“திவ்யா… திவ்யா… சீக்கிரம் எழுந்திருடி … மாப்பிள்ளை உன்னுடன் பேசனுமாம்” என அம்மா என்னை எழுப்பினாள். நல்ல தூக்கத்தில் இருந்த நான் திக்கென்று எழுந்து அம்மாவின் போனை வாங்கி காதில் வைத்தேன்.
“உன் போன் என்ன ஆச்சு திவ்யா… காலையில இருந்து மூன்று முறை போன் பண்ணிட்டேன். நீ எடுக்கவேயில்லை? ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றார் ஆனந்த்.
ஆனந்த கிருஷ்ணன் சுருக்கமாக ஆனந்த். வீட்டில் எனக்குப் பார்த்த மாப்பிள்ளை. எங்களைப் போலவே, அவரின் பூர்வீகமும் ஈரோடு தான். ஆனால் அவர் இப்போது, பெங்களூரு விப்ரோ நிறுவனத்தில் திட்ட மேலாளராக இருக்கிறார். பெரிய இடம். எந்த கெட்ட பழக்கங்களுமில்லை, ஒரே பையன், கை நிறைய சம்பளம். பழைய சொந்தம் வேறு, ஆகவே, ஆனந்துடன் தான் உனக்கு கல்யாணம் என்று சொல்லிவிட்டனர், எங்கள் வீட்டில். சில மாதங்கள் முன்பு தான் திருமணம் உறுதியாகியது. இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் நடக்க இருக்கிறது.
திருமணமாக இருக்கும் மற்ற ஆண்களைப் போல, என்னிடம் அடிக்கடி பேச வேண்டும் என ஆனந்த் விரும்பமாட்டார். அவர் வேலை அப்படி. தினமும், மாலையில் வாட்ஸ்ஆப்-ல் (whatsapp) சில பல குறுச்செய்துகள் பரிமாறிக்கொள்வாம். அவ்வப்போது, ஸ்கைப்-ல் (skype) அழைப்பார், சில நிமிடங்கள் பேசுவோம். எங்களுக்குள்ளான திருமண பந்தம் இப்படியாக மெல்ல மெல்ல ஆரம்பித்திருந்தது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் நேரில் வந்து என்னை பார்த்துவிடுவார். பூங்கா, சினிமா, கடைத்தெரு என சில மணி நேரங்கள் ஊர் சுற்றுவோம். பெரும்பாலும் காரில் தான் வருவார்.
இது தான் ஆனந்த். இவரிடம் இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டும் என எனக்குள்ளாக ஒரு பிம்பம் உருவாக ஆரம்பித்திருந்தது. ஆகையால் காலை 7.00 மணிக்கே ஏன் அழைக்கிறார் என எனக்குள் ஒரே குழப்பமாக இருந்தது.
“செல்லுங்க… என்ன விஷயம்…?” என்று எனக்குள் இருக்கும் ஆயிரம் கற்பனைகளுக்கு மத்தியில் தயக்கத்துடன் கேட்டேன்.
“திவ்யா… உனக்கு வரும் வாரம் செவ்வாய்க்கிழமை எதேனும் முக்கியமான வேளை இருக்கிறதா?” என்று கேட்டார்.
“செவ்வாய்கிழமை என்ன தேதியில் வருகிறது?” என்று அவரிடம் கேட்டேன்.
“எப்ரம் 19, 2016 தேதி செவ்வாய்க்கிழமை” என்று சொன்னார்.
“தெரியலங்க! இப்ப வரைக்கும் எந்த வேலையுமில்லைங்க? ஏன் இந்த கேள்வி கேட்டீங்கனு புரியலங்க? எதுக்கும், வீட்டுல அப்பா அம்மா கிட்ட கேட்டுட்டு செல்லவா?” என்று கேட்டதற்கு, “சரி, கேட்டுவிட்டு சொல்” என்றார்.
