Monday, December 23, 2024
Home > வகையற்ற > ஒரு செல்பி எடுக்கனும்…! – பயண அனுபவம் – 5

ஒரு செல்பி எடுக்கனும்…! – பயண அனுபவம் – 5

கும்பகோணத்திற்கு என் தோழியின் திருமணத்திற்காக சென்றிருந்தேன். அப்போழுது அங்கு நான் சந்தித்த ஒரு மனிதனைப் பற்றியக் பதிவிது.

மாலையில் நடக்க இருந்த நிச்சயதிற்காக எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நான் என் தோழியின் இரண்டு தங்கைகளுடன் பேசிக் கொண்டு, அவர்களின் சேட்டைகளையும், அவர்களின் வார்த்தைச் சீண்டல்களையும் தாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது கடைசி தங்கையை கவனித்த பொழுது, அவளின் முகத்தில் அவ்வப்பொழுது ஒரு விதமான எரிச்சல் தெரிந்தது. ஏன்? என்ன? என்று விசாரித்த பொழுது அவளிடம், ஒருவன் காலையில் இருந்து பேச முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும், அடிக்கடி எதேனும் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் புலம்பினாள்.

சரி. அப்பா, அம்மா, இல்ல… அண்ணாகிட்டயாவது சொல்லி அவனை கண்டிச்சி இருக்கலாமே” என்று அவளிடம் கேட்டேன்.

சொந்த பந்தமாக இருக்கிறது, அதுவும் அவன் மாப்பிள்ளை சொந்தமாக இருப்பதனால் கல்யாண வேளையில் எதற்கு பிரச்சனை” என தான் அமைதியாக இருந்துவிட்டதாக சொன்னாள்.

இனி அவன் தொந்தரவு தராமல் இருக்க நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவனைத் தேடி அலைந்தேன். சமயலறை அருகே காபி குடித்துக் கொண்டிருந்தான்.

அவனருகே சென்று, “என் பெயர் குமார். பெண்ணின் தோழன். நீங்களும் பெண் வீட்டு சொந்தமா?”  என்று கேட்டேன்.

நான் மாப்பிள்ளையின் தம்பி. சித்தப்பாவின் மகன்” என்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான். அவனிடம் பேச்சுக் கொடுத்த பொழுது தங்கை சொல்வதைப் போல இவன் இல்லையே, கொஞ்சம் ஒழுக்கமானவன் போல இருக்கிறானே என்று தோன்றியது.

வேலையில இருக்கீங்களா?” என்று அவனிடம் கேட்டேன்.

இல்லையில்லை. சென்னையில் நானும், அம்மாவும் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித்துள்ளோம். அப்பா, தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருக்கின்றார்” என்று சொன்னான். மேலும், தனக்கு தொழில் தான் எல்லாம், அதில் தான் முழு கவனமும் இருப்பதாக சொன்னான். பிறகு நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இரவு ஒரு பிள்ளையார் கோவிலில் இருந்து கல்யாண மண்டபம் வரை மாப்பிள்ளையை அழைத்து வரும் வைபோகத்தில் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் நடனமாடினார். அவனும் நடனமாடினான்.  கூடவே நானும் ஆடினேன். ( நானும் ஆடினேன்…. நம்பித்தான் ஆகனும்…நானெல்லாம் பாக்கியராஜ் வகையறா வாயிற்றே… )

நிச்சயத்தில் மாப்பிள்ளைக்கு மோதிரமும், பெண்ணிற்கு செயினும் போட்டார்கள். பெண்ணின் தங்கைகள் மேடையில் இருந்தார்கள். அவன் என்னுடம் அமர்ந்திருந்தான். கையில் இருக்கும் அலைபேசியில் ஏதோ புகைப்படம் பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் புகைப்படங்களை அவன் என்னிடம் காட்டிக் கொண்டிருந்தான். அதில் அவன் தன் அண்ணனின் (மாப்பிள்ளையின் அண்ணன்) இரண்டு வயது மகளை புகைப்படம் எடுத்திருந்தான். அந்தப் புகைப்படங்கள் கொஞ்சம் புகைப்பட நுணுக்கங்கள் நிறைந்ததாக இருந்தது. நன்றாக நடமாடுகிறான். நன்றாக புகைப்படம் எடுக்கிறான். இவனிடம் ஏதோ திறமை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த நாள் காலையில், திருமணம் இனிதாக நிறைவேறியது. சரி. தோழியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று நினைத்திருந்த பொழுது, மாலையில் கிளம்புமாறு அவள் அன்புக் கட்டளையிட்டாள். சரி நானும் பொழுது போகவில்லை என்பதனால் அவளின் தங்கைகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவனைப் பற்றிய பேச்சு வந்தது. அவன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கிறான் என்று என் தோழியின் தங்கைகள் என்னிடம் சொன்னார்கள்.

