இக்கட்டுரையின் நோக்கங்கள் இரண்டு. முதலாவது, தமிழக தேர்தல் முடிவுகள் நமக்குச் சொல்வதென்ன…? இரண்டாவது, அடுத்த சில ஆண்டுகளில் தமிழக அரசியல் போகும் பாதை என்னவாக இருக்கும்…?
சில புள்ளிவிவரங்கள்…
- அதிமுக+ – 134 இடங்களில் வென்றுள்ளது. திமுக+ – 98 இடங்களில் வென்றுள்ளது. அதில் திமுக -89, காங்கிரஸ் – 8, இந்தியன் யூனியன் மூஸ்லிம் லீக் -1.
- அதிமுகவின் வாக்கு சதவீதம் – 40.8% திமுகவின் வாக்கு சதவீதம் – 39.8%. மற்றவர்கள் – 20%. அதாவது, வெற்றி தோல்வியை இம்முறை 1% வாக்குகளே முடிவு செய்துள்ளன.
- தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதன் முறையாக பலமான எதிர்கட்சியாக திமுக அமர்ந்துள்ளது.
- ”நாங்கள் தான், மாற்று” என்று சொன்ன மற்ற எல்லா கட்சிகளும் சேர்ந்து, ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தேமுதிக, தமாக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்டுகள் சேர்ந்து அமைத்த மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. அதேபோல, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளையும் மக்கள் ஏற்கவில்லை. இவற்றுள் பாஜக, நாம் தமிழர் கட்சிகளுக்கு முன்னேற்றமாகவும், மக்கள் நலக் கூட்டணி, பாமக கட்சிகளுக்கு பின்னடைவாகவும் இத்தேர்தல் அமைந்துள்ளது.
- தமிழக சட்டமன்ற வரலாற்றில் கம்யூனிஸ்டுகளின்றி அமைந்துள்ள முதல் சட்டமன்றம் இது தான். மேலும், இம்முறை வெறும் 4 கட்சிகளின் பிரதநிதிகள் மட்டுமே தமிழக சட்டமன்றத்தில் உள்ளனர். அவை அதிமுக, திமுக, காங்கிரஸ், மூஸ்லிம் லீக்.
தேர்தல் முடிவுகள் நமக்குச் சொல்வதென்ன…?
- மக்கள் செல்வாக்கு அதிமுகவிற்கு இருக்கிறதா? என்ற கேள்விக்கு இத்தேர்தல் ஆம் அதிமுகவிற்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று விடையளித்துள்ளது. ஆனால் மக்கள் செல்வாக்கு மட்டும் தான் அதிமுக வெற்றி பெற காரணம் என சொல்ல முடியாத அளவிற்கு சில அம்சங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, திமுக-தேமுதிக கூட்டணி அமையாதது. தன்னை அவமதித்த ஸ்டாலினை, விஜயகாந்த் பழிவாங்கிவிட்டார் என்று தான் செல்ல வேண்டும். தனக்கு இரண்டு கண்கள் போனாலும், எதிரிக்கு ஒரு கண்ணாவது போகட்டும் என்பதனைப் போல இருந்தது விஜயகாந்தின் முடிவு. என்னதான் இருந்தாலும் வெற்றி அதிமுகவிற்கே.
- திமுக தன் கூட்டணியை சரிவர அமைக்காதது அதற்கு பெறும் இழப்பு தான். இந்த தேர்தலில் திமுக ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி சந்திக்காவிடிலும், அவர் தலைமையில் தான், இந்தத் தேர்தலை திமுக சந்தித்தது. கீழ்மட்ட திமுக தொண்டர்கள் வரைக்கும், ஸ்டாலின் விஜயகாந்திடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போய் இருக்கலாம் என்று தான் இன்னுமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆக, இது ஸ்டாலின் தலைமைக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது தோல்வி. முதல் தோல்வி 2014 நாடாளுமன்றத் தேர்தல். இனி ஸ்டாலின் தன் பாணியை மாற்றிக் கொள்ளாவிடில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சும். திமுகவிற்கும் தான்.