இளைய தளபதி நடித்த தெறி படம் வரும் சித்திரை 1ஆம் நாளான வியாழக்கிழமையன்று வெளியாகிறது, விஜய் ரசிகரான ஆனந்த், ஏப்ரம் 19, அன்று என்னை தெறி படத்துக்கு கூட்டி செல்வதற்காகத் தான் இப்படி கேட்கிறார் என நினைத்துக் கொண்டேன். அன்றைக்கு ஏதேனும் வேலை இருக்கிறதா? என்று அப்பா அம்மாவிடம் கேட்டேன். அவர்களும் அன்றைக்கு எந்த முக்கியமான வேலையுமில்லை என்றார்கள்.
ஆனால் எனக்குள்ளே ஏதோ தவறாக இருக்கிறதே என்று பொறி தட்டியது. இருந்தாலும் அவரிடம் “அன்றைக்கு. எந்த முக்கியமான வேலையுமில்லைங்க” என்று சொன்னேன்.
“சரி. அப்படியென்றால் அன்றைக்கு நாம் திருச்செங்கோடு மலையில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரன் கோவிலுக்குச் சென்று ஒரு அர்ச்சனையும், அபிஷேகமும் செய்ய வேண்டும். போய்விட்டு வருவோமா?” என்று அவர் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே என் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.
ஆனந்திடம் பேசிக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில் ஏன் கண்ணீர் வந்தது என எனக்கு தெரியவில்லை. என்னை அறியாமல் எழுந்து என் அறைக் கதவை மூடிக் கொண்டேன். ஆனந்தும் போனை வைக்காமல் ஏதற்கு இந்த அர்ச்சனை என்பதனை விளக்கமாக விளக்கிக் கொண்டிருந்தார். நான் “ம்.. ம்..” என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தேன். சிறு சிறு துளிகளாக வந்துக் கொண்டிருந்தக் கண்ணீர்க் மேலும் அதிகரிக்க ஆரம்பித்து. உடல் முழுவதும் குப்பென்று நினைந்திருந்தது. என்னால் அவர் சொல்வதனைக் கேட்கவும் முடியவில்லை, பதிலளிக்க பேச்சும் வரவில்லை. மொத்தத்தில் அப்போது முழுவதுமாக நிலைக்குலைந்துப் போயிருந்தேன்.
“என்ன… ம்… ம்…னு மட்டும் செல்ற எதும் செல்ல மாட்டேங்குற? அம்மா பக்கத்துல இருக்காங்களா?” என்றார்.
அதற்கும் “ம்…” என்று தான் சென்னேன். அப்படியானால், நான் மாலையில் அழைக்கிறேன் என்று போனை துண்டித்துவிட்டார். ஆனால் அம்மா எப்போதோ போயிருந்தார்.
அப்படியே என் மெத்தையில் மேல் சரிந்துவிழுந்தேன். எவ்வளவு நேரம் அழுதிருப்பேன் என தெரியவில்லை. தலையனை முழுவதுமாக நினைந்திருக்கும். பெண்ணாக பிறந்துவிட்டதனால் என்னவோ அழ ஆரம்பித்தால் அழுதுக் கொண்டேயிருக்கிறேன். இப்படி அழுவது இது தான் முதல் முறையில்ல. இதற்கும் முன்னும் அழுதிருக்கிறேன். இதனைவிட நூறு மடங்கு அழுதிருக்கிறேன். வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அழுதிருக்கிறேன். எதற்கு அழுகிறேன் என்று தெரியாமல் கூட அழுதிருக்கிறேன். இவ்வளவு அழுகைக்குப் பின்னால் இருப்பதும், இருந்ததும், அவன் தான்.