அப்போழுது அவன் என் கண் பார்வையில் படும்படி தான் அமர்ந்திருந்தான். ஆனால் அவன் ஓரமாக அமர்ந்திருந்ததால், என் தோழியின் தங்கைகளுக்கு அவன் அங்கு இருக்கிறான் என்பது தெரியவில்லை. இவர்கள் சொல்வதைப் போலவே அவன் தனிமையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. மேலும் அவன் என் தோழியின் கடைசி தங்கையை பின் தொடருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது.

இனியும் தாமதித்தால் ஏதேனும் விபரீதம் நடக்க வழி வகுத்துவிடும் என்பதனால், களத்தில் இறங்க முடிவு செய்தேன்.

அவனிடம் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டதால் இனி அவனை பின் தொடர முடியாது. நேருக்கு நேர் சந்தித்து பேசலாம் தான், ஆனால் அவன் மாப்பிள்ளை வீடாக இருப்பதனால் ஏதேனும் பிரச்சனை ஆகி, அது என் தோழிக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தும் படியான நிலையை நான் விரும்பவில்லை. என்ன செய்வது? எப்படி செய்வது? என்பதில் எனக்கு நிறைய குழப்பங்கள். அவனை தூரத்தில் இருந்து பார்த்த பொழுது தனியாக பேசிக் கொண்டிருந்த மாதிரி தெரிந்தது. அவனருகில் சென்று, அவன் தனியாக அப்படி என்னப் பேசிக் கொண்டிருக்கிறான் என்று பார்த்தால் மேலும் சில விவரங்கள் கிடைக்கும் என்பதனால், அவன் பின்னால் இருந்த நாற்காலியில், வேறு ஒரு வழியில் மெதுவாக சென்று அமர்ந்துக் கொண்டேன்.

சிறிது இடைவேளைக்குப் பிறகு, அவன் மீண்டும் தனக்குத் தானே பேச ஆரம்பித்திருந்தான். நான் அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அவன் தனக்குத் தானே கேள்விக் கேட்டுக் கொண்டான். ஏன் என்னை யாரும் மதிப்பதில்லை? ஏன் என்னை யாரும் அவர்கள் குழுவில் சேர்த்துக் கொள்வதில்லை? ஏன் என்னை யாரும் பாராட்ட மறுக்கிறார்கள்? என நிறை கேள்விகளை அவனுக்குள் கேட்டுக் கொண்டான். இந்த கேள்விகளுக்கு அவனிடமே பதில் இருந்தது. அந்த பதில்களில், அவனிடம் இருந்த தாழ்வு மனப்பான்மை வெளிப்பட்டது. அவன் செய்வதை எல்லாம் பொறுக்க முடியாமல் அவனிடம் பேச்சுக் கொடுக்கலாமா? என முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. என்ன செய்யலாம் என யோசித்து அங்கிருந்து நகர்ந்தேன்.

மீண்டும் தோழியின் தங்கைகளுடன் அரட்டை அடிக்க கிளம்பினேன். அப்போது கடைசி தங்கை கீழே சென்று தண்ணீர் எடுத்து வர கிளம்பினாள். அவளின் பின்னால் இவனும் நடக்க ஆரம்பித்துவிட்டான். சட்டென்று மற்றொரு வழியில் சென்று அவனை தடுத்து,

ஏன் அவளின் பின்னால் சுற்றுகிறாய்” என கேட்டேன்.

“இல்லை. நான் அவள் பின்னால் சுற்றவில்லை” என மழுப்பினான்.

“நேற்றில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். நீ செய்வது சரியில்லை. இனியும் இது போன்று நீ நடந்துக் கொண்டால், பிரச்சனை ஆகிவிடும்” என அவனை எச்சரித்துவிட்டு மீண்டும் எனது அறைக்குத் திரும்பினேன்.