- உண்மையில் அதிமுகவின் வாக்கு வங்கி கணிசமான அளவில் சரிந்திருக்கிறது. திமுகவின் வாக்கு வங்கி ஓரளவு உயர்ந்திருக்கிறது. ஆனாலும் அதிமுக பெரும்பான்மையுடன் வென்றிருக்கிறது. ஜெயலலிதா என்ற பிம்பம் மட்டும் தான், அதிமுகவின் மிகப் பெரிய பலம். அந்த பலம் மீண்டும் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர உதவியாய் இருந்திருக்கிறது. ஆயிரம் விவாதங்கள் இருந்தாலும், தானாகவே, திமுக இத்தேர்தலில் தோற்றுவிட்டது.
- மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அலை உருவாகவேயில்லை. அதற்கு மூன்றுக் காரணங்கள். முதல் காரணம், கடந்த திமுக ஆட்சியில் அந்தக் கட்சிக்காரர்கள் போட்ட ஆட்டம். இரண்டாவதுக் காரணம் விஜயகாந்த். திமுக, தேமுதிகவிடம் கெஞ்சிய விதத்தை தமிழக மக்கள் ரசிக்கவில்லை. கலைஞர் கருணாநிதி தன் வாழ்நாளில் யாரிடமும் இவ்வளவு கெஞ்சியிருக்க மாட்டார். தன் மகன், முதல்வர் நாற்காலியில் அமர வேண்டுமெனில், விஜயகாந்தின் பங்கு தேவை என்பதனை அவர் உணர்ந்திருந்தார். ஆனால் தன் தமயனை அவரால் மீற முடியவில்லை. கடைசி காரணம். குடும்ப ஆட்சி. திமுகவின் குடும்ப ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரைக்கும் அக்கட்சியில் குடும்ப ஆட்சி இருக்கிறது. அதில் இருந்து எப்போது திமுக வெளிவருகிறதோ அப்போது தான் அதற்கு எதிர்காலம்.
- இளைஞர்களின் ஆதரவில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தக் கட்சி திமுக. இன்றைக்கோ திமுகவிற்கு இளைஞர்களின் ஆதரவு பெரிதாக இல்லை. நிச்சயம் இது திமுகவின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடிய அம்சம். அதே சமயம் அதிமுகவிற்கும் இளைஞர்களின் ஆதரவு பெரிதாக இல்லை. காரணம் அதன் தலைமையிடம் இருக்கும் சர்வாதிகாரப் போக்கு. இம்முறை அதிமுகவிற்கு ஓட்டுப் போட்ட கல்லூரி மாணவர்களிடம் கேட்டேன், ஏன் அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று? அதற்கு அவர்கள் சொன்ன பதில், என் பெற்றோரிடம் கணினி கேட்டேன். அவர்கள் வாங்கித் தரவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் எங்களுக்கு கணினி கொடுத்திருக்கிறது, அதனால் அவர்களுக்கு ஓட்டுப் போட்டோம் என்று ஒருமித்த கருத்தில் பதில் சொன்னார்கள். மற்றபடி அதிமுக எங்களுக்கு பிடிக்காது என்றும், உள்ளாட்சித் தேர்தலில், கட்சியைவிட, வேட்பாளர், ஜாதி போன்றவற்றின் அடிப்படையில் தான் ஓட்டுப் போடப் போகிறோம் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு திமுக மீது கடுமையான கோபம் இருக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் திமுக கருத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும் ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒன்று அவர்களை திமுகவின் பக்கம் போகவிடாமல் தடுக்கின்றது. அதனை திமுக கண்டுபிடித்தால், அதற்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது.
- மதுவையும், மதுவிலக்கையும் வைத்து செய்த போரட்டங்கள் யாவும் இத்தேர்தலில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. ஒரு வகையில் மதுவிலக்கை பெரிதாக ஆதரிக்காமல் இருந்தது கூட அதிமுக வெற்றி பெற காரணமாக இருந்திருக்கலாம்.
- மதிமுக, தேமுதிகவிற்கு இனி எதிர்காலம் பிரகாசமாக இல்லை. பாஜக, நாம் தமிழர், பாமகவிற்கு எல்லாம் உயிர் தண்ணீர் கிடைத்திருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்டுகளுக்கு இனி போராட்ட காலம் தான்.