அவன் பெயர் அன்பு. கல்லூரியில் என்னுடைய வகுப்பில் படித்தவன். என் முன்னாள் காதலன். அவன் எப்படி என் வாழ்க்கைக்குள் வந்தான்? ஏன் வந்தான்? எங்களுக்குள் என்ன பிரச்சனை? தீர்க்க முடியாமல் பிரியும் அளவிற்கு பிரச்சனையா? ஏன் பிரிந்தோம்? என எழும் எல்லா கேள்விகளுமே அக்டோபர் 30, 2015 அன்றுடன் விடைக் கிடைத்து முடிந்துப் போனவை. அன்றுடன் அன்பு யாரோ, நான் யாரோ என்றாகிவிட்டது. அவன் எவ்வளவு கெஞ்சியும், இனி அவனுடன் எனக்கு வாழ்க்கையில்லை என்று அவனைப் பிரிந்து இப்போது வெகு தூரம் வந்துவிட்டேன். இதோ இன்னும் மூன்று மாதத்தில் ஆனந்துடன் எனக்குத் திருமணமாகப் போகிறது. இருந்தாலும் நான் ஏன் அழுதேன்.
இன்றும் கூட அவனுக்குத் தெரியாது, நான் எதற்காக அவனைப் பிரிந்தேன் என்று. அவனை பிரிவது தான் எங்கள் காதலுக்கான உண்மையான சமர்ப்பணமாக இருக்க முடியும் எனக் கருதினேன். அவன் இன்னும் என்னை நினைத்துக் கொண்டு, அவனை வருத்திக் கொண்டு, சோகத்திலேயே மூழ்கியிருக்கலாம். எனக்கு திருமணமாகப் போகும் செய்தியை தெரிந்துக் கொண்டு, என்னை மறந்துக் கூட இருக்கலாம். அன்பு நிலை குறித்து பல நேரங்களில் வருந்தியிருக்கிறேன், அவனை பிரிந்த பின்பும்.
எங்களின் காதல் தோற்க்கவில்லை. ஆனால் காதலர்களாக நாங்கள் தோற்றுவிட்டோம். இல்லையில்லை, நான் தோற்றுவிட்டேன். அன்புவின் காதலியாக இருந்த என்னால், அவன் மனைவியாக மாற முடியாமல் போனதே, என் தோல்வியின் உச்சம்.
எப்போழுதோ இவையெல்லாம் கடந்து வந்துவிட்டேன். வேலைக்குப் போன பின் தான் திருமணம் என்றிருந்த நான், வீட்டில் உடனே திருமணம் செய்திக்கொள்கிறேன், மாப்பிள்ளைப் பாருங்கள் என்று சொல்லும் அளவிற்கு நான் கடந்து வந்துவிட்டேன். ஆனாலும் ஆனந்திடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஏன் நான் அழுதேன்? அதற்கான காரணம் நான் சுவற்றில் மாற்றி வைத்திருக்கும் என் மாத காலண்டரில் தேதியாய் இருந்தது. அது என் பார்வைக்கு மட்டுமே தெரியம் படி இருந்தது. காரணம், அது யார் கண்களுக்கும் புலப்படாத வகையில் ஆழமாய் என் மனதிற்குள் புதைந்திருந்தது. அந்த நினைவுகள் உண்மையாகவும் முழுமனதாகவும் இருந்ததால் அது அவனை விட்டுப் பிரிந்த பின்பும் உயிர்ப்புடன் இருந்தது.
அவன் என்னைக் காதலிக்கிறான் என ஒரு வருடம் முன்பே தெரியும். மேலும் என் பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடியிருந்தான். வகுப்பில் இருந்த எல்லோருக்கும் தெரியும், அவன் என்னை விரும்புகிறான் என்று. என் தோழிகளை வைத்துக் கூட என்னிடம் கேட்டுப் பார்த்துவிட்டான். நான் தான் பிடி கொடுக்கவேயில்லை. அவன் மேல் எனக்கு காதல் அறும்பாமலில்லை. அவன் பெயரிலேயே அன்பை வைத்திருக்கிறான். அவன் பெயரே என்னைக் கிறக்கடிக்கும். அவன் இன்னும் நேரடியாக சொல்லவில்லை. நானும் பொறுத்துப் பார்த்தேன். நான்கு வருட கல்லூரிக் காலம் இன்னும் சில வாரங்களில் முடியப் போகிறது. ஆகவே அவன் பிறந்த நாள் என்று நானே சொல்லிவிடலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தேன். அன்றைக்கு எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்தவன் எனக்கு மட்டும் கொடுக்கவில்லை.