அப்போது அவனின் அம்மா என்னை வழி மறித்தார். புதுப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டோமோ என பயந்தேன். ஆனால் பதற்றமாக இருந்த அவர், தன் மகன் ஏதும் தவறு செய்துவிட்டானா? என்று வினாவினார். அவன் தவறேதும் செய்யவில்லை நாங்கள் ஊருக்குக் கிளம்புவதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம் என சமாளித்தேன். அவன் அம்மாவிடம் பேசியதிலிருந்து அவனுக்கு என்ன பிரச்சனை என்பதனை ஒரளவு தெரிந்துக் கொண்டேன். ஒரே பையன் என்பதனால், அவனைஅதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டார்கள். ஆதலால், அவனுக்கு என்று தனியாக நட்பு வட்டம் உருவாகாமல் போய்விட்டது. தனிமையே அவனுக்கு தோழனாகிவிட்டது. பள்ளி, கல்லூரியில் நல்ல மதிப்பெண் பெற்றும், அவன் சுபாவததைக் கண்டு, அவனது அம்மா அவனை வேலைக்கு அனுப்பாமல் தன்னுடனே வைத்துக் கொண்டார். இதனால் அவனுக்கு கிடைக்க வேண்டிய வெளியுலக அனுபவமோ, நட்பு வட்டமோ கிடைக்கவில்லை. கொஞ்சம் மா நிறமாக வேறு இருந்துவிட்டதால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது.

நான் கண்டித்தப் பிறகு, அவன் என் தோழியின் தங்கைக்கு பிரச்சனைகள் ஏதும் தரவில்லை. அவன் கிளம்பும் போது மட்டும், அவளிடம் சென்று கிளம்புகிறேன் என கையை நீட்டினாள். ஆனால் அவளோ வணக்கம் என்று இரு கையையும் கூப்பிவிட்டாள்.

ஆனால் அவனுக்கும் இருக்கும் தாழ்வு மனப்பான்மையும், அதனால் அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும், இந்த சமூகத்திற்கும் ஏற்படப் போகும் இழப்புகளையும், ஆபத்துகளையும் கண்டு நான் கவலைக் கொள்கிறேன். என் தோழியின் தங்கையிடம் நடந்துக் கொண்டதைப் போல அவன் வேறு யாரிடமாவது நடந்துக் கொண்டிருந்தால் இந்நேரம் தர்ம அடி வாங்கியிருப்பான். மேலும், தாழ்வு மனப்பான்மையால் இது போன்று மற்ற இடங்களில் அவன் நடந்துக் கொள்ள வாய்ப்புகள் மிகக் குறைவு. என்னால் அவனுக்கு ஏற்பட்ட அவமானம், இனி இது போல நடந்துக் கொள்ளக் கூடாது என்று பாடத்தைக் அவனுக்கு கற்பிக்கலாம். அல்லது என்னையோ, அந்தப் பெண்ணையோ, வேறு பெண்ணையோ பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமும், உத்வேகமும் அவனுக்குள் எழலாம். எதிர்காலத்தில் ஒரு குற்றம் நடக்க நான் காரணமாகி விடுவேனோ என ஒரு நிமிடம் நான் பயந்தது உண்மையே.

அவன் அன்று நடந்துக் கொண்ட விதம் மன்னிக்க முடியாதவை. சட்டத்தின் முன்னால் அவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிச்சயம். ஆனால் அவனுக்கு தண்டனைகள் தேவையில்லை. அவனுக்கு இருப்பது உளவியல் சிக்கல். அதனை அவனால் தனியாக அதனை தீர்க்க முடியாது. சரியான தீர்வு நோக்கி நடந்தால் அவனுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை மறைந்து அவனாலும் சராசரி மனிதனாக வாழ முடியும். அந்த நேரத்தில் எனக்கு அவன் நடத்தையின் மேல் தான் ஆத்திரமாக இருந்தது. அவனுக்கும் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அவனது தாழ்வு மனப்பான்மையும் குறைய வேண்டும், அவனுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாகவும் ஏதேனும் செய்ய வேண்டும் என யோசித்தேன். ஊருக்குக் கிளம்ப, அவன் பேருந்தில் ஏறப் போகும் முன்,

“உங்களுடன் ஒரு செல்பி எடுக்கனும்…!” என்று அவனிடம் கேட்டேன்.

ஒரு செல்பி பெரிதாக என்ன செய்துவிடப் போகிறது என நீங்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவனிடம் யாரும் அவ்வளவாக செல்பி எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டிருக்க மாட்டார்கள். அவனும் நம்மை திட்டியவன், நம்மிடமே வந்து செல்பி எடுத்துக் கொள்ள அனுமதி கேட்கிறான் என நினைத்திருக்கவே மாட்டான். ஒரு வகையில் இது அவனுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு செயலாக இருக்கும் என நினைத்தேன். முதலில் தயங்கினான், பிறகு அச்சரியமாக என்னைப் பார்த்தான். சற்று யோசித்துவிட்டு. சரி என்றான்.

அவன் தோள் மீது கைப் போட்டு ஒரு செல்பி எடுத்துக் கொண்டேன். அதில், அவன், என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

– நம்பிக்கை தான் எல்லாம்…