அடுத்து என்ன…?
அதிமுகவிற்கு…
- அதிமுக 2014ல் பெற்ற வாக்குகளை இனி ஒரு போதும் பெற முடியாது. இருப்பதனை தக்க வைக்க வேண்டுமாயின், அது கடுமையாக போரட வேண்டியிருக்கும். ஆக, அதிமுக அரசு, இனி மக்கள் நலத் திட்டங்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும். இது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். மக்கள் நலத்திட்டங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வளர்ச்சித் திட்டங்களுக்கு நாம் முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமல்லவா…? இந்த அரசின் காதுகளுக்கு அதனை யார் கொண்டுச் செல்வது?
- ஒரு வேளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுக அரசு நல்லாட்சி தராத பட்சத்தில், அதிமுக அரசுக்கு எதிராக மக்கள் போரட்டங்கள் நடத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. நல்லாட்சி தந்தால் மீண்டும் ஆட்சி அமைக்க மக்க ஆதரவு தருவார்கள்.
- மூன்று சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2019ற்கான நாடாளுமன்ற தேர்தல் என தேர்தல்கள் வந்துக் கொண்டே இருக்கப் போகின்றன. ஆக தவறு செய்தால் மக்கள் தண்டிக்க தயாராக இருப்பார்கள் என கொஞ்சமேனும் பயம் இருக்கும். அரசு இனிமேல் மக்கள் பிரச்சனைகளை களைய வேண்டும். மத்திய அரசிடம் தமிழக பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தாக வேண்டும். இனியும் கடந்த ஆட்சியின் மேல் பழி சுமத்தி தப்பிக்க முடியாது.
- மொத்ததில் அதிமுக மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என வசமாக மாட்டிக் கொண்டுவிட்டது. ஒரு வகையில் இதுவும் நல்லது தான்.
திமுகவிற்கு…
- மிக பிரகாசமான வாய்ப்பு. கடந்த 5 ஆண்டுகளாக எதிர்கட்சியாகக் கூட இல்லாமல் இருந்த நிலையில் இன்று தமிழக சட்டமன்ற வரலாற்றில் இல்லாத அளவிற்கான பலமான எதிர்கட்சி. ஆக திமுக சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் வலுவாக போராடும் என நம்பலாம்.
- அதிமுக தலைமை தினமும் செய்திகளில் வந்துக் கொண்டே இருக்கும், திமுக தலைமைக்கு அது சாத்தியமில்லை. எனவே தான் மாற்றுக் கட்சியில் இருந்து ஆட்களை இழுத்து வந்து இவர்களாகவே செய்திகளில் அடிபடுகிறார்கள். இது நல்லதிற்கில்லை. ஊரான் வீட்டை கெடுத்தவன் எவனும், நன்றாக இருந்ததாக சரித்திரமில்லை.
- நிழல் அமைச்சரவை, நிழல் பட்ஜெட் போன்றவற்றை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தலாம். திமுக இதனை செய்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்
- மொத்ததில் திமுக ஸ்டாலின் கீழ் படிய ஆரம்பித்துவிட்டது. புதிய தலைமை புதுமையை புகுத்துமா?
மற்றவர்களுக்கு…
- ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் செய்யும் தவறுகளை எடுத்துரைக்கும் பிரகாசமான வாய்ப்பு மற்றவர்களுக்குத் தான். நாங்கள் ஏன் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என ஒவ்வொரு கட்சியும் மக்களிடம் எடுத்துரைக்க ஒரு நல்ல வாய்ப்பு. உள்ளாட்சி தேர்தலில் எல்லா கட்சிகளும் கனிசமான இடங்களைக் கைப்பற்றும்.
மக்களுக்கு…
- அதிமுக, திமுக நடுவே ஒரு புரிதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்துக் கொண்டு களவாட ஆரம்பித்தால் நாடு தாங்காது. மக்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் கவிழிப்பாக இருக்க வேண்டும்.
மொத்தத்தில்… நடப்பதெல்லாம் நன்மைக்கே…