மதிய வேலையில் மாடிக்கு என்னை தனியே அழைத்தான். எனக்கு தனியாக பெரியதாக் சாக்லேட் கொடுத்தான். காதலை சொல்ல தயங்கினான். சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமேயில்லை. அதுவரை அவன் மேல் அடக்கி வைத்திருந்த காதலை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. சுவற்றில் அவனைத் தள்ளி, அவன் கன்னத்தில் என் இரு கைகளையும் வைத்து, அவன் முகத்தைச் சாய்த்து, அவன் சபரீசத்தை முகர்ந்து, அவன் இதயத்துடிப்பு அதிகமாவது என் காதுகளில் கேட்க. அவன் உதடுகளில் என் உதடைப் பதித்து என் காதலை என் முத்தத்தால் அவனிடம் வெளிப்படுத்தினேன். அப்படியே போதை ஏறியதைப் போல இருந்தது. மணியடித்தது, சட்டென்று அவனை விலக்கி, உன் பிறந்தநாள் பரிசு நான். என்னை எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக வகுப்புக்குச் சென்றுவிட்டேன்.
எப்படி மறக்க முடியும் அந்த நாளை. அது அன்புவின் பிறந்தநாள். என் அன்புவின் பிறந்தநாள். என் வாழ்க்கையையே திசை மாற்றிய நாள் அது. அந்த நாள் ஏப்ரல் 19, 2012. அவன் பிறந்தநாள் மட்டுமல்ல. அது எங்களுக்கு மிக மிக முக்கியமான நாள். என் வாழ்வில் நான் கொடுத்த முதல் முத்தம். அன்புவிற்கு நான் கொடுத்த முதல் முத்தமும் அது தான், கடைசி முத்தமும் அதுதான். ஆகவே இது, நான் சாகும் வரை என் நினைவில் இருக்கப் போகும் நாள். அந்த நாளை என்னால் எப்படி எளிதாக மறக்கமுடியும்.?
இப்போது, ஆனந்த் கோவிலுக்கு கூப்பிவதும் அதே நாள். ஆனால் முன்னாள் காதலனின் மறக்க முடியாத நினைவுகளால் கோவிலுக்குப் போவதை தவிர்ப்பதா? இல்லை, முதன் முறையாக கோவிலுக்கு கூப்பிடும் வருங்காலக் கணவனின் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? வருகிறேன் என்று சொல்லியாகிவிட்டது. இனி அழைத்து அன்று வர முடியாது என்று சொல்லலாமா? அது சரியாக இருக்குமா? அன்று மிக மிக முக்கியமான அர்ச்சனை என்று வேறு சொல்கிறாரே. என்ன செய்வது என நினைத்தாலே எனக்குள் அழுகையாக வந்தது.
அன்று காலையில் சாப்பிடக் கூட இல்லை. ஆனந்துடன் கோவிலுக்குப் போவதில் பிரச்சனையில்லை. ஆனால் ஏப்ரல் 19, அன்று செல்வதில் தான் பிரச்சனை. அழுது அழுது முகமெல்லாம் சிவந்து வீங்கிப் போயிருந்தது. மனத்தடை தான் எல்லாம். இன்னும் மூன்று மாதத்தில் இன்னொருவனுக்கு நான் முந்தானையை விரிக்கப் போகிறேன். இந்த நிலையில், இது கட்டாயம் உடைய வேண்டிய மனத்தடை. அன்புவை நினைத்துக் கொண்டு ஆனந்துடன் படுக்க முடியாது. அது இல்லறமாக இருக்காது “il-அறமாகத்” தான் இருக்கும்.
