த காரணத்தால், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருந்தனர். முதலில் வந்த இவன், வண்டி ஓட்டிக் கொண்டு வந்தவன் போல, முழங்கால் எல்லாம் ஒரே இரத்தம். இவன் மயக்கமடையவில்லை. ஆனால் வழியால் துடித்துக் கொண்டிருந்தான். மருத்துவர்கள் விரையும் பொழுது நகர்ந்த திரையில் அந்த மாணவனின் தலை தெரிந்தது. முகத்தில் ஒரு பகுதி இல்லாமல் இருந்தது. ஒரே ரத்த வெள்ளம். செயற்கை சுவாசத்தில் இருந்த அவன் மெல்ல மெல்ல சுய நினைவை இழக்கத் துவங்கி இருந்தான். முதலுதவி முடிந்த உடனே மருத்துவக்குழு அந்த மாணவனை அறுவை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள். அதற்குள் அந்த மாணவர் இறைவனிடம் சேர்ந்திருந்தான், என் கண்முன்னே உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த மாணவன், சில நிமிடங்களில் பிணமானது எனக்குள் பூகம்பத்தை எற்படுத்தி இருந்தது. தலையில் பலத்த காயம் எற்பட்டிருப்பதால் எதேனும் முளைக்குச் செல்லும் இரத்தக் குழாய் ஏதேனும் வெடித்து அதிவிரைவாக அந்த மாணவர் மரணித்திருக்க காரணமாக இருக்கலாம் என, அவசர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தத்துடன், தன் சகாக்களிடம் சொல்லிக் கொண்டே பாடியை மார்ச்சுவரிக்கு அனுப்புமாறு சொல்லிவிட்டு வெளியேறினார். சில நிமிடங்களில் என் கண் முன்னே மாணவனாக இருந்தவன் பாடியாக மாறினான். விறைத்துப் போய் இருந்தேன். 10 நிமிடங்களுக்குள் எல்லாம் முடிந்திருந்தது.
அடுத்த சில நிமிடங்களிலே மீண்டும் ஆம்புலன்ஸ் சத்தம். உடனே அடுத்த அவசர சிகிச்சைக்குத் தயாராகினார்கள். இப்போது வந்திருந்தது, சற்று முன் இறந்துப் போன மாணவன் கூட பயணித்தவன். இவனுக்கும் தலை முதல் கால் வரை கடுமையான காயங்கள். அந்த மாணவனுக்காவது சற்று நினைவிருந்தது. இப்போது வந்த மாணவனுக்கு சுத்தமாக நினைவேயில்லை. மனதிற்கு திக் என்றது. மருத்துவர் குழு தன் வேலையைத் துவங்கி இருந்தது. முதலில் இந்த மாணவனுக்கு உயிர் இருப்பதனை உறுதி செய்தார்கள். உடனே காரியத்தில் இறங்கினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் எற்படவில்லை. கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். பின் தலை பிழந்திருந்தது தெரிந்தது. சில நிமிடங்களில் இவனுடைய உயிரும் பிரிந்திருந்தது. அம்புலன்ஸ்காரர்களிடம் பேச்சுக் குடுத்தேன். முதல் மாணவன் பிழைக்க வாய்ப்பிருந்ததாகவும், அதனால் தான் அவனை முதலில் கொண்டு வந்ததாகவும் அவர் சொன்னார். இன்னொரு அம்புலன்ஸ் வண்டிக்காரர் சொன்னார் இரண்டாவது மாணவன் வண்டியில் எற்றும் பொழுதே ரொம்ப நேரம் தாங்காது என்று சொன்னார்.
எனக்கு நெஞ்சை அடைத்தது. 18-19 வயது தான் இருக்கும் இரண்டு மாணவர்களுக்கும். வாழ வேண்டிய வயதில் இப்படி விபத்தில் சிக்கி இறந்துப் போய்விட்டார்கள். அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை. அவசர சிகிச்சைப் பிரிவின் வரவேற்பறைக்கு அருகில் இருந்த காத்திருப்போர் அறையில், அந்த மாணவர்களின் பெற்றோர்களும், நண்பர்களும் அழுதுக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு மாணவரின் அம்மா என்னையும் கட்டிப் பிடித்து அழத் துவங்கியிருந்தார். அவர்களுக்கு என்ன ஆறுதல் செல்வதென்றே எனக்கு தெரியவில்லை. அங்கிருந்து அமைதியாக ஒதுங்கி மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவின் உள்ளே வந்துவிட்டேன்.
நான் உள்ளே வந்த உடன், மருத்துவமனைக் காவலர்கள், அந்த இரு மாணவர்களின் பெற்றோரையும், நண்பர்களையும் கொஞ்சம் தள்ளி அந்த பக்கமாக போகும் படி அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். அந்தக் காவலர்கள் எவ்வளவு மன வேதனையுடன் அந்தப் பணியைச் செய்துக் கொண்டிருப்பார்கள் என யோசிக்கவே என்னால் முடியவில்லை. மிக மிக மன வேதனை தரக்கூடிய பணி அது. அவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததில், இது மாதிரி சில நாட்களில் 10 பேர் கூட இறந்துப் போய்விடுவதாகவும், அந்தத் தருணங்களில் உணவருந்தக் கூட மனம் இடம் கொடுப்பதில்லை என தங்களின் மன பாரத்தை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் சத்தம். மீண்டும், அதே அவசர சிகிச்சைப் பிரிவு. இந்த முறை 50 வயதிருக்கும் ஒரு ஆண், அந்த ஆம்புலன்ஸில் பேச்சு மூச்சு இன்றி வந்தவர். அவருக்கும் முதலுதவி செய்து, உயிர் இருக்கிறதா? என்று முயற்சி செய்துக் கொண்டிருந்தார்கள். அவரின் நெஞ்சிலே கரண்ட் ஷாக் கூட கொடுத்து முயற்சித்தார்கள். பலனில்லை. அவர் வந்த சில நிமிடங்களிலேயே, அவர் இறந்துவிட்டார் என அறிவித்திருந்தார்கள்.
அவருடன் வந்த சொந்த பந்தங்கள் எல்லாம் அவருடைய ஒரே மகளுக்காக காத்திருந்தார்கள். ஊரில் பெரிய மனிதர் போல, நிறைய கூட்டம் கூடி இருந்தது. எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் இருந்தது. ஆனால் யாரும் வாய்விட்டு அழவில்லை. இறந்தவருடைய மகள் வந்தது தான் தாமதம். கூட வந்திருந்த பெண்கள் எல்லோரும் அவரைக் கட்டிக் ஒப்பாரி வைக்க துவங்கி இருந்தார்கள். அதற்கும் மேலும், அங்கே இருக்க முடியாமல் இதோ வருகிறேன் என்று உறவினரிடம் சொல்லிவிட்டு இன்னொரு மருத்துவரைப் பார்க்க கிளம்பினேன்.
இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. ஆனாலும், அந்த பெண்ணின் ஒப்பாரியை மறக்க முடியாமல் பல இரவுகளில் தூக்கமின்றி தவித்திருக்கிறேன். அப்போதெல்லாம் கனவில் “என்ன பெத்த ராசாவே” யாரேனும் ஒப்பாரி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்…
– போனால் போகட்டும் போடா…