எனக்கும் இருக்கும் வலியை வார்த்தைகளால் வார்க்க முடியாது. இந்த வலியை புரிந்துக் கொள்ள வேண்டுமெனில், உணர வேண்டுமெனில் காதலில் தோற்றவரிடம், காதல் கசிந்த பிறகு முதன்முறையாக வரும் முன்னாள் காதலன்/காதலியின் பிறந்தநாளன்று உங்கள் மனம், எப்படி இருந்தது? என கேட்டுப் பாருங்கள். இந்த வலிகளெல்லாம் காதலில் தோற்றவர்களுக்கு மட்டுமே வரக்கூடியது. அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடியது.
பாவம், ஆனந்திற்கு காதல் எட்டாக் கனியாகவே இருந்திருந்திருக்கிறது. அவரிடம் போய், நீங்கள் கோவிலுக்குப் போக குறித்திருக்கும் தினத்தில் பிரிந்து போன என் முன்னாள் காதலனின் பிறந்த நாள் வருகிறது. அன்று உங்களுடன் இருந்தால், எனக்கு அது வருத்தத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் கோவிலுக்கு வரமுடியாதென்று உண்மையை சொல்லவா முடியும்? அப்படியே பேசினாலும், என் பழைய காதல் விவகாரமெல்லாம் தெரியாத அவர், நடக்கப் போகும் திருமணத்தை நிறுத்திவிட்டால் என்ன செய்வது? மனம் பதறுகிறது, தேவையில்லாத சிந்தனைகள் மனதில் மின்னல் மாதிரி வந்து வந்துப் போகின்றது.
இரண்டு நாட்களாக இப்படியான குழப்பங்களிலேயே கடந்துப் போனது. தினசரி நாள்காட்டியில் தேதியை கிழிக்கக் கிழக்க கோவிலுக்குப் போகும் நாள் நெருங்கிக் கொண்டு வந்தது. இரண்டு நாட்களாக வீட்டிலும், ஆனந்திடமும் பூட்பாயிஸன் ஆகிவிட்டதால் வயிறு வலிக்கிறது ஆகவே ஓய்வெடுக்கிறேன் என்று சொல்லி வைத்திருந்தேன். என்ன செய்வது என்ற குழப்பத்திலேயே இருந்தேன். ஆனந்துடன் கோவிலுக்குப் போவது தான் சரியான முடிவு என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் அன்பும், பழைய காதல் நினைவுகளும் மீண்டும் மீண்டும் என்னை துரத்தியது. அவன் மறந்திருந்தாலும், எதேனும் நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து என் மனதை வாட்டிக் கொண்டேயிருந்தது.
இந்தக் குழப்பங்களில் என் தலையே வெடித்துவிடும் போல இருந்தது. ஆனந்த் அன்று போனில் கோவிலுக்குப் போவதைப் பற்றி சொன்னதிலிருந்து நான் மனதளவில் செயலற்று வெறும் ஜடமாக கிடக்கிறேன். என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் சண்டை வரும் போது என் அம்மா சில நேரங்களில் இப்படி ஜடம் மாதிரி இருப்பது இந்த நேரத்தில் எனக்கு நினைவுக்கு வந்தது. பெண்களாகிய எங்களை கடவுள் ஏன் இப்படிப் படைத்தான் என கடவுளை எனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளால் திட்டினேன். உன்னால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனை. உன்னைப் பார்க்க வர வேண்டும், உனக்கு அர்ச்சனை செய்ய வேண்டும், அதுவும் ஏப்ரல் 19 அன்றே எல்லாம் நடக்க வேண்டும் என உன் திருவிளையாடலை என் மேல் நடத்திவிட்டாயே என கடவுளிடம் புலம்பித் தள்ளினேன். கடைசியில் கடவுளிடமே வேண்டுதல் வைத்தேன். எப்படியாவது இந்த குழப்பங்களிலிருந்து என்னைக் காப்பாற்று என்று.
அப்போது எனக்குள் தீடிரென ஒரு யோசனை தோன்றியது. ஏன் ஆனந்திடம், அன்றைக்கு வீட்டில் இருந்து ‘தள்ளியிருக்க’ வேண்டிய நிலை வரலாம். என் நாள் கணக்கு அப்படித்தான் சொல்கிறது. ஆகவே வேறு ஒரு நாளில் கோவிலுக்குச் சென்று வரலாமா? என்று கேட்கக் கூடாது. அவரும் சரியென்று சொல்லத்தான் ஆக வேண்டும். ஆகவே பிரச்சனை தன்னால் சரியாகிவிடும் என்று கணக்குப் போட்டேன்.
மனதில் ஒரு உத்வேகம் வந்தது. கட்டிலில் இருந்து சட்டென்று எழுந்து, முகம் கழுவிக் கொண்டு, கண்ணாடியின் முன் நின்று ஒன்றிற்கு, இரண்டுமுறை நடித்துப் பார்த்து, போருக்குத் தயாராவதுப் போல தயாராகி, சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த போன் முன் பாய்ந்தேன். மனதில் இருந்த உத்வேகத்தில் எப்படியும் காரியம் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கையிருந்தது. நான் போனை எடுக்கவும், ஆனந்த் அழைக்கவும் சரியாக இருந்தது.
மதிய நேரத்தில் தீடிரென அழைக்கிறார். என்னவாக இருக்கும் என்ற சந்தேக சிந்தனைக்குள்ளாக நான் முழுகிப்போக, என் நம்பிக்கையும், உத்வேகமும் தலைவனில்லாத படை எப்படி சிதறிப் போகுமோ அப்படி சிதறிப் போனது. என்னை அறியாமல் தவறுதலாக போனை வேறு எடுத்துவிட்டேன்.
ஆனந்த, “ஹலோ… ஹலோ…” என்று சொன்ன சப்தம் கேட்டு போனை காதில் வைத்து, “சொல்லுங்க.. என்னங்க இந்த நேரத்துல கூப்புடறிங்க” என்றேன்.
“ஒன்னும் பெருசாயில்ல. இரண்டு மூனு நாளா உன்கிட்ட பேசவே முடியல. ஒடம்பு வேற சரியில்லனு சொல்ற. அதனால் மனசு கொஞ்சம் சரியில்ல. உடனே கூப்பிட்டுவிட்டேன்” என்றார்.
ஐயோ. எவ்வளவு சுய நலமாக இருந்திருக்கிறேன். என் குழப்பத்தில் அவரை தவிக்க வைத்துவிட்டேனே. மிகப் பெரிய தவறல்லவா செய்துவிட்டேன். என மனதில் என்னை திட்டிக் கொண்டே, “வீட்டுல இருந்து மூனு நாள் தள்ளியிருக்கனுங்க. பயங்கர வயிற்று வலிங்க. அதான் இரண்டு மூனு நாளா எதுமே பேச முடிய. என்னை மன்னிச்சுடுங்க” என்று யோசிக்காமல் பதற்றத்தில் சொன்னேன்.
நான் சொன்னதை மீண்டுமொரு முறை நினைத்துப் பார்த்தேன். “அச்சச்சோ… தீவ்யா… சொதப்பிட்டயே” என என் உள் மனம் சொன்னது. போனை சார்ஜரில் இருந்து கழற்றி கட்டிலில் அமர்ந்தேன். இதுவரை இவரிடம் இது போன்று பேசியதில்லையே, ஏதேனும் தப்பாக நினைத்துக் கொள்வார். இதனை எப்படி எடுத்துக் கொள்வார். இதெல்லாம் நான் இதுவரை எந்த ஆணிடமும் பகிர்ந்துக் கொண்டதில்லையே. நான் சொல்லியது தவறா? என மன பரபரத்தது.
ஆனால் அவரோ என்னை மேலும் யோசிக்க விடாமல் ஏதேதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கேள்விகள் கேட்க கேட்க நான் என் குழப்பங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவரின் அன்பான பேச்சாலும், அவ்வப் போது அவர் சொல்லும் நகைச்சுவை துணுக்குகளாலும் எங்களின் அந்த உரையாடல் நீண்டுக் கொண்டே போனது. என் பேச்சில் சுருதி குறையும் தருணங்களில் அவர் ஏதேனும் நகைச்சுவை துணுக்கு சொல்லி என்னை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். என் மனதில் இருந்த எல்லா குழப்பங்களும் களையத் துவங்கியிருந்தது. அவருடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எல்லாம் பேசி முடித்து போனை வைத்த பொழுது பார்த்தேன், மூன்றரை மணி நேரம் பேசியிருந்தோம். ஐந்து, பத்து நிமிடங்கள் பேசியது மாதிரி தான் இருந்தது. முடிக்கும் போது “I Love you… I am coming soon to meet you…” என்று சொல்லி முடித்தார். ஆனந்த் இப்படி அன்பாக பேசியது இதுவே முதல் முறை.
அவரிடம் பேசிவிட்ட பிறகு, எனக்குள் இருந்த எல்லா குழப்பங்களுக்கும் விடை கிடைத்திருந்தது. என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆனந்துடன் கோவிலுக்குச் சென்று மீதம் இருக்கும் அந்த கடைசி மனத் தடையையும் உடைப்போம் என முடிவெடுத்தேன். மனதில் கனத்தைக் கட்டிக் கொண்டு இருந்ததைப் போல இருந்தது. கோவிலில் கனத்தை இறக்கி வைத்திவிட்டு வந்துவிட வேண்டும் என முடிவேடுத்தேன்.
ஏப்ரல் 19, 2016, செவ்வாய்க்கிழமை வந்தது. காலை 5.30 மணிக்கே அவர் வீட்டிற்கு கை நிறைய மல்லிகைப் பூவுடன் வந்திருந்தார். நான் சிகப்பு நிறத்தில் இருந்த காட்டன் புடவையணிந்து, அவர் கொண்டு வந்திருந்த மல்லிகைப் பூவை தலையில் சூடியிருந்தேன். என் முகத்தை கிளம்பும் முன் கண்ணாடியில் ஒரு முறைப் பார்த்துக் கொண்டேன். என் முகத்தில் வெட்கம் தாண்டவமாடியது. என்னவருடன் முதல் முறையாக கோவிலுக்குப் போவதால் மனம் துள்ளிக் குதித்தது.
ஆனந்த், வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தார். மீசையை நறுக்கென்று திருத்தி வைத்திருந்தார். சுத்தமான பளிங்கு கல் போல சவரம் செய்திருந்தார். நாங்கள் இருவரும் காரில் ஏறி கோவிலை நோக்கிக் கிளம்பினோம்.
செங்கதிரவன் என்னைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு, மேகத்தின் பின் இருந்து ஓளி பரப்பிக் கொண்டிருந்தான். காரில், திருச்சங்கோடு மலையேறத் துவங்கினோம். பெரிதாக கூட்டமில்லாததால், சீக்கிரம் கோவில் கருவறைக்குச் சென்று காத்திருந்தோம். அப்போது அவரது அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு வர, சில நிமிடங்களில் வருவதாக சொல்லிவிட்டு அவர் கருவறையை விட்டு கொஞ்சம் நகர்ந்துப் போன் பேசப் போனார். எங்களை கூட்டிக் கொண்டு வந்தவரும் எதோ எடுத்து வர மறந்து அதனைத் தேடி ஓடினார். அப்போது அங்கே இருந்தவர்கள் அர்ச்சனைக்குப் பெயர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் சொல்லி முடித்தவுடன் கூட்டத்தோடு கூட்டமாக நின்றுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தவர், நீங்க அர்ச்சனைக்குப் பெயர் சொல்லவில்லையா? என்று கேட்டார்.
அதுவரை எனக்கு அப்படி எந்த சிந்தனையுமில்லை. அவர் கேட்ட பொழுது நான் கருவறையைப் பார்த்தேன். இதற்குத் தான் இன்று என்னை இங்கே வர வைத்தாயா? என்று கடவுளிடம் கேட்டுவிட்டு அர்ச்சனை செய்பவரை பார்த்தேன். கருவறைப் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டிருந்தவர், நான் அவரைப் பார்ப்பதைப் பார்த்தவுடன் மீண்டுமொரு முறை அர்ச்சனைக்குப் பெயர் சொல்லுங்கள் என்றார். நான் அவரருகில் சென்று,
என் முன்னாள் காதலனுக்கு இன்று பிறந்தநாள்… அவன் பெயர் அன்பு… கேட்டை நட்சத்திரம்… விருச்சகம் ராசி… என்று சொன்னேன். மேலும், அவனுக்கு ஏற்ற பெண் வாழ்க்கைத் துணையாக அமைந்து, குழந்தைச் செல்வமும், மற்ற எல்லா செல்வமும் கடவுள் அருளால் கிடைக்கப் பெற்று, தீர்க்கமான ஆயுளுடன் வாழ வேண்டி அர்ச்சனைச் செய்யச் சொன்னேன்.
அப்போது அங்கு அடித்த மேள சத்தமும், கோவில் மணியும் என் மனதிலுள்ள எல்லா தடைகளும் சுக்கு நூறாக உடைத்தன. என் மனம் இளக ஆரம்பித்ததை நான் உணர்ந்தேன். பல வருடங்களுக்குப் பின் மனதில் ஒரு அமைதி குடி புகுந்ததைப் போல இருந்தது. அர்ச்சனை செய்தவர் விபூதி கொடுத்தார். எல்லாம் களைந்துச் சென்றவுடன், அவரும் அவர் நேரம் முடிந்துக் கிளம்பினார். என் மனதில் இருந்த தேவையில்லாத, மறக்க வேண்டிய நினைவுகளெல்லாம் அவருடனே சென்றுவிட்ட மாதிரி எனக்குள் இருந்தது. மேள, மணி ஓசையும் நின்றிருந்தது. மனதிலும் கோவிலும் பெரும் அமைதி நிலவியது.ஆனந்த வந்தவுடன், செய்ய வேண்டிய பூஜை, அர்ச்சனை, அபிஷேகம் எல்லாம் செய்தோம். பக்தியோடு கடவுளை வணங்கி விட்டு வீட்டிற்குக் கிளம்பும் முன், ஐந்து நிமிடம் உட்கார்ந்துவிட்டுச் செல்லலாமா என்றேன். சரி என்று தலையசைத்தார். கோவில் படியில் உட்கார்ந்திருந்த பொழுது, நான் அவர் தோள் மீது என் தலையை வைத்துச் சாய்ந்திருந்தேன்.
வீட்டில் இறக்கிவிட்ட பின், கையில் ஒரு சிகப்பு ரோஜாவுடன் என் முன் வந்து நின்றார். என் முன் ஒன்றைக் காலில் முட்டிப் போட்டார். அப்பா அம்மாவைப் பார்த்தேன். அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். ரோஜாவை கையில் கொடுத்தார். தலையில் சூடச் சொன்னார். என் வலது கையை பிடித்து லேசாக இழுத்தார். எதோ மோதிரம் தரப் போகிறார் என நினைத்தேன். ஆனால் கையில் ஒரு முத்தம் கொடுத்தார். முட்டிப் போட்டிருந்தவர் எழுந்தார். “I am excited to marry you. Can’t control my excitement. Dhivya! I love you !!!” என்று சொன்னார். வண்டியில் ஏறினார். சந்தித்ததில் மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
– மகிழ்ச்சி…